.

Sunday, August 19, 2007

வக்பு வாரிய கட்டிடம்: மேலும் ஒரு அறிக்கை.

வக்பு வாரிய முன்னாள் தலைவரும், திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ.வுமான பதர் சயீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

வக்பு வாரிய கட்டிட திறப்புவிழா தொடர்பாக தமிழக வக்பு வாரிய தலைவர் கூறி இருப்பது, முன்னுக்குப்பின் முரணாக உள்ளது. சென்னை வியாசர்பாடி கன்னிகாபுரத்தில் 79 ஆண்டுகளுக்கு முன்பு ஹஜரத் முகமது இனாயத்துல்லா என்ற மகான் அடக்கமாகி உள்ள கட்டிடத்தை இடித்ததை கண்டித்துத்தான் இந்திய ïனியன் முஸ்லிம் லீக் ஆர்ப்பாட்டம் நடத்தியது என்பதை வக்பு வாரிய தலைவரின் கவனத்திற்கு கொண்டுவருவது எனது கடமை என்று கருதுகிறேன்.

வக்பு வாரிய கட்டிடம் கட்டி முடிப்பதற்கு அ.தி.மு.க. ஆட்சியில்தான் காலதாமதம் ஆனது என்று அவர் கூறி இருப்பது முற்றிலும் தவறானது. வக்பு வாரிய கட்டிடம், அ.தி.மு.க. ஆட்சியில் பணம் ஒதுக்கப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டு, கட்டியும் முடிக்கப்பட்டது. கட்டிடம் திறப்பு விழாவுக்கு தயாரானது இஸ்லாமிய சமுதாய மக்கள் அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

ஆனால், திறக்கப்பட வேண்டிய கட்டிடத்தின் சில பகுதியை வேண்டும் என்றே தாமதப்படுத்த வேண்டும் என்ற காரணத்திற்காக இடித்துவிட்டு இன்னும் கட்டிடம் கட்டி முடிக்கவில்லை என்று கூறுகிறார்கள். வாரியத் தலைவரும் கட்டிடம் திறப்பதற்கான எந்த முயற்சியும் எடுக்காமல் உள்ளார் என்பதுதான் உண்மை.

இவ்வாறு பதர் சயீத் அறிக்கையில் கூறி உள்ளார்.

தினத்தந்தி

சர்வதேச காவல்துறை தேடிவரும் சதாமின் மகள்

சர்வதேச காவல்துறை தேடிவரும் சதாமின் மகள்

சர்வதேச காவல்துறை தேடிவரும் பட்டியலில் ஈராக்கின் முன்னாள் அதிபர் சதாம் உசேனின் மகள் ராகத் உசேன் ( வயது 38 ) பெயர் இடம் பெற்றுள்ளது.

தூக்கிலிடப்பட்ட சதாமின் மூத்த மகளான ராகத் தீவிரவாதத்திற்கு துணை போவதாக அறிவித்து அவரைத் தேடி வருகிறது. சர்வதேச காவல்துறையான இண்டர்போல் சிவப்பு நோட்டிஸ் ராகத்தின் பெயரில் வெளியிட்டுள்ளது சர்வதேச கைது வாரண்ட் அல்ல. மாறாக வெளிநாட்டு காவல்துறை ராகத்தின் இருப்பிடத்தைக் கண்டறிய உதவுவதுடன், ஈராக்கிற்கு கொண்டு வர உதவி அந்நாட்டு நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது.

ராகத் கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் ஜோர்டான் நாட்டில் வசித்து வருகிறார். சிறிய சதாம் என்றழைக்கப்படும் இவர் தனது தந்தை கைது செய்யப்பட்டதும் அதனை மிகவும் கடுமையாக எதிர்த்து வந்தார்.

சதாமின் பாதுக்காப்புக் குழுவில் இடம்பெற்ற ஹிஸாம் அல் கஸ்ஸாவி ராகத் ஜோர்டான் மன்னரின் விருந்தினராக இருந்து வருகிறார். கடந்த வருடம் ஈராக் அரசு ராகத்தை ஒப்படைக்க கேட்டுக் கொண்டாலும் அதனை ஜோர்டான் மறுத்து விட்டது.

நன்றி : Gulf News

இண்டர்போல் இணைய முகவரியில் ராகத் உசேன்

http://www.interpol.com/public/Data/Wanted/Notices/Data/2006/06/2006_54606.asp?HM=1

நீதிமன்றத்தில் சரணடைந்த மத்திய இணை அமைச்சர்

மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் பாத்மி, தர்பங்கா நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்து தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய வழக்கில் ஜாமீன் பெற்றார்.

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை இணை அமைச்சராக இருப்பவர் ராஷ்டிரிய ஜனதா தளத்தைச் சேர்ந்த பாத்மி. கடந்த பாராளுமன்றத் தேர்தலில் பீகார், தர்பங்கா தொகுதியில் போட்டியிட்டபோது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக இவர் மீது தர்பங்கா முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணைகளின்போது அவர் நீதிமன்றத்தில் நேரில் வரவில்லை. இதையடுத்து, பாத்மியை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், பாத்மி நீதிமன்றம் வந்து நேற்று சரண் அடைந்தார். பின்னர் அவருக்கு பிணை அளிக்கப்பட்டது.

