.

Thursday, April 5, 2007

'வியாபாரி' திரையிட்ட தியேட்டர் மீது தாக்குதல்

பெங்களூர், ஏப். 5: பெங்களூரில் தமிழ்த் திரைப்படம் திரையிட எதிர்ப்புத் தெரிவித்து தியேட்டர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் தொடர்கிறது; புதன்கிழமை "வியாபாரி' படம் திரையிட்ட தியேட்டரில் புகுந்து கல்வீசித் தாக்கினர். பெங்களூர் மல்லேசுவரம், சம்பிகே சாலையில் அமைந்துள்ளது சம்பிகே திரையரங்கு. இங்கு கடந்த வாரம் வெளியான "வியாபாரி' தமிழ் திரைப்படம் திரையிடப்பட்டு வந்தது. புதன்கிழமை காலை கன்னட ரக்ஷண வேதிகே தொண்டர்கள் ஒரு கும்பலாக திடீரென சம்பிகே திரையரங்குக்குள் புகுந்தனர்.

பின்னர் தமிழ் திரைப்படம் திரையிட எதிர்ப்புத் தெரிவித்து தர்ணா மேற்கொண்டனர். இதையடுத்து ஓடிக்கொண்டிருந்த வியாபாரி திரைப்படம் உடனடியாக நிறுத்தப்பட்டது. திரையரங்குக்குள் இருந்த ரசிகர்கள் என்ன நடந்தது என்று தெரியாமல் பதற்றத்துடன் வெளியே வந்தனர். பின்னர் திரையரங்கு உரிமையாளர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த கன்னட ரக்ஷண வேதிகே தொண்டர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதற்கு உடன்படாத அவர்கள் திடீரென திரையரங்கு மீது தாக்குதல் நடத்தினர். இதில் திரையரங்கின் டிக்கெட் விற்பனை செய்யும் இடத்திலிருந்த கண்ணாடி உடைந்தது. இதனிடையே சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் திரையரங்கு மீது தாக்குதல் நடத்திய கன்னட ரக்ஷணா வேதிகே தொண்டர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்த தாக்குதல் சம்பவத்தால் அந்த திரையரங்கில் தற்காலிகமாக தமிழ் படம் திரையிடுவது நிறுத்தப்பட்டது.

பெங்களூர் மாரத்தஹள்ளியில் உள்ள இன்னோவேட்டிவ் மல்டிபிளக்ஸ் திரையரங்கில் செவ்வாய்க்கிழமை மொழி தமிழ்த் திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தபோது திரையரங்கு மீது தாக்குதல் நடத்திய ரக்ஷண வேதிகே தொண்டர்களை போலீஸார் கைது செய்தனர்.

சச்சினுக்கு வங்கதேச கேப்டன் ஆதரவு

ஜார்ஜ் டவுன், ஏப். 5: பயிற்சியாளர் கிரேக் சேப்பலின் கருத்தால் மனம் நொந்துபோயுள்ள சச்சின் டெண்டுல்கருக்கு வங்கதேச அணியின் கேப்டன் ஹபிபுல் பஷார் ஆதரவு தெரிவித்துள்ளார்.

""சேப்பல் என்ன வேண்டுமானாலும் கருத்து சொல்லட்டும். ஆனால் சச்சின் விளையாட வேண்டியது நிறைய இருக்கிறது. அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடியவில்லை. வெறும் 34 வயதுதான் ஆகிறது. அவர் ஓய்வு பெறுவதற்கு இது தருணம் அல்ல'' என்கிறார் பஷார். (இவருக்கு 35 வயது ஆகிறது).

சச்சின் மட்டுமல்ல, இந்திய அணியே ஒட்டுமொத்தமாக கேவலப்பட்டதற்கு காரணம் பஷாரும் அவரது இளம் சகாக்களுடைய ஆட்டமும்தான் காரணம்.

