.

Thursday, June 28, 2007

பள்ளி ஆசிரியரை தற்கொலைக்குத் தூண்டினாரா பிரதீபாவின் கணவர்

பள்ளி ஆசிரியர் ஒருவரைத் தற்கொலைக்குத் தூண்டியதாக குடியரசுத் தலைவர் பதவிக்கான காங்கிரஸ் வேட்பாளரான பிரதிபா பாட்டீலின் கணவர் தேவிசிங் ராம்சிங் ஷெகாவத் மீதான வழக்கு விசாரணை ஜூலை 12-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஷெகாவத் மீதான புகார் மீது கிரிமினல் வழக்கு தொடருமாறு போலீஸôருக்கு மகாராஷ்டிரம் புல்தானா மாவட்டம் ஜல்கான்-ஜாமோத் குற்றவியல் முதன்மை மாஜிஸ்திரேட் உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து, கிரிமினல் வழக்குத் தொடர்வதற்குத் தடை விதிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் ஷெகாவத் மனுத் தாக்கல் செய்திருந்தார். மனுவை ஏற்றுக் கொண்ட உயர் நீதிமன்ற நீதிபதி, ஷெகாவத் மற்றும் 3 பேர் மீதும் கிரிமினல் வழக்குத் தொடர கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தடை விதித்தார்.

உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை வியாழக்கிழமை வந்தது. விசாரணையை ஜூலை 12-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார் நீதிபதி ஏ.பி. லாவண்டே.

தினமணி

கல்வி கட்டண உயர்வு: இராமதாஸ் எச்சரிக்கை!

மதுரை வந்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் தொழில் கல்வி உள்ளிட்ட கல்விக் கட்டணங்களைக் குறைக்காவிட்டால் தலைமைச் செயலகத்திற்குள் புகுந்து போராட்டம் நடத்தப் போவதாக எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,

"கல்வி நிலையங்கள் தாராள வசூல் வேட்டையில் இறங்கியுள்ளன. மருத்துவம், பொறியியல் கல்லூரிகளில் இடம் பிடிப்பதற்கு போட்டி அதிகரித்து வருவதால் அதிக நன்கொடை மற்றும் கட்டணம் செலுத்துபவர்களுக்கு மட்டும் இடம் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அரசு நிர்ணயித்த கட்டணங்களை விட கூடுதலாக வசூலிக்கப்படுகின்றன. இதனை தடுக்க சட்டம் இருந்தும் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது.

ராமன் குழு, சுப்ரமணியம் குழு ஆகிய குழுக்கள் ஏழைகளை பாதிக்கும் வகையில்தான் கட்டணங்களை நிர்ணயித்துள்ளன. அரசு ஒதுக்கீட்டின் கீழ் வரும் மருத்துவ மாணவர்களுக்கு தனியார் கல்லூரிகளில் ரூ.1.30 லட்சம் கட்டணம்தான் நிர்ணயிக்கப்பட்டது.

ஆனால் தனியார் கல்லூரிகளில் ரூ.4 லட்சம், ரூ.5 லட்சம் வரை வசூலிக்கின்றனர். இதுதவிர ஹாஸ்டல் கட்டணமாக ரூ.56,000 வரை வசூலிக்கப்படுகிறது.

இதே போல் பொறியியல் கல்லூரிக்கு ரூ.32,000 கட்டணம் என அரசு நிர்ணயித்துள்ளது. ஆனால் தனியார் பொறியியல் கல்லூரிகளில் ரூ.2 லட்சம் வரை வசூலிக்கப்படுகிறது.

தமிழகத்தில் உயர்கல்வி துறை இருக்கிறதா அல்லது செயலிழந்து கிடக்கிறதா என்று தெரியவில்லை. கல்வி கட்டணங்களை முறைப்படுத்த உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் முதல்வரின் அனுமதி பெற்று எம்.பி., எம்.எல்.ஏக்களைத் திரட்டி கோட்டைக்குள்ளேயே போராட்டம் நடத்துவேன்.

இடைதேர்தல் என்பதே தேவையில்லாத ஒன்று. பாமகவைப் பொருத்தவரை, இடைத்தேர்தல் தேவைப்படும் தொகுதியில், எந்த கட்சி வெற்றி பெற்றதோ அதே கட்சிக்கே அத்தொகுதியை ஒதுக்கிட வேண்டும்"
என்றார்

இந்தியா : புதிய சேவை வரிகள்

தொலைதொடர்பு சேவை, கட்டடங்களை வாடகைக்கு விடுதல் உள்ளிட்ட ஏழு சேவைகளுக்கு சேவை வரி விதிக்கப்படுவதாக சேவை வரிகள் ஆணையம் அறிவித்துள்ளது.மத்திய அரசின் சேவை வரி பல்வேறு இனங்களுக்கு விதிக்கப்பட்டு வருகிறது. இந்த பட்டியலில் மேலும் ஏழு இனங்கள் புதிதாய் தற்போது சேர்க்கப்பட்டுள்ளது.

இதன்படி, தொலை தொடர்புத் துறை, சுரங்கப் பணிகள், அசையாச் சொத்துகளை வாடகைக்கு விடுதல், ஒப்பந்த அடிப்படையில் பணிகளை மேற்கொள்ளுதல், வளர்ச்சி மற்றும் விருப்பமான சேவைகளை மேற்கொள்ளுதல், சொத்துகள் மற்றும் நிதி மேலாண்மை, வடிவமைப்பு துறை ஆகிய ஏழு பணிகளை மேற்கொள்வோர் இனிமேல் சேவை வரி செலுத்த வேண்டுமென சேவை வரிகள் ஆணையம் அறிவித்துள்ளது.

இதன்படி அசையா சொத்துகளை வாடகைக்கு விடுபவர்களில் ஏழு லட்சம் ரூபாய் வரை வாடகை பெறுபவர்கள் பதிவு மேற்கொள்ள வேண்டும்; எட்டு லட்சம் மற்றும் அதற்கு அதிகமாக வாடகை வசூல் செய்பவர்கள் சேவை வரி செலுத்த வேண்டியது அவசியமாகும்.

