.

Wednesday, April 25, 2007

புதைகுழியில் விழுந்த 2 சிறுவர்கள் சாவு

திருச்செங்கோடு, ஏப். 25: திருச்செங்கோட்டில் பாழடைந்த குளத்தில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு சிறுவர்கள் புதைகுழியில் விழுந்து உயிரிழந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையைச் சேர்ந்தவர் செல்வம் (35). இவரது மகன் ஸ்ரீநாத் (7) இங்குள்ள பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார். செல்வத்தின் உறவினர் மகன் கோகுல் (6).

கோகுலும், ஸ்ரீநாத்தும் வீட்டிற்கு அருகில் உள்ள பாழடைந்த குளத்தில் திங்கள்கிழமை தாவிக் குதித்து விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது தவறி அங்கிருந்த புதை குழியில் இருவரும் விழுந்து விட்டனர். அதில் மூச்சுத் திணறி இருவரும் உயிரிழந்தனர்.

சம்பவம் நடந்த இடத்துக்கு அருகில் ஒரு பள்ளி இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Dinamani

சர்வதேச மகளிர் சம்மேளன துணைத் தலைவராக இந்தியப் பெண் தேர்வு

புது தில்லி, ஏப். 25: சர்வதேச ஜனநாயக மகளிர் சம்மேளனத்தின் துணைத் தலைவர்களில் ஒருவராக, இந்திய தேசிய மகளிர் சம்மேளனத்தின் பொதுச் செயலர் ஆன்னி ராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சர்வதேச சம்மேளனத்தின் 14-வது மாநாடு, வெனிசூலா தலைநகர் காரகாஸில் சமீபத்தில் நடைபெற்றது. அதில், இந்திய சம்மேளனத்தின் தலைவர் சாரதாமணி, ஆன்னி ராஜா, கிருஷ்ணா மஜும்தார், பி.வி. விஜயலட்சுமி, ஆந்திரத்தின் பஸ்யா பத்மா, கேரளத்தின் கமலா சதானந்தன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். வெனிசூலா அதிபர் ஹியூகோ சாவேஸ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

பெண்களுக்கு அதிக அதிகாரம் அளிக்க வேண்டும் என்றும், ஏழை மக்களைப் பாதிக்கும் தாராளமயக் கொள்கைகளுக்கு எதிராகவும் இந்த மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சர்வதேச சம்மேளனத்தின் தலைவராக பிரேசில் நாட்டைச் சேர்ந்த மர்கியா கேம்போஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தியாவின் ஆன்னி ராஜாவுடன், பாலஸ்தீனம், அங்கோலா, ஆர்ஜென்டீனா, சைப்ரஸ் நாடுகளின் பிரதிநிதிகள் துணைத் தலைவர்களாகத் தேர்வு செய்யப்பட்டனர்.

Dinamani

இட ஒதுக்கீடு: பிரதமருடன் அர்ஜுன்சிங் சந்திப்பு.


உயர் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு தொடர்பான பிரச்சனை முடிவுக்கு வராத நிலையில்,பிரதமர் மன்மோகன் சிங்கை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் அர்ஜுன்சிங் இன்று சந்தித்துப் பேசினார். ஐஐஎம் உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் இவ்வாண்டு நடைபெறும் மாணவர் சேர்க்கையின் போது, பொதுப் பிரிவினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் பாதிக்க்கப்படாமல் இருப்பது குறித்து இருவரும் விவாதித்ததாகத் தெரிகிறது.பிரதமரை சந்திப்பதற்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜுன்சிங், இட ஒதுக்கீடு வழக்கை முன்னதாகவே விசாரிக்கும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின் மாறுபட்ட தன்மை நிலவுகிறது என்றார். வழக்கை முன்கூட்டியே விசாரிக்கும் உச்ச நீதிமன்றத்தின் முடிவு வரவேற்கத்தக்கது என்று குறிப்பிட்ட அவர், இதனால் இட ஒதுக்கீடு பிரச்சனைக்கு விரைவில் தீர்வு எட்டப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.உயர் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையின் போது பிற்படுத்தப்பட்ட பிரிவினர் பாதிக்கப்படாமல் இருப்பது குறித்து, பிரதமருடன் ஆலோசனை நடத்தப்படும் என்று அவர் சொன்னார்.

