.

Wednesday, July 4, 2007

தண்ணீர் மாசு: சீனாவில் 2 இலட்சம் பேர் பாதிப்பு.

சீனாவின் கிழக்குப் பகுதி மாகாணமான ஜியாங்சூ மாகாணத்தில் உள்ளூர் ஆற்றில் அம்மோனியா மற்றும் அஸோட் கலந்ததால், சுமார் 2 லட்சம் பேர் பாதிப்புக்குள்ளாகினர்.

40 மணி நேரத்திற்கு தண்ணீர் வழங்குவது நிறுத்தப்பட்டதாக பீஜிங்கில் இருந்து வெளியாகும் பத்திரிகை செய்தி தெரிவிக்கிறது.

தண்ணீரின் மாசு எப்போது நீக்கப்படும் ஏன்று தெரியவில்லை என்றும், முழு அளவில் பணிகள் நிறைவடைந்த பின்னரே வெளியிடப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

குழாய்களில் வரும் தண்ணீர் மஞ்சள் நிறத்தில் வந்ததால், தண்ணீர் வரத்து நிறுத்தப்பட்டதாக உள்ளூரைச் சேர்ந்த ஒருவர் கூறினார்.

தொழிற்சாலை கழிவு ஆற்றில் கலந்ததால் மாசு பட்டதாக ஆரம்பக்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்செய்தியை MSN INDIA தெரிவித்துள்ளது

அப்துல்கலாம் திருப்பி அனுப்பிய மற்றொரு சட்ட வடிவு.

இடதுசாரிகள் ஆட்சி நடைபெற்று வரும் மேற்கு வங்காளத்தில் கடந்த 2005-ம் ஆண்டு ஜுன் 18-ந்தேதி மின்சார சட்டத்தில் சில திருத்தங்கள் கொண்டு வந்து சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்ட திருத்தம் தொடர்பாக ஆளுநர் கோபால் கிருஷ்ண காந்தி குடியரசுத்தலைவர் அப்துல் கலாமிடம் ஆலோசனை பெற்றார். அந்த கூட்டத்தில் உள்ள சில பிரிவுகளை நீக்குமாறு குடியரசுத்தலைவர் ஆலோசனை கூறியுள்ளார்.

இதை தொடர்ந்து குடியரசுத்தலைவர் ஆலோசனையின் பேரில் ஆளுநர் சட்ட திருத்தத்தை கடந்த மாதம் 16-ந்தேதி திருப்பி அனுப்பி உள்ளார். இதை சட்டசபையில் சபாநாயகர் அப்துல் சலீம் தெரிவித்துள்ளார்.

மாலைமலர்

குவஹாத்தி: மீண்டும் குண்டு வெடிப்பு.

குவஹாத்தியில் இன்று இரவு 08.15 மணியளவில் சம்பவித்த குண்டு வெடிப்பில் ஒரு பெண் உட்பட 3 பேர் படுகாயமடைந்தனர். மாநிலத்தின் முக்கிய கடை வீதியான சோனாராம் போரா ரோட்டில் நின்று கொண்டிருந்த ஆட்டோரிக்ஷாவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் இத்துயரம் நிகழ்ந்தது. காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில் இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு காரணம் உல்பா தீவிரவாதிகள் என்று கூறியுள்ளார்.

தினமலர்

விம்பிள்டன்: இரட்டையரிலும் சானியா தோல்வி.

லண்டனில் நடைபெற்றுவரும் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் பெண்கள் இரட்டையர் பிரிவின் மூன்றாம் சுற்றுப்போட்டியில் சானியா மிர்சா இணை, லிசா ரேமண்ட் இணையை எதிர்கொண்டது. பரபரப்பாக நடந்த இப்போட்டியில் சானியா மிர்சா இணை 6-0, 6-7, 6-1 செட் கணக்கில் லிசா ரேமண்ட் ஜோடியிடம் தோல்வியடைந்தது.

தொலைகாட்சி: விரைவில் கட்டுப்பாடு தளர்வு.

இரவு 11 மணிக்கு மேல் வயது வந்தோருக்கு மட்டுமான நிகழ்ச்சிகளை தொலைகாட்சிகள் ஒளிபரப்ப மத்திய அரசு அனுமதி வழங்கவுள்ளது.

ஆபாசக் காட்சிகளை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப தற்போது மத்திய செய்தி ஒளிபரப்புத் துறையின் தடை உள்ளது. ஆனாலும் இதை மீறி எப் டிவி உள்ளிட்ட சில சேனல்களில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வந்தன. இதையடுத்து சமீபத்தில் ஏஎக்ஸ்என், எப் டிவி ஆகியவற்றுக்கு மத்திய அரசு தடை விதித்தது.

