.

Saturday, August 25, 2007

அமீரகத்தில் பொதுமன்னிப்பு பெற்ற 45,000 இந்திய தொழிலாளர்கள்

அமீரகத்தில் பொதுமன்னிப்பு பெற்ற 45,000 இந்திய தொழிலாளர்கள்


ஐக்கிய அரபு அமீரகத்தில் அறிவிக்கப்பட்ட பொது மன்னிப்பின் கீழ் சட்ட விரோதமாக இருந்து வந்த 45,000 இந்திய தொழிலாளர்களுக்கு இந்திய தூதரக அலுவலகங்கள் அவசர சான்றிதழ் வழங்கியுள்ளதாக இந்திய வெளிநாடு வாழ் இந்திய நலத்துறை அமைச்சர் வயலார் ரவி தொலைபேசி மூலம் கல்ப் நியூஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

இதுவரை 28,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தாயகம் திரும்பி விட்டனர். தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையை சமாளிக்க சிறப்பு விமான சேவை ஏற்படுத்தப்படும் என அவர் தெரிவித்தார்.

பொதுமன்னிப்பு பெற்ற தொழிலாளர்களில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்களே அதிகம். அதனைத் தொடர்ந்து கேரளா,தமிழ்நாடு ஆகியவை.

http://www.gulfnews.com/nation/Immigration_and_Visas/10148918.html
Special flights to take home amnesty seekers

ஷார்ஜாவில் இந்திய தொழிலாளருக்கு சிறப்பு அறுவை சிகிச்சை

ஷார்ஜாவில் இந்திய தொழிலாளருக்கு சிறப்பு அறுவை சிகிச்சை


ஐக்கிய அரபு அமீரகத்தின் கலாச்சாரத் தலைநகர் என்றழைக்கப்படும் ஷார்ஜாவில் அமையப்பற்றுள்ள குவைத்தி மருத்துவமனையில் கையில் படுகாயமடைந்த இந்திய கட்டுமானத் தொழிலாளருக்கு சிறப்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இந்த அறுவை சிகிச்சை மூன்று மணி நேரம் செய்யப்பட்டதாக பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சகர் அல் முல்லா தெரிவித்தார். தற்போது அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

மேலும் விரல் அசைவுகள் நன்றாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு பிசியோதெரபி பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.


Rare surgery at Sharjah hospital

http://www.khaleejtimes.com/DisplayArticleNew.asp?xfile=data/theuae/2007/August/theuae_August690.xml§ion=theuae&col=

ஹைதராபாத்: அடுத்தடுத்து இரு குண்டு வெடிப்புகள்.

சற்றுமுன் ஹைதராபாத் நகரில் அடுத்தடுத்து நிகழ்ந்த இருகுண்டுவெடிப்புகளில் ஐவர் கொல்லப்பட்டும், பன்னிருவருக்கும் மேலானோர் காயமடைந்துமிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
மாநிலத்தலைமையகம் அருகிலுள்ள லும்பினி பூங்காவில் முதல் குண்டும், 15 நிமிடங்களில் கோகுல்சாட்பந்தர் என்னுமிடத்தில் அடுத்த குண்டும் வெடித்ததாக பிடிஐ செய்தி தெரிவிக்கிறது

அமெரிக்க டென்னிஸ்: இரட்டையர் இறுதிகளில் சானியா, மகேஷ் பூபதி .

அமெரிக்காவில் உள்ள நியூ ஹெவன் நகரில் பைலட் பென் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது.

இந்தியாவின் முன்னணி வீராங்கனையான சானியா மிர்சா இதில் ஒற்றையர் ஆட்டத்தில் தோற்றாலும் இரட்டையர் போட்டியில் இத்தாலியை சேர்ந்த மரியா சாண்டன் ஜெலோவுடன் இணைந்து விளையாடி வென்று வருகிறார்.

இன்று நடந்த அரை இறுதியில் சானியா ஜோடி 2-6, 6-3, 10-5 என்ற கணக்கில் ஸ்டுபாஸ்- பெஸ்சக் ஜோடியை வென்றது. இறுதிப்போட்டியில் சானியா இணை கியூபர்-சாராபிளாக் ஜோடியை எதிர் கொள்கிறது.