ஆம். போர்ட் ஆப் ஸ்பெயினில் கடந்த மார்ச் 17-ம் தேதி நடைபெற்ற உலகக் கோப்பை லீக் போட்டியில் இந்தியாவுக்கு கொடுத்த கடுமையான அதிர்ச்சி தோல்விதான், சேப்பல் பேச்சு போன்ற சர்ச்சைகளுக்குக் காரணம்.

அந்த ஆட்டத்தில் 21 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில் களம்புகுந்த சச்சின், 26 பந்துகளை எதிர்கொண்டு வெறும் 7 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார். இடதுகை ஸ்பின்னர் அப்துர் ரசாக் வீசிய பந்து இன்சைட் எட்ஜ் ஆகி விக்கெட் கீப்பர் ரஹீமிடம் தஞ்சம் அடைய, சோதனையே என நினைத்து பெவிலியன் திரும்பினார் சச்சின்.

அந்த வெற்றியால் இப்போது சூப்பர்-8 போட்டியில் வங்கதேச அணி விளையாடி வருகிறது.

Dinamani

ச: இந்தியாவிற்கு, ஜப்பான் ரூ.6,916 கோடி கடன்

ஜப்பான், இந்தியாவிற்கு 2006-07-ஆம் நிதி ஆண்டில் 11 திட்டங்களை செயல் படுத்துவதற்காக ரூ.6,916 கோடியை கடனாக வழங்கி உள்ளது. இந்த கடன் மின்சாரம், வனத்துறை, நகரப் போக்குவரத்து மற்றும் துறைமுக மேம்பாட்டு திட்டங்களுக்காக வழங்கப்பட்டுள்ளது.

இது, முந்தைய நிதி ஆண்டை விட 18.93 சதவீதம் (ரூ.5,910 கோடி) அதிகமாகும்.


- தினதந்தி, The Economic Times

ச: கணினி முத்திரைத்தாள் அறிமுகம் : தமிழக அரசு!

சென்னை, ஏப்ரல் 5

போலி முத்திரைத்தாள் புழக்கத்திற்கு முடிவுகட்ட கணினியின் வாயிலாக முத்திரைத்தாள் கட்டணத்தை செலுத்தி பத்திரங்களை பதிவு செய்யும் முறையை அறிமுகம் செய்யப்போவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது!

தமிழக சட்டப் பேரவையில் இன்று பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், முத்திரைத்தாள் வாயிலாக கிடைக்கக்கூடிய வருவாயை தடையின்றி கிட்டச் செய்ய கணினி முத்திரைத்தாள் அறிமுகம் செய்ய முடிவெடுத்துள்ளதாக தெரிவித்தார்.

போலி முத்திரைத்தாள் புழக்கத்தினால் மாநில அரசின் பொருளாதாரத்திற்கு தொடர்ந்து அச்சுறுத்தல் இருந்து வருகிறது என்றும், இதனை அறவே கட்டுப்படுத்த இப்புதிய முறையை அரசு அறிமுகம் செய்யப் போகிறது என்றும் பன்னீர்செல்வம் கூறினார். (யு.என்.ஐ.)

"வெப் உலகம்"

ச: கிருஷ்ணர் கோவில் கட்ட ரஷ்ய அரசு இலவச நிலம்

மாஸ்கோ(ஏஜென்சி), வியாழக்கிழமை, 5 ஏப்ரல் 2007

ரஷ்யாவில் கிருஷ்ணர் கோவில் கட்ட அந்நாட்டு அரசு இலவச நிலம் வழங்கியுள்ளது.

மாஸ்கோவிலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிராமம் ஒன்றில் கிருஷ்ணர் கோவில் கட்ட இலவச நிலம் அளிக்குமாறு உள்ளூர் இந்து அமைப்பு ஒன்றும்,கிருஷ்ண பக்த பேரவை ஒன்றும் ரஷ்ய அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தது.