இந்த நிலையில் மாறி வரும் உலக மனோபாவத்திற்கு ஏற்ப தொலைக்காட்சிகளில் நள்ளிரவுக்கு மேல் ஆபாசக் காட்சிகள் அடங்கிய நிகழ்ச்சிகளைக் காட்டிக் கொள்ள மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்தது.

இதையடுத்து இந்தக் கோரிக்கையை மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வந்தது. தற்போது ஆபாசக் காட்சிகளுடன் கூடிய நிகழ்ச்சிகளை தொலைக்காட்சிகளில் காட்ட பச்சைக் கொடி காட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை கிளுகிளுப்பூட்டும் காட்சிகள் அடங்கிய நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப மத்திய அரசு அனுமதி வழங்கவுள்ளது. செப்டம்பர் மாதம் முதல் இந்த உத்தரவு அமலுக்கு வரும் எனத் தெரிகிறது.

முற்றிலும் வயது வந்தோர் மட்டுமே பார்க்கக் கூடிய நிகழ்ச்சிகளை இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரையிலும் ஒளிபரப்ப மத்திய அரசு அனுமதி அளிக்கவுள்ளது.

இதுதொடர்பான சட்டத் திருத்த மசோதா வருகிற மழைக்காலக் கூட்டத் தொடரில் கொண்டு வரப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி: தட்ஸ் தமிழ்

பணக்காரர் பட்டியல்: பில்கேட்ஸை முந்தினார் கார்லோஸ்.

மைக்ரோ சாப்ட் கம்ப்யூட்டர் நிறுவனத்தை துவக்கி, கோடிக்கணக்கில் சம்பாதித்து, உலக கோடீஸ்வரர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்தவர் பில் கேட்ஸ். அதே இடத்தில், பல ஆண்டுகளாக "முடிசூடா மன்னராக' இருந்த அவரது சொத்து மதிப்பு மூன்று லட்சம் கோடி ரூபாய்.

ஆனால், தற்போது, பில்கேட்சை பின்னுக்கு தள்ளி விட்டு, மெக்சிகோவைச் சேர்ந்த மொபைல் போன் நிறுவன அதிபர் கார்லோஸ் சிலிம் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். இவரது சொத்து மதிப்பு மூன்று லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய்.

கார்லோஸ் சிலிம், லத்தீன் அமெரிக்காவில், அமெரிக்கா மொவில் என்ற மிகப் பெரிய மொபைல் போன் கம்பெனியை நிர்வகித்து வருகிறார். கடந்த மார்ச் முதல் ஏப்ரல் வரையிலான காலத்தில், அந்த கம்பெனியின் பங்கு மதிப்பு 27 சதவீதம் உயர்ந்தது. அதனால், கார்லோஸ் சொத்து மதிப்பு அதிகரித்தது.

உலக கோடீஸ்வரர் பட்டியலை வெளியிடும் போர்ப்ஸ் பத்திரிகை, கடந்த ஏப்ரலில், இரண்டாவது இடத்தில் உள்ள கோடீஸ்வரர் வாரன் பபெட்டை, கார்லோஸ் முந்தி விடுவார். ஆனால், அவர் பில்கேட்சை முந்த முடியாது என்று தெரிவித்து இருந்தது.

ஆனால், கார்லோசின் கார்சோ மற்றும் டெல்மேக்ஸ் நிறுவன பங்குகளின் விலை உயர்ந்த போது, பபெட்டின் பெர்க்ஷையர் ஹாத்வே நிறுவன பங்குகள் சரிந்தது குறிப்பிடத்தக்கது.

நன்றி: தினமலர்

சிங்கப்பூர் விமான கட்டணம்: 200 சி.டாலர் மட்டுமே.

"வந்து கொண்டேயிருக்கிறது டைகர் ஏர்வேஸ்" என்று சிங்கப்பூரைச் சேர்ந்த நமது 'சற்றுமுன் வாசகர்' வடுவூர் குமார் ஒரு பின்னூட்டத்தில் சொல்லியிருந்தார்.

ஆம். சிங்கப்பூரின் குறைந்த கட்டண விமான சேவையான 'டைகர் ஏர்வேய்ஸ்' அக்டோபர் 28ம் தேதி முதல் இந்தியாவுக்கான தனது சேவையை டைகர் ஏர்வேஸ் நிறுவனம் தொடங்குகிறது. அதன்படி, வரிகள் உள்பட 200 சிங்கப்பூர் டாலர் மட்டும் கட்டணமாக செலுத்தி இந்தியாவுக்கு பயணிக்க முடியும்.

சென்னை, கொல்கத்தா, கோவா, கோழிக்கோடு, கொச்சி உள்ளிட்ட 6 நகரங்களுக்கு டைகர் ஏர்வேஸ் நிறுவனம் விமான சேவையை மேற்கொள்ளும்.

