.

Saturday, June 30, 2007

இராமதாஸ் Vs திமுக: "மத்திய சுகாதாரத்துறையை எதிர்த்து போராடத்தயாரா?"

பொறியியல் கல்லூரியில் சேருவதற்கு அதிக பணம் வசூல் செய்வதாக குற்றம்சாட்டும் டாக்டர் ராமதாஸ் மத்திய சுகாதாரத்துறையை எதிர்த்து போராட தயாரா என்று அமைச்சர் பொன் முடி கேள்வி எழுப்பினார்.

தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கல்வி கட்டணம்

தமிழகத்தில் உயர்கல்வித்துறை இருக்கிறதா? என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் கூறியிருக்கிறார். அவருக்கும் உங்களுக்கும் தெரியப்படுத்துவற்காக சில விளக்கங்களை தெரிவிக்க இருக்கிறேன். உயர் கல்வித்துறை மூலம் ஓராண்டில் செயல்படுத்தப்பட்ட முக்கிய சாதனைகளை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

பல்வேறு சங்கடங்கள் இருந்தாலும் ஒரு குழு அமைத்து நுழைவுத்தேர்வை ரத்து செய்தது பெரிய சாதனையாகும். அரசு பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கான கட்டணத்தை ரூ.12,500-ல் இருந்து ரூ.7,550 ஆக குறைப்பதற்கான நடவடிக்கையை கடந்த கல்வி ஆண்டு முதலே எடுத்து இருக்கிறோம்.

ரூ.27 கோடி ஒதுக்கீடு

அண்ணாபல்கலைக்கழக நிர்வாகம் பொறியியல் மற்றும் பாலிடெக்னிக்கில் உள்ள 192 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. பாலிடெக்னிக் மற்றும் அரசு கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல் இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டுள்ளது. அரசு பாலிடெக்னிக்கில் சேரும் முதல் ஆண்டு மாணவர்களுக்கு இந்தாண்டு முதல் இலவச பாட புத்தகமும் வழங்கப்பட்டு வருகிறது.

அரசு கல்லூரிகளில் ஷிப்டு முறை அறிமுகப்படுத்தப்பட்டதால் இதுவரை அரசு கல்லூரிகளில் 30 ஆயிரம் மாணவர்கள் படித்து வந்த நிலை மாறி குறைந்த பட்சம் 50 ஆயிரம் மாணவர்கள் படிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசு கல்லூரிகளில் கல்வி கட்டணம் அறவே ரத்து செய்யப்பட்டுள்ளது. 542 அரசு கல்லூரிகளில் வகுப்பறைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சமுதாய கல்லூரிகளை உருவாக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். அரசு கல்லூரிகளில் வகுப்பறைகள் கட்டுவதற்காக ரூ.27 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

தனியாரிடம் 250 பொறியியல் கல்லூரி

கடந்த ஆண்டு முதல் பொறியியல் கல்லூரிகளில் 65 சதவீதம் இடங்களையும் சிறுபான்மை பொறியியல் கல்லூரியில் 50 சதவீத இடங்களும் அரசுக்கு ஒதுக்கப்பட்டு நீதிமன்ற சிக்கல் இல்லாமல் பெற்று உள்ளோம். மனசாட்சி உள்ளவர்கள் இதை பாராட்டுவார்கள். ஒரு மூத்த அரசியல்வாதியான டாக்டர் ராமதாஸ், ராமன் குழு உள்ளதா? சுப்பிரமணியம் குழு உள்ளதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

புதிய கமிட்டிகள் நியமிக்கப்படும் வரை இந்த கமிட்டிகள் நடைமுறையில் இருக்கும் என்று ஏற்கனவே பத்திரிகைகளில் செய்தி வெளியாகி உள்ளது. 39 சதவீதம் இடம் நிர்வாகத்திற்கு ஒதுக்கப்படும் என்று சட்டம் இயற்றப்பட்டு குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. தனியாரிடம் மொத்தம் 250 பொறியியல் கல்லூரிகள் உள்ளது.

புகார்கள் வரவில்லை

சென்னையை சுற்றியுள்ள பொறியியல் கல்லூரிகளில் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பரவலாக செய்திகள் இருந்த போதும் தனிப்பட்ட முறையில் பெற்றோர்களிடம் இருந்தோ, மாணவர்களிடம் இருந்தோ எங்களுக்கு எந்த விதமான ஆதாரபூர்வமான குற்றச்சாட்டுகள் வரவில்லை.

டாக்டர் ராமதாசிடம் புகார் செய்த பெற்றோர் சங்கத்தினர் மாணவர்கள் எந்த கல்லூரியில் யார் எவ்வளவு பணம் வாங்கினார்கள் என்று கூறினால் தகுந்த நடவடிக்கை எடுக்க அரசு தயாராக உள்ளது.

250 பொறியியல் கல்லூரிகளில் 150-க்கும் மேற்பட்ட கல்லூரி ராமன் குழு, சுப்பிரமணியன் குழு மூலமாக ரூ.39 ஆயிரம், ரூ.32 ஆயிரம் என்ற கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. சில கல்லூரிகள் இதை விட குறைவான கட்டணங்களை வசூல் செய்கிறார்கள். டாக்டர் ராமதாஸ் எந்த கல்லூரியில் அதிக கட்டணம் வசூல் செய்கிறார்கள் என்று எழுதிக்கொடுத்தால் நடவடிக்கை எடுக்க தயாராக இருக்கிறோம்.

