.

Tuesday, September 4, 2007

நாளை முதல் satrumun.com

சற்றுமுன் செய்தித் தளம் நாளை காலை இந்திய நேரம் 6 மணி முதல் ப்ளாகர் சேவையிலிருந்து விலகி satrumun.com எனும் தனித் தளத்திலிருந்து இயங்கவிருக்கிறது. satrumun.com பல மேம்படுத்தப்பட்ட சேவைகளுடன் இயங்கும். விரைவில் ஒவ்வொன்றாக இந்த சேவைகள் அறிமுகப்படுத்தப்படும்.

சற்றுமுன்னின் Blogger செய்தி ஓடையைப் (Feed) பயன்படுத்தி வந்தவர்கள் புதிய ஓடைக்கு மாற்றிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். புதிய ஓடை http://feeds.feedburner.com/satrumun

சற்றுமுன் மின்னஞ்சல் சேவை தொடர்ந்து கிடைக்கப் பெறாதவர்கள் மீண்டும் புதிய தளத்தில் பதிந்துகொள்ள வேண்டுகிறோம். சிரமத்துக்கு வருந்துகிறோம்.

புதிய தளத்தில் பயனர் கணக்கு உருவாக்கிக் கொண்ட உறுப்பினர்கள் மட்டுமே பின்னூட்டமிட இயலும் என்பதால் உங்கள் பயனர் கணக்கை உருவாக்கிக் கொள்ள வேண்டுகிறோம். பயனர் கணக்கு உருவாக்க இங்கு செல்லுங்கள்.

புதிய தளம் குறித்த கருத்துக்கள், விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன.

சற்றுமுன்.com தமிழ்மணம் திரட்டியில் தெரிவதில் தாமதம் இருப்பதால் தமிழ்மணம் பயனர்கள் நேரடியாக சற்றுமுன் தளத்தைப் பார்வையிடக் கேட்டுக் கொள்கிறோம்.

சற்றுமுன் குழுவில் இணைந்து செய்திகளைப் பகிர்ந்துகொள்ள விரும்பும் பதிவர்களை சற்றுமுன் அன்புடன் வரவேற்கிறது. satrumun at gmail dot com என்ற முகவரிக்கு மடல் செய்யவும்.

satrumun.comல் சந்திப்போம்.

கலக்கும் சென்னை - தபால் துறையில் GPS - வீடியோ.

தபால் பட்டுவாடா செய்யும் வாகனங்களில் GPS பொருத்தி தபால்களை சரியான நேரத்தில் சென்றடைய சென்னைத் தபால் துறை முயற்சி மேற்கொண்டுள்ளது.

மேலும் செய்திக்கு "CNN - IBN TV..."


விடுதலைப் புலிகளின் புத்தகங்களை வைத்திருந்தவர் கைது

சென்னையிலிருந்து கோலாலம்பூருக்குச் செல்லவிருந்த சுரேஷ் என்கிற 29வயது இளைஞர், விடுதலைப் புலிகள் பிரசுரித்த புத்தகங்களை வைத்திருந்ததால் க்யூ பிரிவு காவால்துறையினரால் கைது செய்யப்பட்டார். சுரேஷ் திருவாரூர் மாவட்டத்தின் மன்னார்குடியைச் சார்ந்தவர்.

Passenger carrying pro-LTTE books held - The hindu

தீவிரவாத பட்டியல்: வடகொரியாவை நீக்க அமெரிக்கா நிபந்தனை.

தீவிரவாத நாடுகள் பட்டியல் : வடகொரியாவை நீக்க அமெரிக்கா நிபந்தனை


வடகொரியாவை தீவிரவாத நாடுகள் பட்டியலிலிருந்து விடுவிக்க அந்நாட்டிடமிருந்து மேலும் சில நடவடிக்கைகளை எதிர்பார்ப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது. கடந்த வாரம் ஜெனீவாவில் நடைபெற்ற அமெரிக்க வடகொரிய தலைவர்களுக்கிடையேயான பேச்சுவார்த்தையின் போது அமெரிக்கா தனது தீவிரவாத நாடுகள் பட்டியலிலிருந்து வடகொரியாவை நீக்கும் என்று வடகொரிய பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டிருந்தன. இதை மறுத்த அமெரிக்க பிரதிநிதி வடகொரியா அணுஆயுத திட்டங்களில் மேலும் சில நம்பிக்கையான செயல்களில் ஈடுபடும் வரை அந்நாட்டை பட்டியலிலிருந்து நீக்கும் பேச்சுக்கே இடமில்லை என தெரிவித்தார்.

தினமலர்

'ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுக்காது' - ஈரான் அதிபர்

ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுக்காது என்று ஆணித்தரமாக அடித்துச் சொல்கிறார் ஈரான் அதிபர் மஹமூத் அகமதிநிஜாத். அதற்கான வலுவான கணித ஆதாரமும் தன்னிடம் இருப்பதாக கூறுகிறார் அவர்.

