.

Saturday, July 21, 2007

கேரளம் புதிய அணை கட்ட திமுக மறைமுக உதவி: நெடுமாறன் புகார்

பெரியாறு அணையின் நீர்த்தேக்கும் அளவை உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி உயர்த்த தமிழக அரசு ஆர்வம் காட்டவில்லை. அதே நேரத்தில், கேரள அரசு புதிய அணைக் கட்டும் முயற்சிக்கு ஆளும் கட்சியான திமுக மறைமுக உதவிகளைச் செய்து வருகிறது என தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் குற்றஞ்சாட்டினார்.

மதுரையில் வெள்ளிக்கிழமை அவர் கூறியதாவது:

பெரியாறு அணையில் நீர்த்தேக்கும் அளவை 142 அடியாக உயர்த்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும், அதை அமல்படுத்துவதற்கான நடிவடிக்கைகளில் தமிழக அரசு ஆர்வம் காட்டவில்லை. ஆனால், கேரள அரசு பெரியாறு அணை அருகே புதிய அணைக் கட்டும் முயற்சிக்கு தமிழக ஆளும் கட்சியினர் ஆதரவு அளித்து வருகின்றனர்.

புதிய அணைக் கட்டுவதற்குத் தேவையான மணல் தேனி மாவட்டத்தில் வைகை ஆற்றிலிருந்து எடுக்கப்படுகிறது. தினமும் 200 லாரி மணல் பெரியாறு அணைப்பகுதிக்கு கேரள அரசால் கொண்டு செல்லப்பட்டு அங்கு குவிக்கப்படுகிறது.

வைகை ஆற்றில் மணல் எடுக்க உயர் நீதிமன்றம் தடை விதித்தபோதிலும், மணல் எடுத்து கேரளத்துக்கு கொண்டு செல்வது நிறுத்தப்படவில்லை. மணல் கொள்ளையைத் தடுக்கக் கோரி, ஆக. 2-ம் தேதி பல்வேறு கட்சியினர் பங்கேற்கும் மாநாடு நடத்தப்படவுள்ளது.

தற்போது அணையின் நீர்மட்டம் 135 அடியாக உள்ளது. 136 அடியை விரைவில் எட்டவுள்ளது. இந் நிலையில், 27.2.2006-ம் தேதி உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் தமிழக அரசு நீர்த்தேக்கும் அளவை 142 அடியாக உயர்த்த வேண்டும். அதற்கு ஏற்றவகையில் மதகுகளை இறக்க வேண்டும்.

இலங்கைத் தமிழர்களுக்காக சேகரிக்கப்பட்ட ரூ. 1 கோடி மதிப்பிலான அத்தியாவசியப் பொருள்கள், மருந்துகள் செஞ்சிலுவைச் சங்கத்தினர் மூலம் அங்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், மத்திய அரசு அதற்கு இதுவரை அனுமதி அளிக்கவில்லை. எனவே, ஆக. 4-ம் தேதி விழுப்புரத்தில் நடைபெறும் மாநாட்டில் மத்திய அரசைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றார்.

தினமணி

அரசு ஆஸ்பத்திரியில் லஞ்சம் கேட்டு தாமதம் - பிரசவத்தில் பெண் பலி

திருப்பத்தூர், ஜுலை.21-

திருப்பத்தூரை அடுத்த வெள்ளகுட்டை, நன்னேரியை சேர்ந்தவர் ஆறுமுகம் (30) கூலி தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி (26). இவருக்கு நேற்று பிரவச வலி ஏற்பட்டது. முதல் பிரசவம் என்பதால் அவசரமாக ஆலங்காயத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

அங்கு ஆபரேசன் செய்து பிரசவம் பார்க்க வேண்டும் எனவே திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லுங்கள் என்று டாக்டர்கள் கூறிவிட்டனர். இதனையடுத்து மாலை 4 மணிக்கு லட்சுமியை திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சேர்க்கை சீட்டு பிரவச சீட்டு என்று அங்கு இங்குமாக அலைக்கழித்தாக கூறப்படுகிறது.

