.

Monday, July 2, 2007

கிரிக்கெட் வீரர் திலீப் சர்தேசாய் மரணம்

முன்னாள் டெஸ்ட் பந்தயவீரர் திலீப் சர்தேசாய் இன்று (திங்கள்) இரவு மும்பையின் பாம்பே மருத்துவமனையில் பல உறுப்புகள் வேலைசெய்யாமல் மரணமடைந்தார்.அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை சற்றுமுன் முன்னர் தெரிவித்திருந்தது.

கோவாவின் மர்மகோவாவில் 1940இல் பிறந்த சர்தேசாய் கான்பூரில் 1961இல் இந்திய விளையாட்டுவீரராக இங்கிலாந்திற்கு எதிரே தன் டெஸ்ட் ஆட்ட விளையாட்டைத் தொடங்கினார். அதே இங்கிலாந்து அணியினருடன் தில்லியில் 1972இல் தனது டெஸ்ட் வாழ்வை முடித்துக் கொண்டார். இந்த இடைவெளியில் 30 டெஸ்ட்கள் விளையாடி 55 இன்னிங்களில் 2001 ஓட்டங்கள் எடுத்தார். ஒரு இரட்டை சதமும் நான்கு சதங்களும் அடித்துள்ளார். 1970-71 மேற்கிந்திய ஆட்டதொடரில் இரட்டை சதமும் இரண்டு சதங்களும் அடித்து, கரீபியன் தீவுகளில் இந்தியாவின் முதல் வெற்றிக்கு வழி வகுத்தார். அந்த வருடம் அவருக்கு அர்ஜுனா விருதும் கொடுக்கப்பட்டது.
பிரதமர் மன்மோகன் சிங் தன் இரங்கல் செய்தியில் அவரை சிறந்த விளையாட்டுவீரர் எனக் குறிப்பிட்டுள்ளார்.

DNA - Sport - Former Test cricketer Dilip Sardesai dead - Daily News & Analysis

நிமிட்ஸ்: சில தகவல்கள்.

இந்த கப்பல் 4 1/2 ஏக்கர் பரப்பளவு கொண்டது. 1092 அடி நீளம், 252 அடி அகலம் உள்ளது. 23 மாடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 65 போர் விமானங்கள் உள்ளன. இவற்றுடன் வீரர்கள் பயணம் செய்யும் விமானம், ஆபத்து நேரத்தில் மீட்பு பணிகளில் ஈடுபடும் விமானம், ஹெலிகாப்டர் ஆகியவையும் உள்ளன. 30 வினாடியில் ஒரு விமானம் கப்பலில் இருந்து புறப்படும் அளவுக்கு வசதி உள்ளது.

1975-ம் ஆண்டு மே 3-ந் தேதி இந்த கப்பல் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது. 32 வருடமாக பணியில் இருக்கிறது. 2-ம் உலகப் போரில் அமெரிக்காவின் பசிபிக் கடல் பகுதி ராணுவ கமாண்டராக இருந்து பெரும் சாதனை புரிந்த ஜெஸ்டர் நிமிட்ஸ் பெயர் இந்த கப்ப லுக்கு சூட்டப்பட்டது.

கப்பலில் 53 படுக்கைகள் கொண்ட ஆஸ்பத்திரி உள்ளது. அதில் 6 டாக்டர்கள் பணி யாற்றுகிறார்கள். தனியாக 5 பல் டாக்டர்களும் இருக்கின்றனர். இதில் முகமது கமிஸ் என்ற இந்திய வம்சாவளி டாக்டரும் பணியாற்றுகிறார்.

கடல் நீரை நல்ல நீராக மாற்றி பயன்படுத்த அதற்கான தனி தொழிற்கூடம் உள்ளது. இவற்றின் மூலம் தினமும் 4 லட்சம் காலன் நல்ல தண்ணீர் உற்பத்தி செய்யப்படுகிறது. இவை வீரர்களின் தேவைக் கும் மற்ற பணிகளுக்கும் பயன் படுத்தப்படுகிறது.

உணவு பொருட்களை 70 நாட்கள் வரை கெடாமல் பாதுகாக்கும் குளிர்சாதன வசதிகளும் உள்ளன.

கப்பலிலேயே தனி தபால் நிலையம் உள்ளது. ஆண்டுக்கு 10 லட்சம் கடிதங்களை இது கையாள்கிறது. தினமும் தபால் நிலைய கடிதங்களை பட்டுவாடா செய்யும். இதற்காக தினமும் வேறு கப்பல்கள் மூலமாகவோ அல்லது விமானங்கள் மூலமாகவோ இங்கு கடிதங்கள் கொண்டு வரப்படும்.

வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களும் வழிபாடு நடத்துவதற்காக 3 வழிபாட்டு தலங்களும் கப்பலில் உள் ளன.

கப்பலில் தேவைக்கு மேல் 50 சதவீதம் ஆயுதங்களை வைத்து கொள்ளவும், விமா னங்களுக்கு தேவையான 2 மடங்கு எரி பொருளை சேமித்து வைக்கவும் வசதி உள்ளது. விமானங்களை உள் பகுதிக்குள் கொண்டு சென்று பழுது பார்க்கும் தனி ஒர்க்க்ஷாப் உள்ளது.