சுரங்கப் பணிகளுக்கு இதுவரை சேவை வரி விதிக்கப்படாமல் விலக்கு அளிக்கப்பட்டு இருந்தது. இப்போது சுரங்கப் பணிகளில் ஈடுபடுவோரும் சேவை வரியை செலுத்த வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மொபைல் போன்களில் வழங்கப்படும் சிறப்பு சேவைகளான இசை, படங்களின் தொகுப்பு, வால் பேப்பர், மொபைல் விளையாட்டுகள், ரிங்டோன் போன்றவற்றிற்கு இனி சேவை வரி விதிக்கப்படும்.

வடிவமைப்புத் துறையைப் பொறுத்தவரையில் பர்னிச்சர்கள், நுகர்வோர் பண்டங்கள், தொழில் துறை பொருள்கள், லோகோ, கிராபிக்ஸ், வெப்சைட்டுகள் போன்றவற்றை வடிவமைப்பதற்கு இனி சேவை வரி செலுத்த வேண்டும்.

இதுகுறித்து சேவை வரிகளின் ஆணையர் ஜெயின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:இந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் புதிதாக ஏழு இனங்களுக்கு சேவை வரி விதிக்கப்படுகிறது. மேற்கண்ட சேவைப் பணிகளை மேற்கொள்வோர் சேவை வரி செலுத்துவதற்கான பதிவினை வரும் 30ம் தேதிக்குள் மேற்கொள்ள வேண்டும். முதல் சேவை வரியினை ஜூலை 5ம் தேதி செலுத்த வேண்டும். பதிவு மற்றும் சேவை வரி செலுத்துவோர் வசதிக்காக அண்ணா சாலையில் உள்ள சேவை வரி அலுவலகத்தில் சிறப்பு கவுன்ட்டர்கள் இயக்கப்படுகின்றன. உரிய காலத்தில் பதிவு மேற்கொள்ளாதவர்கள் மற்றும் சேவை வரி செலுத்தாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.இவ்வாறு ஜெயின் தெரிவித்துள்ளார்.

நன்றி: தினமலர்

பெட்ரோல் டீசல் - விரைவில் விலை உயருகிறது?

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலையை பொறுத்து அவ்வப்போது இந்தியாவில் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை உயர்த்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தற்போது கச்சா எண்ணெயின் விலை சர்வதேச சந்தையில் வெகுவாக அதிகரித்துள்ளது. இதனால் எண்ணெய் நிறுவனங்களுக்கு கிட்டத்தட்ட ரூ. 50 ஆயிரம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலையை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டது. ஆனால் இடையில், உ.பி. மாநில சட்டசபை தேர்தல் குறுக்கிட்டதால் அதை மனதில் கொண்டு விலை உயர்வை மத்திய அரசு எடுக்காமல் இருந்தது.

இந்த நிலையில், இனியும் நஷ்டத்தை தாங்க முடியாது என்று மத்திய அரசுக்கு பெட்ரோலிய நிறுவனங்கள் நெருக்கடி கொடுக்க ஆரம்பித்துள்ளன. இதைத் தொடர்ந்து பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலையை கடுமையாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

இதுதொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூடி இதுகுறித்து ஆலோசிக்கிறது. இக்கூட்டத்தின் இறுதியில் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய சூழ்நிலையில் சமையல் எரிவாயுவின் விலை சிலிண்டருக்கு ரூ. 160 வரை அதிகரிக்கக் கூடும் என தெரிகிறது. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 5.50 வரையிலும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 4.41 வரையிலும் அதிகரிக்கலாம். மண்ணெண்ணையின் விலையும் அதிகரிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு மரத்தை வெட்டினால் 50 மரக் கன்றுகளை நட வேண்டும்: உயர் நீதிமன்றம்

சென்னை தியாகராய நகர் வடக்கு உஸ்மான் சாலையில் மேம்பாலம் கட்டும் பணிக்காக, சாலையோர மரங்களை வெட்டக் கூடாது என்று எக்ஸ்னோரா அமைப்பு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. தலைமை நீதிபதி ஏ.பி. ஷா, நீதிபதி பி. ஜோதிமணி ஆகியோர் இவ்வழக்கை விசாரித்தனர்.

உஸ்மான் சாலையில் மரங்களை வெட்ட மாநகராட்சிக்கு அனுமதி அளித்தனர். ஒரு மரத்தை வெட்டினால் அதற்கு ஈடாக 50 மரக் கன்றுகளை நட வேண்டும். அவற்றை 5 ஆண்டுகளுக்குப் பாதுகாக்க வேண்டும் என்று மாநகராட்சிக்கு உத்தரவிட்டனர்.

தினமணி

விம்பிள்டன்: சானியா மிர்சா இரண்டாம் சுற்றில் தோல்வி

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் இன்று நடந்த இரண்டாம் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சானியா மிர்சா பதினோராம் தரவரிசையில் உள்ள உருசியாவைச் சேர்ந்த பெட்ரொவாவிடம் 6-2,6-2 என்ற நேர் ஆட்டங்களில் தோற்றார்.

பெண் டி.எஸ்.பி; ஆண் எஸ்.ஐ - புகாருடன் மனைவி

இதுபற்றிய தினத்தந்தி செய்தி பின்வருமாறு:

பெண் போலீஸ் துணை சூப்பிரண்டுடன் தனது கணவர் கள்ளக்காதல் வைத்துள்ளதாக சப்-இன்ஸ்பெக்டரின் மனைவி உசிலம்பட்டி மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கூறியுள்ளார்.


மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கொக்குளத்தை சேர்ந்த பரமேஸ்வரி என்பவருக்கும் திருமங்கலத்தை சேர்ந்த வைரவன் மகன் மோகன் (வயது 46) என்பவருக்கும் கடந்த 1990 ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளன. திருமணத்தின்போது மோகன் போலீசாக வேலைபார்த்தார். கடந்த 1998 ம் ஆண்டு சப்-இன்ஸ்பெக்டராக தேர்வாகி விழுப்புரத்தில் பணியில் சேர்ந்தார். அதை தொடர்ந்து அவர் குடும்பத்துடன் விழுப்புரத்தில் வசித்துவந்தார்.