பின்னர் ஒருவழியாக சித்ரா என்ற பெண்ணிடம் ரூ.500 லஞ்சமாக கொடுத்தாராம். அதனை தொடர்ந்து இரவு 9 மணிக்கு லட்சுமிக்கு ஆபரேசன் மூலம் பிரசவம் பார்க்கப்பட்டது. அதில் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு லட்சுமி பரிதாபமாக இறந்தார்.

லஞ்சம் கேட்டு நேரம் கடத்தாமல் நேற்று மாலையே லட்சுமிக்கு பிரசவம் பார்த்திருந்தால் அவர் உயிர் பிழைத்திருப்பார் என்று ஆறுமுகம் தனது உறவினர்களிடம் கூறினார்.

இதற்கிடையே லஞ்சம் கேட்டு அலைக்கழித்தவர்கள் மீது போலீசில் புகார் அளிக்க இருப்பதாக ஆறுமுகம் கூறினார். பிரசவத்துக்கு வந்த இடத்தில் லஞ்சத்திற்காக லட்சுமியை இழந்த அவரது உறவினர்கள் அழுது துடித்தது கண்களை கலங்க செய்தது.

மேலும் செய்திக்கு "மாலை மலர்."

சற்றுமுன்:இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவராக பிரதீபா பாடீல் வெற்றி

இந்திய குடியரசின் தலமைப் பொறுபேற்க நடந்த தேர்தலில் வாக்கு எண்ணிக்கை முடிந்து ஆளும் கூட்டணியின்பிரதீபா பாட்டீல் அதிகாரபூர்வமாக வெற்றியடந்ததாக அறிவிக்கப் பட்டார். இந்தியக் குடியரசின் முதல் பெண் தலைவராக ஜூலை 25 அன்று பொறுப்பேற்கவிருக்கிறார்.

ஆரம்பத்திலிருந்தே முன்னணியில் இருந்த பிரதீபா இறுதியில் 3,06,810 வாக்குகள் அதிகம்பெற்று வெற்றி பெற்றார்.
பிரதீபா:6,38,116
ஷேகாவத்: 3,31,306

IBNLive.com > Pratibha Patil elected first woman President : race for rashtrapati bhavan, presidential poll, nda, upa, bhairon singh shekhawat, pratibha patil

இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவருக்கு 'சற்றுமுன்' வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறது.

ஜனாதிபதிதேர்தல் பிரதிபா பாட்டீல் முன்னிலை.

ஜனாதிபதி அப்துல் கலாமின் பதவிகாலம் முடிவடைவதையடுத்து தேர்தல் வியாழகிழமை நடைபெற்றது.இதில் ஐ மு கூ சாரபில் பிரதிபா பாட்டீலும், தேஜக சார்பில் பைரோன் சிங் ஷெகாவத்தும் போட்டியிட்டனர்.இத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. இதில் பிரதிபா முன்னிலை வகிக்கிறார்ஓட்டு விபரம் : ஆந்திராவில் பிரதிபா223 ஓட்டுகளும் செகாவத்2 ஒட்டுகளும், அருணாசல பிரதேசத்தில் பிரதிபா58 ஓட்டுகளும் செகாவத்1 ஓட்டுகளும், அஸ்ஸாமில் பிரதிபா 92 ஓட்டுகளும் செகாவத்20 ஓட்டுகளும் பீகாரில் பிரதிபா 89 ஓட்டுகளும், செகாவத்145 ஓடடுகளும் டெல்லியில் பிரதிபா50 ஓட்டுகளும் செகாவத்19 ஓட்டுகளும் சட்டீஸ்கர் மாநிலத்தில் செகாவத்51 ஓட்டுகளும், பிரதிபா37 ஓட்டுகளும்,கோவாவில் பிரதிபா 25 ஓட்டுகளும், செகாவத் 14 ஓட்டுகளும் குஜராத்தில் செகாவத்123 ஓட்டுகளும் பிரதிபா57 ஓட்டுகளும் பெற்றனர்.