ஆண்கள் இரட்டையர் பிரிவில் மகேஷ்பூபதி (இந்தியா) ஜிமோன்விக் (செர்பியா) ஜோடி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த இணை 7-5, 7-6(7-2) என்ற நேர் செட்கணக்கில் பிஷர்- புரோடராக் ஜோடியை வென்றது.

மாலைமலர்

BCCI, ICL இடையே போட்டி ஆட்டங்கள் - லாலு யோசனை.

மத்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்(BCCI), இந்திய கிரிக்கெட் குழுமம் (ICL) ஆகியவற்றுக்கிடையே ஆரோக்கியமான போட்டி ஆட்டங்கள் வைக்கலாம் என்று மத்திய இரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் யோசனை தெரிவித்துள்ளார்.

ICL என்றில்லாமல் யார் கேட்டாலும், இரயில்வேயின் விளையாட்டு மைதானங்களை, அவர்கள் உரிய வாடகை தரும்பட்சத்தில் உபயோகித்துக் கொள்ளலாம் என்றார் அவர்.

மேலும் " BCCI, ICL என்றில்லாமல், சிறப்பாக ஆடும் வீரர்களே நாட்டின் கிரிக்கெட் வீரர்களாகத் தேர்வு செய்யப்பட வேண்டும்" என்றார் லாலு.

பி/டி/ஐ/ செய்திக்குறிப்பு

மத்திய அரசியல்: வலுவிழந்த புயல்

அமெரிக்காவுடன் மத்திய அரசு செய்த அணுசக்தி ஒப்பந்தத்தை இடதுசாரி கட்சித்தலைவர்கள் மிகக்கடுமையாக எதிர்த்தனர். "ஒப்பந்தத்தை அப்படியே கிடப்பில் போடாவிட்டால் நடப்பதே வேறு'' என்று மிரட்டினார்கள். இதனால் எந்த நேரத்திலும் மத்தியில் ஆட்சி கவிழ்ந்து விடுமோ என்ற பரபரப்பு ஏற்பட்டது.

ஆனால் கம்யூனிஸ்டுகளின் பூச்சாண்டி மிரட்டல்களுக்கு காங்கிரஸ் கொஞ்சமும் பயப்படவில்லை. நெருக்கடியை நினைத்து அலட்டிக்கொள்ளவும் இல்லை. இந்த விஷயத்தில் பிரதமர் மன்மோகன் சிங் ஒரு படி மேலே சென்று, "முடிந்தால் ஆதரவை வாபஸ் பெற்றுக்கொள்ளுங்கள்'' என்று சவால்விட்டார்.

இந்திய கம்யூனிஸ்டு, பார்வர்டு பிளாக், புரட்சிகர சோஷலிஸ்ட் ஆகிய 3 கட்சிகளும் மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெற்று விடலாம் என்று உறுதியாக தெரிவித்தன. ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் ஒருமித்த கருத்து இல்லை.

பிரகாஷ்கரத், சீதாராம் யெச்சூரி, ஜோதிபாசு போன்றவர்கள் ஆதரவை வாபஸ் பெறக்கூடாது சும்மா மிரட்டி காரியத்தை சாதித்தால் போதும் என்ற மனநிலையில் உள்ளனர். ஆனால் மத்திய குழு உறுப்பினர்களில் 90 சதவீதம் பேர் காங்கிரசை ஆதரிக்கக் கூடாது என்றனர். இந்த கருத்து வேறுபாடு காரணமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி எந்த முடிவும் எடுக்க முடியாமல் கடந்த 4 நாட்களாக திணறியது.

இதற்கிடையே இடது சாரிகளின் போக்கு மக்களிடம் வெறுப்பையும் அதிருப்தியையும் ஏற்படுத்தி இருப்பதாக பல்வேறு கருத்துக்கணிப்புகள் மூலம் தெரிய வந்தது. தற்போது தேர்தல் நடத்தப்பட்டால் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு எதிர்பார்க்கும் அளவுக்கு வெற்றி கிடைக்காது என்பதும் தெரிய வந்தது. இதனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சித்தலைவர்கள் வேறு வழி தெரியாமல் பணியத் தொடங்கி உள்ளனர்.