இந்தநிலையில் விழுப்புரத்தில் புதிதாக பதவி ஏற்ற பெண் போலீஸ் துணை சூப்பிரண்டு உமையாள் என்பருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இவர்கள் கள்ளக்காதல் விவகாரம் திருமண அளவிற்கு போய்விட்டது. இந்தநிலையில் சப்-இன்ஸ்பெக்டர் மோகன் மதுரை கீரைத்துறை போலீஸ்நிலையத்திற்கு மாற்றப்பட்டார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சப்-இன்ஸ்பெக்டர் மோகன் விபத்தில் காயமடைந்து தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. அவரை பார்க்க விழுப்புரத்தில் இருந்து பெண் போலீஸ் துணை சூப்பிரண்டு உமையாள் மதுரை வந்துள்ளார். இதை அறிந்த பரமேஸ்வரி கோபமடைந்து மோகனிடம் தகராறு செய்துள்ளார். தகராறு முற்றியநிலையில் பரமேஸ்வரி கோபித்துக்கொண்டு கொக்குளத்தில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் மோகன் தனது மனைவி பரமேஸ்வரியை என்னுடன் சேர்ந்து வாழ வேண்டுமானால் எனக்கு உள்ள கடனை அடைக்க ரூ.12 லட்சம் வரதட்சணையாக உனது பெற்றோரிடம் வாங்கி வரவேண்டும் இல்லாவிட்டால் விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து போட்டுக்கொடுக்க வேண்டும். இந்த இரண்டு கண்டிசனுக்கும் ஒத்துவரவில்லை என்றால் உன்னை துப்பாக்கியால் சுட்டு விடுவேன் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.

இது குறித்து பரமேஸ்வரி உசிலம்பட்டி அனைத்து மகளிர் போலீஸ்நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

எனது கணவர் மோகன் அவருடைய கள்ளக்காதலி பெண் போலீஸ் துணை சூப்பிரண்டு உமையாள் தூண்டுதலின்பேரில் என்னிடம் ரூ.12 லட்சம் வரதட்சணை கேட்டதுடன் என்னை கொலை செய்துவிடுவேன் என மிரட்டினார். மேலும் விவாகரத்து பத்திரத்திலும் கையெழுத்து போட கட்டாயப்படுத்தி துப்பாக்கியை காட்டி மிரட்டுகிறார். அதற்கு உடந்தையாக அவரது குடும்பத்திருனரும் உள்ளனர்.

இவ்வாறு அவர் தனது புகாரில் கூறியிருந்தார்.

இதனை தொடர்ந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகன், அவருடைய தந்தை வைரவன், தாயார் அன்னக்கொடி, தம்பி பிரபாகரன், அவருடைய மனைவி அமுதா, தங்கை லதாதேவி, அவருடைய கணவர் விஜயன் ஆகிய 8 பேர் மீது மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயநாச்சியார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

தற்போது பெண்போலீஸ் துணை சூப்பிரண்டு உமையாள் விருதுநகரில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இசை அமைப்பாளர் ஏற்படுத்திய சர்ச்சை

இந்திப்பட இசை அமைப்பாளர் ஹிமேஷ் ரேஷ்மியா பெண்கள் அணியும் பர்தா அணிந்து ஆஜ்மீர் தர்காவுக்கு சென்று வழிப்பட்டார். இதற்கு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. இதனால் சர்ச்சை ஏற்பட்டது.

தன்னுடைய குற்றத்தை மன்னிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். சூஃபி ஞானி Khwaja Moinuddin Chisti-யின் கோவிலை வழிநடத்தும் அஞ்சுமன் அமைப்பாளர்களும் அவருடைய மன்னிப்பை ஏற்றுக்கொண்டுள்ளனர்.

முதலில் முகத்திரை இல்லாமல்தான் ஆசி வாங்க சென்றார். ஆனால், திரண்டிருந்த ரசிகர்களின் கூட்டத்தினால் இயலவில்லை.

ஹிந்தி நடிகை கத்ரீனா கயிஃப் முழங்கால் தெரியுமாறு பாவாடை அணிந்து வந்ததனால் இதே ஆலயத்தில் சர்ச்சை ஏற்பட்டது.

The Hindu :: Himesh Reshammiya apologises

First Bollywood: This time, Katrina Kaif will be in a long skirt

மகாத்மா காந்தியின் கடிதம்: ஏலத்தை தடுக்க இந்தியா நடவடிக்கை

மகாத்மா காந்தி எழுதிய கடிதம் ஏலம் போகாமல் இருக்க பிரதமர் மன்மோகன் சிங் நடவடிக்கை எடுத்துள்ளார்.

மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்படுவதற்கு 19 நாட்களுக்கு முன்பு, 1948-ம் ஆண்டு ஜனவரி 11-ந்தேதி முஸ்லிம்கள் மீது பரிவு காட்டவேண்டும் என்று அவர் நாட்டு மக்களுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

மகாத்மாவின் இந்தக் கடிதத்தை லண்டனில் உள்ள கிறிஸ்டி கலைப் பொருள் விற்பனைக் கூடம் ஏலத்திற்கு கொண்டு வந்துள்ளது. வருகிற ஜுலை மாதம் 3-ந்தேதி கடிதம் ஏலம் விடப்பட இருக்கிறது. மகாத்மா காந்தி எழுதிய இந்தக் கடிதம் 10 லட்ச ரூபாய்க்கு ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட காந்தியவாதிகள் பசந்த் குமார் பிர்லா, சத்யா பால் ஆகிய இருவரும் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதி அதை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

அவர்கள் எழுதிய கடிதத்தில், "மகாத்மா காந்தியின் கடிதத்தை இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரி மூலம் பேச்சு வார்த்தை நடத்தி பெறவேண்டும். அல்லது ஏலத்தின்போது கடிதத்தை மத்திய அரசே எடுக்கவேண்டும்'' என்று யோசனை தெரிவித்திருந்தார்கள்.

இதனைத் தொடர்ந்து மகாத்மா காந்தியின் கடிதம் ஏலம் போகாமல் இருக்க நடவடிக்கை எடுக்கும்படி கலாசாரத்துறை அமைச்சகத்திற்கு பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவிட்டார். உடனடியாக கலாசாரத்துறை அமைச்சகம் கடிதத்தை திரும்பப் பெறும் முயற்சியில் இறங்கியது. மேலும் இந்த விஷயத்தில் வெளி விவகாரத்துறையின் உதவியையும் கேட்டு கடிதம் எழுதியுள்ளது.

இது பற்றி கலாசாரத்துறை அமைச்சகத்தினர் கூறுகையில், "நாங்கள் மகாத்மா காந்தியின் கடிதத்தை எவ்வாறு பெறுவது என்பது தொடர்பாக ஆலோசனை கேட்டிருக்கிறோம். மகாத்மாவின் கடிதத்தை திரும்பப் பெறுவதில் இந்தியா உறுதியாக இருக்கிறது'' என்றனர்.