"அடிப்படையில் நான் ஒரு பொறியாளர். அதிலும், கணக்கிடுதல், அட்டவணைப்படுத்துதலில் நிபுணர். என்னுடைய கணித ஆற்றலை பயன்படுத்தி பல மணி நேரம், விதவிதமான ஹிபோதிசஸ் கணக்குகளை போட்டுப் பார்த்தேன். இதிலிருந்து ஒரு தெளிவான முடிவுக்கு வந்திருக்கிறேன். என் கணக்குப்படி, ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுக்க வாய்ப்பே இல்லை' என்று உறுதிப்பட கூறுகிறார் மஹமூத் அகமதிநிஜாத்.

போக்குவரத்து பொறியியல் மற்றும் திட்டமிடுதல் துறையில் பிஎச்.டி பட்டம் பெற்றிருக்கும் அவர், ஏராளமான அறிவியல் ஆய்வுக்கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார்.

மிகுந்த மத நம்பிக்கையுடைய அவர் மேலும் கூறுகையில், "நீதியின் வழியில் நடப்பவர்கள் வெற்றியடைவார்கள் என்று இறைவன் கூறியிருப்பதை நான் நம்புகிறேன். நிச்சயமாக நாம் வெற்றி பெறுவோம்' என்கிறார்.

அதிபர் மஹமூத் அகமதுநிஜாத் கூறியதாக திங்கள்கிழமை பத்திரிகைகளில் வெளியாகி உள்ள இந்த செய்தி தான் ஈரான் மக்களிடையே பரபரப்பாக பேசப்படுகிறது. அதிபர் மஹமூத், அப்படி என்ன கணக்கு போட்டு பார்த்தார் என்பது அவருக்கே வெளிச்சம்.

கடந்த 2003-ல் அணுகுண்டை தேடுகிறோம் என்று இராக்கை ஆக்கிரமித்த அமெரிக்கா, அதேபாணியில் ஈரான் மீதும் போர் தொடுக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

அதற்கு அச்சாரமாக அதிபர் புஷ்ஷுன் அண்மைக்கால பேச்சுக்களும் அட்சதை தூவி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி

தமிழ்நாட்டில் இன்டெல் நிறுவனம் 1800 பள்ளிகளுக்கு உதவி

கணீனி சிப்களை உருவாக்கும் இன் டெல் நிறுவனத்தின் இந்தியப்பிரிவு தமிழக அரசுடன் ஒப்பிட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையில் 1800 உயர்நிலைப் பள்ளிகளில் உள்ள கணினி சோதனைச்சாலைகளில் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கல்வி சம்பந்தமான பொருளடக்கத்தை கைக்கொள்ள வகை செய்து தர முன்வந்துள்ளது. கல்விச்சாலைகள், அரசு அலுவலகங்கள் மற்றும் உடல்நலமையங்களை இணைக்கும் கணினி வலையமைப்பை இரு தரப்பும் ஒத்துழைத்து உருவாக்கும்.
இது பற்றிய மேல்விவரங்களுக்கு...The Hindu News Update Service

சென்னை: ஒரேநாளில் 4000 விளம்பரப் பலகைகள் அகற்றம்

சென்னையில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த 4,000 விளம்பரப் பலகைகள் திங்கள்கிழமை ஒரே நாளில் அகற்றப்பட்டன என்று மாநகர காவல் ஆணையர் நாஞ்சில் குமரன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் திங்கள்கிழமை கூறியதாவது:

சென்னையில் அண்ணாசாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை உள்ளிட்ட சாலையோரங்களிலும், முக்கிய சாலை சந்திப்புகள் மற்றும் புறநகர்ப் பகுதிகளிலும் விளம்பரப் பலகைகள் அதிக எண்ணிக்கையில் நிறுவப்பட்டுள்ளன.

அனுமதியின்றி மிகப் பெரிய அளவில் வைக்கப்பட்டுள்ள இந்த விளம்பரப் பலகைகளால் வாகன விபத்துகள் ஏற்படுகிறது. மேலும் சாலையை மறைத்து வைக்கப்படும் இந்த மின்னணு விளம்பரப் பலகைகளால் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுகிறது.

இதுதவிர மழைக்காலத்தில் காற்று வீசுவதால் விபத்து ஏற்படவும் வாய்ப்புள்ளது. இதையடுத்து அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகளை அகற்ற அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அனுமதியின்றி நிறுவப்பட்டிருந்த விளம்பர அட்டைப்பலகைகள் , துணிப்பலகைகள் (பேனர்) மற்றும் மின்னணு விளம்பரப் பலகைகள் அகற்றப்பட்டு வருகின்றன. திங்கள்கிழமை மட்டும் நகரில் இருந்த 4,000 விளம்பரப் பலகைகள் அகற்றப்பட்டுள்ளன. காவல்துறையினரின் இந்நடவடிக்கைகள் தொடரும்.

அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் சார்பாக நிறுவப்படும் விளம்பரப் பலகைகளை 2 முதல் 5 நாள்களுக்குள் அகற்ற வேண்டும் என்ற விதி உள்ளது.

இந்த காலவரம்பிற்குள் விளம்பரப் பலகைகளை நீக்காவிட்டால், உடனடியாக அப்புறப்படுத்தப்படும்.

உச்ச நீதிமன்றத்தில் இடைக்காலத் தடை உத்தரவு பெற்ற நிறுவனங்களைத் தவிர இதர நிறுவனங்களின் சார்பில் வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகளுடன் காவல்துறையினர் இணைந்து புறநகர்ப் பகுதிகளிலும் இந் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

விதிகளை மீறி விளம்பரப் பலகைகளை வைத்திருந்தாலும், புதிதாக நிறுவினாலும் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யவும், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னையில் தீவிரவாதிகள் ஊடுருவல் ஏதும் இல்லை. எனினும் நகரில் முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றார் நாஞ்சில் குமரன்.

தினமணி

உலகத் தரத்திற்கு இந்தியத் தொடர்வண்டி நிலையங்கள்.

புதுதில்லி உட்பட நாட்டின் முக்கிய தொடர் வண்டி நிலையங்களை உலகத் தரத்திற்கு உயர்த்த இந்திய இரயில்வே முடிவு செய்துள்ளது. நாட்டில் உள்ள 22 தொடர்வண்டி நிலையங்களை உலகத்தரத்திற்கு உயர்த்த தேர்வு செய்துள்ளது.

அதன் முதற்கட்டமாக புதுதில்லி, பாட்னா, ஆக்ரா, ஆனந்த விகார், ஜெய்ப்பூர், அமிர்தசரஸ் ஆகிய நிலையங்களில் பணிகள் தொடங்கப்படவுள்ளன.

ஹாங்காங்கைச் சேர்ந்த டெர்ரி பெரல் என்ற நிறுவனம் புதுதில்லி நிலைய பணிகளை மேற்கொள்ள நியமிக்கப்பட்டுள்ளது.

தினமணி

"மிக மோசமான அமெரிக்க அதிபர் புஷ்" - ஆஸ்திரேலியர்கள் கருத்து

அமெரிக்க வரலாற்றில் மிக மோசமான அதிபர் ஜார்ஜ் புஷ் தான் என்று ஆஸ்திரேலியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தங்கள் நாட்டுக்கு செவ்வாய்க்கிழமை வந்த புஷ்ஷுக்கு அவர் கடும் எதிர்ப்பையும் தெரிவித்தனர்.

21 நாடுகள் பங்கேற்கும் ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு வரும் சனிக்கிழமை ஆஸ்திரேலிய தலைநகர் சிட்னியில் தொடங்கவுள்ளது. இதையொட்டி அமெரிக்க அதிபர் புஷ், ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

அமெரிக்காவின் வரலாற்றில் மோசமான அதிபராக உள்ளவர் தங்கள் நாட்டுக்கு வர அனுமதிக்கமாட்டோம் என்று அந்நாட்டு மக்கள் குரலெழுப்பி வருகின்றனர்.

போருக்கு எதிரான அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் புஷ்ஷுக்கு எதிராக 52 சதவீத வாக்குகளும், 32 சதவீதம் பேர் நடுநிலையாகவும் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இராக் மீது வலுக்காட்டாயமாக போர் தொடுத்ததே புஷ் மீதான வெறுப்புக்கு முக்கிய காரணம் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். நாங்கள் அமெரிக்கர்களின் நண்பர்கள். அமெரிக்கர்கள் நல்லவர்கள். ஆனால், புஷ் நல்லவரல்ல. நாங்கள் புஷ்ஷை எதிர்ப்பவர்கள். அவரது கொள்கையில் எங்களுக்கு உடன்பாடில்லை. மனித உரிமை மீறல்களுடன் மற்ற நாடுகள் மீது படையெடுப்பது கண்டனத்துக்குரியது.

புஷ்ஷின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சிட்னி நகரின் முக்கிய ரயில் நிலையங்கள் முன் பேரணி, மாநாடு நடக்கும் சிட்னி ஓபரா மாளிகை முன் ஆர்ப்பாட்டம் நடத்தவும் போர் எதிர்ப்பு அமைப்பினர் முடிவு செய்துள்ளனர். ஆனால், பேரணி நடத்துபவர்கள் மீது நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படுமென போலீஸôர் எச்சரித்துள்ளனர்.