அணுசக்தி ஒப்பந்தம் இந்தியாவை அடிமைப்படுத்தி விடும் என்று ஆக்ரோஷமாக கத்திக் கொண்டிருந்த கம்யூனிஸ்டுகள் இப்போது மெல்ல தொனியை குறைத்து விட்டனர். அவர்களிடம் இருந்த கடுமை காணாமல் போய்விட்டது.

நேற்று முன்தினம் வரை கம்யூனிஸ்டுகள் பேச்சில் கம்பீரம் தெரிந்தது. எங்களுக்கு தெரியாமல் எதுவும் பேசக்கூடாது.

வியன்னா மாநாட்டில் இந்திய பிரதிநிதியை கண்காணிப்போம். மத்திய அரசை இஷ்டத்துக்கு செயல்பட அனுமதிக்க முடியாது. எங்கள் ஆதரவு இல்லாவிட்டால் என்ன ஆகும் தெரியுமா என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

இந்த சுருதி நேற்று திடீரென மாறியது. இடது சாரிகளை கழற்றி விட்டுவிட காங்கிரஸ் நேற்று தயாரானதும், கம்யூனிஸ்டுகள் கொஞ்சம் ஆடி போய்விட்டனர். தேர்தலை சந்திக்கலாமா வேண்டாமா என்று நேற்றிரவு சோனியா ஆலோசித்ததும் இடதுசாரிகள் "கப்-சிப்'' என ஒடுங்கி விட்டனர்.

நேற்றிரவு கம்யூனிஸ்டு தலைவர்களிடம் நிருபர்கள் பேசியபோது, "மத்திய அரசுக்கு நெருக்கடியா? அப்படி எதுவும் இல்லையே'' என்றனர். அவர்களது பதில், "அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா...'' என்று சொல்லும் ரீதியில் இருந்தது.

சப்த நாடிகளும் ஒடுங்கி விட்டவர்கள் போல மாறி விட்ட கம்ïனிஸ்டு தலைவர்களுடன் அடுத்த வாரம் சோனியா பேச்சு நடத்துவார் என்று தெரிகிறது. அப்போது அணுசக்தி ஒப்பந்தம் பற்றி ஆராய கமிட்டி நியமிக்க முடிவு செய்வார்கள். இதை ஏற்றுக் கொண்டு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டுகள் அமைதியாகி விடுவார்கள் என்று தெரிகிறது.

திடீர் பூதமாக கிளம்பிய அணுசக்தி சர்ச்சையால் மன்மோகன்சிங்தான் ஒரு வலுவான பிரதமர் என்பதை நிரூபித்துள்ளார். அதோடு அடிக்கடி பூச்சாண்டி காட்டி கொண்டிருந்த கம்யூனிஸ்டுகளுக்கு "செக்'' வைத்துள்ளார்.

அதே சமயத்தில் அணுசக்தி ஒப்பந்தத்தை கிளறி விட்டதால் பிரகாஷ்காரத் போன்ற மூத்த தலைவர்களுக்கு மத்திய குழுவில் கடும் எதிர்ப்பு உருவாகி இருக்கிறது. இதனால் பதவியை காப்பாற்றி கொள்ள மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மூத்த தலைவர்கள் தற்போது போராடி கொண்டிருக்கின்றனர்.

நன்றி: மாலைமலர்

குடும்பச்சண்டையால் கேபிள் நிறுவனமா? - ஜெ. தாக்கு!