மகாத்மா காந்தியின் கடிதத்தைப் பெறுவதில் பண பிரச்சினையும் சேர்ந்து இருப்பதால் அது பற்றி கலாசாரத்துறை அமைச்சகத்திற்கு, மத்திய வெளிவிவகாரத்துறை ஆலோசனை தெரிவித்துள்ளது. எனவே மகாத்மா காந்தியின் கடிதம் ஏலம் போகாமல் தடுக்கப்படுவது உறுதி என்று தெரிகிறது.

இந்து - முஸ்லிம் ஒற்றுமை குறித்து மகாத்மா காந்தி எழுதிய 18 கடிதங்கள் 1998-ம் ஆண்டு இதே போல் ஏலத்தில் விடப்பட்டன. அப்போது இங்கிலாந்தில் வசிக்கும் தாய்நாட்டுப் பற்றுகொண்ட சில இந்தியர்கள் அந்தக் கடிதங்களை ஏலத்தில் எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாலியல் குற்றங்களை ஒப்புக்கொண்டார் இஸ்ரேேல் அதிபர்

இஸ்ரேேல் அதிபர் மொஷே கட்சவ் அவர் மீது சுமத்தப்பட்ட பாலியல் குற்றங்களை ஒப்புக்கொண்டுள்ளார். பெண் பணியாளர்களை பாலியல் துன்பத்திற்கு ஆக்கியதாக அவர்மேல் வழக்கு தொடரப்பட்டிருந்தது. ஜெயில் தண்டனையை தவிர்க்கும் விதமாக அரசு தரப்போடு அவர் குற்றங்களை்ற்றங்களை ஒப்புக்கொண்டு சமரசம் செய்துகொண்டார். விரைவில் பதவி விலகுவார் என அறியப்படுகிறது.

Israeli president pleads guilty to sex offences Reuters
Analysis: Israeli presidency at its lowest point Jerusalem Post
Plea Bargain Announced in Katsav Case Forbes

அணு உலைகளை மூட வடகொரியா சம்மதிக்கிறது.

அணு உலைகளை மூடுவதற்கு வடகொரியா சம்மதித்து உள்ளது. அப்படி மூடப்பட்டதை பார்வையிடுவதற்கு சர்வதேச அணு சக்தி ஏஜென்சி அதிகாரிகளுக்கும் அனுமதி அளிக்கப்படும் என்றும் வடகொரியா தெரிவித்து உள்ளதாக ஐரோப்பிய ஒன்றிய தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

வடகொரியா ஒரு கம்ïனிஸ்டு நாடு ஆகும். அது அணு ஆயுத சோதனை நடத்தியதாக அறிவித்தது. இதைத் தொடர்ந்து அந்த நாட்டின் மீது பொருளாதாரத் தடையை ஐ.நா.சபை விதித்தது.

அதன் பிறகு பேச்சுவார்த்தைக்கு அந்த நாடு முன்வந்தது. இந்த பேச்சுவார்த்தையில் அணு ஆயுதத் திட்டத்தை வடகொரியா கை விட்டால், அதற்கு நிதி உதவி அளிக்கப்படும் என்று உடன்பாடு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அணு உலைகளை மூடுவதற்கு வடகொரியா சம்மதித்தது.

பொருளாதாரத்தடை விதிக்கப்பட்டு இருந்த போது, வடகொரியாவின் 12 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வங்கி முதலீடு முடக்கப்பட்டது. உடன்பாடு ஏற்பட்டதும், அந்த முதலீடு புழக்கத்துக்கு விடுவதற்கு அனுமதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அணு ஆயுத திட்டம் கைவிடப்பட்ட ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தது.

அணு உலைகளை மூடுவதற்கு காலவரையரை எதையும் வடகொரியா அறிவிக்கவில்லை. கடந்த வாரம் வடகொரியா சென்று வந்த அமெரிக்க தூதர் கிறிஸ்டோபர் ஹில் இன்னும் 3 வாரங்களில் அணு உலைகள் மூடப்படும் என்று அறிவித்தார்.

இதற்கிடையில் அந்த நாட்டுக்கு சென்று திரும்பிய ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற உறுப்பினர் ஹிïபர்ட் பிர்கர் கூறுகையில், வடகொரிய அதிகாரிகளை நான் சந்தித்து பேசினேன். அவர்கள், அணு உலைகளை மூடுவதில் உறுதியாக இருக்கிறார்கள். அடுத்த மாதம் (ஜுலை) நாங்கள் உலைகளை மூடிவிடுவோம் என்று தெரிவித்தனர்.

அணு உலைகளை மூடுவதை பார்வையிடுவதற்கு சர்வதேச அணுசக்தி ஏஜென்சி அதிகாரிகளை அனுமதிக்கவும் வடகொரியா சம்மதித்து உள்ளது.

அந்த ஏஜென்சியை சேர்ந்த ஒலிஹெய்னன் தலைமையில் ஒரு குழு ஏற்கனவே வடகொரியா சென்று அடைந்து உள்ளது. கடந்த ஆண்டு முதல் அணு ஆயுத சோதனை நடத்திய யோங்க்பியோன் நகரில் உள்ள உலைக்கூடத்துக்கு சர்வதேச அணுசக்தி ஏஜென்சி அதிகாரிகள் குழு வியாழக்கிழமை செல்ல இருக்கிறது.

மதுரை மேற்கு: நாளை வாக்கு எண்ணிக்கை.

மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு நேற்று முன்தினம் நடந்தது. கே.எஸ்.கே. ராஜேந்திரன் (காங்கிரஸ்), செல்லூர் ராஜு (அ.தி.மு.க.), சிவமுத்துக்குமரன் (தே.மு.தி.க.), சசிராமன் (பாரதீய ஜனதா), சிற்றரசு (புதிய தமிழகம்) மற்றும் 23 சுயேட்சைகள் உள்பட 28 பேர் போட்டியிட்டனர்.

தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 1,56,182 பேர். வாக்குப்பதிவுக்காக 216 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. 75.34 சதவீத வாக்குகள் பதிவானது. மொத்தம் 1,17,666 பேர் தங்கள் ஓட்டுக்களை பதிவு செய்தனர். இவர்களில் ஆண்கள் 58,329, பெண்கள் 59,337.

