.

Tuesday, June 26, 2007

'எய்ட்ஸ்' குழந்தைகள் பள்ளி செல்ல எதிர்ப்பு

கேரள மாநிலம் பம்பாடியில் உள்ள மார் டயோனிசியஸ் துவக்கப்பள்ளியில் 2 மற்றும் 3-ஆம் வகுப்புகளில் படித்துவரும் 5 குழந்தைகளுக்கு எச்ஐவி-யால் பாதிக்கப்பட்டிருப்பது கடந்த டிசம்பரில் தெரிய வந்தது. இதையடுத்து அந்தக் குழந்தைகள் அதே பள்ளியில் தொடர்ந்து படிப்பதற்கு மற்ற குழந்தைகளின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அக் குழந்தைகள் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டனர்.

எனினும், அதன்பிறகு இந்த விவகாரம் மாநில அரசின் கவனத்துக்குச் சென்றது. இதனால் எழுந்த நிர்பந்தத்தின் காரணமாக அக் குழந்தைகள் மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.

தற்போது இப் பிரச்னை மீண்டும் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, திங்கள்கிழமை பள்ளிக்கு மூன்றே மாணவர்கள்தான் வந்திருந்தனர். பள்ளி வாகனத்தில் பழுது ஏற்பட்டதால் எச்ஐவி பாதித்த 5 மாணவர்களும் திங்கள்கிழமை பள்ளிக்கு வரவில்லை. இவர்கள் அனைவரும் 'ஆஷா கிரண்' என்ற மறுவாழ்வு மையத்தில் தங்கியிருக்கின்றனர்.

அப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகம் திங்கள்கிழமை கூடியது. அதில், இந்த விவகாரம் குறித்து 3 நாள்களுக்குள் முடிவெடுப்பதற்காக 5 நபர் கமிட்டி அமைக்கப்பட்டது.

தினமணி

இராட்சத பென்குயின் படிவுகள் கண்டெடுக்கப்பட்டன.

ஒன்றரை மீட்டர் உயரமும், ஒரு மனிதன் அளவுக்கு எடையும், 18 செமீ நீள அலகும் உடைய இராட்சத பெங்குயின் பறவை மூதாதைகளின் படிவுகள் பெரு அருகே கண்டறியப்பட்டுள்ளன. இவை 36 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்டவையாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது

இவை பெங்குயின்களின் பரிணாம வளர்ச்சி பற்றிய விஞ்ஞான கருத்தை சற்றே ஆட்டங்காண வைத்துள்ளன.

மேலும்....

மதுரை மேற்கு: வாக்குப்பதிவு 75.34 சதவிகிதம்

ஆங்காங்கே ஒருசில அசம்பாவிதங்களைத் தவிர, பொதுவாக அமைதியாகவும், சுமூகமாகவும் மதுரை மேற்கு இடைத்தேர்தல் நடந்து முடிந்ததாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா தெரிவித்துள்ளார். "இன்றைய தேர்தலின் மொத்த வாக்குப்பதிவு 75.34% ஆக இருந்தது" என்ற அவர் "இது கடந்த 2006 தேர்தலை விட 4 சதம் அதிகமாகும்" என்றார்

"மிகச்சில சம்பவங்கள் நடந்தபோதிலும், அவை வாக்குப்பதிவை குலைக்கும் அளவுக்கு இல்லை" என்றார் த.தே.அ

சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்தியதில் துணை இராணுவப்படை மிகுந்த உதவிபுரிந்ததாகவும், மாநில காவல்துறையும் நன்றாகப்பணியாற்றியதாகவும் த.தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா சொன்னார்.

மேலும் படிக்க...

ச:அணுசக்தி போர்க்கப்பலால் சென்னைக்கு ஆபத்து: ஜெயலலிதா

சென்னைக்கு வரப்போகும் அமெரிக்க அணுசக்தியினால் இயங்கும் விமானந்தாங்கி போர்கப்பலால் சுற்றுப்புறத்திலிருக்கும் மக்களுக்கு தீங்கு விளையும் என்று அதிமுக தலைவர் செயலலிதா நடுவண் அரசை இதனை தடுத்து நிறுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். கதிரியக்க தீமையினால் ஆஸ்திரேலியா முதலிய நாடுகள் இக்கப்பலுக்கு தங்கள் கடற்பகுதியில் அனுமதி மறுத்துள்ளதாகவும் அவர் கூறினார். அமெரிக்கக் கப்பல் USS Nimitz ஜூலை ஒன்று முதல் ஜூலை 5 வரை சென்னை துறைமுகத்தில் தங்கியிருக்கும்.
இது பற்றி The Hindu செய்தி