மாநாடு நடக்கவுள்ள ஓபரா மாளிகையைச் சுற்றி 5 கி.மீ. அளவுக்கு பாதுகாப்பு வேலி அமைத்துள்ளனர். பல்வேறு நாட்டு தலைவர்கள் தங்கும் ஹோட்டல்களைச் சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளன.

புஷ் அதிபராக இருக்கும் வரை அமெரிக்காவுடன் எந்த கூட்டணியும் வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆனால், புஷ்ஷின் நண்பராக செயல்பட்டு வருகிறார் ஆஸ்திரேலிய பிரதமர் ஜான் ஹோவர்ட். புஷ் எடுத்துவரும் அனைத்து கொள்கை முடிவுகளுக்கும் இவர் தலையசைத்து வருவதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

முன்னதாக, திங்கள்கிழமை ஆஸ்திரேலியா வந்த சீன அதிபர் ஹூ ஜின்டாவோவுக்கும் பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி

எந்த அரசியல் கட்சிக்கு அடிக்கும் யோகம்: மும்பை கண்ணன் பிறந்தவிழாவில்

கண்ணன் பிறந்த நாளன்று மராட்டிய இளைஞர்கள் உரி கட்டி அதனை மனித மலை எழுப்பி கைக்கொள்வது ஒரு பாரம்பரியமான செயலாக இருந்தூ வந்தது. தயிர்பானை எனப்பொருள்படும் தஹிஹண்டியை 'கோவிந்தாக்கள்' எனப்படும் இளைஞரணி அடித்து எடுக்கும்போது தற்காலங்களில் அதில் பணம் வைப்பது வழக்கமானது. ஆறு அல்லது ஏழு கட்ட மனித பிரமிட்கள் உருவாவது பிரமிப்பாக இருக்கும்.

இந்த விளையாட்டு வாக்குவங்கியில் பிரபலமாக இருப்பதைப் பார்த்து அரசியல் கட்சிகள் வாளாவிருக்குமா? மராட்டிய கட்சிகள் அனைத்தும் களத்தில் குதித்து இப்போது இது பயங்கர பணம் காய்க்கும் கூட்டம் சேர்க்கும் நிகழ்வாக மாறிவிட்டது. இவ்வருடம் 40 அடி உயரத்தில் ஒன்பது அடுக்குகள் கொண்டே எட்டக் கூடியனவாகவும் இலட்சக் கணக்கான பரிசுப்பணத்தை புரவலர்கள் கொடுத்தும் பிரம்மாண்ட நிலையை அடைந்துள்ளது. இது பங்கெடுப்போரின் உயிருக்கே ஆபத்தாகக் கூடிய நிலை என மஸ்கான் தாட்வாடி கோவிந்தா மண்டலின் தலைவர் யஸ்வந்த் ஜாதவ் கூறுகிறார்.

மேல் விவரங்களுக்கு...Mumbai politicos high on hitting Janmashtami jackpot

ஐந்து நாடுகள் கப்பற்படை பயிற்சி வங்காளவிரிகுடாவில் துவங்கியது

இந்திய கடற்பிரதேசத்திலேயே மிகப்பெரிய கப்பற் கூட்டமாக ஐந்து நாடுகலைச் சேர்ந்த கப்பற்படையினரின் போர்க்கலங்கள் தங்கள் திறன்களை சோதிக்கும் பயிற்சியை இன்று வங்காள விரிகுடாவில் துவங்கின. ஏவுகனைகள், நீர்மூழ்கிக் கலங்கள்,வானூர்தி திறன் இவை போர்க்கால நடப்பில் எவ்வாறு இயக்கப்படும் என முன்னோட்டம் நடத்தப்படுகின்றன. உண்மையான ஆயுதங்கள் பயன்படுத்த படாது. மயான்மரின் கோகோ தீவிற்கு 50 கடல்மைல்கள் தொலைவில் இப்பயிற்சி நடக்கிறது. அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் 26 கப்பல்கள் பங்கேற்கின்றன. இப்பாதையில் வரவேண்டாம் என வர்த்தக கப்பல்கள் எச்சரிக்கப் பட்டுள்ளன.

Zee News - Multi-nation Naval exercise in Bay of Bengal

இந்திய வரையறை நேரத்தை முப்பது நிமிடங்கள் முன்வைத்தால் ஆயிரம் கோடி சேமிக்கலாம்

இந்திய வரையறை நேரத்தை அரைமணிநேரம் முன்னே வைப்பதால் மின்சக்தி/எரிசக்தி பயன்பாட்டில் கணிசமான சேமிப்பு ஏற்படும் என்றும் பண அளவில் ரூஆயிரம் கோடிவரை மிச்சமாகும் என்றும் விஞ்ஞானிகள் குழுவொன்று பரிந்துரைத்துள்ளது. இப்படிச் செய்தால் கிரீன்விச் நடுமட்ட நேரத்தைவிட இப்போதிருக்கும் ஐந்தரை மணி நேரம் முன்னிருப்பதற்கு பதிலாக ஆறுமணி நேர இடைவெளி இருக்கும். தற்போது 82.5 பாகை கிழக்கு நெடுக்கோட்டில் (East Longitude) உள்ள நேர வரையறை 90 பாகைக்கு மாற வேண்டும். சக்தி சேமிப்பிற்காக மற்றநாடுகள் ஒன்றிற்கு மேற்பட்ட நேர மண்டலங்களை வைத்திருந்தாலும் இந்தியாவிற்கு அவை சரிப்பட்டு வராது என இக்குழு கருதுகிறது.