தினமலர்

மக்களுக்கு சேவை புரியவே அரசியல் - நடிகர் சரத்குமார் பேட்டி

மக்களுக்கு சேவை புரியவே அரசியல் - நடிகர் சரத்குமார் பேட்டி

துபாய் : மக்களுக்கு சேவை புரியவே அரசியலில் ஈடுபட்டு வருகிறேன் என்று நடிகர் சரத்குமார் ஐக்கிய அரபு அமீரகத்தின் ராசல் கைமாவில் இருந்து வானொலி சேவையை வழங்கி வரும் சக்தி எப்.எம். க்கு அளித்த பேட்டியில் தெரிவித்து உள்ளார்.

தான் ஒரு இளநிலை கணிதப் பட்டாரி எனவும், இப்படிப்பின் மூலம் தான் பத்தாயிரமோ, இருபதாயிரமோ மாதந்தோறும் சம்பாதித்திருக்கலாம். ஆனால் தான் கோடிக்கணக்கில் சினிமாவின் மூலம் சம்பாதிப்பதற்கு தமிழ் ரசிகப் பெருமக்கள் தான் காரணம்.

அத்தகைய தமிழ் மக்களுக்கு நல்லது செய்ய திட்டமிட்டு திமுகவிலும் அதனைத்த் தொடர்ந்து அதிமுகவிலும் அங்கம் வகித்தேன். தனது சுயமரியாதைக்கு பங்கம் ஏற்பட்டதையடுத்து அக்கட்சிகளில் இருந்து விளகினேன்.

எதிர்வரும் ஆகஸ்ட் 31 ந் தேதி புதுக்கட்சி துவங்க இருப்பதாகத் தெரிவித்தார்.

இளம் வயதில் தனது தந்தையிடமிருந்து பிறருக்கு உதவ வேண்டும் என்ற மனோபாவத்தை வளர்த்துக் கொண்டதே பொது சேவையில் ஆர்வம் கொள்ளக் காரணமாக அமைந்தது என்றார்.

நாளுக்கு நாள் புதுப்புது நடிகர்கள் வந்தாலும் தனக்கு தற்போது ஆறு படங்கள் கைவசம் இருப்பதாகக் குறிப்பிட்டார். அரசியல் கட்சி ஆரம்பித்தாலும் ஒரு குறிப்பிட்ட நேரம் வரும்போது எதில் முழு நேரம் ஈடுபட வேண்டும் என்பதை தான் முடிவெடுப்பேன் எனத் தெரிவித்தார்.

இலவச தொ.கா - விண்ணப்பம் விலைக்கு!

வாசுதேவநல்லூர் அருகேயுள்ளது தென்மலை முதல் நிலை ஊராட்சி.தென்மலை அருகிலுள்ள துரைச்சாமிபுரத்தில் இலவச வண்ண தொ.கா கொடுக்கப்பட்டு வருகிறது. இதனை பயன்படுத்தி அப்பகுதியில் கேபிள் டி.வி நடத்தும் ஒரு நபரும், உள்ளாட்சியில் பொறுப்பு வகிக்கும் மற்றொரு நபரும் இணைந்து இலவச தொ.கா விண்ணப்ப படிவத்தினை தலா ரூ. 52-க்கு விற்பனை செய்துள்ளனர்.

மேலும் இது குறித்து பொது மக்கள் ரசீது கேட்டதற்கு அவர்கள் கேபிள் டி.வி கட்டணத்திற்குக் கொடுக்கப்படும் ரசீதினை கொடுத்துள்ளனர். மேலும், இந்தப் பணம் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திற்காக போட்டோ எடுப்பதற்காக என்றும் கூறியுள்ளனர்.

இவ்வாறு 500 பேரிடம் பண மோசடி நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில் சிவகிரி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்

வங்க தேசத்தில் அடுத்த ஆண்டு தேர்தல்.

வங்காள தேசத்தில் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து ராணுவ ஆதரவுடன் இடைக்கால அரசு நடந்து வருகிறது. அங்கு நெருக்கடி நிலையும் அமலில் உள்ளது. இந்நிலையில், அங்கு அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் பொதுத்தேர்தல் நடத்தப்படும் என்று ராணுவ தளபதி மொயின் அகமது அறிவித்துள்ளார்.

5 ஆண்டு காலமும் மக்களை நன்றாக கவனித்து கொள்பவர்களை தேர்ந்தெடுங்கள் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஓட்டுகளை விற்காதீர்கள், மற்றவர்களையும் விற்க விடாதீர்கள் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

தினத்தந்தி

மதுரை, கோவை, திருச்சியில் உயர்கல்வி நிறுவனங்கள் - கருணாநிதி கோரிக்கை!

நாட்டில் அதிக அளவில் ஐஐடிக்கள், ஐஐஎம்கள் தொடங்கப்படும் என்று சுதந்திர தின உரையின்போது பிரதமர் மன்மோஹன்சிங் தெரிவித்ததை வரவேற்றுள்ள தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி அதன்படி மதுரையில் ஐஐடி, கோவையில் ஐஐஎம், திருச்சியில் இந்திய அறிவியல், கல்வி ஆய்வுக் கழகம் ஆகியவற்றை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

"இந்த நிறுவனங்களை தமிழகத்தில் ஆரம்பிப்பதன் மூலம், உயர் கல்வியில் தமிழகம் உயரிய நிலையை அடைய முடியும். இந்தக் கல்வியை பயில ஆர்வமாக உள்ள தமிழக மாணவர்களுக்கு கூடுதல் வாய்ப்பு கிடைக்கும்.