அக்டோபர் 28ம் தேதி சென்னைக்கு தனது முதல் பயணத்தை டைகர் ஏர்வேஸ் விமானம் மேற்கொள்கிறது. அக்டோபர் 30ம் தேதி கொச்சிக்கான சேவை தொடங்கப்படுகிறது.

சென்னைக்கு வாரம் நான்கு முறையும், கொச்சிக்கு வாரம் மூன்று முறையும் விமான சேவை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற ஊர்களுக்கும் படிப்படியாக விமான சேவை விரிவுபடுத்தப்படவுள்ளது.

தென் கிழக்கு ஆசியா, சீனா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் 20 நகரங்களுக்கு டைகர் ஏர்வேஸ் தனது விமான சேவையை மேற்கொண்டு வருகிறது.

சிங்கப்பூர்வாசிகளுக்கு இந்தியா மிகவும் பிடித்தமான நாடாக உருவாகி வருவதால் சிங்கப்பூரைச் சேர்ந்த பல விமான சேவை நிறுவனங்கள் இந்தியாவுக்கு விமான சேவையை மேற்கொள்வதில் தீவிர ஆர்வம் காட்டுகின்றன.

விஞ்ஞானி அருணாசலத்துக்கு விருது.

முன்னோடியான விஞ்ஞானி அருணாச்சலத்திற்கு இந்த ஆண்டுக்கான பிரம்ம பிரகாஷ் நினைவு பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 1980களில் இந்திய ஏவுகணை திட்டத்திற்கு முன்னோடியாக இருந்தவர் விஞ்ஞானி அருணாச்சலம். மத்திய ராணுவ அமைச்சரின் அறிவியல் ஆலோசகராக பணியாற்றிய அருணாச்சலம், மிகச் சிறந்த தொழில்நுட்ப அறிஞர். தற்போது அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் திட்ட கல்வி மையத்தின் தலைவராக இருக்கும் இவருக்கு, இந்தாண்டுக்கான பிரம்ம பிரகாஷ் நினைவு பதக்கம் வழங்கப்பட்டுளளது. இந்த பதக்கத்தை டில்லியிலுள்ள இந்திய தேசிய அறிவியல் கழகம் வழங்கியுள்ளது.

பொறியியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் சிறந்து விளங்கும் விஞ்ஞானி அல்லது தொழில்நுட்ப பொறியாளர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை வழங்கப்படும் இந்த பதக்கத்துடன், ரூ.பத்தாயிரம் ரொக்கப் பணம் வழங்கப்படுகிறது. பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் பானர்ஜி மற்றும் தேசிய தொலை தூர புலனறி அமைப்பின் முன்னாள் இயக்குனர் தீக்ஷதலு ஆகியோர் பிரம்ம பிரகாஷ் நினைவு பதக்கத்தை பெற்றவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்


நன்றி: தினமலர்

அமிதாப் வீட்டில் வெடிகுண்டு சோதனை.

பாலிவுட்: அமிதாப் பச்சன் வீட்டில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த சிலர் சதி திட்டம் தீட்டியுள்ளதாக இன்று மாலை மூன்று மணிக்கு போலீசுக்கு தகவல் கிடைத்தது.
இந்த தகவலையடுத்து மும்பை, ஜூகு பகுதியிலுள்ள அமிதாப் வீட்டிற்கு வெடிகுண்டு நிபுணர்களும், மோப்ப நாய்களும் உடனடியாக விரைந்து சென்று சோதனை நடத்தினர். ஒரு மணி நேரம் நடந்த இச்சோதனையில் வெடிகுண்டு எதுவும் கிடைக்கவில்லை என போலீசார் தெரிவித்தனர்.


இத்தகவலை தினமலர் தெரிவித்துள்ளது

ஆந்திராவில் பின் தங்கிய முஸ்லிம்களுக்கு 4% இட ஒதுக்கீடு

இஸ்லாமிய மதத்தலைவர்களின் 'பட்வா'வை பொருட்படுத்தாமல் ஆந்திர அரசு பின் தங்கிய வகுப்பினராக அறியப்பட்ட 25 முஸ்லிம் பிரிவினருக்கு அரசு வேலைகளிலும் கல்வி நிறுவனங்களிலும் 4% இட ஒதுக்கீடு வழங்குவதற்கான அவசரசட்டம் கொண்டுவர இன்று முடிவு செய்துள்ளது.