ரஷ்ய அரசும் அதுகுறித்து பரிசீலிப்பதாக அறிவித்திருந்தது.இதற்கு பழமைவாத கிறிஸ்தவ அமைப்பைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இருப்பினும் கிருஷ்ணபக்தர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று ,கிருஷ்ணர் கோவில் கட்ட 2 ஹெக்டேர் நிலம் வழங்குவதாக ரஷ்ய அரசு அறிவித்துள்ளது.

"Yahoo - Tamil"

பிரிட்டன் கடற்படை வீரர்களை விடுவித்தது ஈரான்

டெஹரான்(ஏஜென்சி), வியாழக்கிழமை, 5 ஏப்ரல் 2007

கடந்த 13 நாட்களாக சிறை வைத்திருந்த பிரிட்டன் கடற்படை வீரர்கள் மற்றும் பயணிகள் 15 பேரை ஈரான் அரசு நேற்று விடுவித்தது.

கடந்த மாதம் 23ம் தேதி ஈரானிய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக கூறி பிரிட்டன் கப்பலில் வந்த கடற்படை வீரர்கள் ஏழு பேர் மற்றும் பயணிகள் 8 பேர் உட்ப்ட 15 பேரை ஈரான் அரசு சிறை பிடித்தது. இவர்களை விடுவிக்குமாறு பிரிட்டன் எவ்வளவோ கேட்டுக் கொண்டும் அதற்கு அடிபணிய ஈரான் அரசு மறுத்து விட்டது.

சிறைபிடித்து 13 நாட்கள் கடந்து விட்ட நிலையில், ஈஸ்டர் பண்டிகைக்கு பிரிட்டன் மக்களுக்கு பரிசாக சிறையில் உள்ள பிரிட்டன் பயணிகளையும், வீரர்களையும் விடுவிடுப்பதாக அந்நாட்டு அதிபர் மகமுத் அகமதின்ஜத் தெரிவித்தார்.

"Yahoo - Tamil"

ச:'முஸ்லீம்கள் சிறுபான்மையினர் அல்ல'

அலகாபாத் (ஏஜென்சி), வியாழக்கிழமை, 5 ஏப்ரல் 2007

'உத்தரபிரதேசத்தில் முஸ்லீம்கள் சிறுபான்மையினர் அல்ல' என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

2001ம் ஆண்டில் எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு படி, உத்தரபிரதேசத்தில் 18.5 சதவீத முஸ்லீம்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு ஜாதி, மற்றும் மதம் ஆகியவற்றை வைத்தே அரசியல் நடைபெறுவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.

இந்நிலையில், மாநில அரசு மற்றும் 'அஞ்சுமான் மதரசா நூருல் இஸ்லாம் தேரா கலான்' என்ற அமைப்புக்கும் இடையேயான ஒரு வழக்கு, நீதிபதி சம்புநாத் ஸ்ரீவாஸ்தாவா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அவர் கூறியதாவது:

அவர்களும் மற்ற மதத்தினருக்கு இணையாக நடத்தப்பட வேண்டும். உத்தரபிரதேசத்தை பொறுத்தவரை முஸ்லீம்கள் சிறுபான்மையினர் அல்ல. இவ்வாறு நீதிபதி தெரிவித்தார்.


"Yahoo - Tamil"

ச:சிடி விவகாரம் பா.ஜ.வுக்கு நோட்டீஸ் : தேர்தல் ஆணையம் முடிவு

புதுடெல்லி(ஏஜென்சி), வியாழக்கிழமை, 5 ஏப்ரல் 2007

சர்ச்சையான சிடியை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய பா.ஜ.கட்சிக்கு நோட்டீஸ் அனுப்ப தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

உத்தர பிரதேச சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின் போது பா.ஜ.வினர் சிடி ஒன்றினை வெளியிட்டனர். இந்த பிரச்சார சிடியில் முஸ்லிம்களுக்கு எதிரான பாபர் மசூதி இடிப்பு, கோத்ரா ரயில் எரிப்பு ஆகிய சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும், இந்துத்துவாவை கடுமையாக வலியுறுத்தும் பிரச்சாரமும் அதில் இடம்பெற்றுள்ளது.