மேலும் தமிழகத்தில் தொழில் மயமாக்கல் மற்றும் வேலைவாப்பு பெருக்கம் ஆகியவற்றுக்கும் இவை பெருமளவில் உதவும்.

நாட்டு நலன் மற்றும் சக்தியில் அறிவியல் தொழில்நுட்பம் முக்கிய இடம் வகிக்கிறது. எனவே திறமையான பொறியாளர்கள், விஞ்ஞானிகள், நிர்வாகிகளை உருவாக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்விக்கு தமிழகம் எப்போதுமே முதலிடம் கொடுத்து வருகிறது. இங்கு கிடைக்கும் திறமையான மனித சக்தியின் மூலம் பெருமளவிலான தொழில் மற்றும் வர்த்தக முதலீடுகளை தமிழகம் ஈர்த்து வருகிறது.

மாவட்ட அளவில், ஒவ்வொரு தாலுகாவிலும் அரசு உதவியுடன் கல்லூரிகள், உயர் தரமான பள்ளிகளைத் தொடங்க வேண்டும் என்ற தங்களது கோரிக்கையையும் நான் வரவேற்கிறேன்"
என்று கூறியுள்ளார் கருணாநிதி.

பாராளுமன்றத்தில் சச்சார் அறிக்கை நடப்பு கூட்டத்தொடரில்!

இந்தியாவில் முஸ்லிம்களின் வாழ்நிலையை விளக்கி வரையப்பட்ட நீதிபதி சச்சார் குழு அறிக்கை நடப்பு கூட்டத்தொடரில் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.

இத்தகவலை மாநிலங்களவை உறுப்பினரும், தேசியவாத காங்கிரஸின் பொதுச்செயலாளருமான தாரிக் அன்வர் மும்பையில் நடைபெற்ற கருத்தரங்கில் இதைத் தெரிவித்தார்.

பாராளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் பிரிய ரஞ்சன் தாஸ் முன்ஷி ஒரு கடிதத்தில் இவ்வாறு உறுதியளித்ததாகவும் அவர் தெரிவித்தார். கருத்தரங்கில் கலந்து கொள்ள விழைந்த அமைச்சர் வெள்ளம் காரணமாகத் தன் தொகுதிக்குச் சென்றுவிட்டதாகவும் திரு. அன்வர் கூறினார்.

"முஸ்லிம்கள் சிறப்புச்சலுகை கோரவில்லை, மாறாக உரிய பங்கையே கோருகின்றனர்" என்ற தாரிக் அன்வர், "அனைவருக்கும் சமமான உரிமைகள் வழங்கப்பட்டாலேயே வலிமையான இந்தியா என்கிற கனவு சாத்தியப்படும்" என்றார்.

நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா கமிட்டியும், தனி இடஒதுக்கீடு இல்லாமல் முஸ்லிம்கள் தமது உரிமைகளை அடைய இயலாது என்று சுட்டி இருப்பதாக தாரிக் அன்வர் எடுத்துரைத்தார்.

மும்பையின் 1992-93 கலவரங்கள் மீதான ஸ்ரீ கிருஷ்ணா ஆணையம் குறித்து 'நீதி நிலைநாட்டப்படும் என்று உணரப்படும் வரை இதை முன்னெடுத்துச் செல்ல முடியாது' என்றார்.

பி/டி/ஐ செய்திக்குறிப்பு

புதிய சட்டமன்ற தொகுதிகள் பட்டியல்

புதிய சட்டமன்ற தொகுதிகள் பட்டியல்

Webdunia

தமிழகத்தில் உள்ள புதிய சட்டமன்ற தொகுதி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன் விவரம் மாவட்ட வாரியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் : கும்மிடிப்பூண்டி, பொன்னேரி (தனி), திருத்தணி, திருவள்ளூர், பூந்தமல்லி (தனி), ஆவடி, மதுரவாயல், அம்பத்தூர், மாதவரம், திருவொற்றிïர்.

சென்னை மாவட்டம் : டாக்டர் ராதாகிருஷ்ணன்நகர், பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம், திரு.வி.க.நகர் (தனி), எழும்பூர் (தனி), ராயபுரம், துறைமுகம், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, அண்ணாநகர், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராயநகர், மயிலாப்பூர், வேளச்சேரி.

காஞ்சீபுரம் மாவட்டம் : சோழிங்கநல்லூர், ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர் (தனி), பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போரூர், செய்ïர் (தனி), மதுராந்தகம் (தனி), உத்திரமேரூர், காஞ்சீபுரம்.

வேலூர் மாவட்டம் : அரக்கோணம் (தனி), சோளிங்கர், காட்பாடி, ராணிப்பேட்டை, ஆற்காடு, வேலூர், அணைக்கட்டு, கீழ்வைத்தியணான்குப்பம் (தனி), குடியாத்தம் (தனி), வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை, திருப்பத்தூர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் : ஊத்தங்கரை (தனி), பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி, ஓசூர், தளி.

