.

Thursday, April 5, 2007

நரபலி? குழந்தை கடத்திய பஞ்சாயத்து தலைவர் கைது

பெரம்பலூர் மாவட்டம் எலம்பலூர் பஞ்சாயத்து தலைவராக இருப்பவர் குமார் (வயது 45). தி.மு.க.வை சேர்ந்தவர்.

நேற்று நள்ளிரவு 2 மணி அளவில் குமார் தனது மோட்டார் சைக்கிளில் அதே பகுதியில் தனியாக சுற்றி வந்து உள்ளார். அப்போது கட்டிட தொழிலாளி திருப்பதி என்பவர் தனது மனைவி சித்ரா மற்றும் குழந்தைகளுடன் காற்றுக்காக வீட்டு வெளிப்பகுதியில் படுத்து தூங்கி கொண்டு இருந்தார்.

சிறிது நேரத்தில் அங்கு வந்த குமார் திருப்பதியின் வீட்டுக்குள் புகுந்தார். அங்கு தூங்கி கொண்டிந்த திருப்பதியின் 3-வது மகளை யாருக்கும் தெரியாமல் குமார் தூக்கிக்கொண்டு வெளியே வந்து உள்ளார்.

பிறந்து 25 நாட்களே ஆன அந்த குழந்தைக்கு தடுப்பு ஊசி போடப்பட்டு இருந்ததால் வலியில் இருந்த குழந்தை குமார் தூக்கி சென்றதும் `வீர்' என்று அழ ஆரம்பித்தது. குழந்தையின் சத்தம் கேட்டதும் தூங்கி கொண்டு இருந்த திருப்பதி மற்றும் அவரது மனைவி ஆகியோர் விழித்துக் கொண்டனர்.

குழந்தையை குமார் தூக்கி செல்வதை அவர்கள் பார்த்ததும் கூச்சல் போட்ட னர். இதனால் பக்கத்து வீட்டுக்காரர்கள் அங்கு ஓடி வந்தனர். இதனை கண்டதும் குழந்தையுடன் குமார் அங்கிருந்து ஓட ஆரம்பித்தார்.

அனைவரும் அவரை விரட்ட ஆரம்பித்ததும் குழந்தையை கிழே வைத்து விட்டு குமார் ஓட தொடங்கினார். அப்போது எதிர்பாராத விதமாக கீழே கிடந்த கல் தட்டி குமார் தவறி விழுந்தார். உடனே அங்கு கூடிய பொதுமக்கள் அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்த ஆரம்பித்தனர்.

அப்போது குமார் தனது கிரஷருக்கு இரவு நேரத்தில் வந்ததாக கூறினார். குழந்தையை கடத்தியது ஏன் என்று கேட்டபோது அவர் சரியான பதில் கூறாமல் மழுப்பினார்.

இதனால் மக்கள் ஆத்திரம் அடைந்தனர் பஞ்சாயத்து தலைவர் குமாரின் பதிலில் திருப்தி அடையாததால் அவரை பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

குழந்தை கடத்தல் குறித்து போலீசில் திருப்பதி புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குமாரை கைது செய்தனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக வருமானம் சரியில்லாமல் குமார் தொழிலில் நஷ்டம் அடைந்து உள்ளார். அப்போது ஜோதிடர் ஒருவர் பிறந்து சில நாட்களே ஆன குழந்தையை நரபலி கொடுத்தால் தொழில் விருத்தி அடையும் என்று குமாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் குமார் குழந்தையை தேடியபோது திருப்பதியின் 3-வது மகள் கண்ணில் பட்டு உள்ளாள்.

இதனை நோட்டமிட்ட குமார் நேற்று நள்ளிரவில் திருப்பதியின் வீட்டுக்குள் புகுந்து குழந்தையை கடத்தி உள்ளார். அப்போது குழந்தை போட்ட சத்தத்தால் குமார் வசமாக மாட்டிக் கொண்டார்.

கைது செய்யப்பட்ட குமார் குறித்தும், குழந்தை கடத்தல் சம்பவத்துக்கு வேறு யாரேனும் உடந்தையாக இருந்தார்களாப என்று போலீசார் விசாணை நடத்தி வருகின்றனர்.

நள்ளிரவில் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பெரம்பலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குழந்தையை கடத்த வந்த குமார் தனது இரண்டு செல்போன்கள் மற்றும் பேனா உள்பட சட்டை பையில் இருந்த பொருட்களை திருப்பதியின் வீட்டில் தவற விட்டு சென்று உள்ளார். அதனை கண்டெடுத்த பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

# மாலைமலர்

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...