இது முஸ்லிம் மக்களின் மத உணர்வை புண்படுத்தும் விதமாக அமைந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இது தொடர்பாக அக்கட்சி தலைமையிடம் விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்துள்ளது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி,அக்கட்சியினர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

"Yahoo - Tamil"

ச: சிறுபான்மையினருக்கு தனி இட ஒதுக்கீடு : கருணாநிதி

சென்னை, வியாழக்கிழமை, 5 ஏப்ரல் 2007

கல்வி நிறுவனங்கள்,அரசு பணிகள் உள்ளிட்ட பிற துறைகளில் முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க இந்த அரசு விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளும் என முதல்வர் கருணாநிதி சட்டசபையில் தெரிவித்தார்."Yahoo - Tamil"

நரபலி? குழந்தை கடத்திய பஞ்சாயத்து தலைவர் கைது

பெரம்பலூர் மாவட்டம் எலம்பலூர் பஞ்சாயத்து தலைவராக இருப்பவர் குமார் (வயது 45). தி.மு.க.வை சேர்ந்தவர்.

நேற்று நள்ளிரவு 2 மணி அளவில் குமார் தனது மோட்டார் சைக்கிளில் அதே பகுதியில் தனியாக சுற்றி வந்து உள்ளார். அப்போது கட்டிட தொழிலாளி திருப்பதி என்பவர் தனது மனைவி சித்ரா மற்றும் குழந்தைகளுடன் காற்றுக்காக வீட்டு வெளிப்பகுதியில் படுத்து தூங்கி கொண்டு இருந்தார்.

சிறிது நேரத்தில் அங்கு வந்த குமார் திருப்பதியின் வீட்டுக்குள் புகுந்தார். அங்கு தூங்கி கொண்டிந்த திருப்பதியின் 3-வது மகளை யாருக்கும் தெரியாமல் குமார் தூக்கிக்கொண்டு வெளியே வந்து உள்ளார்.

பிறந்து 25 நாட்களே ஆன அந்த குழந்தைக்கு தடுப்பு ஊசி போடப்பட்டு இருந்ததால் வலியில் இருந்த குழந்தை குமார் தூக்கி சென்றதும் `வீர்' என்று அழ ஆரம்பித்தது. குழந்தையின் சத்தம் கேட்டதும் தூங்கி கொண்டு இருந்த திருப்பதி மற்றும் அவரது மனைவி ஆகியோர் விழித்துக் கொண்டனர்.

குழந்தையை குமார் தூக்கி செல்வதை அவர்கள் பார்த்ததும் கூச்சல் போட்ட னர். இதனால் பக்கத்து வீட்டுக்காரர்கள் அங்கு ஓடி வந்தனர். இதனை கண்டதும் குழந்தையுடன் குமார் அங்கிருந்து ஓட ஆரம்பித்தார்.

அனைவரும் அவரை விரட்ட ஆரம்பித்ததும் குழந்தையை கிழே வைத்து விட்டு குமார் ஓட தொடங்கினார். அப்போது எதிர்பாராத விதமாக கீழே கிடந்த கல் தட்டி குமார் தவறி விழுந்தார். உடனே அங்கு கூடிய பொதுமக்கள் அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்த ஆரம்பித்தனர்.

அப்போது குமார் தனது கிரஷருக்கு இரவு நேரத்தில் வந்ததாக கூறினார். குழந்தையை கடத்தியது ஏன் என்று கேட்டபோது அவர் சரியான பதில் கூறாமல் மழுப்பினார்.

இதனால் மக்கள் ஆத்திரம் அடைந்தனர் பஞ்சாயத்து தலைவர் குமாரின் பதிலில் திருப்தி அடையாததால் அவரை பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

குழந்தை கடத்தல் குறித்து போலீசில் திருப்பதி புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குமாரை கைது செய்தனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக வருமானம் சரியில்லாமல் குமார் தொழிலில் நஷ்டம் அடைந்து உள்ளார். அப்போது ஜோதிடர் ஒருவர் பிறந்து சில நாட்களே ஆன குழந்தையை நரபலி கொடுத்தால் தொழில் விருத்தி அடையும் என்று குமாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் குமார் குழந்தையை தேடியபோது திருப்பதியின் 3-வது மகள் கண்ணில் பட்டு உள்ளாள்.