தனி உணவு கூடம், மாநாட்டு அறை, பொழுது போக்கு கூடம் என அனைத்து வசதிகளும் உள்ளன. மொத்தத்தில் ஒரு சிறிய நகரத்தில் உள்ள அத்தனை வசதிகளும் உள்ளன. இந்த கப்பலை மிதக்கும் நகரம் என்று அழைக்கின்றனர்.

நன்றி: மாலைமலர்

நிமிட்ஸ்: அமெரிக்க வீரர்கள் சென்னையில்.

அமெரிக்காவின் மிகப் பெரிய விமானத்தாங்கி கப்பலான நிமிட்ஸ், வீரர்களை உற்சாகப்படுத்தும் நோக்கத்துடன் பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா புறப்பட்டுள்ளது. இதன் பயண திட்டத்தில் சென்னையும் இடம் பெற்று இருந்தது.

இந்த கப்பல் அணுசக்தி மூலம் இயங்க கூடியது. எனவே அணு கசிவு ஆபத்து ஏற்படலாம் என்பதால் சென்னை வர எதிர்ப்பு கிளம்பியது. ஆனாலும் மத்திய அரசு அனுமதித்ததன் மூலம் திட்டமிட்டபடி இன்று காலை 6 மணிக்கு சென்னை வந்தது.

தற்போது சென்னை மெரீனா கடற்கரைக்கு கிழக்கே 4 கிலோ மீட்டர் தூரத்தில் அது நிறுத்தப்பட்டுள்ளது.

கப்பலில் கப்பல் பணியாளர்கள், அதிகாரிகள் உள்பட 6 ஆயிரம் வீரர்கள் உள்ளனர். அவர்கள் சென்னை நகருக்குள் வந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கின்றனர்.
அவர்கள் உல்லாசமாக பொழுதை போக்கி மகிழ்வ தற்கும் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. அனைவரும் படகு மூலம் சென்னை துறை முகத்துக்கு அழைத்து வரப்படுகிறார்கள். முதல் படகு இன்று காலை கரைக்கு வந்தது.

இரவில் அனைவரும் சென்னை ஓட்டல்களில் தங்குகின்றனர். இதற்காக முக்கிய ஸ்டார் ஓட்டல்கள் சென்னையில் இருந்து புதுச்சேரி வரை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள அனைத்து ஓட்டல்கள், ரிசார்ட்டுகள் அவர்களுக்காக "புக்'' செய்யப்பட்டுள்ளன. அங்கு அமெரிக்க சுதந்திர தின விழாவை கொண்டாடுகிறார்கள். அப்போது ஆடல், பாடல் நிகழ்ச்சிகள், விருந்துகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மகிழ்ச்சியை அனுபவிக்கும் அதே நேரத்தில் அவர்கள் பல்வேறு சமூக சேவை பணிகளிலும் ஈடுபடுகின்றனர். அனாதை இல்லம், மன நல காப்பகம் போன்றவற்றுக்கு சென்று உதவி செய்கிறார்கள். அண்ணா சாலையிலுள்ள மதரஸ யே ஆஸம் பள்ளி விடுதிக்குச் சென்ற அமெரிக்க வீரர்கள் அங்கு துப்புரவு பணி உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டனர்.

நிமிட்ஸ் போர் கப்பல் அணுசக்தி மூலம் இயக்குவதால் அதில் 2 அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் கசிவு ஏற்பட்டால் சென்னை நகரமே அழிந்து போகும் அளவுக்கு ஆபத்தானகும்.

எனவே அணு கசிவு ஏதேனும் ஏற்படுகிறதா என்பதை கண்காணிக்க இந்திய அணு விஞ்ஞானிகள் குழு ஒன்று இந்திய போர் கப்பல் மூலம் அந்த பகுதிக்கு சென் றுள்ளனர். நிமிட்ஸ் கப்பல் அருகே இந்திய கப்பல் முகா மிட்டுள்ளது. அணு கசிவை கண்டு பிடிக்கும் கருவி அதில் பொருத்தப்பட்டுள்ளது. அதன் மூலம் 24 மணி நேரமும் கண் காணிப்பார்கள். 5-ந்தேதி அமெரிக்க கப்பல் புறப்பட்டு செல்கிறது. அதுவரை விஞ்ஞானிகள் அங்கேயே தங்கி இருப்பார்கள்.

அதே போல 2 வேன்களில் விஞ்ஞானிகள் குழு கடற்கரையில் சுற்றி வரும். அவர்களும் கருவி மூலம் அணு கசிவை கண்காணிப்பார்கள்.

புதுவை: மதிப்பு கூட்டு வரியிலிருந்து பெட்ரோலுக்கு விலக்கு.

ஜூலை 1 முதல் புதுவை மாநிலத்தில் மதிப்பு கூட்டு வரி (VAT) நடைமுறைபடுத்தப்பட்டது. இதில் பெட்ரோல், டீசலுக்கு 20 சதவீதம் வரி விதிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து அனைத்து பெட்ரோல் பங்க்குகளிலும் பெட்ரோல், டீசலின் விலை உயர்த்தப்பட்டிருந்தது.

இதற்கு பொதுமக்களிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆட்டோ தொழிலாளர்கள் சங்கத்தினர் பெட்ரோல் பங்க்குகளை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து பொது மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் மற்றும் அத்யாவசிய பொருட்களுக்கான வரி முறைப்படுத்தப்பட்டது. இதனை முதல்-அமைச்சர் ரங்கசாமி நேற்று மாலை தெரிவித்தார்.