Four percent quota for 'backward Muslims' in Andhra - Yahoo! India News

தமிழகத்தில் எலி சுரத்திற்கு இருவர் பலி

இராமநாதபுரம் மாவட்ட கிராமம் ஒன்றில் எலி சுரம் எனச் சொல்லப்படுகின்ற லெப்டோஸ்பிரோசிஸ் நோயினால் 75 பேர்வரை பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் இருவர் மரணமடைந்துள்ளனர் என்றும் அரசு செய்திக் குறிப்பு கூறுகிறது. கிடாதிருக்கை கிராமத்தைச் சேர்ந்த குழந்தைவேலு (65), இராமபாண்டி (50) ஆகியோர் இந்த நோயினால் மரணமடைந்தனர் என்று அந்தக் குறிப்பு கூறுகிறது. எலியின் மூத்திரத்தினால் மாசாக்கப்பட்ட நீரை குடித்ததனாலேயே இம்மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக மண்டல தொற்றுநோய் மைய அதிகாரி குமார் கூறினார்.

The Hindu News Update Service

மகப்பேறு அறுவை செய்த மணப்பாறை சிறுவன் சரண்

மணப்பாறையில் மகப்பேறு அறுவை சிகிட்சை செய்த 16 வயது சிறுவன் திலீபன் ராஜ் இன்று சிறுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இன்று மாலை சிறுவர் நீதிமன்றத்தில் தனது வாதத்தை எடுத்துரைப்பார்.அவரது மருத்துவ பெற்றோர்கள் ஜூன் 25 கைது செய்யப்பட்டனர்; ஆனால் திலீபனை பல குழுக்களாக அமைந்து தேடியும் காவலர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. முன்னர் மதுரை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட முன் ஜாமீன்மனு மறுக்கபபட்ட நிலையில் இன்று சரணடைந்துள்ளார். தில்லிபனின் பெற்றோர்களின் ஜாமீனும் மறுக்கப்பட்டுள்ளது.

The Hindu News Update Service

கூடுதல் பாதுகாப்பு கேட்டு விமானம் தாமதம்

சிகாகோவிலிருந்து பர்லிங்டன் செல்லும் உள்ளூர் விமானசேவையொன்று தங்கள் விமானத்தில் ஆப்கானியர்களைக் கண்டு ஓட்டுனர்கள் கூடுதல் பாதுகாப்பு சோதனை கேட்டு ஒருமணிநேரத்திற்கும் மேலாக தாமதமானது.

The Hindu News Update Service

மணிப்பூரில் ஏழு பள்ளிகள் தீயிட்டு கொளுத்தப்பட்டது

மணிப்பூரின் மூன்று மலைமாவட்டங்களில் ஏழு அரசு உயர்நிலைப்பள்ளிகள் தீயிட்டு கொளுத்தப் பட்டதை அடுத்து மாநிலம் முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப் பட்டுள்ளன. இந்த செயலை செய்தவர்களைப்பற்றியும் இதற்கான காரணங்கள் பற்றியும் எதுவும் தெரியவில்லை. சிலகாலமாக மலைவாழ் மாணவர்கள் சங்கம் தங்கள் பள்ளிகள் நாகாலாந்து உயர்கல்வி ஆணையத்துடன் இணைக்கப்படவேண்டும என கோரிவந்ததால் அவர்களின் பங்கு சந்தேகிக்கப் படுகிறது.

The Hindu News Update Service

பிணைக்கைதியாக இருந்த பிபிசி செய்தியாளர் விடுதலை

பாலஸ்தீன தீவிரவாதகுழுவினரால் கடந்த 16 வாரங்களாக பிடித்துவைக்கப்பட்டிருந்த ஆலன் ஜான்ஸ்டன் இன்று விடுவிக்கப்பட்டார். காசா பகுதியில் பிடித்துவைக்கப்பட்டிருந்த மேற்கத்தியவர்களில் அதிக நாட்கள் பிணையில் இருந்தவரான ஆலன் விடிகாலை நேரத்தில் ஹமாஸ் அதிகாரிகள் பிடியில் துப்பாக்கி ஏந்திய மனிதர்கள் புடைசூழ வெளிப்பட்டார். தன்னை காப்பாற்றிய இஸ்லாம் இயக்கத்தினருக்கு நன்றி கூறினார்.

DNA - World - BBC journalist Alan Johnston freed: Hamas - Daily News & Analysis

உயிருடன் பாம்பை விழுங்குவேன் :ஒரிசாகாரர்

ஒரிசாவின் அங்குல் மாவட்ட படாபுத்தபங்கா கிராமத்தில் வசிக்கும் சுதாரி நாயக் தான் பாம்புகளை உயிருடன் அப்படியே சாப்பிடுவதாகக் கூறுகிறார். பாம்புகளுடன் பல வித்தைகள் காண்பிக்கும் இவரைப்பற்றி மேலும் அறிய - Orissa man eats live snake's meat - Daily News & Analysis

மதுரை கோவையில் பாஸ்போர்ட் அலுவலகம்.