அதே நேரம்அமெரிக்கஅரசின் சென்னை கான்சுலேட் ஜெனரல் அலுவலகம் இந்தக்கப்பலினால் எந்த தீங்கும் நேராது
என்று அறிக்கை விட்டுள்ளது. தனது 56 வருட பணிக்காலத்தில் ஒரு விபத்தைக் கூட சந்திக்கவில்லை என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

கோயிலைப் பார்வையிட்ட எம்.எல்.ஏ; கழுவி விட்ட பி.ஜே.பி

இராமேஸ்வரத்தின் இராமநாதஸ்வாமி கோயிலை, அதன் கிழக்கு கோபுரத்தில் ஏற்பட்ட விரிசலைப் பார்வையிட்டார் இராமநாதபுரம் தொகுதி மக்கள் பிரதிநிதி எம்.எல்.ஏ ஹசன்அலீ (காங்கிரஸ்).

இராமநாதபுரம் நகராட்சி துணைத்தலைவர் ராஜாமணி கூறுகையில் "ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பனிடம் கோயில் கோபுர விரிசல் பற்றி எடுத்துக்கூறவே, நேரில் பார்வையிட கருதி; அதன்படிசெய்தார் எம்.எல்.ஏ"

ஹிந்து அல்லாத அவர் (எம்.எல்.ஏ) கோயிலுள் நுழைந்ததை விரும்பாத பாரதீய ஜனதா, வி.ஹெச்.பி, சிவசேனா கட்சிக்காரர்கள் கோயிலுக்கு பரிகார பூசை செய்து கழுவி விட்டுள்ளனர் என்று கோயில் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, அதே கோயிலில் நிகழ்வுற்ற சமபந்தி போஜனத்திலும் எம்.எல்.ஏ கலந்துண்டதாக இச்செய்தி கூறுகிறது

ச: பெங்களூருவில் வருமானவரி சோதனைகள்

பெங்களூருவிலும் அதன் சுற்றுப்புறத்திலும் உள்ள வீடு/மனை விற்பனையாளர்களின் சுமார் 20 வீடுகளில் வருமானவரி அதிகாரிகள் காவல்துறையின் உதவியோடு அதிரடி சோதனை நடத்திவருகின்றனர். சோதனைக்கு உட்பட்பட்டவர்களின் பெயர்களையும் காரணங்களையும் வெளியிட மறுத்துவிட்டனர்.

The Hindu News Update Service

ச: 'உன்னாலே உன்னாலே' இயக்குநர் ஜீவா மரணம்

12B,உள்ளம் கேட்குமே மற்றும் உன்னாலே உன்னாலே ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ள காமராமேனும் இயக்குனருமான ஜீவா மாஸ்கோவில் 'தாம் தூம்' படப்பிடிப்பின்போது மாரடைப்பினால் மரணமடைந்தார். 43 வயதான ஜீவா ஜெயம் இரவி, கங்கானா ரௌத் இவர்களுடன் உருசிய தலைநகரில் படப்பிடிப்பு வேலைகளை கவனித்துவந்தவரின் இறுதி காலை 3 மணிக்கு ஏற்பட்டது. அவரது உடல் நாளை சென்னைக்கு வந்தடையும் என எதிர்பார்க்கப் படுகிறது. அவருக்கு உடையலங்கார பணியிலீடுபட்டுள்ள மனைவியும் மூன்று மக்களும் உள்ளனர்.
The Hindu News Update Service

முதிர்ந்த காதல்; மரியாதை செய்த மாவட்ட ஆட்சியர்.

கடலூர் கலெக்டர் முகாம் அலுவலகத்தில் மனுநீதிநாள் முகாம் நடைபெற்றது. அப்போது பரங்கிப்பேட்டை அருகே உள்ள கரிக்குப்பத்தை சேர்ந்த ராயர் படையாட்சி (82) என்பவர் தனது மனைவி பிச்சையம்மாளை (80) இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் அமைப்பை சேர்ந்தவர்களுடன் ஸ்டிரச்சரில் தூக்கிக் கொண்டு கலெக்டர் முகாம் அலுவலகத்துக்கு வந்தார்.

இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் அமைப்பினர் மூதாட்டி பிச்சையம்மாள் இருந்த ஸ்டிரச்சரை கலெக்டருக்கு முன்னால் கொண்டு வந்து வைத்தனர். இதைபார்த்த கலெக்டர் ராஜேந்திரரத்னூ தனது இருக்கையை விட்டு எழுந்து ஸ்டிரச்சர் அருகே ஓடிவந்தார் அவரை பார்த்த முதியவர் ராயர் தான் கொண்டு வந்த மனுவை கலெக்டரிடம் கொடுத்தார். அப்போது ராயர் எனக்கு அரசு நிலம் வழங்கிய இடத்தில் வீடு கட்டிதாருங்கள். அதுவே எனது ஆசை என்று கூறினார். இதனை தொடர்ந்து ராயர் கொடுத்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

இதையடுத்து உடல் நலம் குன்றியிருந்த மூதாட்டி பிச்சையம்மாளை ஆஸ்பத்திரிக்கு எடுத்து செல்லுமாறு கலெக்டர் கூறினார். ஆனால் அதற்கு ராயர் மறுத்து விட்டார். நாங்கள் ஊருக்கு போகிறோம். என்னால் எனது மனைவியை பிரியமுடியாது. இது எங்கள் வாழ்க்கையின் கடைசி கட்டம். உயிர் போவதற்குள் சொந்த வீட்டில் இருவரும் வாழ வேண்டும். என்பதே எங்கள் ஆசை என்று கூறினார்.

பின்னர் முதியவர் ராயர் நிருபர்களிடம் கூறியதாவது:-

எங்களுக்கு குழந்தைகள் இல்லை உறவு என்று சொல்ல எவரும் இல்லை. 60 ஆண்டுகளுக்கு முன்பு நான் பரங்கி பேட்டையில் தென்னை மரம் ஏறிக் கொண்டு இருந்தேன். அப்போது பிச்சையம்மாள் தென்னை ஓலைகளை எடுத்து ஈக்குகளை சேகரித்து விற்பனை செய்து வாழ்ந்து வந்தாள். அவள் மீது பரிதாபம் கொண்ட நான் காதலித்து திருமணம் செய்து கொண்டேன். திருமணத்துக்கு பின் ஒருநாள் கூட நாங்கள் பிரிந்தது இல்லை. உயிர் போவதற்குள் சொந்த வீட்டில் வாழவேண்டும் என்பது தான் எங்களது ஒரே ஆசை எங்களது ஆசையை கலெக்டர் நிச்சயம் நிறைவேற்றி வைப்பார். என்று நம்புகிறேன்.

இவ்வாறு ராயர் கூறினார்.

மாலைமலர்

அரசியலில் முன்னாள் கேப்டன் அஸ்ஹருத்தீன்

தேவேகவுடாவின் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியில் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் அஸ்ஹருத்தீன் சேருகிறார்.

தேவேகவுடா கட்சியில் அஸ்ஹருத்தீன் சேருகிறார்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அஸ்ஹருத்தீன். சூதாட்டத்தில் சிக்கியதால் இவருக்கு ஆயுட்கால தடை விதிக்கப்பட்டது.

கிரிக்கெட்டுக்கு பிறகு அவர் தற்போது அகாடமிகளை நடத்தி இளம் வீரர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார். மேலும் பல்வேறு வியாபாரத்திலும் ஈடுபட்டுள்ளார்.

இந்த நிலையில் அஸ்ஹருத்தீன் அரசியலில் குதிக்க முடிவு செய்துள்ளார். முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் மத சார்பற்ற ஜனதாதள கட்சியில் அவர் சேருகிறார். தேவேகவுடாவை நேற்று அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அஸஹருத்தீன் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியில் நாளை சேரலாம் என்று தெரிகிறது.

இதே போல இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீரரும், கர்நாடகத்தைச் சேர்ந்தவருமான தோடா கணேசும் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியில் சேருகிறார். அவரும் தேவேகவுடாவை சந்தித்து பேசினார்.

தோடா கணேஷ் சமீபத்தில்தான் முதல்தர போட்டியில் இருந்து ஒய்வு பெறுவதாக அறிவித்து இருந்தார். கிரிக்கெட் வாழ்க்கை முடிந்த பிறகு புதிய வாழ்க்கையான அரசியலுக்கு பிரவேசிக்கிறார்.

முன்னாள் வீரர்களான கீர்த்தி ஆசாத், சேட்டன் சவுகான், சித்து ஆகியோர் பாரதீய ஜனதா கட்சியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விமானம் விழுந்து நொறுங்கி 27 பேர் பலி.

