.

Saturday, April 28, 2007

சற்றுமுன்: உலகக்கோப்பை இறுதிப் போட்டி: ஆஸ்திரேலியா x இலங்கை

உலக கோப்பை இறுதிப் போட்டி : ஆஸ்திரேலியா டாஸ் வென்று முதலில் பேட் செய்ய முடிவு; 38 ஒவராக குறைப்பு

பார்படாஸ் : உலக மக்கள் பெரிதும் எதிர்பார்க்கும் உலக கோப்பை இறுதிப் போட்டி வெஸ்ட் இண்டீசின் பார்படாஸ் நகரில் நடைபெறவிருக்கிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. மழையால் ஆட்டம் துவங்குவது தாமதப்பட்டுள்ளது. இந்திய நேரப்படி இரவு 0945 மணிக்கு ஆட்டம் துவங்கும்; மழை காரணமாக ஆட்டம் 38 ஒவராக குறைக்கப்பட்டுள்ளது. உலகப் புகழ் பெற்ற ஆஸி., வீரர் மெக்ராத் மற்றும் இலங்கை வீரர் அர்னால்ட் ஆகிய இருவருக்கும் இது கடைசி போட்டி ஆகும்.

=தினமலர்

மாநில நடுவண் அரசுகளின் உறவை சீர்திருத்த புது கமிஷன் அமைப்பு

மாநில அரசுகளுக்கும் நடுவண் அரசிற்குமிடையே நிலவும் அதிகாரப் பங்கினை ஆய்ந்து சீர்திருத்தங்களை பரிந்துரைக்க முன்னாள் தலைமை நீதிபதி திரு எம்.எம்.புன்ச்சி தலைமையில் ஒரு புது கமிஷன் அமைக்கப் பட்டுள்ளது. மாநில சுயாட்சியை பரிந்துரைத்தவர்கள் பங்குபெறும் ஆட்சியில் நடுவண் அரசிற்கு அதிக அதிகாரங்களை, தாமே மைய காவல்படையினரை மாநிலங்களுக்கு அனுப்புவிதமாகவும், நாட்டிற்கு ஊறு விளைவிக்கும் குற்றங்களை நேரடியாக ஆயும் விதமாகவும் கொடுப்பதற்கு வித்திட இந்த கமிஷன் அமைக்கப் பட்டுள்ளது.
மேலும் அறிய...The Hindu : National : New commission on Centre-States ties

மேலாண்மை கல்வி நிறுவனங்களில் மாணவர்சேர்க்கை ஆரம்பம்

இந்திய அரசின் மனிதவள அமைச்சின் வழிகாட்டலை அடுத்து ஐந்து இந்திய மேலாண்மை நிறுவனங்கள் ( அகமதாபாத், பங்களூரு,கொல்கொத்தா, இந்தோர், இலக்னோ) மாணவர்களை சேர்க்கும் விதமாக தங்கள் தேர்வுபட்டியலை அவரவர் வலைத்தளங்களில் வெளியிட்டனர்.

Institutes in action mode

வீரப்பன் உளவாளி கொலை வழக்கு நக்கீரன் கோபால் விடுதலை.

2007 கோபிச்செட்டிப்பாளையம் வீரப்பனுக்கு உணவு உள்ளிட்டவற்றை சப்ளை செய்து வந்த ஹோட்டல் அதிபர் கந்தவேல் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த நக்கீரன் ஆசிரியர் கோபால், நிருபர்கள் சிவசுப்ரமணியம், ஜீவா தங்கவேல் உள்ளிட்ட 11 பேர் விடுதலை செய்யப்பட்டனர். ஈரோடு மாவட்டம் பர்கூரில் ஹோட்டல் வைத்திருந்தவர் கந்தவேல். இவர் வீரப்பனுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்டவற்றைக் கொடுத்து வந்தார். மேலும் வீரப்பனின் உளவாளியாகவும் இருந்தார். இவரை சிலர் கொலை செய்து விட்டனர். இதையடுத்து கடந்த அதிமுக ஆட்சியில் நக்கீரன் கோபால், நக்கீரன் நிருபர்கள் சிவசுப்ரமணியம், ஜீவா தங்கவேல் உள்ளிட்ட11 பேர் மீது கொலை வழக்கு போடப்பட்டது. இந்த வழக்கு கோபிச்செட்டிப்பாளையம் விரைவு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. கோபால் உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டு சரிவர நிரூபிக்கப்படவில்லை என்பதால் அனைவரையும் விடுதலை செய்வதாக நீதிபதி பிரேம்குமார் தனது தீர்ப்பில் தெரிவித்தார். தீர்ப்பை அறிவதற்காக கோபி நீதிமன்றத்திற்கு வந்திருந்த கோபால் தீர்ப்பு குறித்து கூறுகையில், இது பொய் வழக்கு என்பது அனைவருக்கும் தெரியும். இந்த வழக்கால் நானும், எனது பத்திரிக்கை நிருபர்களும் கடந்த ஆட்சியில் அலைக்கழிக்கப்பட்டோம், துன்புறுத்தப்பட்டோம். இப்போது பெரும் சட்டப் போராட்டத்துக்குப் பின்னர் நிரபராதிகள் என நிரூபிக்கப்பட்டுள்ளோம் என்றார்.