மதுரை கோவையில் ரூ.50 லட்சம் செலவில் புதிய பாஸ்போர்ட் அலுவலகம் அமைக்கப்படுகிறது. செப்டம்பர் மாத இறுதியிலிருந்து இந்த அலுவலகம் இயங்கும். இது குறித்து திருச்சி மண்டல பாஸ்போர்ட் அதிகாரி பாலச்சந்திரன் கூறியதாவது இந்தியாவில் மொத்தம் 31 பாஸ்போர்ட் அலுவலகங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் சென்னை, திருச்சியில் மட்டும் இருக்கின்றன. தமிழகத்தில் மேலும் 2 அலுவலகங்கள் மதுரை, கோவையில் அமைய உள்ளன. இதில் திருச்சி பாஸ்போர்ட் அலுவலக கட்டுப்பாட்டில் மதுரையில் புதிய அலுவலகம் அமைவதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இந்த கட்டிடம் மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் அமைக்கப்படும். இதற்கான பூமி பூஜை ஏற்கனவே போடப்பட்டு விட்டது. அலுவலகம் முழுவதும் ஏ.சி. வசதி செய்யப்பட உள்ளது. தென்னிந்தியாவிலேயே முதன்முதலில் குளிர் பதன வசதியுடன் அமைக்கப்பட போகும் அலுவலகம் இதுவே ஆகும். மதுரை அலுவலகம் 8 மாவட்டங்களை கட்டுப்படுத்தி செயல்படும் என்றார்.

கேரளா: முதலமைச்சரை கைது செய்ய நீதிமன்ற ஆணை.

கேரளாவில் கடந்த 2004-ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு எதிர்க்கட்சியாக இருந்தபோது திருவனந்தபுரம் கலெக்டர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.

இதுதொடர்பாக தற்போதைய முதல்-மந்திரி அச்சுதானந்தன், விளையாட்டுத்துறை மந்திரி விஜயகுமார், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பினராய் விஜயன், திருவனந்தபுரம் மேயர் ஜெயன்பாபு உள்பட 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு திருவனந்தபுரம் கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வருகிறது. வழக்குப்பதிவு செய்யப்பட்ட 11 பேரும் கோர்ட்டில் ஆஜர் ஆகுமாறு கோர்ட்டு பலமுறை நோட்டீசு அனுப்பியது. ஆனால் அச்சுதானந்தன் உள்பட யாரும் கோர்ட்டில் ஆஜர் ஆகவில்லை.

இந்தநிலையில் நேற்று நீதிபதி கோபாலகிருஷ்ணன் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கோபாலகிருஷ்ணன், பலமுறை நோட்டீசு அனுப்பியும் கோர்ட்டில் ஆஜர் ஆகாமல் இருக்கும் அச்சுதானந்தன், விஜயகுமார், பினராய் விஜயன், ஜெயன்பாபு உள்ளிட்ட 11 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என போலீசாருக்கு அவர் உத்தரவிட்டார். இதற்காக ஜாமீன் இல்லாத கைது வாரண்டு உத்தரவை அவர் பிறப்பித்துள்ளார்.

முதல்-மந்திரி மற்றும் மந்திரி, மேயர் ஆகியோருக்கு கைது வாரண்டு பிறக்கப்பட்டுள்ளதால் கேரள அரசியல் வட்டாரத்தில் பெரும்பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மாலைமலர்

15 எம்.பி.கள் விலக முடிவு: இலங்கை அரசுக்கு நெருக்கடி

இலங்கையில் ஆளும் கட்சியில் இருந்து 15 எம்.பி.க்கள் விலகி எதிர்க்கட்சிக்கு தாவுகிறார்கள். இதனால் அதிபர் ராஜபக்சே அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் சிங்கள ராணு வத்துக்கும் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில் அதிபர் ராஜபக்சேக்கு அரசியல் ரீதியாகவும் நெருக்கடி அதிகரித்துள்ளது.

இது குறித்து எதிர்க்கட் சியான ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் திசஅக்த நாயகா கூறியதாவது:-

அரசு தரப்பில் இருந்து 15 எம்.பி.க்கள் விலகி எதிர்க் கட்சியில் இணைய முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக 17 எம்.பி.க்கள் எங்களுடன் தொடர்பு கொண்டு பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள். 15 பேர் கண்டிப்பாக எதிர் அணியில் இணைய உறுதி அளித்துள்ளனர்.

26-ந் தேதி எதிர்க்கட்சிகள் சார்பில் பிரமாண்ட பேரணி நடக்க உள்ளது. இந்த பேரணிக்கு பிறகு நாட்டில் முக்கிய அரசியல் மாற்றங்கள் ஏற்படும்.

இவ்வாறு திசஅக்த நாயகா கூறி உள்ளார்.

