.

Sunday, July 1, 2007

முன்னெச்சரிக்கை கண்காணிப்பு: யு.எஸ். கப்பலால் அணுக் கதிர்வீச்சு ஏற்படுமா?

சென்னை துறைமுகத்துக்கு ஜூலை 2-ம் தேதி வரவுள்ள "யு.எஸ்.எஸ். நிமிட்ஸ்' கப்பலில் இருந்து அணுக் கதிர்வீச்சு வெளியாகிறதா என்பதை மூன்று இடங்களில் கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக டி.ஆர்.டி.ஓ. சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழுத் தலைவர் டாக்டர் ஏஆர். ரெட்டி தெரிவித்தார்.

சென்னை வரவுள்ள அமெரிக்க விமானம் தாங்கி போர் கப்பல் "நிமிட்ஸ்' குறித்து சனிக்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் கூறியது:

"நிமிட்ஸ்' கப்பலில் இருந்து கதிரிவீச்சு வெளியாகிறதா என்பதைக் கண்காணிக்க, அந்தக் கப்பலைச் சுற்றி ரோந்து கப்பல் ஒன்று பணியில் ஈடுபடுத்தப்படும். துறைமுகத்தில் இருந்தபடியும் ஒரு குழு கப்பலைக் கண்காணிக்கும். மேலும் இரண்டு மொபைல் ஆராய்ச்சிக் கூடங்கள் கடலில் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளன. இதோடு மண், நீர், காற்று, உணவு ஆகியவற்றிலும் கதிர்வச்சு சோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. இந்தச் சோதனை கப்பல் வருவதற்கு முன், கப்பல் வந்தபின் மற்றும் கப்பல் சென்றபின் என மூன்று முறை நடத்தப்படும்.

"நிமிட்ஸ்' கப்பல் நிற்கும் இடத்திலிருந்து 200 மீட்டர் சுற்றளவுக்கு வேறு கப்பலோ, படகுகளோ அனுமதிக்கப்படாது.

இந்தக் கப்பலில் 190 மெகா வாட் திறன் கொண்ட அணு உலை உள்ளது. இது கப்பலை இயக்குவதற்காகவே பயன்படுத்தப்படுகிறது. ஆனால் கல்பாக்கத்தில் 220 மெகா வாட் திறன் கொண்ட அணு உலை உள்ளது. கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையத்திலிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் குடியிருப்புகள் உள்ளன. இதனால் எந்த பாதிப்பு ஏற்பட்டதில்லை.

"நிமிட்ஸ்' கப்பல் துறைமுகத்திலிருந்து 3.7 கிலோ மீட்டர் (இரண்டு கடல் மைல்கள்) தொலைவில் நிறுத்தி வைக்கப்படுகிறது. இதனால் எந்த பாதிப்பு ஏற்படாது. இதுவரை 10 வெளிநாட்டு அணு ஆயுதப் போர் கப்பல்கள் இந்தியாவிற்கு வந்துள்ளன. இந்தக் கப்பல்களால் பாதிப்பு ஏற்பட்டதாகத் தகவல்கள் இல்லை என்றார் அவர். தமிழ்நாடு கப்பல்படை அலுவலர் (பொறுப்பு) வான் ஹால்டன் கூறியது: ஜூலை 2-ம் தேதி வரும் இந்தக் கப்பலில் 450 உயர் அதிகாரிகளும், 5,000 ஊழியர்களும் உள்ளனர். இந்தக் கப்பல் 5-ம் தேதி காலை 10 மணிக்கு புறப்பட்டுச் செல்கிறது.

அரசு அனுமதியின் பேரிலேயே இந்தக் கப்பல் சென்னை துறைமுகத்துக்கு வருகிறது. போதுமான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என்றார் அவர்.

தினமணி

2 comments:

அக்னி சிறகு said...

//இந்தக் கப்பலில் 190 மெகா வாட் திறன் கொண்ட அணு உலை உள்ளது. இது கப்பலை இயக்குவதற்காகவே பயன்படுத்தப்படுகிறது. ஆனால் கல்பாக்கத்தில் 220 மெகா வாட் திறன் கொண்ட அணு உலை உள்ளது. கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையத்திலிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் குடியிருப்புகள் உள்ளன. இதனால் எந்த பாதிப்பு ஏற்பட்டதில்லை.//

கப்பலில் பயன்படுத்தப்படும் யுரேனியம் 93% முதல் 97% வரை செறிவூட்டப்படுகிறது. ஆனால் நிலத்தில் பயன்படுத்தப்படும் யுரேனியம் 3% முதல் 5%வரை மட்டுமே செறிவூட்டப்படுகிறது. இப்பொழுது அபாய அளவு புரிந்திருக்கும் என்று நினைக்கின்றேன்.

ஆதாரம் : http://groups.google.com/group/pothuvudaimai/t/2357b922ffb20d4e

Boston Bala said...

எண்ணங்கள்: USS நிமிட்ஸ்: தேவையில்லாத ஆர்பாட்டம்

-o❢o-

b r e a k i n g   n e w s...