தர்மபுரி மாவட்டம் : பாலக்கோடு, பெண்ணாகரம், தர்மபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் (தனி).

திருவண்ணாமலை மாவட்டம் : செங்கம் (தனி), திருவண்ணாமலை, கீழ்பெண்ணாத்தூர், கலசப்பாக்கம், போளூர், ஆரணி, செய்யார், வந்தவாசி (தனி).

விழுப்புரம் மாவட்டம் : செஞ்சி, மயிலம், திண்டிவனம் (தனி), வானூர் (தனி), விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோயிலூர், உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி (தனி).

சேலம் மாவட்டம் : கங்கவல்லி (தனி), ஆத்தூர் (தனி), ஏற்காடு (பழங்குடியினர்), ஓமலூர், மேட்டூர், எடப்பாடி, சங்கரி, சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு, வீரபாண்டி.

நாமக்கல் மாவட்டம் : ராசிபுரம் (தனி), சேந்தமங்கலம் (பழங்குடியினர்), நாமக்கல், பரமத்திவேலூர், திருச்செங்கோடு, கொமாரபாளையம்.

ஈரோடு மாவட்டம் : ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, தாராபுரம் (தனி), பெருந்துறை, பவானி, அந்திïர், கோபிசெட்டிபாளையம், பவானிசாகர் (தனி).

நீலகிரி மாவட்டம் : உதகமண்டலம், கூடலூர் (தனி), குன்னூர்.

கோவை மாவட்டம் : மேட்டுப்பாளையம், அவிநாசி (தனி), திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்லடம், சூளூர், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, தொண்டாமுத்தூர், கோவை தெற்கு, சிங்காநல்லூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை (தனி), உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம்.

திண்டுக்கல் மாவட்டம் : பழனி, ஒட்டன்சத்திரம், ஆத்தூர், நிலக்கோட்டை (தனி), நத்தம், திண்டுக்கல், வேடச்சந்தூர்.

கரூர் மாவட்டம் : அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம் (தனி), குளித்தலை.

திருச்சி மாவட்டம் : மணப்பாறை, ஸ்ரீரங்கம், திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், லால்குடி, மணச்சநல்லூர், முசிறி, துறைïர் (தனி).

பெரம்பலூர் மாவட்டம் : பெரம்பலூர் (தனி), குன்னம், அரியலூர், ஜெயங்கொண்டம்.

கடலூர் மாவட்டம் : திட்டக்குடி (தனி), விருத்தாசலம், நெய்வேலி, பண்ருட்டி, கடலூர், குறிஞ்சிப்பாடி, புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் (தனி).

நாகை மாவட்டம் : சீர்காழி (தனி), மயிலாடுதுறை, பூம்புகார், நாகை, கீழ்வேலூர் (தனி), வேதாரண்யம்.

திருவாரூர் மாவட்டம் : திருத்துறைப்பூண்டி (தனி), மன்னார்குடி, திருவாரூர், நன்னிலம்.

தஞ்சை மாவட்டம் : திருவிடைமருதூர் (தனி), கும்பகோணம், பாபநாசம், திருவையாறு, தஞ்சை, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி.

புதுக்கோட்டை மாவட்டம் : கந்தர்வக்கோட்டை (தனி), விராலிமலை, புதுக்கோட்டை, திருமயம், ஆலங்குடி, அறந்தாங்கி.

சிவகங்கை மாவட்டம் : காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை, மானாமதுரை (தனி).

மதுரை மாவட்டம் : மேலூர், மதுரை கிழக்கு, சோழவந்தான் (தனி), மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மத்தி, மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம், திருமங்கலம், உசிலம்பட்டி.

தேனி மாவட்டம் : ஆண்டிப்பட்டி, பெரியகுளம் (தனி), போடி, கம்பம்.

விருதுநகர் மாவட்டம் : ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி), சாத்தூர், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி.

ராமநாதபுரம் மாவட்டம் : பரமக்குடி (தனி), திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்தூர்.

தூத்துக்குடி மாவட்டம் : விளாத்திகுளம், தூத்துக்குடி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ஒட்டப்பிடாரம் (தனி), கோவில்பட்டி.

நெல்லை மாவட்டம் : சங்கரன்கோயில் (தனி), வாசுதேவநல்லூர் (தனி), கடையநல்லூர், தென்காசி, ஆலங்குளம், நெல்லை, அம்பாசமுத்திரம், பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம்.

கன்னியாகுமரி மாவட்டம் : கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர்.

தமிழறிஞர்களுக்கான தொல்காப்பியர் விருது-ரூ.ஐந்து இலட்சம்

மத்திய செம்மொழி தமிழ் ஆய்வு மையத்தின் தொடக்க விழா சென்னையில் நடந்தது. மத்திய அமைச்சர் அர்ஜூன் சிங் இதைத் தொடங்கி வைத்தார். முதல்வர் கருணாநிதி தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில், அமைச்சர் அர்ஜூன் சிங் பேசுகையில்,

செம்மொழித் தமிழில் உள்ள பழம்பெரும் காப்பியங்கள், இதிகாசங்களை தொகுத்து அச்சிடும் பணி கோவையில் நடந்து வருகிறது. அப்பணி இறுதி வடிவத்தில் உள்ளது. அச்சிடும் பணி இந்த ஆண்டு இறுதிக்குள் முடிந்து விடும்.