இந்தியாவும் அமெரிக்காவும் அணுசக்தி எரிபொருள்்: உடன்பாடு ஏற்பட்டது

கடந்த சில மாதங்களாக பலநிலைகளில் விவாதிக்கப் பட்டு இருதரப்பிலும் கடுமையான பேரம் பேசப்பட்ட இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையேயான அணுசக்தி வழங்கல் பற்றி வாஷிங்டனில் வெளியுறவு செயலர்கள் தலைமையில்நடந்த பேச்சுவார்த்தைகளில் இருதரப்பிற்கும் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இனி அவை தம்தம் அரசுகளால் இறுதி முடிவிற்கு அனுப்பப்படும். நுட்ப அளவில் கண்ட உடன்பாட்டை அரசியல் கண்ணோட்டத்தில் அவை பரிசீலிக்கும். இந்தியா விரும்பியவாறு வாங்கிய அணுசக்திக்கான எரிபொருளை பயன்பாட்டிற்குப் பிறகு மீண்டும் வினையாற்றி பயனிற்கு கொண்டுவரவும் இந்தியா அணுகுண்டு சோதனைகள் நடத்தினாலும் அணுசக்தி எரிபொருளை தடங்கலின்றி தருவதற்கான உறுதிமொழியை இணைக்கவும் அமெரிக்கா இணங்கியுள்ளது.

NDTV.com: Nuke deal: India, US reach agreement

குடியரசுத் தலைவர் தேர்தல்: வாக்கு எண்ணிக்கை ஆரம்பம்

புதுதில்லியில் இன்று காலை 11 மணிக்கு குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு பதிவான வாக்குகள் எண்ணப் பட ஆரம்பித்தது. பெரும்பான்மை வாக்கு எண்ணிக்கை பெற்று பிரதீபா பாடில் வெல்வது உறுதி என ஆளும் கூட்டணி நம்புகிறது. இந்தியக் குடியரசின் முதல் பெண் தலைவராக பாடில் தேர்ந்தெடுக்கப்படும் சரித்திர நாளாக இன்று அமையுமா ?

தேர்தல் அதிகாரி பிடிடி ஆச்சாரி ஆளும் கூட்டணியின் பிரதிநிதி மத்திய அமைச்சர் தாஸ்முன்ஷி மற்றும் ஷேகாவத்தின் சார்பில் சத்யபால் சிங் இவர்கள் முன் முதல் வாக்குப்பெட்டியை திறந்து எண்ணிக்கையை ஆரம்பித்தார். எண்ணிக்கையின் முடிவு மதியம் இரண்டுமணிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது. 682 எம்பிகளும் 3755 எம் எல் ஏக்களும் வாக்களித்துள்ளனர்.

Counting of votes for Prez poll begins

பாகிஸ்தானின் பணி நீக்கம் செய்யப்பட்ட தலைமை நீதிபதியை மீண்டும் பதவியில் அமர்த்த உச்ச நீதிமன்றம் உத்தரவு

பாகிஸ்தானில் தனது பதவியைத் துஷ்பிரயோகம் செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட தலைமை நீதிபதியான இவ்திஹார் சௌத்ரி அவர்களை மீண்டும் பதவியில் அமர்த்துவது என்று அந்த நாட்டின் உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

அதிபர் முஷாரப்பின் உத்தரவுகளின் பேரில், கடந்த மார்ச் மாதத்தில் அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அவரது பணி நீக்கம் சட்டவிரோதமானது என்று கூறிய நீதிமன்றம், அவர் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தையும் நிராகரித்தது. தாம் இந்த தீர்ப்பை மதிப்போம் என்று அரசாங்க அமைச்சர் ஒருவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்துக்கு வெளியே சௌத்ரி அவர்களின் ஆதரவாளர்கள் இந்தத் தீர்ப்பைக் கொண்டாடியதையும் காணக்கூடியதாக இருந்தது. செளத்ரியை பதவி நீக்கம் செய்ததானது, அதிபர் முஷாரப்பை இரண்டாவது ஆட்சிக்காலம் ஒன்றுக்கு மீண்டும் தேர்ந்தெடுப்பது, அவரே இராணுவத்தின் தலைவராகவும் தொடருவது ஆகியவற்றுக்கான முயற்சிகளின் ஒரு பகுதியாகும் என்று அவரது ஆதரவாளர்கள் வாதிடுகிறார்கள்.

வீடியோ: BBC Tamil

The Hindu News :: Aziz says Govt. accepts Pak SC verdict reinstating suspended CJ
BBC NEWS | South Asia | Pakistan's top judge reinstated

-o❢o-

b r e a k i n g   n e w s...