தமிழக முதல்வர் கருணாநிதியின் குடும்ப சண்டையால்தான் தமிழக அரசு கேபிள் நிறுவனம் துவக்கியுள்ளது என அ. தி. மு.க., பொதுசெயலர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

" 2006 ல் மக்கள் நலனுக்காக கொண்டு வந்தபோது இந்த சட்டத்தை நிறைவேற்றக்கூடாது என அப்போதைய மத்தியஅமைச்சர் தயாநிதியும் , கருணாநிதியும் கவர்னரை சந்தித்து இந்த சட்டத்தை நிறைவேற்றக்கூடாது என வற்புறுத்தினர். ஆனால் தயாநிதி மற்றும் கருணாநிதி மகன்கள் இடையே ஏற்பட்ட சண்டைக்கு பின்னர் தமிழக அரசு கேபிள் டிவி., நிறுவனத்தை ஏற்படுத்துகிறது"
என்று அவர் கூறியுள்ளார்.

தினமலர்

வினாத்தாளையும் விட்டுவைக்காத விளம்பரங்கள்.

பள்ளி மாணவர்களின் தேர்வுக்கு வழங்கப்படும் கேள்வித் தாளில் துணிக்கடை, தீம் பார்க் ஆகியவற்றின் விளம்பரங்கள் அச்சிடப்பட்டது கேரளாவில் பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மூன்றாம் வகுப்பு முதல் ஏழாம் வகுப்பு வரை கம்ப்யூட்டர் சயின்ஸ் கேள்வித்தாளில் பல நிறுவனங்களின் விளம்பரங்கள் அச்சடிக்கப்பட்டு அரசு பள்ளிகளில் வினியோகிக்கப்பட்டது. இது பெற்றோர் மற்றும் பொதுமக்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.ஏழாம் வகுப்பு வரை உள்ள கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடம் அங்கீகரிக் கப்படவில்லை. எனவே, இப்பாடத்தில் நடத்தப்படும் தேர்வும் அதிகாரப்பூர்வமானது அல்ல என்று பள்ளிகள் கருதுகின்றன. ஆனால், தேர்வு நேரத்தில் இதற்கான கேள்வித் தாளில் கல்வித் துறையே விளம்பரங்களை அச்சிட்டு மாணவர்களுக்கு வினியோகிப்பது தான் கொடுமை. கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த தேர்வில் தான் இந்த அத்துமீறல் நடந்துள்ளது. சில பள்ளிகள் இத்தகைய கேள்வித்தாள்களை வாங்க மறுத்து விட்டன. சில பள்ளிகள் ஆசிரியர்களே தயாரித்த கேள்வித்தாள்களை உபயோகப்படுத்தின. கல்வி அமைச்சரின் உத்தரவின் பேரில் இது நடந்ததா அல்லது அதிகாரிகளே தன்னிச்சையாக எடுத்த முடிவா என்பது குறித்து அரசு ஆராய்ந்து வருகிறது.

தினமலர்

இந்தியா: 16 வயதுக்குக் கீழ் கை பேசி வேண்டாம் - அறிவுறுத்தல்

அலை பேசிகளிலிருந்து வெளியாகும் மின் காந்த கதிர்வீச்சு, காதில் உள்ள மென்மையான திசுக்களை வெப்பமடைய செய்யும். இது உடல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், 16 வயதுக்கு உட்பட்டவர்களை அலைபேசி பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்று அறிவுறுத்த இந்திய தொலைத்தொடர்புத் துறை முடிவு செய்துள்ளது.

அலைபேசிகளிலிருந்து வெளியாகும் மின்காந்த கதிர்வீச்சு எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும், இதை தடுக்க எவ்விதமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து தொ.தொ. துறையின் தொலை தொடர்பு பொறியியல் வல்லுனர் மையம் சில வழிகாட்டு குறிப்புகளை தயார் செய்துள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:

மொபைல் போனில் இருந்து வெளியாகும் மின்காந்த கதிர்வீச்சு, மனிதர்களின் காதில் உள்ள திசுக்களை வெப்பமடைய செய்து விடும். இது உடல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்தும். 16 வயதுக்கு உட்பட்டவர்களின் திசுக்கள் மிகவும் மென்மையானவை. அவர்கள் மொபைல் போனை பயன்படுத்தினால் பிரச்னை ஏற்படும். எனவே, 16 வயதுக்கு உட்பட்டவர்கள் மொபைல் போனை பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என தொலை தொடர்பு நிறுவனங்கள் வலியுறுத்த வேண்டும்.இந்தியாவில் மொபைல் போன் பயன்பாடு மிக வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால், ஏராளமான டவர்களை அமைத்து, அவற்றில் ஆன்டனாக்களை அதிக அளவில் பொருத்தி வருகின்றனர். இதனாலும் மின்காந்த கதிர்வீச்சு அதிக அளவில் வெளிப்படும். எனவே, பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் அருகே இதுபோன்ற டவர்களை ஏற்படுத்த கூடாது என்று வலியுறுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது
.இவ்வாறு டெலிகாம் துறை கூறியுள்ளது.டெலிகாம் துறையின் இந்த நடவடிக்கை குறித்து தொலை தொடர்பு நிறுவனங்கள் கூறியதாவது:
அறிவியல் ஆதாரம் இல்லாமல் இது போன்ற அறிவுரைகளை வெளிப்படுத்துவதால் இந்தியாவில் மொபைல் போன் பயன்பாடு பெரிதும் பாதிக்கப்படும். ரேடியோ கதிர்வீச்சு அலைகள் மற்றும் மொபைல் தொடர்பு ரேடியோ கதிர்வீச்சு அலைகள் குறித்து பல ஆண்டுகளாக பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ள அளவுக்கும் குறைவான கதிர்வீச்சு அலைகளால் உடல் ரீதியாக எந்த பாதிப்பும் வராது என்றே அந்த ஆய்வு முடிவுகள் தெரியப்படுத்தியுள்ளன.

இவ்வாறு தொலை தொடர்பு நிறுவனங்கள் கூறியுள்ளன.

இது குறித்து இந்திய தொ.தொடர்புத் துறையிடம் கேட்ட போது, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது. கனடா, அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், ஜப்பான் மற்றும் சீனா ஆகிய நாடுகள் இந்த முன்னெச்சரிக்கை அறிவுரை ஏற்று பல வகையிலும் நடைமுறைப்படுத்தியுள்ளன. எனவே, இந்தியாவிலும் இதை நடைமுறைப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது.

தினமலர்

இரயில்நிறுத்தப் போராட்டம் தள்ளிவைப்பு

தெற்கு இரயில்வேயின் பாலக்காடு கோட்டதிலிருந்து தமிழகப்பகுதியைப் பிரித்து சேலம் கோட்டம் அமைப்பதை எதிர்க்கும் கேரள அரசியலுக்கு எதிராக கேரளாவிற்குச் செல்லும் இரயில்களை மறிக்கும் போராட்டம் சேலம், கோவை, ஈரோடு மாவட்டங்களில் இன்று காலை உற்சாகமாகத் தொடங்கியது. அமைச்சர் ஆற்காடு வீராசாமி தலைமையில் நடந்த இப்போராட்டத்தால் ஓணம் பண்டிகைக்கு சொந்த ஊருக்குச் சென்றுகொண்டிருந்த பல மலயாளிகள் அவதியுற்றனர். இதனையடுத்து இரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் முதல்வர் மு.கருணாநிதியுடன் அவசர ஆலோசனை நடத்தினார். அப்போது சேலம் இரயில்வே கோட்டம் அமைவது குறித்து கொடுத்த உறுதிமொழியின் பேரில் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப் பட்டுள்ளது.

The Hindu News Update Service

சல்மான்கான் கைது: ஜோத்பூர் விமானநிலையத்தில்

1998இல் நடந்த சிங்காரா மான் வேட்டை வழக்கில் தனது பிணைமனு நிராகரிக்கப்பட்ட பின்னர் காவலர்களிடம் சரண் அடைவதற்காக ஜோத்பூர் வந்த இந்தி நடிகர் சல்மான்கானை விமானநிலையத்திலேயே கைது செய்தனர்.