இதன்படி சமையல் எண்ணெய், ரேஷன் மண்எண்ணெய், புளி, மிளகாய், மஞ்சள், பெருங்காயம், சேமியா, கற்பூரம், விபூதி, நாமகட்டி, காலணி, தீப்பெட்டி, பேனா, பென்சில் உள்ளிட்ட 30 பொருட்களுக்கு முழு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

சமையல் எரிவாயு - ஒரு சதவீதம், உணவு பொருட்களுக்கு 2 சதவீதம், நெய், பேரீச்சம் பழத்துக்கு 4 சதவீதம், பெட்ரோல்-டீசலுக்கு 12 சதவீதமும் பிளாஸ்டிக் பொருட்கள், ஸ்டீல்பர்னிச்சர் களுக்கு 12 சதவீதம், மோட் டார் சைக்கிள்களுக்கு 4 சதவீதம், டயர், டிïப்புகளுக்கு 8 சதவீதம் என வரி குறைக்கப்பட்டுள்ளது.

இதனால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்ட சாராயத்திற்கு 15 சதவீதமும், சிகரெட்டுக்கு 12 சதவீதமும் வரி விதிக்கப்பட்டுள்ளது. மதுபானங்களுக்கு சமீபத்தில் விற்பனை வரிக்கு பதிலாக 35 சதவீத கூடுதல் கலால் வரி விதிக்கப்பட்டது. இதுவே நடைமுறையில் இருக்கும்.

வரி குறைப்பின் மூலம் பெட்ரோல், டீசல் ஆகியவற்றுக்கான வரி பழைய நிலையில் இருந்து 0.5 சதவீதமே உயர்ந்துள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் விலையில் 20 பைசா மட்டுமே உயரும். இதனால் காலையில் கணிசமாக உயர்ந்த விலை மாலையில் சரிந்தது.

ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.41.52-ல் இருந்து ரூ.41.70 ஆகவும், பிரிமியம் பெட்ரோல் ரூ.43.03-ல் இருந்து ரூ.43.22 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ.31.46-ல் இருந்து ரூ.31.60 ஆகவும், சூப்பர் டீசல் ரூ.31.87-ல் இருந்து ரூ.32.01 ஆகவும் தற்போது உயர்ந்துள்ளது. இதனால், புதுவை வழியாகச்செல்லும் தமிழக வாகனங்களும் புதுவைப் பகுதியிலேயே தங்களுக்கான பெட்ரோலை நிரப்பிக்கொள்வர்.

மோட்டார் சைக்கிள், டயர் ஆகியவற்றிற்கு பழைய வரியே தொடருவதால் விலையில் பெருமளவு மாற்றம் இருக்காது. சிகரெட்டிற்கு வரி உயர்த்தப்பட்டுள்ளதால் விலை உயரும். என எதிர்பார்க் கப்படுகிறது.

சாராயத்திற்கு ஏற்கனவே 15 சதவீத விற்பனை வரி அமுலில் இருந்தது. இது VATவரியிலும் தொடருகிறது. இதனால் சாராய விலையிலும் மாற்றம் இருக்காது.

தனியார் பள்ளிகளில் இலவசக் கல்வி

அரசின் அங்கீகாரம் பெற்று நீண்ட கால ஒப்பந்த அடிப்படையில் அரசு நிலங்களில் பள்ளிகளைக் கட்டி நடத்தும் தனியார் பள்ளிகள் 10 சதவிகித இடங்களை ஏழை மாணவர்களுக்கும் ஐந்து சதவிகித இடங்களை அப்பள்ளிகளில் பணிபுரியும் ஊழியர்களின் குழந்தைகளுக்கும் ஒதுக்க வேண்டும் என்றும் இக்குழந்தைகளுக்கு இலவசக் கல்வி வழங்கவேண்டும் என்றும் தில்லி உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.

அஷோக் அகர்வால் என்னும் தில்லி வழக்கறிஞர் ஒருவர் தொடுத்த வழக்கில் இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஆணை 2008-2009 ஆண்டிலிருந்து அமலுக்கு வரும். இதனைக் கடைப்பிடிக்காத பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு அரசு நிலத்தின் மீதுள்ள ஒப்பந்தமும் ரத்து செய்யப்படும் என்று நீதி மன்றம் அறிவித்துள்ளது.

- ஸஞ்ஜயன் / வடக்குவாசல்

மாயக்கண்ணாடி படம் பரிசு போட்டியில் மோசடியா? - சேரன்

மாயக்கண்ணாடி படத் துக்கு விமர்சன போட்டி அறி விக்கப்பட்டது. வெற்றி பெறு வோருக்கு ஒரு லட்சம் ரூபாய் மற்றும் தன்னுடன் உதவி டைரக்டராக பணியாற்றும் வாய்ப்பு வழங்கப்படும் என சேரன் கூறினார்.

இந்த போட்டிக்கான பரிசு கள் இதுவரை வழங்கப் படவில்லை என்றும் பரிசு போட்டி மோசடி என்றும் கருப்பசாமி கரையாளர் என் பவர் புகார் கூறினார்.