இதுதவிர செம்மொழித் தமிழில் உள்ள படைப்புகளை தொலைக்காட்சித் தொடர்களாக உருவாக்கும் திட்டமும் உள்ளது. இவற்றை அடுத்த ஆண்டு ஜனவரி 14ம் தேதி முதல்வர் கருணாநிதி தலைமையில் வெளியிடுவோம்.


செம்மொழித் தமிழில் சிறந்து விளங்கும் தமிழறிஞர்களுக்கு தேசிய விருதுகள் வழங்கப்படவுள்ளது. இந்த விருதுக்கு தொல்காப்பியர் விருது என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த விருதுக்குரிய பரிசுத் தொகையாக ரூ. 1 லட்சம் அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இத்தொகை முதல்வர் கருணாநிதியின் கோரிக்கையின் பேரில் ரூ. 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதுதவிர குறள் பீடம் விருதும் வழங்கப்படும். இந்த விருதுக்கான பரிசுத் தொகையும் ரூ. 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும், ஐந்து இளம் தமிழறிஞர்களுக்கு ரூ. 1 லட்சம் பரிசுத் தொகையுடன் கூடிய விருதும் வழங்கப்படும்.

செம்மொழி தமிழ் ஆய்வு மையத்தை சென்னையில் நிறுவும் தமிழக மக்களின் கனவு தற்போது நனவாகியுள்ளது. இந்த மையத்தை அமைக்க 29 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த மையத்தில் தமிழ் ஆய்வுகள் தவிர செம்மொழி தமிழ் போதனைகளும் நடத்தப்படும். மேலும் பட்டப் படிப்புகளையும் தமிழக அரசு இந்த மையம் மூலம் நடத்த நான் யோசனை தெரிவித்துள்ளேன்.

கடந்த 2 நூற்றாண்டுளாக சமஸ்கிருதம் குறித்து விரிவாக ஆய்வுகள் நடந்துள்ளன. அதே அளவு சிறப்புடைய, 20 திராவிட மொழிகள் தோன்றக் காரணமான தாய் மொழியான தமிழுக்கும் அந்த அளவுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.

மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து உருவாக்கியுள்ள இந்த மையம் அதனை நிறைவு செய்யும்
என்றார்.

சுதந்திர நாளில் சுதந்திரத்தை மறுத்த கைதி.

முதல் சுதந்திரப்போரின் 150வது நாளை முன்னிட்டு, சுதந்திர நாளில் விடுதலை செய்யப்பட்ட கைதி ஒருவர், தனது விடுதலையை ஏற்க மறுத்து சிறையிலேயே இருக்கப்போவதாகத் தெரிவித்தார்.

விசாகப்பட்டினம் சிறையில் உள்ள தண்டனைக் கைதிகள் பட்டியலில் முதலாக இருந்தவர் கொண்டிசு சோமு நாயுடு; வயது 78. அவரை விடுதலை செய்ய, சிறை அதிகாரிகள் முடிவுசெய்தனர். சில கைதிகளுக்கு தண்டனைக்குறைப்பும் கிடைத்தது. ஆனால், சோமு நாயுடு,"நான் எங்கே போவேன்; எனக்கு இந்த சிறையில் தான் சுதந்திரம்' என்று கூறி, விடுதலையை ஏற்க மறுத்துவிட்டார்.

விழிநகரம் மாவட்டத்தை சேர்ந்த கிராமத்தில் வசித்து வந்த சோமு நாயுடு, 1995ம் ஆண்டு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, 2000ம் ஆண்டு, ஆயுள் சிறை விதிக்கப்பட்டார். இவருக்கு இரு மகன்கள், இரு மகள்கள் உள்ளனர். ஆனால், கொலை வழக்கில் இவர் தண்டனைபெற்ற பின், யாரும் எட்டிப்பார்க்கவில்லை. கிராமத்தில் இருந்து வெளியேறி சென்று விட்டனர். "என் பிள்ளைகள் என்னை ஒரு முறை வந்து பார்த்தனர். அப்புறம் வரவே இல்லை. முகவரியும் தரவில்லை. நான் விடுதலையாகி எங்கே போவேன். எனக்கு இந்த சிறை வாழ்க்கையே சுதந்திரமாக உள்ளது. நான் இங்கேயே தங்கி விடுகிறேன்' என்று அதிகாரிகளிடம் கூறினார் சோமு நாயுடு. ஆனால், விடுதலை செய்யப்பட்ட கைதியை, சிறையில் வைத்திருக்க முடியாது என்று விதி உள்ளதால், சோமு நாயுடுவை, தன்னார்வ தொண்டு நிறுவன காப்பகத்தில் சிறை அதிகாரிகள் சேர்த்து உள்ளனர்.

தினமலர்

மேகாலயா, உத்திரகண்ட் ஆளுநர்கள் மாற்றம்.

உத்திரகண்ட் மற்றும் மேகாலயா ஆளுநர்கள் இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தற்போது உத்ரகண்ட் ஆளுநராக பணியாற்றி வரும் சுதர்ஷன் அகர்வால் மேகாலயா மாநில ஆளுநராகவும், மேகாலயா மாநில ஆளுநராக பணியாற்றி வரும் பி.எல்.ஜோஷி உத்திரகண்ட் மாநிலத்துக்கும் மாற்றி நியமிக்கப்பட்டுள்ளனராம்.