மற்ற மாநிலங்களில் தமிழ்நாட்டை விட உயர் கல்வி கட்டணம் குறைவாக இருந்தது என்று டாக்டர் ராமதாஸ் கூறியிருக்கிறார். கேரளாவில் உள்ள நீதிமன்ற தீர்ப்பின் படி கல்விக்கட்டணம் ரூ.75 ஆயிரம் வசூல் செய்கிறார்கள். கடந்த ஓராண்டு காலமாக அரசு எடுத்த கடும் நடவடிக்கையின் காரணமாக கல்வி கட்டணங்கள் குறைவாக வசூல் செய்யப்பட்டு வருகிறது.

ராமதாஸ் போராட தயாரா?

கிராமப்புற மாணவர்கள் பயன் அடையும் வகையில் உயர் கல்வித்துறையில் பல்வேறு திட்டங்களை செய்து வருகிறோம். பொறியியல் மருத்துவ கல்லூரிகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் முழுமையாக மாநில அரசிடம் இல்லை. டெல்லியில் நடந்த மாநாட்டில் மாநிலத்திற்கு முழுமையான அதிகாரம் கொடுக்க வேண்டும் என்று நான் கூறியிருக்கிறேன். இந்தியா முழுவதும் பொறியியல் கல்லூரிகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் எம்.சி.ஐ., டி.சி.ஐ., பி.சி.ஐ., எ.ஐ.சி.டி.ஈ.யிடம் தான் உள்ளது.

எனவே டாக்டர் ராமதாஸ் எம்.சி.ஐ., டி.சி.ஐ., பி.சி.ஐ., எ.ஐ.சி.டி.ஈ. ஆகிய குழுக்களின் அதிகாரத்தை குறைக்க மத்திய சுகாதாரத்துறை அலுவலகம் முன்பு போராட முன் வந்தால், முதல்-அமைச்சர் கருணாநிதியிடம் அனுமதி பெற்று நானும் போராட தயாராக இருக்கிறேன்.

மாநில அரசுக்கு முழுமையான அதிகாரம் வேண்டும். மேலே குறிப்பிட்ட நிர்வாக அதிகாரத்தை கட்டுப்படுத்தி, தடுத்து நிறுத்த டாக்டர் ராமதாஸ் போராடினால் அவருக்கு பின்னால் நானும் போராட்டத்தில் கலந்து கொள்வேன்.

நாங்கள் எடுத்த நடவடிக்கை நிதானமானது. நிரந்தரமாக மாணவர்களுக்கு பலன் அளிக்க கூடியது.

எதிர்காலத்தில் கிராமப்புற மாணவர்களுக்கு பலன் கிடைக்கும் வகையில் அரசு எல்லா விதமான நடவடிக்கையும் எடுத்து வருகிறது. உயர் கல்வி படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை கல்வியின் தரம் உயர்த்துவதற்கான முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம்.

இவ்வாறு அமைச்சர் பொன்முடி கூறினார்.

இதைத் தொடர்ந்து அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

ராமதாசிடம் கேட்க வேண்டும்

கேள்வி:- கூட்டணி கட்சிகளான தி.மு.க., பா.ம.க. இப்படி ஒருவர் மீது ஒருவர் புகார் கூறலாமா?

பதில்:-இது பற்றி டாக்டர் ராமதாசிடம் தான் கேட்க வேண்டும்.

கேள்வி:-கிராமப்பகுதி மாணவர்களுக்கு முன்பு வழங்கப்பட்டது போல் 15 சதவீத இட ஒதுக்கீட்டை தொழிற்கல்லூரிகளில் வழங்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளாரே?

பதில்:-இந்த முறையை நாங்கள் தான் கொண்டு வந்தோம். இந்த முறை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அது நிறுத்தப்பட்டு விட்டது.

கேள்வி:-பொறியியல் கல்லூரியில் மாணவர்கள் சேருவதற்கு கூடுதல் கட்டணம் வசூல் செய்ததாக ஒரு குற்றச்சாட்டுக்கூட வரவில்லையா?

பதில்:- ஒரு குற்றச்சாட்டுக்கூட வரவில்லை. உயர் கல்வித்துறை இயக்குனருக்கு புகார் வந்தால் கூட அவர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து இருப்பார்.

அதிக கட்டணம்

கேள்வி:- 250 பொறியியல் கல்லூரிகளில் ஒரு கல்லூரியில் கூட அதிக கட்டணம் வசூல் செய்தார்கள் என்பதற்கான ஆதாரம் இல்லையா?

பதில்:- ஆதாரம் இருந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுத்து இருப்போம். டாக்டர் ராமதாசுக்கு எழுதியிருக்கும் குற்றச்சாட்டை எங்களுக்கு எழுதியிருந்தால் நாங்கள் நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம். அதே நேரத்தில் தனியார் தொழிற்கல்லூரிகளில் ஆய்வு செய்யும் அதிகாரம் எங்களுக்கு இல்லை. அந்த கல்லூரிகளில் நிர்வாகத்தில் நாங்கள் தலையிட்டால் நீதிமன்றத்திற்கு சென்று விடுவார்கள்.

கேள்வி:- பொறியியல் கல்லூரிகளில் கண்காணிப்பதற்காக தனி குழு அமைக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கூறியிருக்கிறாரே?

பதில்:- இதற்காக இயக்குனர் தலைமையில் ஒரு குழு உள்ளது. இந்த குழுவிடம் புகார் கூறினால் நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.

இவ்வாறு அமைச்சர் பொன்முடி கூறினார்.

"தினத்தந்தி"

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...