கடந்த தேர்தலில் 70 சதவீதம் ஓட்டுக்கள் பதிவாகி இருந்தது. இந்த முறை கூடுதலாக 5 சதவீத ஓட்டுக்கள் பதிவாகி இருக்கிறது.

ஓட்டுப்பதிவு முடிந்ததும் அந்தந்த வாக்குச்சாவடிகளில் உள்ள மின்னணு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டன. பின்னர் துணை ராணுவ பாதுகாப்புடன் ஓட்டு எண்ணும் இடமான மதுரை மருத்துவக்கல்லூரி வளாகத்திலுள்ள கட்டிடத்திற்கு கொண்டு வரப்பட்டன. அவை அனைத்தும் அங்குள்ள ஒரு அறையில் வைக்கப்பட்டு, கதவைப் பூட்டி சீல் வைக்கப்பட்டது. அந்த அறை முன்பு துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இரவு, பகலாக அவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஓட்டு எண்ணும் அரங்கத்தில் 16 மேஜைகள் போடப்பட்டு 14 சுற்றுகளாக ஓட்டுக்கள் எண்ணப்படுகின்றன. அங்கு வேட்பாளர்களின் ஏஜெண்டுகள் ஓட்டு எண்ணிக்கையை பார்வையிடுவதற்காக சவுக்கு கட்டைகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டு கம்பி வலை கட்டப்பட்டுள்ளது. ஓட்டு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. பகல் 1 மணிக்குள் தேர்தல் முடிவு முழுமையாக அறிவிக்கப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்திய இரயில்வே: புதிய முன்பதிவு மையங்கள்

பயணிகளின் வசதிகளுக்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் இந்திய இரயில்வே புதிய திட்டம் ஒன்றை இன்று அறிவித்துள்ளது. அதன்படி பல்கலைக்கழகங்கள், கல்லூரி வளாகங்களில் ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட உள்ளது. இந்த வசதி இல்லாத பகுதிகளில் தபால் நிலையங்களில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்படும் என்றும் இந்திய இரயில்வே அறிவித்துள்ளது.

புதிய இங்கிலாந்து பிரதமர்: மன்மோகன் வாழ்த்து

கடந்த 10 ஆண்டுகளாக பதவியில் இருந்த டோனி பிளேர் பதவி விலகியதையடுத்து, இங்கிலாந்து பிரதமராக தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த கோர்டன் பிரவுன் இன்று பதவியேற்றார். புதிதாக பதவியேற்ற பிரவுனுக்கு இந்திய பிரதமர் வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில் பிரவுனின் பதவியேற்பால் தான் மிகவும் மகிழ்ச்சி அடைந்ததாகவும், இந்த வாய்ப்பு இரு நாடுகளுக்கிடையே நட்புறவையும், ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதாக அமையும் என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

முத்திரைத்தாள் வழக்கில் டெல்கிக்கு 13 வருட சிறை

பலகோடி ரூபாய் முத்திரைத்தாள் மோசடி வழக்கில் இன்று வழங்கப்பட்ட தீர்ப்பில் முக்கியக் குற்றவாளி அப்துல் கரீம் டெல்கிக்கு 13 வருட சிறைதண்டனையும் 100 கோடிரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. தனது குற்றங்களை டெல்கி ஒப்புக்கொண்டபிறகு நீதிபதி சித்ரா அவருக்கான தண்டனையை பல்வேறு குற்றவியல் சட்டங்களின் கீழ் அறிவித்தார்.
The Hindu News Update Service

உ.பி: மாயாவதி,சுவாமிபிரசாத் மௌர்யா சட்டமன்ற மேலவைக்கு தேர்வு

உத்தரபிரதேச முதல்வர் மாயாவதியும் அவரது அமைச்சரவையின் சுவாமி பிரசாத் மௌர்யாவும் மாநில சட்டமன்றத்தின் மேலவைக்கு எதிர்ப்பின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
The Hindu News Update Service

ஜெ.மீதான வழக்கு: தேர்தல் ஆணையத்தின் கோரிக்கை நிராகரிப்பு.

2001 ஆம் ஆண்டில் இரண்டு தொகுதிகளுக்கு மேல் 4 தொகுதிகளில் போட்டியிட்ட ஜெயலலிதா மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது.

உயர்நீதிமன்றத் தீர்ப்பின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தாவும் தெரிவித்தார்.

இந்த நிலையில் தேர்தல் ஆணையம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 2 தொகுதிகளுக்கு மேல் போட்டியிடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வகை செய்யும் சட்டப் பிரிவு கடந்த 2002ம் ஆண்டில்தான் கொண்டு வரப்பட்டது.

இதன்படி, 2001ல் நடந்த சம்பவத்திற்கு நடவடிக்கை எடுக்க முடியுமா என்று உயர்நீதிமன்றம் விளக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

இந்த மனு இன்று நீதிபதி தர்மாராவ் தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது ஜெயலலிதா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜோதி, இந்த வழக்கு தொடர்பாக தங்களது கருத்தை கேட்ட பின்னர்தான் தீர்ப்பு அளிக்க வேண்டும் என்று கோரி மனு தாக்கல் செய்தார்.

திமுக சார்பில் ஆஜரான வக்கீல் சண்முகசுந்தரம், இது வழக்கை இழுத்தடிக்க நடக்கும் முயற்சி. தேர்தல் ஆணையம் ஜெயலலிதாவுக்கு உடந்தையாக உள்ளது என்றார்.

அனைத்துத் தரப்பினரின் வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தேர்தல் ஆணையத்தின் கோரிக்கைக்கு விளக்கம் தரப் போவதில்லை என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்தனர்.

ஈரானிலிருந்து எரிவாயு: இந்தியா, பாக் ஒப்பந்தம்

ஈரானிலிருந்து இந்தியாவிற்கு எரிவாயு கொண்டுவர நடந்த மூன்றுநாடுகள் பேச்சுவார்த்தையில் இந்தியாவும் பாகிஸ்தானும் எரிவாயுவை பாக். வழியே கொண்டுவருவதற்கான விலையில் உடன்பாடு கண்டுள்ளன; ஈரான் கடைசிநிமிடத்தில் தன் விலைஒப்பந்தத்தில் சில மாற்றங்களை கேட்டுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கொருமுறை உலக சந்தை விலைகளின்படி விலையை ஏற்றி/இறக்க ஒரு நிபந்தனையை சேர்க்க ஈரான் விரும்புகிறது. ஆனால் இந்தியாவும் பாகிஸ்தானும் 25 வருட ஒப்பந்த காலம் முழுமையும் ஒரு மில்லியன் BTUவிற்கு $4.93 ஆக விலையை மாற்றாமல் வைக்க விரும்புகின்றன. இந்தப் பேச்சுவார்த்தைகள் நாளையும் தொடரும்.