இதற்கு டைரக்டர் சேரன் விளக்கம் அளித்துள்ளார். அவர் சார்பில் சேரன் பட கம்பெனியான டீரிம்ஸ் தியேட்டர்ஸ் மானேஜர் எழில் பாரதி வெளியிட்டுள்ள விளக்க கடிதத்தில் கூறி இருப் பதாவது:-

மாயக்கண்ணாடி விமர்சன போட்டி தொடர்பாக டைரக்டர் சேரன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மாயக் கண்ணாடி படம் பார்த்து விட்டு ஆயிரக்கணக்கானோர் கடிதம் எழுதியுள்ளனர். எங்கள் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்கின்றன. தகுதியும், திறமையும் கொண்ட விமர்சனங்களை எழுதியவர் களுக்கு அறிவித்தபடி அங்கீகாரம் அளிக்கப்படும்.

அறிவிப்பு விளம்பரத்தில் விமர்சனங்களை அனுப்ப கடைசி தேதியோ பரிசு வழங்கு வதற்கான தேதியோ தெரி விக்கப்படாததால் தொடர்ந்து கடிதங்கள் வந்து குவிகின்றன. சேரன் தயாரித்து இயக்கும் அடுத்த படத்துக்கான அறி விப்பு ஆகஸ்டு மாதம் வெளியாக இருக்கிறது. உதவி இயக்குனர்களுக்கான தேவையும் அப்போது தான் தேவைப்படும். அந்த படத்தின் அறி விப்போடு விமர்சன போட்டி தொடர்பு தொடர்பான அறி விப்பும் சேர்ந்து வெளியிடப்படும்.

பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கம் சேரனுக்கு இல்லை. மாயக்கண்ணாடி உள்ளிட்ட அவரது எட்டு படங் களுமே இதற்கு சாட்சி. அறி வித்தபடி பரிசுத் தொகை ஒரு லட்சம் ரூபாயை மிச்சம் பிடித்து மோசடி செய்து ஏமாற்ற வேண்டும் என்ற நோக்கம் சேரனுக்கு இல்லை. யாருக்கு எதிராக குற்றம் சுமத்துகிறோம் குற்றத்தில் உண்மை இருக்கிறதா என் பதை உணர்ந்து சொல்ல வேண்டும்.

பணம் சம்பாதிப்பதை மட்டும் நோக்கமாக கொள்ளா மல் சமூக அக்கறை யோடு படம் எடுக்கும் படைப் பாளியை பாராட்டா விட்டாலும் காயப்படுத்தாமல் இருக்கலாம்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

மாலைமலர்

கேரளா: கம்யூனிஸ்ட் கட்சிக்கு 'லாட்டரி' பணம் 2 கோடி!

கோவையைச் சேர்ந்த லாட்டரி அதிபர் மார்ட்டின். இவர் ஏராளமான முறைகேடுகளில் குற்றம் சுமத்தப்பட்டு தலைமறைவாக உள்ளார். அவரை தமிழக போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர் இந்நிலையில் மார்ட்டினிடம் ரூ. 2 கோடி பணத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாங்கிய விவகாரம் வெளிச்சத்திற்கு வந்து பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரபூர்வ நாளிதழான தேசாபிமானிக்கு கட்சி சார்பில் நிதி வசூல் செய்யப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக கோவையைச் சேர்ந்த லாட்டரி அதிபர் மார்ட்டினிடம் ரூ. 2 கோடி பணம் வசூலிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தி பத்திரிக்கைகளில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொள்கை, ஒழுக்கத்தை உலகுக்குப் போதிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இப்படி ஒரு நிதி வசூலை நடத்தியிருப்பது வெட்கக்கேடானது என்று காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இந்த இரண்டு கோடி ரூபாய் நிதி வசூல் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் கேரள காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

மார்ட்டினிடம் நிதி வசூல் செய்த விவகாரம் வெளியில் வந்து விட்டதால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பெரும் தர்மசங்கடத்தில் ஆழ்ந்துள்ளது. இதுகுறித்து நேற்று கூடி கட்சியின் மாநிலக் கமிட்டிக் கூட்டம் விவாதித்தது.

இந்தக் கூட்டத்தின் இறுதியில், மார்ட்டினிடம் வாங்கிய பணத்தை திரும்பவும் அவரிடமே கொடுத்து விட தீர்மானிக்கப்பட்டது.

இந்தியா-குவைத்: விமானப் போக்குவரத்து மீட்பு.

குவைத் நாட்டுடனான விமானப் போக்குவரத்து ஒப்பந்தம் காலாவதி ஆனதால் ஜுலை 1-ந் தேதி முதல் இந்திய விமானங்களுக்கு தடை விதிக்கப்படும் என்று குவைத் அரசு எச்சரித்து இருந்தது. இதையடுத்து கடந்த 3 நாட்களாக இந்திய அதிகாரிகள் குவைத்தில் முகாமிட்டு அந்த நாட்டு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். நீண்ட இழுபறிக்குப் பிறகு நேற்று அதிகாலை 1.30 மணிக்கு இரு நாட்டு அதிகாரிகளுக்கு இடையே உடன்பாடு கையெழுத்து ஆனது.

அதன்படி குவைத்தைச் சேர்ந்த குவைத் ஏர்வேஸ், அல்-ஜசீரா விமானங்கள் தினமும் ஐதராபாத், பெங்களூர், கொல்கத்தா நகரங்களுக்கு வந்து செல்லும். அதே போல இந்தியாவின் ஏர் இந்தியா, இந்தியன் ஏர்லைன்ஸ் விமானங்களும் தினமும் இயக்கப்படுகிறன.