திமுக அரசுக்கு ஆதரவு தொடரும் - இராமதாஸ்

சுயநிதி கல்லூரிகளின் அதிக கட்டணத்தை முன்வைத்து இராமதாஸ் - பொன்முடி - கருணாநிதி என்று தொடரும் வாதப் பிரதிவாதங்களின் முக்கிய கட்டமாக இராமதாஸ் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

நாங்கள் திமுக அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கி வருகிறோம். 5 ஆண்டு காலத்துக்கு இது தொடரும் அதில் மாற்றம் இருக்காது.

நாங்கள் தமிழக அரசுக்கு எந்த வகையிலும் நெருக்கடி கொடுக்கமாட்டோம். எங்கள் செயல்பாடுகள் நெருக்கடி கொடுக்கும் வகையில் அமையாது. எங்கள் நிலைமைகளை, பிரச்சினைகளை கூட்டணி கட்சிகள் கூட்டம் நடந்தால் அதில் எடுத்து சொல்வோம். ஆனால் அதுமாதிரி கூட்டங்கள் நடத்தப்படுவது இல்லை. பின்னர் பிரச்சினைகள் பற்றி எப்படி ஆலோசிக்க முடியும்.

இப்போதைய கூட்டுறவு தேர்தலை எடுத்துக்கொள்ளுங்கள். எந்தவித ஆலோசனையும் எங்களுடன் நடத்தப்படவில்லை. பின்னர் எப்படி தேர்தலை சந்திப்பது?

சுயநிதி கல்லூரிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவது பற்றி எளியமக்களுக்கு தெரியும். இது பற்றி நேரடியாக விசாரித்து தெரிந்து கொள்ளலாம். இந்த பிரச்சினையை வெளியே கொண்டு வரவேண்டும். ஒருவர் மட்டும் குரல் கொடுத்தால் அது போதுமானதாக இருக்காது.

நாங்கள் தி.மு.க.வுடன் நட்புமுறையில் கூட்டணி அமைத்து உள்ளோம். இதற்காக அரசை புகழ்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்று அர்த்தமா?

நாங்கள் துணைநகரம் பிரச்சினை, விமானநிலையம் விரிவாக்கம் பிரச்சினை, காவிரி, பாலாறு பிரச்சினைகள் போன்றவற்றில் எங்கள் கட்சியின் கருத்துக்களை வெளிப்படுத்தினோம். அதாவது மக்கள் பிரச்சினைக்காக இந்த விஷயங்களில் குரல் கொடுத்தோம்.

திமுக அரசுக்கு மெஜாரிட்டி இல்லாததால் எங்களின் ஆதரவு அவசியம் தேவை. அவர்களுக்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவு வழங்குவோம்.


நன்றி: மாலைமலர்

இடஒதுக்கீட்டை வலியுறுத்தி சிறை நிரப்பும் போராட்டம்.

இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு கோரி தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்பின் சார்பில் சென்னை திருச்சி திருநெல்வேலி மற்றும் மாநிலத்தின் பல பகுதிகளில் இன்று சிறை நிரப்பும் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இதில் ஏராளமான ஆண்களும் பெண்களும் திரளாக கலந்துக்கொண்டு இடஒதுகீடு வலியுறுத்தி கோஷமிட்டனர் இதனால் போராட்டம் நடைப்பெரும் பகுதிகளில் ஏராளமான போலிசார் பாதுக்காப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அலைப்பேசி வாயிலாக... ராஜீக்

வீரமணி எழுதிய நூலை பாடத்திட்டத்தில் சேர்க்க பா.ஜ. எதிர்ப்பு

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட கல்லூரிகளில் கி.வீரமணி எழுதிய வாழ்வியல் சிந்தனைகள் நூல் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இதை நீக்காவிட்டால் போராட்டம் நடத்தப்போவதாக மாநில பா.ஜ. தலைவர் இல.கணேசன் எச்சரித்துள்ளார்.

கடந்த பிப்ரவரியில் பாரதியார் பல்கலைக்கழக வெள்ளி விழா கொண்டாடப்பட்டது. ஜனாதிபதி அப்துல் கலாம் முன் னிலையில் நடந்த இந்த விழாவில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி எழுதிய வாழ்வியல் சிந்தனைகள் புத்தகங்களை முதல்வர் கருணாநிதி வெளி யிட்டார்.

இந்நிலையில், பாரதியார் பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட கல்லூரிகளில் சேரும் மாணவர்
களுக்கு மனித சிறப்பாளுமை பாடம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கு தனியே தேர்வுகள் நடத்தப்படவுள்ளன. முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு இரண்டாம் பருவத்தில் இந்தப்பாடம் உள்ளது. இதில் பகுத்தறிவு என்ற பகுதியின் கீழ் வாழ்வியல் சிந்தனைகள் புத்தகம் பாடமாக சேர்க்கப்பட்டுள்ளது. மூன்று தொகுதிகள் அடங்கிய இந்தப் புத்தகத்தில் தனி மனித மேம்பாடு, பெண்ணியம் தொடர்பான பல்வேறு கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன.

