.

Monday, May 7, 2007

ச: கல்லூரிகளில் தமிழ் புறக்கணிப்பு - தமிழாசிரியர்கள் கவலை

திருச்சி, மே 7-

மொழிக் கொள்கைக்கு எதிராக கல்லூரிகளில் தமிழ்ப் பாடங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றன.

தமிழர் பண்பாட்டை கற்பிக்கவும், அவர்களின் அறவியல், கலைத் திறனை வளர்ப்பதை முதன்மை நோக்கமாகக் கொண்டு கல்லூரிகளில் தமிழ்ப்பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. இதன்படி தன்னம்பிக்கை, நாட்டுப் பற்று, சமூக சீர்திருத்தம் ஆகியவற்றை வலியுறுத்தி திருமூலர், திருவள்ளுவர், பாரதி, பாரதிதாசன் முதல் தற்போதைய இலக்கியவாதிகளின் படைப்புகள் வரை பாடமாக வைக்கப்பட்டுள்ளன.

அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் தொலை தூரக் கல்வி மையம் மூலம் இளநிலைப் பட்டப் படிப்பு படிக்கும் மாணவர்களுக்கும் முதல் இரண்டு ஆண்டுகளுக்கு தமிழ்ப் பாடங்கள் கற்றுத் தரப்படுகின்றன. இதில் கல்லூரிகளில் சேர்ந்து படிப்போருக்கு ஒரு பருவத்துக்கு (செமஸ்டர்) ஒன்று என மொத்தம் 4 தாள்களும், தொலை நிலைக் கல்வி மையம் மூலம் படிப்போருக்கு ஆண்டுக்கு ஒரு தாள் என இரண்டும் தமிழ்த் தாள்கள் இருக்கும். கல்லூரிகளில் 90 வேலை நாட்களுக்கு 90 மணி நேரம் தமிழ்ப் பாடங்கள் நடத்தப்பட்டு, நான்கு பருவத்துக்கும் மொத்தம் 360 மணி நேரம் தமிழ்ப்பாடங்கள் கற்பிக்கப்பட வேண்டும்.

ஆனால் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சில ஆண்டுகளாக இளநிலை வணிகவியல் (பி.காம்) பட்டப் படிப்பு மாணவர்களுக்கு முதல் ஆண்டு மட்டும் போதும். அதுவும் இலக்கண இலக்கியங்களைப் பயிற்றுவிக்க தேவையில்லை என்று முடிவு செய்து ‘வணிகத் தமிழ்Õ என்று ஒரு தாள் மட்டுமே வைக்கப்பட்டுள்ளது. பின்னர் தொலை நிலைக் கல்வி மையம் மூலம் கற்பிக்கப்படும் குறிப்பிட்ட சில பட்டப் படிப்புகளுக்கும் இதே நடைமுறையை தொடர்ந்தனர்.

இதைத் தொடர்ந்து மனோன்மணியம் சுந்தரனார், பெரியார் பல்கலைக்கழக இணைவு பெற்ற கல்லூரிகளில் மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழக இணைவு பெற்ற சில தன்னாட்சி கல்லூரிகளில் பி.காம் மற்றும் பி.எஸ்சி கணினி அறிவியல் ஆகிய பாடங்களுக்கு முதலாண்டு மட்டுமே தமிழ்ப்பாடங்கள் தற்போது நடத்தப்படுகின்றன.

பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள சில கல்லூரிகளில் 8 பட்டப் படிப்புக்களுக்கு தமிழ்ப் பாடம் முதல் ஆண்டு மட்டுமே கற்பிக்கப்படுகிறது. இந்த தமிழ் புறக்கணிப்புக்கு விருப்ப பாட தேர்வு புள்ளி முறை (சாய்ஸ் பேஸ்டு கிரடிட் சிஸ்டம் - சி.பி.சி.எஸ்) எனும் முறையை சாதுர்யமாக பயன்படுத்தியுள்ளனர். இதையே தமிழகம் முழுவதும் சில தன்னாட்சி கல்லூரிகள் பின்பற்ற தொடங்கியுள்ளன. இது போன்ற முறை தொடர்வது நல்லதல்ல என்கின்றனர் பேராசிரியர்கள்.

- மாலை முரசு

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...