இக்குழுவின் அறிக்கையின் விவரங்களுக்கு....India eNews - Advance IST by 30 minutes, save Rs.10 bn: scientists

ஞாபகத்திறனுக்கொரு முகமது ஃபைசல்.

குடும்ப உறுப்பினர்களின் தொலைபேசி எண்களையே நினைவில் வைத்துக் கொள்ள முடியாமல் பலர் திண்டாடும்போது, 20 வயதான முகமது பைசல் என்பவர், ஒரு நிமிடத்தில் 50 கை பேசி எண்களை மளமளவென்று கூறுகிறார். புதுடில்லி, ராஜ்தானி ஓக்லாவில் வசிப்பவர் முகமது பைசல்(20).

எல்.ஜி., நிறுவனத்தில் சேவைப் பொறியாளராகப் பணியாற்றி வருகிறார். இவருக்கு நினைவுத் திறன் மிக அதிகமாக உள்ளதால், 50 கை பேசிஎண்களை மளமளவெனக் கூறுகிறார். 224 நாட்டின் தலை நகரங்கள் மற்றும் அதன் ஐ.எஸ்.டி.டி., எண் அனைத்தையும் ஒப்பிக்கிறார். எந்த நாட்டைப் பற்றிய செய்தியையும் 0.8 செகண்டில் தந்து, நடமாடும் குறிப்பேடாக (டைரக்டரி)'யாக இருக்கிறார்.

பைசலின் சாதனை இதோடு நிற்கவில்லை. 600 வருடம் வரை உள்ள நாட்காட்டியை முழுவதுமாக நினைவு வைத்துள்ளார். அவர் கூறுவது 100 சதவீதம் உண்மையாக இருப்பதால், அவருடைய பெயர், "ஹோல்டர்ஸ் ரிபப்ளிக் புக் ஆப் வேல்டு ரெக்கார்டு,' மற்றும் "ஓபன் புக் ஆப் வேல்டு ரெக்கார்டு' ஆகியவற்றில் சேர்க்கப்பட்டுள்ளது.

தன்னுடைய ஞாபகத் திறன் குறித்து பைசல் கூறியுள்ளதாவது: முதலில் ஒரு பொருளை நினைவில் நிறுத்தி வைக்க, ஆர்வம் இருக்க வேண்டியது மிகவும் அவசியம். நான் எந்த ஒரு பொருளையும் ஐந்து புலன்கள் மூலம் நினைவில் வைத்துக் கொள்வேன். பொருள்களை பார்த்து, கேட்டு, தொட்டு உணர்ந்து, படித்து, அனுபவித்து மூளையில் பதிவு செய்கிறேன். இவ்வாறு பைசல் கூறுகிறார். கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறுவதே இவரது இலட்சியமாம்.

தினமலர்

ICL அமைப்பில் இணையும் பாக்கிஸ்தான் வீரர்களுக்கு ஆயுட்காலத் தடை?

இந்தியன் கிரிக்கெட் லீக்கில் இணைபவர்களுக்கு ஆயுட்கால தடை விதிக்கப்படும் என பாக்கிஸ்தான் கிரிக்கெட் போர்டு எச்சரித்துள்ளது. இந்தியன் கிரிக்கெட் லீக் அமைப்பில் பல வீரர்கள் சேர்ந்து வருகின்றனர். இந்தியாவிலும் 20க்கும் மேற்பட்ட வீரர்கள் இதில் சேர்ந்துள்ளனர். வெஸ்ட்இண்டீஸ் வீரர் லாராவும் இதில் உள்ளார். இந்நிலையில் பாகிஸ்தான் வீரர்களான இன்சமாம் உல்ஹக், அப்துல் ரசாக், இம்ரான் பர்கத், முகமது யூசுப் ஆகியோர் இதில் இணைய உள்ளனர். அவ்வாறு இணைபவர்களுக்கு கிரிக்கெட் விளையாட ஆயுட்கால தடை விதிக்கப்படும் எனவும் விரைவில் தங்கள் முடிவை மாற்றி கொள்ள வேண்டும் எனவும் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தலைவர் நசீம் அஷ்ரப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தினமலர்