இதுபற்றி பா.ஜ. மாநில தலைவர் இல.கணேசன் கூறுகையில், வீரமணியின் புத்தகத்தை பாடத்திட்டத்தில் சேர்த்திருப்பது கண்டனத்துக்குரியது. அதில் இளைய தலைமுறையினருக்கு நன்னெறி கருத்துகளை தெரிவிக்கக்கூடிய விஷயங்கள் ஏதும் இல்லை. கூட்டுக்குடும்ப முறை, பூஜை பழக்க வழக்கங்கள், பாலியல் கல்வி, திலகர் குறித்து குறிப்பிட்டுள்ள கருத்துகள் சரியானதல்ல. புத்தகத்தின் இறுதியில் பகுத்தறிவு பிரசார பணியில் சேர விருப்பம் உள்ளதாக திராவிடர் கழகத்தில் சேர்வதற்கான உறுப்பினர் படிவம் இடம் பெற்றுள்ளது. (பகுத்தறிவு பணியில் பங்குகொள்ள விருப்பம் தெரிவிப்பதற்கான படிவம்)இதை பல்கலைக்கழக நிர்வாகம் எப்படி அனுமதித்தது என்பது புரியவில்லை. பாடத்திட்டத்தில் இருந்து இதை நீக்காவிட்டால் மாநில அளவில் போராட்டம் நடத்துவோம் என்றார்.


ஆனால், இந்தப் பாடங்களை நீக்கும் பேச்சுக்கே இடமில்லை என பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் திருவாசகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மனிதனுக்கு தேவையான சுயமரியாதை, பகுத்தறிவு சிந்தனை ஊட்டும் கருத்துக்கள்தான் வாழ்வியல் சிந்தனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

பல்கலைக்கழக பாடத்திட்டக்குழு நன்கு அலசி ஆராய் ந்து அதில் நல்ல கருத்துகள் இருப்பதை உறுதி செய்த பிறகே, பா டத்திட்டத்தில் சேர்ப்பதற்கு உரிய ஒப்புதல் கிடைத்துள்ளது. ஒரு ஆசிரியரோ, புத்தகமோ நல்ல கருத்துகளைத் தெரிவித்தால் அதை மட்டுமே ஏற் றுக்கொள்ள வேண்டும். அவரது பின்னணிகள் குறித்து ஆராயக்கூடாது. பல அறிஞர்களின் ஆலோசனைகளை பெற்றுதான் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதை நீக்கவேண்டிய அவசியம் எழவில்லை என்றார் அவர்.

'வாழும் தேவதை' புனிதத்தன்மை இழந்தார்

நேபாளத்தின் 'வாழும் தேவதையாக' வணங்கப்படும் 10 வயது சிறுமி, அமெரிக்கா சென்றதால், அவரது புனிதத்தன்மை கெட்டு விட்டதாக மதத் தலைவர்கள் அறிவித்துள்ளனர். இதனால், அந்தச்சிறுமி 'தேவதை' அந்தஸ்தை இழந்துள்ளார்.

தலைநகர் காத்மாண்டு அருகே பகாத்பூரில் உள்ள கோயிலில், சாஜனி ஷாக்யா என்ற சிறுமி இரண்டு வயதில் 'குமாரி' ஆக (வாழும் தேவதை) தேர்ந்தெடுக்கப்பட்டார். வாழும் பெண் தெய்வமாக வணங்கப்பட்ட இந்தச்சிறுமியை அப்பகுதியைச் சேர்ந்த இந்து மற்றும் பௌத்தர்கள் பயபக்தியுடன் வழிபட்டு வந்தனர்.

இந்நிலையில், நேபாளத்தின் பாரம்பரியம் மற்றும் அரசியல் குறித்து இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு நிறுவனம் தயாரிக்கும் நிகழ்ச்சிக்காக, 'குமாரி' சாஜனி ஷாக்யா, சமீபத்தில் அமெரிக்கா சென்றிருந்தார்.

இது தவறானது, நேபாள பாரம்பரியத்துக்கு எதிரானது என்று பகத்பூர் 'குமாரி' வழிபாட்டு மதத்தலைவர் ஜெய் பிரசாத் ரெக்மி செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.

அனுமதியின்றி அமெரிக்கா சென்றதால், 'குமாரி' சாஜனி ஷாக்யா புனிதத்தன்மை இழந்து விட்டதாகவும், அவருக்குப் பதிலாக புதிய 'குமாரியைத்' தேர்ந்தெடுக்க உள்ளதாகவும் ராய்டர் செய்தி நிறுவனத்திடம் அவர் தெரிவித்தார்.