மேல் விவரங்களுக்கு...The Hindu News Update Service

தமிழ்நாடு: 2500 கோடியில் டாடா தொழிற்சாலை

தமிழகத்தில் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ. 2500 கோடி மதிப்பில் டைட்டானியம் டை ஆக்ஸைடு தொழிற்சாலையை அமைக்கும் ஒப்பந்தத்தில் தமிழக அரசுடன், இன்று டாடா நிறுவனம் கையெழுத்திட்டது.

தென் தமிழகத்தில் அமையவிருக்கும் மிகப் பெரிய நிறுவனத்தின் தொழிற்சாலை இது என்பதால் இந்த ஒப்பந்தம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

இதுதொடர்பான ஒப்பந்தம் முதல்வர் கருணாநிதி தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தில் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் முத்துராமனும், தமிழக அரசின் தொழிற்துறை செயலாளர் சக்தி கந்ததாஸும் கையெழுத்திட்டனர்.

நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி, டாடா குழும தலைவர் ரத்தன் டாடா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த ஒப்பந்தம் குறித்து ரத்தன் டாடா கூறுகையில், ரூ. 2,500 கோடியில் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் சார்பில் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்ளில் டைட்டானியம் டை ஆக்ஸைடு நிறுவனம் நிறுவப்படும்.

இதன் உற்பத்தித் திறன் 1 லட்சம் டன்னாக இருக்கும். இந்தத் திட்டத்தின் மூலம் 1000 பேருக்கு நேரடியாகவும், 3000 பேருக்கு மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு கிடைக்கும்.

இதுத் தவிர 10,000 பேருக்கு விவசாயத் தொழில் துறையில் வேலை கிடைக்கும் என்றார்.

இந்தத் தொழிற்சாலை அமைப்பதற்கான நிலத்தைத் தர முன்வந்து நிலம் கொடுக்க விரும்புபவர்களுக்கு, அவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும் என டாடா நிறுவனம் தெரிவித்துள்ளது.

எம்.பி.பி.எஸ். 'கட்-ஆஃப் மார்க்' விவரம்

தமிழக மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். முதலாம் ஆண்டு படிப்பில் (2007-08) மாணவர்கள் சேருவதற்கு


 1. பொதுப் பிரிவு மாணவர்களுக்கான "கட்-ஆஃப் மார்க்' 197-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 2. பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் - 194.50;

 3. மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் - 191.75;

 4. தாழ்த்தப்பட்ட வகுப்பினர் - 187.25;

 5. பழங்குடி வகுப்பினர் - 179.

கூட்டு மதிப்பெண்ணில் ஒவ்வொரு 0.25 மதிப்பெண்ணுக்கும் இடையே ரேங்க் பட்டியலில் மாணவர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது.

மருத்துவப் படிப்பில் சேர

 • 200-க்கு 200 கூட்டு மதிப்பெண்ணை மாவட்டங்களைச் சேர்ந்த 7 மாணவர்கள் வாங்கியுள்ளனர்;

 • இதற்கு அடுத்தபடியாக 199.75 கட்-ஆஃப் மார்க்கை 12 மாணவர்கள் வாங்கியுள்ளனர்;

 • 199.50 கட்-ஆஃப் மார்க்கை மொத்தம் 17 மாணவர்கள் வாங்கியுள்ளனர்;

 • 199.25 கட்-ஆஃப் மார்க்கை மொத்தம் 13 மாணவர்கள் வாங்கியுள்ளனர்;

 • 199 கட்-ஆஃப் மார்க்கை மொத்தம் 25 மாணவர்கள் வாங்கியுள்ளனர்.

 • ஆக, கட்-ஆஃப் மார்க் 200-க்கும் 199-க்கும் இடையில் ஒரு மார்க் வித்தியாசத்தில் 74 மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர்.

கட்-ஆஃப் மார்க் 199-க்கும் 198-க்கும் இடையே மட்டும் 114 மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர்.

ரேங்க் பட்டியலை www.tnhealth.org என்ற இணையதளத்திலும் பார்க்கலாம்.

கேரளா: கண்ணீர் விட்டு அழுத மாவட்ட ஆட்சியர்.

கேரளாவில் தென் மேற்குப் பருவ மழை பெய்து வருகிறது. கடந்த வாரம் பருவ மழை தீவிரமடைந்து 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பெரும் பொருட் சேதமும் ஏற்பட்டது.

மழை, வெள்ளத்திற்குப் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 50 ஆயிரம் இழப்பீடு வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது.

இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் கோட்டயம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் ஆட்சித் தலைவர் டாக்டர் ஷர்மிளா மேரி தலைமையில் நடந்தது.

இதில் எம்.எல்.ஏக்கள் தாமஸ், சி.எப்.ஜார்ஜ், ஜார்ஜ் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்ட அதிகாரிகள் பலர், நிவாரணப் பொருட்கள், நிதியுதவி உள்ளிட்டவை கிடைப்பதில் தாமதம் இருப்பதாக கூறினர்

இதைக் கேட்ட எம்.எல்.ஏக்கள், தங்கள் மீது மக்களின் அதிருப்தி திரும்பி விடுமோ என பயந்து, இதற்கெல்லாம் முக்கிய காரணம் மாவட்ட ஆட்சித் தலைவர்தான் என்று கூறி ஆட்சித் தலைவர் மீது பழியைப் போட்டனர்.

எல்லாத் தவறுக்கும் தன் மீது எம்.எல்.ஏக்கள் பழி போட்டதையடுத்து ஆட்சித் தலைவர் மேரி அதிர்ச்சி அடைந்து அழ ஆரம்பித்து விட்டார். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் பேசிய ஆட்சித் தலைவர், அரசுத் தரப்பிலிருந்து மாவட்ட நிர்வாகத்திற்கு உதவிகள் வருவதில் ஏற்பட்டுள்ள தாமதம்தான் நிவாரண உதவிகளை உரிய நேரத்தில் வழங்க முடியவில்லை என்று விளக்கினார்.