இந்த உடன்பாட்டில் விமான இருக்கை வசதியை அதிகரிக்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன. இதன் மூலம் விமானப் போக்குவரத்து நிறுத்தப்படுமோ என்ற பயத்தில் இருந்த பல ஆயிரக்கணக்கான இந்தியப் பயணிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

தினத்தந்தி

குஜராத்தில் மழை:14 பேர் பலி

குஜராத்தின் பலபகுதிகளில் பெய்துவரும் கனத்த மழையினால் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. நிலமையை சமாளிக்க மாநில நிர்வாகம் இராணுவம் மற்றும் துணை ராணுவ உதவியை நாடியிருக்கிறது. ஜுனகாத் மாவட்டம்தான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
DNA - India - Rains claim 14 lives in Guj; Army mobilised in Ahmedabad - Daily News & Analysis

இந்தியா: விரைவில் நீதிமன்றங்கள் கணினிமயம்

இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து நீதிமன்றங்களும் வெகு விரைவில் கணினி வலைப்பின்னல் மூலம் இணைக்கப்படுகின்றன.

அனைத்து நீதிமன்றங்களுக்கும் வயர்லெஸ் கருவிகள், கை பேசிகள், கணிப்பொறிவசதி செய்து தரப் பட உள்ளன.

இதற்காக ரூ.455 கோடி செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் 15 ஆயிரம் நீதிபதிகளுக்கு `மடிக்கணினி'கள் வழங்கப்படுகின்றன.

இதற்கான விழா வருகிற 9-ந்தேதி டெல்லியில் உள்ள விக்யான் பவனில் நடக்கிறது.

ஜனாதிபதி அப்துல் கலாம் கலந்து கொண்டு மடிக்கணினிகளை வழங்குகிறார்.

அனைத்து நீதிபதிகளுக்கும் இது தொடர்பாக 3 மாத பயிற்சி தரப்படும் என உச்சநீதிமன்ற நீதிபதி ஜி.சி.பாருகா தெரிவித்துள்ளார்.

குடியரசு தலைவர் தேர்தல்: பிரதீபா,சேகாவட் நேரடி தேர்தல்

குடியரசு தலைவர் தேர்தலுக்காக வந்த வேட்புமனுக்களில் பிரதீபா பாடீலின் நான்கு மனுக்களும் சேகாவத்தின் இரு மனுக்களும் சரியாக இருப்பதாக இத்தேர்தலின் கண்காணிப்பு அதிகாரி, மக்களவையின் தலைமைச்செயலர் பிடிடி ஆச்சாரி தெரிவித்தார். மற்ற 72 பேர்களின் மனுக்கள் தேர்தல் விதிகளின்படி இல்லை என்று தள்ளுபடி செய்தார். இனி ஜூலை 4 அன்று போட்டியிலிருந்து இருவரில் ஒருவர் விலகிக் கொள்ளவில்லை என்றால் ஜூலை 19 அன்று தேர்தல் நடைபெறும். ஓட்டு எண்ணிக்கை ஜூலை 21 அன்று நாடாளுமன்றத்தின் அலுவலகத்தில் நடைபெறும்.


DNA - India - Patil, Shekhawat locked in straight fight in Prez poll - Daily News & Analysis

இராணுவ பெண் அதிகாரி தூக்கிட்டு தற்கொலை.

காஷ்மீர் மாநிலத்தில் இராணுவத்தின் மின்சாரம் மற்றும் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் பிரிவில் உயர் இராணுவ பெண் அதிகாரி மெகா ரஸ் டான். ஜம்மு பகுதியில் தனது அலுவலக அறையில் மின் விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துக் கொண் டார்.

போர்வையை அவர் தூக்குக் கயிறாக மாட்டி அதில் பிணமாகத் தொங்கினார். வேறு சில அதிகாரிகளின் தொல்லை காரணமாக அவர் தற்கொலை செய்ததாக கூறப் படுகிறது. இவருக்கு 4 மாதங் களுக்கு முன்பு தான் திருமணம் ஆனது.

இவரது தற்கொலை குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

மாலைமலர் செய்தி

சண்டிகர் தீ விபத்தில் BSNL தொலைபேசிகள், செல்பேசிகள் இயக்கம் தடைபட்டுள்ளது

சண்டிகர் நகரின் செக்டர் 17இல் உள்ள பிஎஸ் என் எல் தொடர்பகத்தில் நேற்று நடந்த தீவிபத்தில் தொலைதொடர்பு சாதனங்கள் பழுதடைந்ததால்
80,000 செல்பேசி இணைப்புக்களும் ஆயிரக்கணக்கான தொலைபேசி இனைப்புக்களும் இயங்காமல் இயல்பூ வாழ்வை பாதித்திருக்கிறது. வங்கி அலுவல்கள், தங்கள் வழங்கிகளுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதால் பாதிக்கப் பட்டுள்ளன. தானியங்கி பணவழங்கி (ATM) களும் தங்கள் தொடர்பை இழந்து பணம் வழங்கமுடியாது இருக்கின்றன. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீவிபத்தினை தீயணைப்பு படையினர் கட்டுப்படுத்தியபோதும் உபகரணங்களை காப்பாற்ற இயலவில்லை. மாற்று உப்கரணங்கலை நிறுவி இயல்புநிலை திரும்ப 2-3 நாட்கள் ஆகும் என பி எஸ் என் எல் இன் உயரதிகாரிகள் கூறினர்.
India eNews - Telephone exchange fire cripples Chandigarh

"குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை" - பிரதீபா பட்டீல்.

