.

Saturday, June 30, 2007

சிவகங்கை நகராட்சித்தலைவர் கார் வெடிகுண்டால் கொலை

சிவகங்கை நகராட்சித்தலைவர் காரில் வெடிகுண்டு வைத்து கொல்லப்பட்டது பெரும் அதிர்ச்சி அலைகளைப் பரப்பியுள்ளது.

நகராட்சி தலைவரான முருகன் நேற்று தனது ஸ்கார்பியோ காரில் சென்று கொண்டிருந்தபோது டிரைவர் சீட்டுக்கு கீழே வைக்கப்பட்டிருந்த சக்தி வாய்ந்த குண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.

இதில் முருகன் அந்த இடத்திலேயே பலியானார். டிரைவர் பாண்டி தூக்கி வெளியே வீசப்பட்டார். குண்டு வெடித்த காரின் அருகே நின்றிருந்த பஸ்சின் கண்ணாடிகளும் உடைந்து சிதறி பலர் காயமடைந்தனர். மேலும் அந்தப் பக்கமாக நடந்து சென்ற பலரும் காயமடைந்தனர்.

டிரைவர் பாண்டி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இச் சம்பவத்தால் சிவகங்கையில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. காரில் வெடித்தது சக்தி வாய்ந்த குண்டு என்பது குறிப்பிடத்தக்கது. இதை ரிமோட் மூலம் இயக்கி வெடிக்கச் செய்துள்ளனர்.

திமுகவில் இருந்த முருகனுக்கு கடந்த உள்ளாட்சி தேர்தலில் கட்சி சார்பில் சீட் வழங்கப்படவில்லை. இதனால் சுயேட்சையாக போட்டியிட்டார். கடந்த நவம்பர் 13ம் தேதி நடந்த தலைவர் தேர்தலில் 15 கவுன்சிலர்கள் ஆதரவுடன் முருகன் வெற்றி பெற்றார்.

அதே நேரம் கட்சிக்கு எதிராக செயல்பட்டதால் முருகன் திமுகவிலிருந்து நீக்கப்பட்டார். இதனால் சுயேட்சை தலைவராக செயல்பட்டு வந்தார்.

இவருக்கும் திமுக நகரச் செயலாளர் முத்துகிருஷ்ணன் தரப்புக்கும் இடையே அவ்வப்போது மோதல்கள் நடப்பது வழக்கம். மேலும் கேபிள் டிவி தொழில் போட்டி காரணமாக முருகனின் நண்பர் நாகராஜ் என்பலருக்கும் திமுக கவுன்சிலர் ஒருவருக்கும் தகராறு இருந்து வந்துள்ளது.

இவர்கள் தவிர அப் பகுதியில் வேறு சில கட்சியினருடன் பல விவகாரங்களில் மோதியுள்ளார் முருகன்.

இந் நிலையில் தான் காரில் குண்டு வைத்து முருகன் கொல்லப்பட்டுள்ளார்.

அவருடைய கார் இரவு நேரத்தில் மேல்நிலை தொட்டிக்கு கீழே நிறுத்தப்படுவது வழக்கம். அங்கு தான் காரில் குண்டு வைக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

காரில் குண்டு வைத்து அதை ரிமோட் மூலம் வெடிக்கச் செய்யும் அளவுக்கு சிவகங்கை போன்ற சிறிய ஊருக்குள் டெக்னாலஜி வந்து நுழைந்திருப்பது பெரும் அதிர்ச்சியைப் பரப்பியுள்ளது. இதன் பின்னணியில் வெடிகுண்டுகளை கையாளும் பெரிய அளவிலான கூலிப் படை இருக்கலாம் என்று தெரிகிறது.

தட்ஸ் தமிழ்

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...