எம்.எல்.ஏக்களின் புகாரால் மாவட்ட ஆட்சித் தலைவர் அழுதது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காவல்துறையை இடையூறின்றி இயங்க விடுக : இராம்தாஸ்

மதுரையில் பத்திரிகையாளர்களிடம் பேசும்போது பாமக தலைவர் இராம்தாஸ் காவல்துறை அரசியல் தலையீடு இன்றி சுதந்திரமாக செயல்பட்டு குற்றங்களை அடுத்த மூன்று வருடங்களுக்குள் குறைக்கவேண்டும், தமிழகம் மீண்டும் அமைதிப் பூங்காவாக திகழ வேண்டும் எனக் கூறினார். காவல்துறையின் கல்லீரல் அதிமுக ஆட்சியில் பாதிக்கப்பட்டுவிட்டது என்று முதல்வர் கருணாநிதி கூறியதை ஒட்டி தற்போது அது(ஈரல்) முழுவதும் கெட்டுவிட்டதாகக் கூறினார். காவலர், குற்றவாளிகள், அரசியல்வாதிகள் இவர்களிடையே இருக்கும் கூட்டே சென்னை போன்ற நகரங்களில் கொலை, கொள்ளை குற்றங்கள் அதிகரிக்கக் காரணம் என்றும் அவர் கூறினார். திட்டமிடப்பட்டு செய்யப்படும் கொலைகளை விரைவில் புலனாய்வு செய்ய தனிப்படை அமைக்க வேண்டும் என்றும் அவர்கள் மீதான குற்றங்களை விசாரித்து உடனடி தீர்ப்பு வழங்க மகாராட்டிரத்தில் உள்ளதுபோல திட்டமிட்ட குற்றங்கள் ஒழுங்குச் சட்டம் கொண்டுவரப்படவேண்டும் என்றும் அவர் கூறினார்.

The Hindu News Update Service

இந்தியாவின் மில்லியனர்கள் இலட்சத்திற்கும் மேல்

தங்கள் நிகர சொத்து ஒரு மில்லியன் டாலர்கள் (ரூ 4 கோடி) உள்ள இந்தியர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்திற்கும் மேலாகும். மெர்ரில் லின்ச் மற்றும் காப் ஜெமினியின் உலக வளமை அறிக்கையின்படி சிங்கப்பூரில் பணக்காரர்களின் வளர்ச்சி 21.2 சதமாகவும் இரண்டாவதாக இந்தியாவில் 20.5 சதமாகவும் இருப்பதாக தெரிவிக்கிறது.

அறிக்கை விவரங்களுக்கு..- Daily News & Analysis

பயங்கர வெடிப்பொருட்களுடன் தீவிரவாதிகள் கைது.

பெரியகுளம் அருகே ரகசிய ஆயுத பயிற்சியில் ஈடுபட்டு பிடிபட்ட தீவிரவாதிகளுக்கு ஆந்திர நக்சலைட்டுகளுடன் உள்ள தொடர்பு அம்பலம் ஆகி உள்ளது.

துப்பாக்கிகளுடன் தீவிரவாதிகள்

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே துப்பாக்கிகளுடன் 3 தீவிரவாதிகள் பிடிபட்டனர்.முருகமலை கரடு என்று அழைக்கப்படும் பகுதியில் பதுங்கி இருந்த அவர்களை கிராம மக்கள் உதவியுடன் போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களுடன் இருந்த 7 பேர் தப்பி ஓடிவிட்டனர்.
சட்டக்கல்லூரி மாணவர் பிடிபட்ட தீவிரவாதிகள் பெயர் விவரம் வருமாறு:-
1. வேல்முருகன் (வயது 19). பெரியகுளம் வெ.புதுக்கோட்டையை சேர்ந்தவர். மதுரை சட்டக்கல்லூரியில் 2-ம் ஆண்டு படிக்கும் மாணவர். 2. பழனிவேல் (26). சேலம் சின்னனூரை சேர்ந்தவர். 3. முத்துச்செல்வம் (22). திருச்சி பாலிடெக்னிக்கில் மின்னணுவியல் பட்டய படிப்பு படித்தவர். அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள், தோட்டாக்கள் மற்றும் வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டன.


ஆயுத பயிற்சி

பிடிபட்ட 3 தீவிரவாதிகளிடமும் உயர் போலீஸ் அதிகாரிகள் பல மணி நேரம் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், துப்பாக்கி- வெடிகுண்டு தயாரிப்பு மற்றும் ஆயுத பயிற்சி பெறுவதற்காக அவர்கள் முருகமலை கரடு பகுதிக்கு வந்ததாக தெரிய வந்தது. வெடிகுண்டு தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை ஆந்திர தீவிரவாதிகளின் உதவியுடன் மதுரை ஆரப்பாளையம் பஸ் நிலையத்தில் இருந்து பஸ்களில் கரட்டு பகுதிக்கு அவர்கள் கடத்தி வந்து இருக்கிறார்கள். கொடைக்கானல் மற்றும் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் இதேபோல் ஆயுத பயிற்சி முகாம்கள் ஏற்கனவே நடந்துள்ளன.
சிறையில் அடைப்பு தப்பி ஓடிய 7 தீவிரவாதிகளின் பெயர் ராஜா, ரமேஷ், சுரேஷ், பிரபு, பிரகாஷ், சங்கர் மற்றும் இன்னொரு சுரேஷ் என்றும், முருகமலை கரடு பகுதியில் பயிற்சி பெற்ற தீவிரவாதிகளுக்கு ராஜா தலைவராக செயல்பட்ட தகவலையும் அவர்கள் தெரிவித்தனர். பிடிபட்ட வேல்முருகன் உள்பட 3 தீவிரவாதிகளுக்கும் பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. பின்னர் அவர்கள், மாஜிஸ்திரேட்டு சிங்கராஜ் வீட்டுக்கு அழைத்துச்செல்லப்பட்டு அவர் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை வருகிற 11-ந் தேதி வரை காவலில் வைக்கும்படி, மாஜிஸ்திரேட்டு சிங்கராஜ் உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து, 3 பேரும் பெரியகுளம் கிளை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்
.

