கல்லூரிக் கட்டண விவகாரத்தில் அமைச்சர் பொன்முடி நடவடிக்கை எடுக்காமல் வீண் வாதம் செய்வதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டி உள்ளார்.
மேலும், சுயநிதிக் கல்லூரிகளின் கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டிய பொறுப்பு மாநில அரசிடம்தான் உள்ளது என்றும் அவர் சுட்டிக் காட்டி உள்ளார்.
"இந்திய மருத்துவக் கவுன்சில் (எம்.சி.ஐ.) போன்ற கமிட்டிகளிடம்தான் கூடுதலான அதிகாரம் குவிந்துள்ளது. அதை எதிர்த்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் போரிட்டால், முதல்வரின் அனுமதியுடன் நானும் அதில் பங்கேற்பேன்" என்று உயர்கல்வி அமைச்சர் க.பொன்முடி தெரிவித்த கருத்துக்கு பதில் அளிக்கும் வகையில் ராமதாஸ் மேற்கண்ட கருத்தை தெரிவித்தார்.
இதுகுறித்து, சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
அமைச்சர் பொன்முடி குறிப்பிட்டபடி, மத்திய அரசின் நிறுவனங்களுக்கும், சுயநிதிக் கல்லூரிகளின் கட்டண நிர்ணயத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. கட்டாய நன்கொடையை தடுப்பதற்கும் அந்த நிறுவனங்களின் பணிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
கல்லூரிகளுக்கு அனுமதி வழங்குவதோடு அந்த நிறுவனங்களின் பணி முடிந்து விடுகிறது. கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டிய பொறுப்பு மாநில அரசிடம் தான் உள்ளது.
2002-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் அது தெளிவாகச் சுட்டிக் காட்டப்பட்டு இருக்கிறது. அதன் அடிப்படையில் 2003-ம் ஆண்டில் குழுக்கள் அமைக்கப்பட்டு கட்டணம் நிர்ணயித்து அரசாணையும் வெளியிடப்பட்டு இருக்கிறது.
கட்டண நிர்ணயம் தொடர்பாக, மாநில அரசிடம் எதுவுமே இல்லை என்பதைப் போல, அமைச்சர் சொல்லியிருக்கிறார். அதிகாரம் இல்லாமலா 1992-ம் ஆண்டில் நன்கொடை தடைத் சட்டத்தை (ஜெயலலிதா தலைமையிலான) மாநில அரசு கொண்டு வந்தது.
மக்கள் சிரிக்க மாட்டார்களா? இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி நடவடிக்கை எடுங்கள் என்று சொல்லும்போது மட்டும் எங்களிடம் அதிகாரம் இல்லை என்பதைப்போல சட்டத்தைக் கொண்டு வந்தவர்களே சொன்னால், அதைக் கேட்டு மக்கள் சிரிக்க மாட்டார்களா?
இருக்கின்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி நடவடிக்கை எடுக்காமல் மத்திய சுகாதாரத் துறையையும் வம்புக்கு இழுத்து போராடத் தயாரா என்றும் அமைச்சர் பொன்முடி விதண்டாவாதம் செய்திருக்கிறார். கூட்டணி பற்றி உபதேசமும் செய்திருக்கிறார்.
கட்டாய நன்கொடை, கட்டணக் கொள்ளை பற்றி அரசுக்கு புகார்கள் அனுப்பப்பட்டு இருக்கின்றன. முதல்வரின் தனிப் பிரிவுக்கே இத்தகைய புகார்கள் அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாகச் சொல்கிறார்கள்.
சில குறிப்பிட்ட படிப்பில் தனியார் கல்லூரிகளிடம் இருந்து அரசின் ஒதுக்கீட்டுக்கு உரிய இடம் பெறப்படவில்லை என்றும், அவர்கள் விரும்பிக் கொடுத்த இடத்தை மட்டும் பெற்றுக் கொண்டு திருப்தி அடைந்திருக்கிறார்கள் என்ற விவரம் எல்லாம் உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்குகளில் விரிவாக விவாதிக்கப்பட்டு இருக்கிறது.
எனவே, அரசுக்கு எதுவுமே தெரியாது என்று அமைச்சர் கூறுவது சுத்தப் பொய்.
யாரும் புகார் கொடுக்கவில்லை என்பதற்காக நாட்டில் நடந்துகொண்டிருக்கின்ற அக்கிரமங்களை எல்லாம் மக்கள் நல அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க முடியுமா?
இருக்கின்ற அதிகாரத்தை பயன்படுத்தி நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக மத்திய அரசை நோக்கி கையைக் காட்டி திசை திருப்புவது எந்த வகையில் நியாயம்.
மத்திய அரசுக்கும், இங்கே மாநிலத்தில் பொறுப்பில் உள்ளவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதைப் போல அமைச்சர் பொன்முடி வேண்டுமானால் பேசலாம். ஆனால், மக்கள் அதை நிச்சயம் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
முந்தைய சற்றுமுன்...: இராமதாஸ் Vs திமுக: "மத்திய சுகாதாரத்துறையை எதிர்த்து போராடத்தயாரா?"
தினமணி
Sunday, July 1, 2007
வீண் வாதம் செய்கிறார் பொன்முடி: ராமதாஸ்
Labels:
அரசியல்,
கல்வி,
தமிழ்நாடு,
மருத்துவம்
Posted by Boston Bala at 6:11 AM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
No comments:
Post a Comment