மதுரை வந்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் தொழில் கல்வி உள்ளிட்ட கல்விக் கட்டணங்களைக் குறைக்காவிட்டால் தலைமைச் செயலகத்திற்குள் புகுந்து போராட்டம் நடத்தப் போவதாக எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,
"கல்வி நிலையங்கள் தாராள வசூல் வேட்டையில் இறங்கியுள்ளன. மருத்துவம், பொறியியல் கல்லூரிகளில் இடம் பிடிப்பதற்கு போட்டி அதிகரித்து வருவதால் அதிக நன்கொடை மற்றும் கட்டணம் செலுத்துபவர்களுக்கு மட்டும் இடம் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அரசு நிர்ணயித்த கட்டணங்களை விட கூடுதலாக வசூலிக்கப்படுகின்றன. இதனை தடுக்க சட்டம் இருந்தும் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது.என்றார்
ராமன் குழு, சுப்ரமணியம் குழு ஆகிய குழுக்கள் ஏழைகளை பாதிக்கும் வகையில்தான் கட்டணங்களை நிர்ணயித்துள்ளன. அரசு ஒதுக்கீட்டின் கீழ் வரும் மருத்துவ மாணவர்களுக்கு தனியார் கல்லூரிகளில் ரூ.1.30 லட்சம் கட்டணம்தான் நிர்ணயிக்கப்பட்டது.
ஆனால் தனியார் கல்லூரிகளில் ரூ.4 லட்சம், ரூ.5 லட்சம் வரை வசூலிக்கின்றனர். இதுதவிர ஹாஸ்டல் கட்டணமாக ரூ.56,000 வரை வசூலிக்கப்படுகிறது.
இதே போல் பொறியியல் கல்லூரிக்கு ரூ.32,000 கட்டணம் என அரசு நிர்ணயித்துள்ளது. ஆனால் தனியார் பொறியியல் கல்லூரிகளில் ரூ.2 லட்சம் வரை வசூலிக்கப்படுகிறது.
தமிழகத்தில் உயர்கல்வி துறை இருக்கிறதா அல்லது செயலிழந்து கிடக்கிறதா என்று தெரியவில்லை. கல்வி கட்டணங்களை முறைப்படுத்த உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் முதல்வரின் அனுமதி பெற்று எம்.பி., எம்.எல்.ஏக்களைத் திரட்டி கோட்டைக்குள்ளேயே போராட்டம் நடத்துவேன்.
இடைதேர்தல் என்பதே தேவையில்லாத ஒன்று. பாமகவைப் பொருத்தவரை, இடைத்தேர்தல் தேவைப்படும் தொகுதியில், எந்த கட்சி வெற்றி பெற்றதோ அதே கட்சிக்கே அத்தொகுதியை ஒதுக்கிட வேண்டும்"
No comments:
Post a Comment