இராணுவ வீரர்களை தண்டித்த கிராமம்

ஜம்மு காஷ்மிர் பகுதியிலிருக்கும் குனான் கிராம மக்கள் 17வயது சிறுமியை வன்புணர முயன்ற இரு இராணுவ வீரர்களைப் பிடித்து மொட்டையடித்து நிர்வாணமாக்கி ஊர்வலமாய் அழைத்துச் சென்றுள்ளனர். போலீஸ் தரப்பிலும் இராணுவ தரப்பிலும் விசாரணைகள் ஆணையிடப்பட்டுள்ளன.

கட்டந்த 17வருடமாக காஷ்மீர் பகுதியில் நடந்துவரும் பதட்ட நிலையில் முதன் முறை கிராம மக்கள் இராணுவ வீரர்களுக்கு தண்டனை தந்த விவகாரம் நடந்துள்ளது.

Two army men paraded naked in Kashmiri village DailyIndia.com
Jawans paraded naked for rape attempt Times of India
Soldiers accused of rape Independent Online
Army men paraded naked for ‘rape attempt’The Statesman, India

குடியரசுத் தலைவர் சம்பளம் இருமடங்காகிறது

குடியரசுத் தலைவரின் சம்பளம் தற்போதைய மாதம் ரூ.50,000லிருந்து ரூ.1 லட்சமாக மாற்றப்படவுள்ளது. மேலும் உப குடியரசுத்தலைவரின் சம்பளம் ரூ.40,000லிருந்து ரூ.85,000 ஆகவும், ஆளுநர்களின் சம்பளம் ரூ. 36,000லிருந்து ரூ.75,000 ஆகவும் உயரவிருக்கின்றன. இதுகுறித்து நாளை முடிவெடுக்கப்படும்.

Double salary for Prez, VP in offing Times of India
Govt likely to double salary of President to Rs 1 lakh Zee News
President all set to get a pay hike CNN-IBN

தேரா சச்சா தலைவர் விவகாரம் மீண்டும் சூடு பிடித்தது

தேரா சச்சா அமைப்பின் தலைவர் பாபா குர்மித் சிங் சீக்கிய குரு குரு கோபிந்த் சிங்கைப்போல வேடமணிந்து பத்திரிகைகளில் விளம்பரம் தந்ததால் எழுந்த சர்ச்சை திரும்பவும் சூடுபிடித்துள்ளது. இந்த விவகாரத்தில் இரண்டாம்முறை குர்மித் சிங் அனுப்பிய மன்னிப்பு கடிதத்தை சீக்கிய தலமை குருக்கள் நிராகரித்துள்ளனர்.

மேலும் குர்மித் சிங்கை கைது செய்ய பஞ்சாப் அரசு இப்போது ஒப்புதல் அளித்துள்ளது. சட்ட ஒழுங்கை பாதிக்கும் விஷயமாதலால் கைதுக்கு அரசின் ஒப்புதல் தேவை என முன்னதாக நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

Dera back on the boil, Badal says OK to chief’s arrest Indian Express
Dera chief’s second apology “unacceptable” Hindu
SGPC looks for middle path Times of India

இரு அர்ச்சகர்கள் பணியிடைநீக்கம்

கரூர் கல்யாண பசுபதீசுவரர் கோயிலில் ஆனித்திருமஞ்சன உற்சவம் கடந்த 22-ம் தேதி இரவு நடைபெற்றது. ஸ்ரீநடராஜர், சிவகாமி அம்மையாருடன், காரைக்கால் அம்மையார் சிலையை வைத்து பூஜை நடத்திய அர்ச்சகர்கள், உற்சவம் புறப்படும் முன்னர், காரைக்கால் அம்மையார் சிலையை அப்புறப்படுத்தினர்.

இப்பிரச்னை தொடர்பாக, செயல் அலுவலரின் செயல்முறை நடவடிக்கைகள் கூட்டம் நடைபெற்றது. இதில், கோயில் உற்சவத்தில் காரைக்கால் அம்மையார் சிலையை அவமதிப்பு செய்த, கோயில் அர்ச்சகர்கள் கே.ஆர். ரத்தினம், பி.ஆர். மணிகண்டன் ஆகியோர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர்.

தினமணி

நாகூர் கந்தூரி விழா: திரளானோர் பங்கேற்பு

நாகூர் தர்கா கந்தூரி விழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை அதிகாலை சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நாகூர் தர்காவின் 450-ம் ஆண்டு கந்தூரி விழா கடந்த 16-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10-ம் நாள் நிகழ்ச்சியாக நாகையிலிருந்து நாகூருக்கு சந்தனக்கூடு ஊர்வலம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

'தாபூத்து' எனப்படும் சந்தனக்கூட்டில் சந்தனக்குடம் ஏற்றப்பட்டு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. செவ்வாய்க்கிழமை சந்தனக்குடம் தர்காவினுள் எடுத்துச் செல்லப்பட்டது. தொடர்ந்து தர்கா பரம்பரை கலீபா கே.முஹம்மது கலீபா, புனித ரவுலா ஷரீப் மீது சந்தனம் பூசினார். இதைத் தொடர்ந்து 'சாதரா' எனப்படும் மல்லிகைப் பூச்சரங்களால் ஆன பட்டுத் துணியைப் போர்த்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதையொட்டி நாகை மாவட்டத்துக்கு செவ்வாய்க்கிழமை உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

தினமணி

இந்திய அணியில் மேலும் ஒரு புதிய வீரர்

இந்திய வீரர்கள் பலர் உடல்நலம் குன்றியுள்ளதால் அவர்களுக்கு பதிலாக அணியில் விளையாடுவதற்காக மேலும் ஒரு புதிய வீரர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அயர்லாந்து லீக் போட்டிகளில் விளையாடிவரும் அர்ஜுன் யாதவுக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. முன்னாள் கிரிக்கெட் வீரர் சிவ்லால் யாதவின் மகன் இவர்.

கடந்த ரஞ்சிப் போட்டியின்போது ஹைதராபாத் அணியின் கேப்டனாக இருந்தவர் அர்ஜுன் யாதவ். இதுவரை 47 ஒருதினப் போட்டிகளில் 829 ரன்களை அடித்துள்ளார். மேலும் 6 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக தில்லியைச் சேர்ந்த இஷாந்த் சர்மா, மேற்கு வங்கத்தின் ரணதேவ் போஸ், ராகேஷ் பட்டேல் ஆகிய மூவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தினமணி

-o❢o-

b r e a k i n g   n e w s...