பாக்கிஸ்தான்: இரு குண்டுவெடிப்புகளில் பலர் பலி

பாக்கிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நிகழ்ந்த இரு குண்டுவெடிப்புகளில் குறைந்தது 15 பேர் பலியாகியுள்ளனர். பாக்கிஸ்தானின் ராவல்பிண்டி நகரின் ஆர்.ஏ.பஜார் பகுதியில் அணுசக்தி ஊழியர்களை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்த பஸ் ஒன்றில் குண்டுவெடித்ததில் 17 பேர் பலியாகினர். இரண்டாவது குண்டுவெடிப்பு ராவல்பிண்டி நகரின் வர்த்தகப்பகுதியான குவாசிம் பஜாரில் நிகழ்ந்தது. இதில்12 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 38 பேர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தலிபான் மற்றும் அல்காய்தா அமைப்புகள் இதன் பின்னணியில் இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமலர்

இதயநோய் கருத்தரங்கில் இதயநோயால் மாண்ட மருத்துவர்

சுமார் 25 ஆயிரம் பிரபல இதய நோய் சிறப்பு மருத்துவர்கள் அருகில் இருந்தும், இதய நோயால் பாதிக்கப்பட்ட ஒரு இதய நோய் சிறப்பு மருத்துவரை காப்பாற்ற முடியவில்லை.

ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் நடந்த இதய நோய் கருத்தரங்களில் ஐரோப்பாவை சேர்ந்த சுமார் 25 ஆயிரம் சிறப்பு மருத்துவ நிபுணர்கள் கலந்து கொண்டனர். செப்டம்பர் ஒன்று முதல் 5 வரை நடக்கும் அந்த கருத்தரங்கில் கலந்து கொள்ள இத்தாலியை சேர்ந்த 46 வயது பெண் இதய சிகிச்சை மருத்துவ நிபுணர் (கார்டியாலஜிஸ்ட்) ஒருவரும் வந்திருந்தார். அப்போது திடீரென நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்டு நிலைகுலைந்து போன அவருக்கு அங்கு கூடியிருந்தவர்கள் சிகிச்சை அளித்து அவரை ஒரளவு இயல்புநிலைக்கு கொண்டு வந்தனர். பின் அவசரம் அவசரமாக அவரை வியன்னா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரது நிலை மீண்டும் மோசமாகி, பின்னர் இறந்து விட்டார். 25 ஆயிரம் சிறப்பு இதய சிகிச்சை நிபுணர்கள் கூடி இருந்தும், இன்னொரு மருத்துவரைக் காப்பாற்ற முடியாமல் போனது.

தினமலர்

அணுசக்தி விவகாரம்: அப்துல்கலாம் ஆதரவு

முன்னாள் குடியரசுத்தலைவரும் ஏவுகணை விஞ்ஞானியுமான அப்துல் கலாம் தனியார் தொ.கா ஒன்றுக்கு அளித்த நேர்காணலில்..

இந்தியா அமெரிக்கா இடையேயான அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பிரச்னையில் பிரதமர் மன்மோகன் சிங் மேற்கொண்ட நடவடிக்கை தனிச் சிறப்பு வாய்ந்தது. ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவதற்கு முன்பாக பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்தேன். அப்போது அவரிடம், 'தோரியம் அணு உலை'முக்கியத்துவத்தை விளக்கினேன்.

பார்லிமென்ட் நடக்கும்போது கட்சிகளுக்குள் இடையே கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். இதனால், சபை நடவடிக்கை பாதிக்கப்படக் கூடாது. சபை தொடர்ந்து நடக்க வேண்டும். சபை நடவடிக்கைகளின் போது, அதை ஏராளமான மக்கள் கவனிக்கின்றனர். குறிப்பாக இளைஞர்கள் பலர் கவனிக்கின்றனர். உறுப்பினர்கள் இதை மனதில் வைத்து செயல்பட வேண்டும். ஆதாயம் தரும் பதவி தொடர்பான மசோதாவை திருப்பி அனுப்பியதால் தான் இரண்டாவது முறையாக ஜனாதிபதியாகும் வாய்ப்பு எனக்கு பறிபோனதாக கூறப்படுவதை ஏற்க முடியாது. இதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. இது ஒரு பெரிய விஷயம் அல்ல.

மக்களுக்காகவே இரண்டாவது முறையாக ஜனாதிபதியாவது குறித்து ஆலோசித்தேன். அரசியல் கட்சிகளுக்கு இடையே இந்த விஷயத்தில் ஒருமித்த கருத்து ஏற்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். இது பற்றி சர்ச்சை எழுந்தபோது தெரிவிக்கப்பட்ட கருத்துக்களுக்காக கவலைப்படவில்லை. வாஜ்பாய், மன்மோகன் சிங் ஆகிய இருவருமே பல்வேறு விஷயங்களில் தனிச் சிறப்பு வாய்ந்தவர்கள்.
இவ்வாறு அப்துல்கலாம் கூறினார்.