ச: நுழைவுத் தேர்வு தேவை இல்லை. ஐகோர்ட் தீர்ப்பு

நுழைவுத்தேர்வு இல்லை! * தமிழக அரசின் சட்டம் செல்லும் என ஐகோர்ட் தீர்ப்பு * பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களின் கவலை தீர்ந்தது

சென்னை: "தொழில் கல்விக்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்து தமிழக அரசு கொண்டு வந்த புதிய சட்டம் செல்லும்' என்று சென்னை ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. நுழைவுத் தேர்வு இல்லை என்று முடிவானதால் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களின் கவலை தீர்ந்தது. மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழில் கல்விக்கான நுழைவுத் தேர்வு 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்தது. இதை ரத்து செய்ய வேண்டும் என அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்தன. "நுழைவுத் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்; நகர்ப்புற மாணவர்களே பலனடைகின்றனர்' என்று கருத்து தெரிவிக்கப்பட்டது. கடந்த அ.தி.மு.க., ஆட்சியின் போது நுழைவுத் தேர்வை ரத்து செய்து இரண்டு முறை தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதனை சென்னை ஐகோர்ட் ரத்து செய்தது.

தி.மு.க., அரசு பதவியேற்ற உடன், நுழைவுத் தேர்வை ரத்து செய்வது குறித்து பரிந்துரைக்க முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இக்குழு அனைத்து தரப்பிலும் கருத்துக்களை கோரியது. வெவ்வேறு போர்டு தேர்வுகளை எழுதும் மாணவர்களின் மதிப்பெண்களை எப்படி சமன்படுத்துவது என்பது குறித்து ஆராய்ந்தது. கடைசியில் அரசுக்கு தனது அறிக்கையை அளித்தது. அதன் அடிப்படையில், நுழைவுத் தேர்வை ரத்து செய்து தமிழக அரசு சட்டம் கொண்டு வந்தது. இச்சட்டத்துக்கு ஜனாதிபதியின் ஒப்புதலும் பெறப்பட்டது. சட்டத்தை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மாணவர் அஸ்வின்குமார் உள்ளிட்ட நால்வரும், ஆதரித்து பா.ம.க., மாணவர் அணி, திராவிட கழகம் ஆகியவையும் மனுக்கள் தாக்கல் செய்தன. இந்த மனுக்களை முதலில் தலைமை நீதிபதி ஏ.பி.ஷா அடங்கிய "முதல் பெஞ்ச்' விசாரித்தது. பின்னர் இவ்வழக்கு நீதிபதிகள் பி.கே.மிஸ்ரா, சம்பத்குமார் அடங்கிய "டிவிஷன் பெஞ்ச்' விசாரணைக்கு மாற்றப்பட்டது. தமிழக அரசு சார்பில் அட்வகேட்ஜெனரல் விடுதலை, கூடுதல் அட்வகேட்ஜெனரல் கண்ணதாசன், சிறப்பு அரசு பிளீடர் சேகர், மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் வி.டி.கோபாலன், உதவி சொலிசிட்டர் ஜெனரல் பி.வில்சன், ஏ.ஐ.சி.டி.இ., சார்பில் வக்கீல் முரளிகுமரன், இந்திய மருத்துவ கவுன்சில் சார்பில் வக்கீல் சிங்காரவேலன், பா.ம.க., சார்பில் சீனியர் வக்கீல் ரவிவர்மகுமார், வக்கீல் ஜோதிமணி, தி.க., சார்பில் வக்கீல்கள் தியாகராஜன், வீரசேகரன், ஆகியோர் ஆஜராயினர். இவ்வழக்கில் கடந்த 11ம் தேதி தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டது.

நேற்று நீதிபதிகள் பி.கே.மிஸ்ரா, சம்பத்குமார் அடங்கிய "டிவிஷன் பெஞ்ச்' இவ்வழக்கில் உத்தரவு பிறப்பித்தது. பொதுவான உத்தரவை முதலில் நீதிபதி மிஸ்ரா வாசித்தார். பின்னர் நீதிபதி சம்பத்குமார் கூடுதலாக தனது உத்தரவை வாசித்தார். "நுழைவுத் தேர்வை ரத்து செய்து தமிழக அரசு கொண்டு வந்த சட்டம் செல்லும்' என்றும் இதை எதிர்த்த மனுக்களை தள்ளுபடி செய்தும் தீர்ப்பளித்தனர். கட்டடக்கலை படிப்பில் சேரும் மாணவர்களைப் பொறுத்தவரை அவர்கள் திறன் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்து தான் இச்சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என்றும், திறன் தேர்வு ரத்து பற்றி குறிப்பிடப்படவில்லை என்றும், எனவே அதை நடத்த வேண்டும் என்றும், நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர். "நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது கோடிக்கணக்கான மக்களின் விருப்பம். அவர்களின் விருப்பத்தை மறுக்க முடியாது. அதை நிறைவேற்ற வேண்டும்.சமூக நீதியை பாதுகாக்க இச்சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது' என்று நீதிபதி சம்பத்குமார் கூறினார்.

