.

Saturday, June 30, 2007

சைதப்பேட்டை தீவிபத்தில் 200 குடிசைகள் சாம்பல்.

சைதாப்பேட்டை மறைமலை அடிகளார் பாலம் அருகே குடிசை வீடுகள் ஏராளம் உள்ளன. கூலி வேலை செய்து வரும் தொழிலாளர்கள் சிறுசிறு குடிசைகளை போட்டு வசித்து வருகிறார்கள். அதிகாலை 2 மணியளவில் குடிசை ஒன்று தீப்பிடித்து எரிந்தது.

அடுத்தடுத்துள்ள வீடுகளிலும் தீ மளமளவென பற்றி எரிந்தது. வீட்டில் அயர்ந்து தூங்கி கொண்டிருந்த தொழிலாளிகள் தங்களது குழந்தைகளை தூக்கி கொண்டு வெளியே ஓடிவந்தனர்.

தகவல் அறிந்து தீயணைப்புபடை வீரர்கள் விரைந்து வந்தனர். தீ மேலும் பரவாமல் அணைத்தனர். தீயணைப்பு வண்டிகள் குடிசைகள் இருக்கும் பகுதிக்குள் செல்ல முடியாததால் சற்று தூரத்தில் நின்று பைப் மூலம் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 200 குடிசை வீடுகள் எரிந்து நாசமாயின.

வீட்டில் இருந்த பீரோ, சமையல் பாத்திரங்கள், தட்டுமுட்டு சாமான்கள் அனைத்தும் சேதமடைந்தன. உடமைகளை பறி கொடுத்த பெண்கள் அழுது கொண்டே தங்களது வீடுகளின் முன்பு சோகமாக உட்கார்ந்து இருந்தனர். சிம்னி விளக்கு கீழே விழுந்து குடிசையில் தீப்பிடித்ததாக கூறப்படுகிறது.

தீ விபத்து நடந்த பகுதியை சென்னை மாநகராட்சி கமிஷனர் ராஜேஷ் லக்கானி நேரில் சென்று பார்வையிட்டார். வீடுகளை இழந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார். அந்த பகுதி கவுன்சிலர் எம். மகேஷ்குமார் மாம்பலம்- கிண்டி தாசில்தார் ஷியாம் சுந்தர், மண்டல உதவி ஆணையர் முத்துகருப்பன் ஆகியோர் மேற்பார்வையில் நிவாரண உதவி உடனடியாக வழங்கப்பட்டன. ரூ.2000 ரொக்கமும், அரிசி, வேட்டி- சேலை வழங்கப்படுகிறது. வீடு களை இழந்தவர்கள் சைதாப் பேட்டை அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளி வளாகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு மாநகராட்சி சார்பில் உணவும் கொடுக்கப்பட்டது.

மாலைமலர்

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...