சாஜனி ஷாக்யா போன்று நேபாளம் முழுவதும் ஏராளமான 'குமாரிகள்' உள்ளனர். தலைநகர் காத்மாண்டின் தர்பார் சதுக்கத்தில் உள்ள 15-ம் நூற்றாண்டு கோயிலைச் சேர்ந்த 'குமாரி', இவர்களில் பிரதானமானவர்.

புத்த மதத்தைச் சேர்ந்த பொற்கொல்லர் சமுதாயத்திலிருந்து கடுமையான ஆய்வுகளுக்குப் பின்னர் தேர்ந்தெடுக்கப்படும் பெண் குழந்தைகள், கோயில்களில் 'குமாரிகளாக' வீற்றிருந்து மக்களுக்கு ஆசி வழங்குகின்றனர்.

அவர்கள் பெரிய பெண்களாகும் வரை 'குமாரி' அந்தஸ்தில் நீடிப்பார்கள். அதன் பின்னர் குடும்பத்தில் இணைந்து சாதாரண வாழ்க்கையைத் தொடங்கலாம்.

முன்னாள் குமாரிகளுக்கு ஓய்வூதியமும் வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு நேபாள அரசுக்கு நோட்டீஸ் அனுப்பிய உச்ச நீதிமன்றம், 'குமாரிகள் வழிபாடு, குழந்தைகள் உரிமையை மீறும் செயலா?' என்பது குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்குமாறு உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி

ஒரு படத்தால் 3 மாதம் பீதி : "சிவாஜி' குறித்து நாசர்

தமிழ்த் திரையுலகில் ஒரு படத்தால் கடந்த 3 மாதங்களாக பீதி ஏற்பட்டது. இதனால் மற்ற படங்களைத் திரையிடுவதில் பாதிப்பு நீடிக்கிறது என "சிவாஜி' பற்றி நடிகர் நாசர் தெரிவித்தார்.

தஞ்சாவூரில் திங்கள்கிழமை நடைபெற்ற நியூ டவுன் ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற நாசர் பேசியதாவது: தமிழ் சினிமாவில் வன்முறை குறித்து ஆய்வு செய்யப்பட்டால் குறைந்தபட்சம் 1,000 பக்கங்களுக்கு மேல் எழுதலாம்.

சுதந்திரப் போராட்டக் காலத்தைவிடவும் மிக முக்கியமான ஒரு நெருக்கடியில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்; அதிகமான பிரச்னைகள் நம்மைச் சூழ்ந்திருக்கின்றன. ஆனால், இங்கு சினிமா என்பது வியாபாரம் மட்டுமே. பணத்தைப்போட்டு பணத்தை அள்ளுவதற்கான ஒரு கருவி.

ஒரு சினிமா முழுமையாக கலைஞனுடைய ஆளுமைக்குள் வரும்போதுதான் அவனால் சாதிக்க முடியும். சில பேர் சேர்ந்து இதற்காக முயற்சி செய்து வருகிறோம். நான் ஒட்டுமொத்த சினிமா உலகத்தைப் பிரதிபலிப்பவன் அல்லன். இதற்கு மாறாக ஏதேனும் செய்தால் என்னை சாதியைவிட்டு (சினிமா) விலக்கி வைத்து விடுவார்கள்.

சிறந்த படங்கள் கேன்ஸ் விருது பெற வாய்ப்புள்ளது. விருதுக்காக படம் எடுக்க முடியாது. நல்ல படமாக இருந்தால் விருது கிடைக்கும். 'அவதாரம்' நல்ல படம் என்று என்னால் தைரியமாக சொல்ல முடியும். ஆனால், அந்த ஆண்டு சிறந்த படத்துக்கான விருதை 'அருணாசலம்' படத்துக்கு கொடுத்தார்கள். சொந்த மண்ணிலேயே தரமான படம் மதிக்கப்படவில்லை. அதைப்பற்றி நாம் யாரும் பேசவில்லை. ஆனால், ஆஸ்கரைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம்.

கடந்த 3 மாதங்களாக ஒரு படம் வருகிறது என்று ஏற்படுத்தப்பட்ட பீதியால் மற்ற படங்களை வெளியிட முடியவில்லை. அந்தப் படம் வெளியான பின்னரும் இதுவரை எந்த படத்தையும் திரையிட முடியவில்லை.

தமிழ் சினிமாவில் நடிப்பதையே விட்டுவிட்டோம். பாதி நேரம் சண்டை, மீதி நேரம் பாட்டு... நடிப்பதற்கு ஏது நேரம்?

சினிமா எப்படி இருக்க வேண்டும் என்பற்கு உலகளாவிய கோட்பாடு இருகிறது. உலக அளவில் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய சினிமா கோட்பாடுகள் எல்லாம் பொய்த்து - தோற்றுப் போகக்கூடிய ஓர் இடம் தமிழ் சினிமாதான்.

தினமணி

-o❢o-

b r e a k i n g   n e w s...