தினமலர்

நஜ்மா ஹெப்துல்லாவின் கணவர் மரணம்.

முன்னாள் ராஜ்ய சபா துணைத்தலைவரும், எம்.பியுமான நஜ்மா ஹெப்துல்லாவின் கணவர் அக்பர் அலி ஹெப்துல்லா இன்று காலமானார். சிறந்த மனித ஆற்றல் ஆலோசகரான இவரது வயது 75. வயிற்றுவலி காரணமாக டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அக்பர் அலி ஹெப்துல்லா சிகிச்சை பலனின்றி இறந்தார்.

தினமலர்

ஈழத் தமிழர் வரலாறு

சென்னை, செப். 4: ‘தமிழ் பாசறை’ என்ற பட நிறுவனம் ஈழத் தமிழர் வரலாற்று திரைப்படத்தை தயாரித்து வருகிறது. இதை வி.சி.குகநாதன் இயக்குகிறார். தேவா இசை அமைக்கிறார். அர்ச்சனா, ராரி, சுஜா நடித்துள்ளனர். பல முன்னணி நடிகர்களும் நடித்து வருகிறார்கள். 50 சதவிகித படப்பிடிப்பு முடிந்திருக்கிறது. இப்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் நடந்து வருகிறது. நவம்பர்-26 ம் தேதி படம் வெளியிடப்படுகிறது.
இதுகுறித்து தினகரன் நிருபரிடம் வி.சி.குகநாதன் கூறியதாவது:

ஈழத்தில் வாழும் தமிழர்களின் வரலாறு, அங்கு ஆட்சி செய்த தமிழ் மன்னர்கள், பிறகு ஏற்பட்ட மாற்றங்கள் போன்ற கதைகளை உள்ளடக்கிய வரலாற்று திரைப்படம் இது.
50 சதவிகித படப்பிடிப்பு முடிந்திருக்கிறது. தேவா இசையில் 8 பாடல்கள் பதிவாகி இருக்கிறது. இதில் 3 பாடல்களை யார் கண்ணன், புகழேந்தி தங்கராஜ், செல்வராஜன் ஆகியோர் படம் பிடிக்கிறார்கள்.

ரியாஸ்கான் இலங்கை மன்னராக நடிக்கிறார். பெரிய பட்ஜெட்டில் ஒரு மணி நேர படமாக தயாரிக்கப்பட்டு ஆங்கிலம், ஜெர்மன், கனடா, பிரஞ்சு உள்ளிட்ட உலக மொழிகளில் சப் டைட்டிலுடன் வெளியிடப்படுகிறது.

இவ்வாறு வி.சி.குகநாதன் கூறினார்.


நன்றி: தினகரன்

9 ஏக்கர் பரப்பில் தேசிய புற்று நோய் மையம்

9 ஏக்கர் பரப்பில் தேசிய புற்று நோய் மையம்

இந்தியாவில் முதல் முறையாக, சென்னை எழும்பூரில் 9 ஏக்கர் பரப்பில் தேசிய புற்றுநோய் நிறுவனம் அமைக்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

நோயாளிகளுக்கு முற்றிலும் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும் இந்த புற்றுநோய் நிறுவனத்துக்கு, முதல் கட்டமாக ரூ. 300 கோடி வரை முதலீடு செய்யப்படும்.

இதற்கான பணிகள் 6 மாதத்துக்குள் தொடங்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

சென்னையில் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:


சென்னை எழும்பூரில் உள்ள மத்திய அரசு மருந்து இருப்புக் கிடங்கில் தேசிய புற்றுநோய் நிறுவனம் அமைய இருக்கிறது. மருந்து இருப்புக் கிடங்கை மேம்படுத்தி, உலகத்தரம் வாய்ந்த கிடங்காக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

மருந்து இருப்புக்கிடங்கு ஏறத்தாழ 18 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. அதில், பாதி அளவுக்கு இடத்தை எடுத்து, தேசிய புற்றுநோய் நிறுவனம் தொடங்கப்படும்.

மருந்து இருப்புக் கட்டடங்கள் 200 ஆண்டுகள் பழமையானவை. இதனால், அனைத்துக் கட்டடங்களும் இடித்து மாற்றி அமைக்கப்படும்.

முதல் தவணையாக ரூ. 300 கோடி: தேசிய புற்றுநோய் நிறுவனம் தொடங்க முதல் தவணையாக ரூ. 300 கோடி செலவிடப்படும். உலகத் தரம் வாய்ந்த புற்றுநோய் மையமாக விளங்கும். நோயாளிகள் மட்டுமல்லாது, புற்றுநோய் தொடர்பான ஆராய்ச்சிகளும் நடைபெறும்.