முன்னதாக தனது குடும்பத்தினருடனும் வழக்கறிஞருடனும் காலை 1130 மணி ஜோத்பூர் விமானத்தில் புறப்படவிருந்த சல்மான் நிருபர்களிடம் பேசும்போது தன்மீது பிணையில் எடுக்கமுடியாத கைது ஆணை பிறப்பிக்கபட்டிருப்பதால் தனது சட்ட ஆலோசகர்கள் சரண் அடையுமாறு அறிவுறுத்திருக்கிறார்கள் எனக் கூறினார். ஒரு சட்டத்தை மதிக்கும் குடிமகனாக நானே அங்கு சென்று சரண் அடைவேன் என்றும் மேலும் கூறினார்.


Salman Khan arrested at Jodhpur airport-Politics/Nation-News-The Economic Times

2010-க்குள் 1000 பள்ளிகளுக்கு சுத்தமான குடிநீர்: கோக-கோலா திட்டம்

2010-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் 1000 பள்ளிகளுக்கு சுத்தமான குடிநீர் வழங்க கோக-கோலா குளிர்பான நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 20 பள்ளிகளுக்கு சுத்தமான குடிநீர் வழங்கும் கருவி பொருத்தப்பட்டுள்ளது. 20-வது பள்ளியாக, சென்னை தரமணியில் கானகம் பகுதியில் உள்ள அட்வென்ட் நடுநிலைப் பள்ளியில் சுத்தமான குடிநீர் வழங்கும் திட்டத்தின் தொடங்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், கோக-கோலா நிறுவனத்தின் துணைத் தலைவர் தீபக் ஜாலி பேசியது:

தமிழகத்தில் சுத்தமான குடிநீர் இன்றி தவிக்கும் 100 பள்ளிகளைத் தேர்ந்தெடுத்து குடிநீர் வழங்கும் பணியினை மேற்கொண்டு வருகிறோம். இதற்காக, ரூ. 35 லட்சம் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ரோட்டரி சங்கத்துடன் இணைந்து இப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கானகத்தில் உள்ள அட்வென்ட் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை சம்பந்தப்பட்ட நிறுவனமே 3 ஆண்டுகளுக்கு பராமரிக்கும்.

தமிழகத்தில் உள்ளது போன்று, மேற்குவங்க மாநிலம் கோல்கத்தாவில் 150 பள்ளிகளில் சுத்தமான குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 2010-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் உள்ள 1000 பள்ளிகளில் சுத்தமான குடிநீர் வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளோம் என்றார்.

தினமணி

எலிக்காய்ச்சலுக்கு குஜராத்தில் 34 பேர் சாவு

தெற்கு குஜராத்தில் கடந்த 2 வாரங்களில் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 34 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சூரத், நவ்சாரி மற்றும் வல்சாத் மாவட்டங்களில் இந்த நோய்க்கு அதிகம் பேர் ஆளாகியுள்ளனர்.

தினமணி

Leptospirosis claims 34 lives in Gujarat
NDTV.com: Leptospirosis outbreak in Surat, Navsari and Valsad

வெற்றியின் வாயிலில் இந்தியா

பிரிஸ்டலில் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா டாஸ் வென்று முதலில் பேட் செய்தது. சவுதாம்டனில் நடந்த முதல் போட்டியில் மோசமான தோல்வியை சந்தித்த இந்தியா, அதிரடி ஆட்டத்தினால் 329 ஓட்டங்களைக் குவித்தது.

இந்திய தரப்பில் அதிகபட்சமாக துவக்க வீரர் டெண்டுல்கர் 99 ரன்களைக் குவித்தார். கேப்டன் டிராவிட் 92 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து தரப்பில் ஃப்ளின்டாஃப் 56 ரன் கொடுத்து 5 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இங்கிலாந்து தற்போது 5 விக்கெட் இழப்புக்கு 214 ஓட்டங்களை எடுத்துள்ளது. வெற்றி பெற 78 பந்துகளில் 116 ரன்கள் தேவை.

முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இடம்பெற்ற ஜாகிர் கான் இன்றைய போட்டியில் இடம்பெறவில்லை.

ஆட்ட விவரம்: Cricinfo

-o❢o-

b r e a k i n g   n e w s...