.

Sunday, July 1, 2007

விமான நிலையம் மீது தாக்குதல் - இங்கிலாந்தில் பரபரப்பு.

பிரித்தானிய மாகாணங்களுள் ஒன்றான ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகர விமான நிலையத்தின் மீது தீவிரவாதிகள் கார் தாக்குதல் நடத்தினர்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து இங்கிலாந்து முழுவதும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ஸ்காட்லாந்து பகுதியில் உள்ள கிளாஸ்கோ விமான நிலையத்திற்குள் ஒரு கார் படு வேகமாக வந்தது. அந்தக் காரை பாதுகாவலர்கள் நிறுத்த முயன்றனர். ஆனால் பாதுகாவலை மீறிக் கொண்டு அந்தக் கார் படுவேகமாக நுழைவாயிலை நோக்கி விரைந்தது.

வந்த வேகத்தில் நுழைவாயில் சுவற்றில் மோதி நின்றது. அடுத்த விநாடியே கார் வெடித்துச் சிதறி தீப்பிடித்து எரிந்தது. இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

காரில் வந்தவர்கள் தற்கொலைப் படைத் தீவிரவாதிகளாக இருக்கலாம் என்ற தகவல் பரவியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அந்தக் காரைச் சுற்றிலும் போலீஸார் குவிந்தனர். அங்கிருந்தவர்கள் அவசர அவசரமாக வெளியேயற்றப்பட்டனர்.

தீப்பிடித்து எரிந்த காரிலிருந்து குதித்த இருவரும் உயிர் தப்பிவிட்டனர். அவர்களை போலீஸார் கைது செய்தனர். அவர்கள் இருவரும் தெற்காசியர்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

அவர்களில் ஒருவரின் உடலில் பலத்த தீக்காயம் ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இன்னொருவரிடம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இது ஒரு தீவிரவாத தாக்குதலாக இருக்கக் கூடும் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

கிளாஸ்கோ விமான நிலையத்தில் நடந்த இந்த திடீர் சம்பவத்தால் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. விமான சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் பெரும் சிரமத்துக்குள்ளாயினர்.

நேற்று முன் தினம் தான் லண்டனில் குண்டுகளுடன் நிறுத்தப்பட்ட கார்கள் கண்டுபிடிக்கப்பட்டு பெரும் பரபரப்பு நிலவியது.

இந் நிலையில் கிளாஸ்கோ விமான நிலையத்தில் நடந்த சம்பவம் இங்கிலாந்தில் பெரும் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

லண்டன் கார் குண்டு மற்றும் கிளாஸ்கோ தாக்குதல் குறித்து லண்டன் மாநகர காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், இரு சம்பவங்கள் தொடர்பாகவும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

லண்டனில் கார் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்திற்கும், கிளாஸ்கோ தாக்குதலுக்கும் தொடர்புகள் உள்ளன. இது தீவிரவாத தாக்குதல் என்று கூற முடியும்.

விமான நிலையத்தில் மோதியவர்களில் ஒருவர் பலத்த தீக்காயம் அடைந்துள்ளார். அவரது உடலில் சந்தேகத்திற்கிடமான ஒரு கருவி கண்டுபிடிக்கப்பட்டது. அது தற்கொலைப் படையினர் அணியும் ஜாக்கெட்டாகவும் இருக்கலாம். அவரது நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

இந்தக் கருவி கண்டுபிடிக்கப்பட்டதும் அந்த நபர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனையிலிருந்து ஊழியர்கள், நோயாளிகள் இடம் மாற்றப்பட்டனர். பின்னர் உடலிலிருந்து அந்தக் கருவி எடுக்கப்பட்டு பாதுகாப்பான பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டது என்றார்.

இதற்கிடையே செஷையர் பகுதியில் ஒரு பெண் உள்பட 3 பேர் இந்த இரு சம்பவங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் முஸ்லீம் என்று நேரில் பார்த்த ஒருவர் கூறியுள்ளார். போலீஸார் தேசிய நெடுஞ்சாலையில் வைத்து இவர்கள் இருவரும் வந்த காரை மடக்கி இருவரையும் கைது செய்தனர்.

இருப்பினும் இந்தக் கைது குறித்த முழு விவரத்தையும் காவல்துறை வெளியிடவில்லை.

இந்த இரு சம்பவங்களையும் தொடர்ந்து இங்கிலாந்து முழுவதும் பாதுகாப்பு நிலை உச்சகட்ட அளவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

நன்றி: தட்ஸ் தமிழ்

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...