அணை விவகாரம்: தெலுங்கானா பகுதியில் பந்த்

அணை கட்டும் விவகாரத்தில் மகாராஷ்டிரா அரசின் போக்கை கண்டித்து காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்த தெலுங்கானா பந்த், 21 காலை துவங்கியது. இதையொட்டி அடிலாபாத், நிஸாமாபாத், கரீம் நகர், வாரங்கல் மற்றும் நல்கொண்டா ஆகிய ஐந்து தெலுங்கானா மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

பஸ் உள்ளிட்ட வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருந்தன. பள்ளி, கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டு, சாலைகள் வெறிச்சோடி கிடந்தன. கோதாவரி ஆற்றின் குறுக்கே அணை கட்ட்டுவதற்கு மகாராஷ்டிரா அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் நந்தத் மாவட்டத்திற்கு தேவையான 2.7 டிஎம்சி குடிநீர் கிடைப்பதில் பாதிப்பு ஏற்படும் என்று ஆந்திரா கூறி வருகிறது.

மகாராஷ்டிர அரசின் இந்த போக்கைக் கண்டித்து தெலுங்கானா பகுதிகளீல் ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சி இந்த வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

MSN

உலகக்கோப்பை இறுதி ஆட்டத்திற்கு இலங்கை தகுதி?

இலங்கை அணியின் கேப்டன் ஜெயவர்த்தனே ஆட்டமிழக்காமல் 115 ரன்கள் எடுத்தன் விளைவாக அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 289 ரன்களை குவித்தது.

இரண்டாவதாக ஆடிய நியுசிலாந்து 35 ஓவர்களில் ஒன்பது விக்கெட்களை இழந்து 165 மட்டுமே அடித்திருக்கிறது. முரளி நான்கு விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில், முன்னாள் உலகச் சாம்பியன் இலங்கை அணி வெற்றியின் வாயிலில் உள்ளது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்து களமிறங்கியது.

2004-ல் "இந்தியா ஒளிர்கிறது' என்று பாஜக பிரசாரம் செய்தது தவறுதான்: அத்வானி

புணே, ஏப். 24: 2004-ம் ஆண்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் "இந்தியா ஒளிர்கிறது' என்று பாஜக தேர்தல் பிரசாரம் செய்தது தவறுதான் என்று கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான எல்.கே.அத்வானி தெரிவித்தார்:

"சென்ற மக்களவைத் தேர்தலில் இந்தியா ஒளிர்கிறது என்று பிரகடனப்படுத்தி பாஜக தேர்தல் பிரசாரம் செய்தது தவறு. அதற்கு பதிலாக "இந்தியா எழுச்சி பெறுகிறது' என்று பிரசாரம் செய்திருக்கலாம். அதுதான் உண்மை.

தில்லியில் சமீபத்தில் நான் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். அங்கு வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனரில் "இந்தியா எழுச்சி பெறுகிறது' என்று எழுதிவைக்கப்பட்டிருந்தது. அப்போது எனக்கு இந்தியா ஒளிர்கிறது என்பதற்கு பதிலாக இந்தியா எழுச்சி பெறுகிறது என்று கூறி தேர்தல் பிரசாரம் செய்திருந்தால் சரியாக இருந்திருக்கும் என்று தோன்றியது என்று அத்வானி கூறினார்.

2009-ம் ஆண்டு நடைபெறும் பொதுத் தேர்தலுக்கு "இந்தியா எழுச்சி பெறுகிறது' என்ற வாசகத்தை பிரகடனப்படுத்தி தேர்தல் பிரசாரம் செய்யப்படுமா என்று கேட்டதற்கு, உங்கள் யோசனையை வரவேற்கிறேன். ஆனால் அடுத்த தேர்தலுக்கு என்ன உத்தி கையாளப்படும் என்று இப்போதே சொல்லுவதற்கில்லை என்று அத்வானி கூறினார்.

பாஜகவின் பொதுச் செயலாளர்களில் ஒருவரான பிரமோத் மகாஜன் சுடப்பட்ட முதலாண்டு நிகழ்ச்சி புணேயில் நடைபெற்றது. இதில் அத்வானி கலந்துகொண்டார். கடந்த பொதுத் தேர்தலின்போது "இந்தியா ஒளிர்கிறது' என்ற பாஜக தேர்தல் பிரசார வாசகம் உருவாகக் காரணமாக இருந்தவர்களில் மகாஜனும் ஒருவர். இந்நிலையில் அத்வானி இப்போது அதுபற்றி கருத்து கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது."

Dinamani

-o❢o-

b r e a k i n g   n e w s...