கேரளாவில் யானைகளுக்கு 'உரிமம்' முறை.

ஊருக்குள் உலா வரும் யானைகள் விவரங்களை பதிவு செய்ய கேரள அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான முகாம் நேற்று திருவனந்தபுரம் பேரூர்கடையில் தொடங்கியது. இந்த கணக்கெடுப்பில் 14 யானைகள் கலந்து கொண்டன.

யானையின் உயரம், வயது, பெயர், அதன் குணங்கள், யானை சொந்தக்காரரின் பெயர், ஊர் போன்ற குறிப்புகளை அதிகாரிகள் எடுத்து அதை பதிவு செய்து கொண்டனர். மேலும் அதே விவரங்களை மைக்ரோசிப்பில் பதிவு செய்து யானைகளின் காதுக்கு பின்னால் பொருத்தினர்.

ஊருக்குள் உலவும் யானைகள் எத்தனை என்பது இந்த ஆய்வு மூலம் தெரியவரும். மேலும் யானைகளுக்கு மதம் பிடித்தால் அந்த யானை யாருக்கு சொந்தமானவை, மதத்தை அடக்கும் முறை போன்ற விவரங்களை நுணுப்பி மைக்ரோசிப்பை பார்த்தால் அறிந்து கொள்ளலாம். இந்த முறை யானைகளுக்கு உரிமம் வழங்குவதுபோன்றது என அதிகாரிகள் தெரிவித்தனர். .

மாலைமலர்

விரைவில் வருகிறது: 'பட்டதாரி வரி'.

நீங்கள் அரசு உதவித்தொகையில் படித்துவிட்டு, இப்போது வெளிநாட்டில் பொருளீட்டி வருகிறீர்களா? அப்படியானால், உங்களுக்காகத்தான் இந்தச் செய்தி:

அரசின் நிதி உதவியை பெற்றுக் கொண்டு உயர் கல்வி பெற்றவர்கள் வெளி நாடுகளில் வேலை பார்ப்பது பற்றி மனிதவள ஆற்றல் துறையின் பாராளுமன்ற குழு ஒரு ஆய்வு நடத்தி தனது அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.

இந்த அறிக்கையில், "அரசின் நிதி மூலம் உயர்கல்வி பெற்று வெளிநாடுகளில் வேலை பார்ப்பவர்களிடம் `பட்டதாரி வரி' வசூலிக்க வேண்டும். படிப்புக்கு ஆன செலவை இதன் மூலம் சரிகட்ட வேண்டும். அவர்களை வேலையில் அமர்த்தும் நிறுவனங்களிடம் இருந்தும் தனியாக வரி வசூலிக்க வேண்டும் என்று சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே சில நாடுகள் இந்த முறையை கடை பிடித்து வருகின்றன என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாலைமலர்

புதுக்கோட்டை தொகுதிக்காக நாளை அ தி மு க உண்ணாவிரதம்.

தொகுதி மறு சீரமைப்புத் திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை பாராளுமன்றத் தொகுதி விலக்கப்பட்டதை அரசியற் கட்சிகள் தம் கையில் எடுத்துக்கொண்டுள்ளன.
தி.மு.க-வின் மத்திய அமைச்சர் இரகுபதி நேற்று இதுபற்றிப் பேசியிருந்தார்.

இன்று
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில் கூறிஇருப்பதாவது:-

இந்திய தேர்தல் ஆணையம் நாடாளுமன்றத் தொகுதிகளின் எல்லைகளை மறு சீரமைப்பின் மூலம் வரையறை செய்ததில், புதுக்கோட்டை நாடாளுமன்றத் தொகுதியை ரத்து செய்து விட்டு இத்தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளையும் திருச்சி, கரூர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய நாடாளு மன்றத் தொகுதிகளில் இணைந்து இருப்பதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளனர்.

புதுக்கோட்டை சமஸ் தானமாக இருந்து வந்தது. புதுக்கோட்டை சமஸ்தானத் திற்கென்று தனி சிறப்பும் உண்டு. புதுக்கோட்டை வருவாய் மாவட்டம், மாவட்ட அளவில் ஒன்றாகவும், நாடாளுமன்றத்தொகுதி அளவில் வெவ்வேறாகவும் பிரிக்கப்பட்டு உள்ளதால், இம்மாவட்டத்திற்குச் சென்று சேர வேண்டிய வளர்ச்சிப் பணிகள் அத்தனையும் பிளவு பட்டு புறக்கணிக்கப்படும். இந்த மாற்றம் அங்கு வாழும் மக்களின் வாழ்வியல் முன்னேற்றத்திற்குப் பெரிதும் தடையாக இருக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

ஆகவே, நாடாளுமன்ற மறு சீரமைப்பு எல்லை வரையறையில் மாற்றம் செய்து புதுக்கோட்டை நாடாளுமன்றத் தொகுதியை மீண்டும் அமைத்திட இந்திய தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி, அ.தி.மு.க. புதுக்கோட்டை மாவட்டக் கழகத்தின் சார்பில் வருகின்ற 20.8.2007 (திங்கட்கிழமை) அன்று புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள எம்.ஜி.ஆர்.சிலை முன்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெறும்.