சர்வதேச அளவில் புகழ்பெற்ற புற்றுநோய் நிறுவனங்களுடன் கூட்டு வைத்து, ஆராய்ச்சிப் பணிகள் நடைபெறும்.

நாட்டில் 10 லட்சம் பேருக்கு புற்றுநோய் புதிதாக வந்திருக்கிறது. புகையிலைப் பொருள்கள் காரணமாக, 60 சதவீதம் பேருக்கு புற்றுநோய் வருகிறது.

10-வது ஐந்தாண்டு திட்டத்தில், புற்றுநோயைக் கட்டுப்படுத்தும் பணி உள்ளிட்டவைகளுக்காக ரூ. 250 கோடி ஒதுக்கப்பட்டது. 11-வது ஐந்தாண்டு திட்டத்தில் ஏறத்தாழ ரூ.3,000 கோடி ஒதுக்கக் கேட்டு இருக்கிறோம். ரூ. 2,800 கோடி வரை கிடைக்கும் என்று நம்புகிறோம்.

அடையாறு புற்றுநோய் மையம், காஞ்சிபுரத்தில் உள்ள அறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவமனை, புதுவை ஜிப்மர் மருத்துவமனைகளுக்கு ஆகியன மண்டல புற்றுநோய் மையங்கள் என்று அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அங்கீகாரம் அளிக்க பரிசீலனை செய்து வருகிறோம்
என்றார் அன்புமணி.

பிராண்ஸில் இரண்டு பெரிய எரிசக்தி நிறுவனங்கள் இணைந்தன

பிரான்ஸ் நாட்டு எரிசக்தி நிறுவனங்களான சூயஸ் மற்றும் அரசுக்குச் சொந்தமான காஸ் த பிரான்ஸ் ஆகியவற்றின் இணைப்பை வரவேற்றுள்ள பிரான்ஸின் பிரதமர் பிரன்ஸ்வா ஃபில்லான் அவர்கள், இதன் மூலம் பிரான்ஸ் நாட்டுக்கு சர்வதேச எரிசக்தி வணிகத்தில், வலுவான பிரசன்னம் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் தற்போது உலகின் இரண்டு முன்னணி எரிசக்தி நிறுவனங்களைக் தன்வசம் கொண்டுள்ளது என்றும் அவர் கூறினார். இரண்டாவது நிறுவனம் என்று அவர் குறிப்பிட்டது அரசுக்குச் சொந்தமான மின்சக்தி விநியோக நிறுவனத்தையாகும்.

பிரஞ்சு அதிபர் நிக்கொலஸ் சர்கோசி அவர்களின் ஆதரவு பெற்ற ஒப்பந்தம் ஒன்றின்படி, இந்தப் புதிய நிறுவனத்தின் 35 சதவீத பங்குகளை அரசாங்கம் தன்வசம் வைத்திருக்கும்.

பிபிசி தமிழ்

French GDF, Suez agree new energy merger | Reuters.co.uk
Suez and Gaz de France Announce Merger - WSJ.com

அமெரிக்க அதிபர் புஷ் இராக்கிற்கு திடீர் விஜயம்

அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் இராக் சென்றுள்ளார். கடந்த ஒரு வருடத்திற்கும் மேலான காலப்பகுதியில் அவர் அங்கு செல்வது இதுவே முதல் முறை.

பாக்தாதிற்கு மேற்கேயுள்ள அன்பார் மாகாணத்திலுள்ள ஒரு விமானப்படைத் தளத்தில் அவர் இறங்கினார். அங்கு அவர் மூத்த அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.

இராக்கில் தொடந்து நடைபெற்று வரும் வன்முறையை குறைக்கும் நோக்கில் அங்கு மேலும் பல ஆயிரம் துருப்புகளை அனுப்புவது குறித்து அமெரிக்கத் தளபதிகள் தங்களது மதிப்பீட்டை அமெரிக்க காங்கிரஸுக்கு அளிப்பதற்கு சிலநாட்கள் உள்ள நிலையில், புஷ் இராக் சென்றுள்ளார்.

அமெரிக்க அதிபர் அன்பார் மாகாணத்திற்கு சென்றிருப்பது, அந்தப் பகுதியில் உள்ள பழங்குடியினத் தலைவர்களை அல் கையீதாவிற்கு எதிராக, அமெரிக்கப் படைகள் வெற்றிகரமாக திருப்பியதற்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தின் வெளிப்பாடாகவே பார்க்கப்படுகிறது என்று பாக்தாதிலுள்ள பிபிசியின் செய்தியாளர் தெரிவிக்கிறார்.

பிபிசி தமிழ்

AFP: Bush visits Asia as Iraq row rumbles at home
Bush: 'Fewer American forces' possible in Iraq - CNN.com

-o❢o-

b r e a k i n g   n e w s...