குடியரசுத்தலைவர் பதவிக்கான வேட்பாளர் பிரதீபா பட்டீல்,தமிழக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆகியோரை சந்தித்து ஆதரவு திரட்டுவதற்காக, சென்னை தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் தலைவர் என்ற முறையில் முதல்- அமைச்சர் கருணாநிதி நேற்று இரவு விருந்து ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்

இந்த நிகழ்ச்சியில் பிரதீபா பட்டீல் பேசியதாவது:-

ஐக்கிய முற்போக்கு கூட்டணி மற்றும் இடதுசாரிகள் சார்பில் குடியரசுத்தலைவர் தேர்தலில் என்னை வேட்பாளராக நிறுத்தி இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த தேர்தலில் வெற்றி பெற்றால், இந்தியாவின் முதல் பெண் குடியரசுத்தலைவர் என்ற மிகப்பெரிய பெருமை என்னை வந்து சேரும். இந்தியா சுதந்திரம் அடைந்த 60 ஆண்டு சரித்திரத்தில், குடியரசுத்தலைவர்மாளிகையை முதன் முதலாக ஒரு பெண் அலங்கரிப்பாள்.

இது எனக்கான தேர்தல் என்று நான் நினைக்கவில்லை. இதில் நான் பெறும் வெற்றி, இந்தியாவின் லட்சோப லட்சம் மக்கள் பெறும் வெற்றியாக கருதுகிறேன். இந்த நேரத்தில், இந்திய சுதந்திரத்துக்காக பாடுபட்ட மகாத்மா காந்தி மற்றும் எண்ணற்ற ஆண், பெண்களை நினைத்துப்பார்க்கிறேன்.

குடியரசு என்ற வார்த்தை, நமது நாட்டின் ஜனநாயகத்தின் மிகப்பெரிய மதிப்பை வெளிக்காட்டுகிறது. ஜனநாயகம் என்ற அந்த மிகப்பெரிய சக்தியை மக்கள் அரசியல் அமைப்பின் அடிப்படையில் காலகாலமாக அனுபவித்து வருகிறார்கள்.

நாமெல்லாம் இளைய இந்தியாவில் வாழும் பழைய கலாசாரத்தைக் கொண்டவர்கள். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவை நவீனப்படுத்துவதற்கும், சமூக-பொருளாதார மேம்பாட்டைக் கொண்டு வருவதற்கும் அரசியல் அமைப்பு சட்டங்களே அடிப்படையாக உள்ளன. மதச்சார்பின்மை, சமத்துவம், மத ஒற்றுமை போன்றவைதான் நமது நாட்டுக்கு தேவையான அஸ்திவாரமாகும்.

பொருளாதார வளர்ச்சியை அனைத்து தரப்பினரும் பெற வேண்டும். ஏழைகள், தலித்துகள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டவர்கள், இளைஞர்கள், பெண்கள் அனைவருமே மேம்பாடு அடைய வேண்டும்.

கடந்த சில நாட்களாக என்னை பற்றிய குற்றச்சாட்டுகள் பேசப்பட்டும் எழுதப்பட்டும் வருகின்றன. எனக்கு எதிராக தீய நோக்கத்தோடு கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு நான் அளிக்கும் ஒரே பதில் இதுதான். அவை அனைத்தும் பொய்யும், அடிப்படை ஆதாரம் அற்றவை.

எனது நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கும் முயற்சிகளை எல்லாம் நிராகரித்து விட்டு, எனது நாட்டு மக்களுக்கு சேவையாற்றுவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு நான் என்னை அர்ப்பணித்து செயல்பட்டு வருகிறேன். நான் நமது தேசத்துக்கு பணிவுடனும், ஆழ்ந்த கடமை உணர்ச்சியுடனும் தொடர்ந்து பணியாற்றுவேன்.

என்னை வேட்பாளராக தேர்வு செய்து, ஆதரவு நல்கும் முதல்-அமைச்சர் கருணாநிதி மற்றும் அனைத்து கட்சி தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். எனக்கு ஆதரவு நல்கும் உங்கள் ஒவ்வொருவருக்கும் நான் நன்றி கூறுகிறேன். குடியரசுத்தலைவர் தேர்தலில் நீங்கள் எனக்கு உங்கள் வாக்கை அளிப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். குடியரசுத்தலைவர் ஆக்குவதற்காக என் மீது நீங்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கும் எனது நன்றி
.

பிரதீபா பாட்டீல் வேட்புமனு தள்ளுபடியாகுமா?

குடியரசுத்தலைவர் தேர்தலில் காங்.கூட்டணி வேட்பாளர் பிரதீபாபட்டீல் வேட்பு மனுவை தள்ளுபடி செய்ய கோரும் மனு உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது.

குடியரசுத்தலைவர் தேர்தலில் ஐக்கிய மற்போக்கு கூட்டணி சார்பில் இராஜஸ்தான் முன்னாள் கவர்னர் பிரதீபாபட்டீல் போட்டியிடுகிறார். அவர் தனது வேட்பு மனுவை ஏற்கனவே தாக்கல் செய்து விட்டார்.

இந்த நிலையில் பிரதீபா பட்டீலின் வேட்பு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றம் மனோகர்லால் சர்மா என்பவர் மனுதாக்கல் செய்திருக்கிறார்.

அவர் தனது மனுவில் பிரதீபா பட்டீலும் அவரது குடும்பத்தினரும் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கி உள்ளனர். எனவே அவரது வேட்பு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். அவர் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது.