கம்போடியா நாட்டை சேர்ந்த `ஏ.என்.24' ரக விமானம் அந்த நாட்டின் சீம்ரீம் பகுதியில் இருந்து சிகானுக்விலி என்ற இடத்துக்கு புறப்பட்டுச் சென்றது. அந்த விமானத்தில் சிப்பந்திகள் மற்றும் சுற்றுலா பயணிகள் உள்பட 27 பேர் இருந்தனர்.

அந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் மாயமாக மறைந்து விட்டது. விமானத்தின் தகவல் தொடர்பும் துண்டிக்கப்பட்டது.

அப்போது பலத்த காற்றும் வீசியது. சிறிது நேரத்தில் அந்த விமானம் அடர்ந்த காட்டுப் பகுதியில் விழுந்து நொறுங்கியது. விமானத்தில் இருந்த சுற்றுலா பயணிகள் உள்பட 27 பேரும் பலியாகி விட்டனர்.

இந்த இரு சுற்றுலா நகரங்களுக்கும் இடையே கடந்த ஜனவரி மாதம் தான் விமானப் போக்குவரத்து தொடங்கப்பட்டது. விபத்தில் பலியானவர்களில் 13 பேர் தென்கொரி யாவை சேர்ந்தவர்கள். 3 பேர் செக் குடியரசை சேர்ந்தவர்கள். 5 பேர் கம்போடியாவைச் சேர்ந்தவர்கள்.

இந்திய விமானங்கள் தரையிறங்க குவைத் அரசு தடை.

இந்தியாவின் அரசு சார்பு விமானப் போக்குவரத்து நிறுவனங்களான "இந்தியன்' மற்றும் "ஏர் இந்தியா' ஆகியவற்றின் விமானங்கள் தரையிறங்க குவைத் அரசு தடை விதிக்க இருக்கிறது. வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் இத்தடை அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நூற்றுக்கணக்கான பயணிகள் வேறு விமானப் போக்குவரத்து நிறுவனங்களை நோக்கிச் செல்ல ஆரம்பித்துவிட்டனர். இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தான ஒப்பந்தப்படி, இந்தியாவிலிருந்து குவைத்துக்கு செல்லும் குவைத் அரசு விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அனுமதியளிக்க வேண்டும் என அந்நாடு இந்தியாவுக்கு கோரிக்கை விடுத்தது. ஆனால் இந்தக் கோரிக்கையை இந்தியா கண்டுகொள்ளாமல் இருப்பதால் குவைத் இந்த முடிவை எடுத்திருப்பதாக "அரபு டைம்ஸ்' என்ற நாளிதழ் திங்கள்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.

மதுரைஇடைத்தேர்தல்"சற்றுமுன்" நிலவரப்படி 20 சதவீதம் வாக்குப்பதிவு.

மதுரை மேற்கு தொகுதி இடைத்தேர்தல் பெரும் பரபரப்புக்கு இடையே இன்று நடக்கிறது. ராணுவம் மற்றும் போலீசாரின் பலத்த பாதுகாப்புடன் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகிறார்கள். எந்தவித அசம்பாவிதமும் இன்றி நடந்து வரும் இந்த தேர்தலில் காலை 9.30 மணி நிலவரப்படி 20 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் அதிகாரி தினேஷ் ஆலிவர் பொன்ராஜ் தெரிவித்தார்.

இணையத்தில் வெறுப்பேத்தும் வார்த்தைகளில் - 'வலைப்பதிவு'

ஒரு கருத்துக்கணிப்பின்படி இணைய பயனாளர்களிடம் வெறுப்பை வரவளைக்கும் வார்த்தைகளாக வலைப்பதிவு(Blog), பதிவுலகம்(Blogsphere), இணைய நல்லொழுக்கம்(Netiquette), விக்கி(Wiki) ஆகியன முதல் பத்துக்குள் இடம்பெற்றுள்ளன.

முதல் வெறுக்கப்படும் வார்த்தையாக Folksonomy தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. பதிவுலகம் இரண்டாவதாகவும், பதிவுகள்(Blog) மூன்றாவதாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. பதிவுகளைக் கொண்டு ஆக்கிய புத்தகம்(Blook) நான்காவதாகவும், குக்கீ(Cookie) ஒன்பதாவதாகவும், விக்கி(Wiki) பத்தாவதாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டன.

`Blog`, `wiki` top list of hated Internet words - Zee News

-o❢o-

b r e a k i n g   n e w s...