இதனை நோட்டமிட்ட குமார் நேற்று நள்ளிரவில் திருப்பதியின் வீட்டுக்குள் புகுந்து குழந்தையை கடத்தி உள்ளார். அப்போது குழந்தை போட்ட சத்தத்தால் குமார் வசமாக மாட்டிக் கொண்டார்.

கைது செய்யப்பட்ட குமார் குறித்தும், குழந்தை கடத்தல் சம்பவத்துக்கு வேறு யாரேனும் உடந்தையாக இருந்தார்களாப என்று போலீசார் விசாணை நடத்தி வருகின்றனர்.

நள்ளிரவில் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பெரம்பலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குழந்தையை கடத்த வந்த குமார் தனது இரண்டு செல்போன்கள் மற்றும் பேனா உள்பட சட்டை பையில் இருந்த பொருட்களை திருப்பதியின் வீட்டில் தவற விட்டு சென்று உள்ளார். அதனை கண்டெடுத்த பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

# மாலைமலர்

தவறான சிகிச்சையால் மாணவன் பலி.

குமரி மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த சிசில் என்ற 3 வயது மாணவன் தவறான சிகிச்சையினால் பரிதாபமாக உயிர் இழந்தான் .

சற்றுமுன்: ரேஷன் கடைகளில் பாமாயில், பருப்பு விற்பனை

தமிழ்ப் புத்தாண்டு முதல் ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு, உளத்தம் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் விற்பனை செய்யப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.

நன்றி : தினமணி

சற்றுமுன்: இந்தோனேசியாவுக்கு இந்திய சமையல் எண்ணெய் நிறுவனங்கள் சங்கம் எச்சரிக்கை

சுத்திகரிக்கப்படாத ஆயிலுக்கு பதிலாக சித்திகரிக்கப்பட்ட பாமாயிலை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்ய முயற்சித்தால் பாமாயில் உள்பட அனைத்து சமையல் எண்ணெய்களின் இறக்குமதியையும் முற்றிலும் நிறுத்த வலியுறுத்துவோம் என் இந்தோனேசியாவுக்கு இந்திய சமையல் எண்ணெய் நிறுவனங்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தியாவிற்கு அதிகப்படியாக சுத்திகரிக்காத பாமாயிலை ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தோனேசியா விளங்குகிறது. இந்தோனேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாமாயில் உள்நாட்டு நிறுவனங்கள் மூலம் சுத்திகரிக்கப்படுகிறது. உள்நாட்டு நிறுவனங்களுக்கு வேலை அளிக்க வேண்டும் என்ற நோக்கோடு சுத்திகரிக்கப்படாத பாமாயில் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.

மேலும்

சற்றுமுன்: அண்ணாமலை பல்கலை பி.இ. மாணவி தற்கொலை சம்பவம் :விரிவுரையாளர் கைது

அண்ணாமலைப் பல்கலைக்கழக பி.இ மாணவி சேட்னா (20) தற்கொலை தொடர்பாக பல்கலைக்கழக விரிவுரையாளர் ஆர்.ரகுராமனை அண்ணாமலை நகர் போலீஸார் மகளிர் வன்கொடுமை சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்தனர்.

விடுதியில் தங்கிப் படித்த சண்டீகரைச் சேர்ந்த பொறியியல் மாணவி சேட்னா கடந்த 26ந் தேதி விடுதி அறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலைக்கு காரணமான விரிவுரையாளரை கைது செய்யக்கோரி மாணவர்கள் ரகளையில் ஈடுபட்டதால் பல்கலைக்கழகம் காலவரையின்றி மூடப்பட்டது.

மேலும்

-o❢o-

b r e a k i n g   n e w s...