இந்த உண்ணாவிரத போராட்டம், கழக தேர்தல் பிரிவுச் செயலாளர் ஓ.பன்னீர்செல்வம்,எம்.எல்.ஏ., தலைமையிலும், புதுக்கோட்டை மாவட்ட கழகச் செயலாளர் க.வைரமுத்து முன்னிலையிலும் நடை பெறும்.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில், புதுக் கோட்டை மாவட்டக் கழக நிர்வாகிகளும், பொறுப் பாளர்களும் மற்றும் எம்.ஜி.ஆர். மன்றம், ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற் சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப்பிரிவு, விவசாய பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி மற்றும் இலக்கிய அணி உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளான அளவில் கலந்து கொள்ள வேண்டும்.

புதுக்கோட்டை மாவட்ட மக்களின் உரிமைப் பிரச்சினை என்பதால், மாவட்ட மக்கள் அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்து கொண்டு ஆதரவு நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

பெரு: பூகம்ப பூமியில் கலவரம்.

தென் அமெரிக்க நாடான பெருவில் கடந்த சில நாள்களுக்கு முன்பு பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. 8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட இந்த பூகம்பத்தால் ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்து விழுந்தன. இடிபாடுகளில் சிக்கி 510க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி விட்டனர். 2000-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். அந்நாட்டு அரசாங்கம் இதனை தேசியப் பேரழிவாக அறிவித்துள்ளது.

பூகம்பத்தில் வீடுகள் மற்றும் உறவினர்களை இழந் தவர்களுக்கு நிவாரண பொருள்களும் போய்ச் சேரவில்லை.

இந்நிலையில் சமூக விரோதிகள் பூகம்பத்தில் பாதிக்கப்பட்ட ஊர்களுக்கு சென்று வீடுகளில், கடை களிலும் புகுந்து சூறையாடிவருகிறார்கள். கொலை கொள்ளையிலும் ஈடுபடுகிறார்கள்.

மீட்பு பணியில் ஈடுபட்டு வரும் இராணுவத்தினருக்கும், கலவரத்தில் ஈடுபடுகிறவர்களுக்கும் மோதல் நடைபெற்று வருகிறது. பல இடங்களில் இராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்தி கலவரக்காரர்களை விரட்டி அடித்தனர்.

பூகம்பத்தில் பலியானவர்கள் உடல்களை குவியல் குவியலாக போட்டு மொத்தமாக அடக்கம் செய்து வருகிறார்கள். பல நாடுகளும் தங்கள் உதவிகளை அனுப்பி வருகின்றன

மாலைமலர்

கேபிள் டி.வி இணைப்புகள்: தமிழக அரசு அறிக்கை

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நேற்று ஒரு சில தொலைக்காட்சி செய்திகளில் அரசு கேபிள் டி.வி. சேவை தொடங்கு வது சம்பந்தமாக குழப்பமான சூழ்நிலை உள்ளதாகவும், இதனை அரசு தெளிவுபடுத்த வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுபற்றி அரசு பின்வரும் தெளிவுரையை வழங்குகிறது.

கடந்த 11.8.2007 அன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் தொலைக்காட்சி நடத்துபவர்களிடமிருந்து சிக்னல்களைப் பெற்று மாநிலத்தின் அனைத்துப்பகுதிகளிலும் உள்ளூர் கேபிள் டி.வி. ஆபரேட்டர்களுக்கு வழங்கும் பணியை மட்டுமே அரசு செய்யும் என்று முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவின் அடிப்படையிலேயே 13.8.2007 அன்று அரசாணை வெளி யிடப்பட்டது.

மத்திய அரசு சட்டத்தின்படி, சென்னை போன்ற பெருநகரங்களில் தொலைக்காட்சி நடத்துபவர்களிட மிருந்து சிக்னல்களைப் பெற்று அந்தந்தப்பகுதிகளிலுள்ள கேபிள் ஆபரேட்டர்களுக்கு வழங்குவதற்கு எம்.எஸ்.ஓ. எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

இதே பணியைப் பிற பகுதிகளில் செய்வதற்கு கேபிள் ஆபரேட்டர் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றின் அடிப்படையில், அமைச் சரவை முடிவெடுத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மாநில அரசு, தொலைக் காட்சி நடத்துபவர்களிட மிருந்து எம்.எஸ்.ஓ. அமைப்பின் மூலம் சிக்னல்களைப் பெற்று கேபிள் ஆபரேட்டர்களுக்கு அளிக்கும் பணியினை சென்னை அல்லாத பிற இடங்களில் செய்யும் பொழுது அந்தப் பணியையும் "கேபிள் ஆபரேட்டர்கள்'' என்றுதான் குறிப்பிட வேண்டியுள்ளது.

ஏற்கனவே, 17.8.2007 அன்று முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில், "யாரும் புகுந்து குழப்பம் ஏற்படுத்திட வழியின்றி, அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேஷன் என்பது தொலைக்காட்சியை நடத்துகிற நிறுவனமும் அல்ல, தனியார் வீடுகளுக்கும், இடங்களுக்கும் நேரடியாக இணைப்பு வழங்கும் நிறுவனமும் அல்ல'' என்பதை வெளிப்படையாகவே கூறியுள்ளார்.