தினமலர்

கள்ளச் சாராயத்தை ஒழிக்க முடியாது: கருணாநிதி

சென்னை, ஏப். 27: காங்கிரஸ் கட்சியின் கடைசி தொண்டர் நினைத்தாலும், கள்ளச்சாராயத்தை ஒழிக்க முடியாது என முதல்வர் கருணாநிதி தெரிவித்தார். பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அவர் பேசியது:

இங்கு நடைபெற்ற விவாதத்தில் பேசிய சில உறுப்பினர்கள் கள்ளச் சாராய சாவுகளைக் கூறி அதனை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்றார்கள். காமராஜர் ஆட்சி வர வேண்டும் என்று பேசிவரும் காங்கிரஸ் உறுப்பினர்கள் காமராஜர் ஆட்சிக் காலத்திலேயே கள்ளச்சாராயத்தை ஒழிக்க முடியவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். குஜராத் மாநிலம் போர்பந்தரில் மகாத்மா காந்தியடிகள் வாழ்ந்த வீடு அருகே கிணறு தோண்டி அதில் வைத்திருந்து கள்ளச்சாராயம் விற்கப்பட்ட தகவலை நாடாளுமன்றத்தில் கூறி அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி வேதனைப்பட்டார்.

இந்திரா காந்தி அல்ல, காங்கிரஸ் கட்சியின் கடைசித் தொண்டர் நினைத்தாலும் கள்ளச்சாராயத்தை ஒழிக்க முடியாது. இதற்கு மதுவிலக்கு திட்டத்தில் திருத்தங்கள் செய்ய வேண்டும், தனியார் நிறுவனங்களுடன் போட்டியிடும் அளவுக்கு நல்ல சரக்குகளை உற்பத்தி செய்தால்தான் கள்ளச் சாராயத்தை ஒழிக்க முடியும்.

மதுவிலக்குப் பற்றி பேசிய சில உறுப்பினர்கள் டாஸ்மாக் பணியாளர்கள் குறித்தும் பேசினார்கள். அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பதாக இருந்தால் டாஸ்மாக் மதுக் கடைகளையும் மூட அரசு தயாராக உள்ளது.

டாஸ்மாக் மூலம் கிடைக்கும் வருவாய் ரூ. 7 ஆயிரம் கோடி இழப்பையும் ஏற்க அரசு தயாராக உள்ளது. அதில் பணிபுரியும் ஊழியர்கள் என்ன ஆவார்கள் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.

எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஷில்பாவுக்கு முத்தம் கொடுத்த ஹாலிவுட் நடிகருக்கு கைது வாரண்ட்

ஜெய்ப்பூர், ஏப். 27: பொது நிகழ்ச்சியில், இந்தி நடிகை ஷில்பா ஷெட்டிக்கு முத்தம் கொடுத்த, ஹாலிவுட் நடிகர் ரிச்சர்ட் கெரியை கைது செய்யும்படி ஜெய்ப்பூர் நகர நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. மேலும் நடிகை ஷில்பா ஷெட்டியை வரும் மே 5-ம் தேதி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொது இடத்தில் செக்ஸ் உணர்வுகளை தூண்டும் விதமாக இருவரும் நடந்துகொண்டதால் இந்திய குற்றவியல் சட்டப்படி அவர்களை தண்டிக்க வேண்டுமென ஜெய்ப்பூர் நகரைச் சேர்ந்த பூணம் சந்த் பண்டாரி என்பவர் பொது நலன் வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கை ஜெய்ப்பூர் கூடுதல் முதன்மை மாஜிஸ்திரேட் தினேஷ் குப்தா, வியாழக்கிழமை விசாரித்தார். இதுதொடர்பான விடியோ காட்சிகளை பார்வையிட்ட அவர், இச்செயல் எல்லை மீறியது; சமூகத்தை தவறான பாதைக்கு இட்டுச் செல்லக்கூடியது என்றார். மேலும், கெரியின் அரவணைப்பில் இருந்து விடுவித்துக் கொள்ளாமல் ஒத்துழைப்பு அளித்ததன் மூலம் ஷில்பா ஷெட்டியும் குற்றவாளியாகிறார் என்றார் நீதிபதி.

பொது இடத்தில் இருவரும் நாகரீகம் இல்லாமல் நடந்து கொண்டதாக, இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. தில்லி, மும்பை, வாராணசி, போபால், கான்பூர், இந்தூர் ஆகிய நகரங்களில் பெரும்பாலும் ஹிந்து அமைப்புகளைச் சேர்ந்தோர் இருவரின் உருவ பொம்மைகளை தீயிட்டு கொளுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Dinamani

-o❢o-

b r e a k i n g   n e w s...