ஆஃப்கான்: விமான தாக்குதலில் 107 பேர் பலி


45 பேர் அப்பாவிகள்


ஆப்கானிஸ்தானில் ஹெல்மாண்டு மாநிலத்தில் கெரெஷ்க் மாவட்டத்தில் ராணுவ வாகனங்களில் வீரர்கள் சென்றபோது அவற்றின் மீது தலீபான் தீவிரவாதி ஒருவர் தன் உடலில் கட்டிஇருந்த வெடிகுண்டை வெடிக்கச்செய்தார். இதில் பல ஆப்கானிஸ்தான் ராணுவ வீரர்கள் காயம் அடைந்தனர்.

இதை தொடர்ந்து தீவிரவாதிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே சண்டை மூண்டது. ராணுவத்தை சமாளிக்க முடியாததால் தீவிரவாதிகள் அங்கு இருந்து தப்பி ஓடிவிட்டனர். அவர்கள் ஒரு கிராமத்துக்குள் புகுந்தனர்.

கிராமவாசிகளின் வீடுகளில் தீவிரவாதிகள் நுழைந்துகொண்டனர். அவர்களை விரட்டி சென்ற ராணுவம் அவர்கள் வீடுகளுக்குள் புகுந்ததும் தலைமை முகாமுக்கு தகவல் கொடுத்தது. இதைதொடர்ந்து ராணுவம், தீவிரவாதிகள் அடைக்கலம் புகுந்த வீடுகளை குறிபார்த்து விமானத்தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில் மொத்தம் 107 பேர் பலியானார்கள். அவர்களில் 45 பேர் அப்பாவிகள் ஆவார்கள்.

இந்த தகவலை 2 ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை அமெரிக்க ராணுவ அதிகாரிகளும் ஒப்புக்கொண்டனர். அப்பாவிகள் கொல்லப்பட்டது உண்மை தான். ஆனால் பலியானவர்களின் எண்ணிக்கை ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் சொல்வதுபோல அவ்வளவு அதிகம் இல்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.

மாலைமலர்

பாக்கிஸ்தான்: 50 இந்திய மீனவர்கள் விடுவிப்பு.

இந்தியா-பாக்கிஸ்தான் பேச்சுவார்த்தையில் கண்ட உடன்பாட்டின் படி இந்தியாவில் உள்ள 43 பாகிஸ்தான் மீனவர்களை இந்தியா விடுதலை செய்தது.

இதை அடுத்து பாக்கிஸ்தான் ஜெயிலில் இருந்து 50 இந்திய மீனவர்களை பாக்கிஸ்தான் அரசு விடுதலை செய்தது. லாண்டி ஜெயிலில் இருந்து விடுதலையான அந்த இந்திய மீனவர்கள் பஸ்மூலம் லாகூர் நகருக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கிருந்து இன்று வாகா எல்லைக்கு கொண்டு வரப்பட்டு இன்று இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுகிறார்கள்.

கடந்த 2005-ம் ஆண்டு முதல் இவர்கள் பாக்கிஸ்தான் சிறைகளில் அடைக்கப்பட்டு இருந்தனர். இன்னும் 400 இந்திய மீனவர்கள் பாக்கிஸ்தானின் பல்வேறு ஜெயில்களில் அடைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

மும்பையில் கோத்ரேஜ் தொழிற்சாலையில் தீ

இன்று காலை 7.30 மணிக்கு மும்பையின் புறநகர் விக்ரோலியில் அமைந்துள்ள கோத்ரேஜ் நிறுவனத்தின் பூச்சிக்கொல்லிகள் தயாரிக்கும் இடத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. எட்டு தீயணைப்பு வண்டிகளும் நான்கு ஜம்போ தண்ணீர் லாரிகளும் தீயணைப்பில் ஈடுபடுத்தப்பட்டன. தீ விபத்திற்கான காரணமும் பிற விவரங்களும் தெரியவில்லை.

தொடர்புள்ள சுட்டி..The Hindu News Update Service

மாநிலத்திடம் ஏது அதிகாரம்?: ராமதாஸுக்கு பொன்முடி பதில்

கல்லூரிகள் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மீறி வசூலித்தால், அவற்றின் அங்கீகாரத்தை ரத்து செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று உயர் கல்வி அமைச்சர் க.பொன்முடி குறிப்பிட்டார்.

முந்தைய சற்றுமுன்...: வீண் வாதம் செய்கிறார் பொன்முடி: ராமதாஸ்

அவரது அறிக்கைக்குப் பதிலளிக்கும் வகையில் அமைச்சர் பொன்முடி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

ஒரு கல்லூரி கட்டாய நன்கொடையை வசூலித்தால், 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க 1992-ம் ஆண்டு சட்டத்தில் வழியுண்டு என்று ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், தகுந்த ஆதாரங்கள், சாட்சியங்கள் இல்லாமல் எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்? பெற்றோர்கள், மாணவர்களின் எழுத்துபூர்வமான வாக்குமூலத்தை நீதிமன்றம் கேட்காதா? ராமதாஸ் சொல்வது போல், யாரோ சொல்லியிருக்கிறார்கள், தெருமுனையில் நான்கு பேர் பேசிக் கொண்டிருந்தனர் என்றெல்லாம் நீதிமன்றத்தில் கூற முடியாது. இது போல் ஒரு புகார் நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்டபோது, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணியே கூட, 'ஆதாரத்தோடு கூறினால், நடவடிக்கை எடுப்போம்' என்று கூறியுள்ளார்.