எனவே மாநிலத்தின் எல்லா பகுதிகளிலும் கேபிள் டி.வி.க்கான அடிப்படைக்கட்டமைப்பு வசதிகளை முன்னமேயே ஏற்படுத்தி அவற்றின் மூலமாக வீடுகளுக்கு கேபிள் டி.வி. இணைப்பு வழங்கி தொழில் செய்து வருவோருக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது என்ற நோக்கத்தின் அடிப்படை யிலேயே, தொலைக்காட்சி களிலிருந்து சிக்னல்களைப் பெற்று அவர்களுக்கு அளிக்கும் பணியை மட்டும் அரசு மேற்கொள்ள முடிவு செய் துள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது..

மாலைமலரிலிருந்து நேரடிப்பதிவு

அணுசக்தி ஒப்பந்தம்: ஆட்சியைத் தகர்க்குமா?

அணுசக்தி ஒப்பந்த விவகாரம் நடுவண் அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. இந்த ஒப்பந்தம் நிறைவேறினால் மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை திரும்பப் பெறுவோம் என்று இடதுசாரிகள் எச்சரித்துள்ளனர். இதனால் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகள் இன்று அவசரமாக கூடி ஆலோசித்து வருகின்றன. இந்நிலையில் இந்த பிரச்னை குறித்து விவாதிப்பதற்காக இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் நாளை மீண்டும் கூடி ஆலோசிக்க வருகிறார்கள்.

அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக இடதுசாரி கட்சிகள் தங்கள் நிலையை விளக்கிய பிறகு, புதுதில்லியில் காங்கிரஸ் உயர்மட்ட குழு கூட்டமும் அதன் பிறகு கூட்டணி கட்சி தலைவர்களுடனும் காங்கிரஸ் ஆலோசனையும் நடந்தேறிவருகின்றன.

காங்கிரஸ் உயர் மட்டக் குழு கூட்டத்தில், கட்சி தலைவர் சோனியா, பிரதமர் மன்மோகன் சிங், அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, சிவராஜ் பாட்டீல், அந்தோணி ஆகியோர் பங்கேற்றனர். முன்னதாக, வெளியுறவு செயலாளர் சிவசங்கர் மேனன், வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியைச் சந்தித்து பேசினார். இடதுசாரி கட்சிகள் கூறுவது போல ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தால் ஏற்படும் பாதிப்புகளை மேனன் அப்போது விளக்கி கூறினார். இந்த கூட்டம் 90 நிமிடம் வரை நடந்தது.இதன் பிறகு கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. முதல்கட்டமாக ரயில்வே அமைச்சரும், ராஷ்டிரிய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவை, மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, அந்தோணி, சோனியாவின் அரசியல் ஆலோசகர் அகமது பட்டேல் ஆகியோர் சந்தித்து பேசினர்.

சற்றுமுன்னுக்காக.....வாசகன்

வைகுண்டராஜன் தொழிற்சாலையில் சோதனை.

ஜெயா டி.வி. பங்குதாரரர் வைகுண்டராஜனுக்கு சொந்தமான தொழிற்சாலை திசையன்விளையில் உள்ளது. இந்த தொழிற்சாலையில் இன்று காலை திடீரென காவல்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். சோதனைக்கான காரணம் தெரிவிக்க காவல்துறையினர் மறுத்து விட்டனர்.
சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக சன் தொ.கா செய்திகளில் சொல்லப்பட்டது.
கடந்த மாதம் வைகுண்டராஜனின் சகோதரர் ஜெகதீசன் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை: பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் கோளாறு

இன்று காலை 8 மணிக்கு சென்னையில் இருந்து லண்டன் செல்லும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானமொன்று மீனம்பாக்கம் விமானநிலையத்தில் புறப்படத் தயாராக இருந்தது. அதில் 280 பயணிகள் மற்றும் விமானிகள், விமான பணிப்பெண்கள் இருந்தனர். விமானம் புறப்படும் நேரத்தில் விமானத்தில் கோளாறு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டதால் விமானப்பறப்பு விலக்கம் செய்யப்பட்டது. பயணிகள் அருகில் உள்ள நட்சத்திர விடுதிகளில் தங்க வைக்கப்பட்டனர். சரியான நேரத்தில் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நன்றி: தினமலர்

ம.பி: கைப்பேசி வெடித்ததால் பரபரப்பு

மத்திய பிரதேசம் மாநிலம் ராய்சென் நகரில் ஒரு கடையில் கைப்பேசிக்கு மின்னூட்டம் (சார்ஜ்) ஏற்றிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அந்த கைப்பேசியின் மின்கலன் (பேட்டரி) வெடித்துச் சிதறியது. வெடித்த சத்தம் பயங்கரமாக கேட்காவிட்டாலும் பாதிப்பு அதிகமாக இருந்தது. அந்தக் கடையில் இருந்த மரச்சாதனங்கள், கண்ணாடிச்சாதனங்கள் உள்ளிட்டவை சேதமடைந்தன. இந்தச் சம்பவம் மத்திய பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமலர் செய்தியையொட்டி....

-o❢o-

b r e a k i n g   n e w s...