மேலும், எந்தக் கல்லூரி கட்டாயக் கட்டணம் வசூலிக்கிறது ராமதாஸே ஆதாரத்துடன் புகார் கொடுத்தால், நடவடிக்கை எடுப்போம் என்றும் கூறியுள்ளேன். மாநிலங்களின் அதிகார வரம்பு குறித்தும் கூறியுள்ளோம். உதாரணமாக தொழில் கல்லூரியைத் தொடங்க மாநில அரசின் தடையில்லா சான்றிதழ் (என்.ஓ.சி.) கூடத் தேவையில்லை என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

"தொழில்நுட்பக் கல்வியை வணிகமயமாக்குவதைத் தடுக்கும் பொறுப்பு ஏ.ஐ.சி.டி.இ.க்கு உள்ளது. கட்டாயக் கட்டணம் குறித்து புகார் வந்தால், ஏ.ஐ.சி.டி.இ. உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்'' என்று மத்திய அரசே அறிவித்துள்ளது.

இந்த அதிகாரம் மாநில அரசிடம் இருந்தால் அங்கீகாரத்தை ரத்து செய்ய முடியும் என்றுதான் குறிப்பிட்டுள்ளேன். இந்த அறிக்கை டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கைக்குப் பதில் அல்ல; அவர் எழுப்பிய சந்தேகத்துக்கும் மக்களுக்கு ஏற்பட்ட குழப்பத்துக்கும் நான் அளிக்கும் விளக்கம்.

தினமணி

குடியரசுத் தலைவர் தேர்தலில் மூன்றாவது அணி வாக்களிக்காது - ஜெயலலிதா

குடியரசுத் தலைவர் தேர்தலில், அதிமுக, மதிமுக, தெலுங்கு தேசம், சமாஜவாதி, அசாம் கண பரிஷத் உள்ளிட்ட மாநிலக் கட்சிகள் அடங்கிய ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி யாருக்குமே வாக்களிக்காது என்கிறார் ஜெயலலிதா.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, "டைம்ஸ்-நௌ'' என்ற தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இதைத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் பிரதிபா பாட்டீல் குடியரசுத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார். அவரை மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, இடதுசாரிகள், தேசிய ஜனநாயக கூட்டணியிலேயே இடம் பெற்றுள்ள சிவசேனை ஆகியவை ஆதரிக்கின்றன. இதனால் அவருடைய வெற்றி உறுதியாகிவிட்டது.

சுயேச்சையாகப் போட்டியிட்டாலும், பாரதீய ஜனதாவின் ஆதரவு பெற்றவர்தான் பைரோன் சிங். எனவே அவருக்கு வாக்களித்தால், சிறுபான்மைமைச் சமூகத்தவரின் ஆதரவு கிடைக்காதோ என்ற சந்தேகம் மூன்றாவது அணிக்கு இருக்கிறது. அத்துடன், எதிர்காலத்தில் இடதுசாரிகளுடன் இணைந்துச் செயல்பட விரும்பினால், பாரதீய ஜனதா ஆதரிக்கும் வேட்பாளரை ஆதரிப்பது அதற்குத் தடையாக இருந்துவிடும் என்று அஞ்சுகிறது. எனவே யாருக்கும் வாக்களிக்காமல் இருந்துவிடுவது என்ற முடிவை மூன்றாவது அணி எடுத்திருக்கிறது.

சோனியா மீது காட்டம் ஏன்? காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை ஏன் ஒவ்வொரு அறிக்கையிலும் கடுமையாகச் சாடுகின்றீர்கள் என்று நிருபர் கேட்டார்.

"அன்னியர் ஆதிக்கத்திலிருந்து நாடு விடுதலை பெற வேண்டும் என்று லட்சோப லட்சம் மக்கள் தங்களுடைய உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்ப்பணித்துள்ளனர். அப்படி இருக்க, ராஜீவ் காந்தியைத் திருமணம் செய்துகொண்டார் என்பதற்காக இத்தாலியில் பிறந்த சோனியாவைத் தலைவராக ஏற்க வேண்டிய அவசியம் இல்லை; நூறு கோடிக்கும் மேற்பட்ட மக்களைக் கொண்ட நாட்டில், கட்சிக்கும் ஆட்சிக்கும் தலைமை தாங்க ஒருவர் கூடவா கிடக்காமல் போய்விட்டார்கள் என்று வினவினார் ஜெயலலிதா.

இதனாலேயே அந்தக் கட்சியையும் அதன் தலைவரையும் தீண்டத்தகாதவர்களாகிவிட்டார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். தானும் தனது கட்சியும் இந்தியரைத்தான் பிரதமர் பதவியில் அமர்த்தப்போவதாக அவர் சூளுரைத்தார். இடதுசாரிகள் கொள்கை ஒன்றாகவும் செயல் வேறொன்றாகவும் இருக்கின்றனர் என்றார். இந்திய-அமெரிக்க அணுசக்தி உடன்பாடு இந்திய நலனுக்கு எதிரானது என்று கண்டித்தார்.

தேசிய அரசியலில் ஈடுபடுவீர்களா என்று கேட்டபோது, இந்தியாவை வல்லரசாக்க தன்னால் இயன்ற அனைத்தையும் செய்யப் போவதாக பதில் அளித்தார்.

தினமணி

-o❢o-

b r e a k i n g   n e w s...