.

Saturday, June 30, 2007

ஜெ.விவகாரம்: தேர்தல் ஆணையம் மீது கருணாநிதி குற்றச்சாட்டு

4 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்த வழக்கில் ஜெயலலிதா மீதான புகார் கேட்பாரற்று போய்விடுமோ என சந்தேகப்படுகிறேன் என்று முதல்-அமைச்சர் கருணாநிதி கூறினார்.

தி.மு.க. தலைவர், முதல்-அமைச்சர் கருணாநிதி நேற்று அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

வெற்றிக்கு சிறப்பு

கேள்வி:- கள்ள ஓட்டு புகார் சொல்ல முடியாத அளவிற்கு மதுரை மேற்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற்று, மத்திய அரசின் காவல் துறையினரே பொறுப்புகளை வகித்து இந்த இடைத்தேர்தல் நடந்து முடிந்திருக்கின்றது. உங்கள் அணிக்கு மிகப் பெரிய வெற்றி கிடைத்திருக்கின்றது. இது உங்கள் ஆட்சிக்குக் கிடைத்த நற்சான்று என்று எடுத்துக் கொள்ளலாமா?

பதில்:- கள்ள ஓட்டு புகார் எந்த இடத்திலும் ஏற்படவில்லை. எந்தப் பத்திரிகைகளிலும் அப்படியொரு செய்தி வரவில்லை. கள்ள ஓட்டு புகார் மாத்திரமல்ல, எந்தப் புகாரும் இல்லாமல் இந்தத் தேர்தல் நடந்து முடிந்திருக்கின்றது. தேர்தல் கமிஷன் ஒரு வகையிலே சிந்தித்துச் செயல்பட்டாலும், அந்தச் சிந்தனையும் செயலும் எங்கள் அணியின் வெற்றிக்கு சிறப்பைத் தேடிக் கொடுத்திருக்கின்றன.

செயற்கையிலே தான்

கேள்வி:- இது செயற்கையான முடிவு என்று ஜெயலலிதா சொல்லியிருக்கிறாரே?

பதில்:- உலகத்திலேயே நீங்கள், நான் எல்லோருமே செயற்கையிலே தான் பிறக்கிறோம். அதிகார துஷ்பிரயோகம், சதி, அராஜகம், ராவணன், கம்சன், இரணியன் போன்ற ஜெயலலிதாவின் இலாகாக்கள் முழுவதும் அவரது அறிக்கையிலே சொல்லப்பட்டுள்ளது.

மீண்டும் அந்தப் பதவிகளில்

கேள்வி:- தேர்தல் ஆணையத்தால் மதுரையிலிருந்து மாற்றப்பட்ட அதிகாரிகள் எல்லாம் மீண்டும் அந்தப் பதவிகளிலே அமர்த்தப்படுவார்களா?

பதில்:- ஏற்கனவே அப்படி பழைய காலத்தில் நடைபெற்றிருக்கிறது. தேர்தல் நேரத்தில் தேர்தல் ஆணையத்தினால் மாற்றப்பட்ட அதிகாரிகள் தேர்தல் முடிந்த பிறகு மீண்டும் அந்தப் பதவிகளில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். இப்போது தேர்தல் பணிகள் முடிவுற்றதும், அதற்கான அறிவிப்பு வந்த பிறகு அரசு அதைப்பற்றி யோசிக்கும்.

ஜெயலலிதா அறிக்கை

கேள்வி:- தேர்தல் களத்தில் அ.தி.மு.க., பா.ஜ.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் எல்லாம் முழு மூச்சுடன் உங்களை எதிர்த்தன. இதையெல்லாம் விட தேர்தல் ஆணையமே கடும் எதிர்ப்பைக் காட்டியது. இப்படி எல்லா பக்கங்களிலிருந்தும் வந்த எதிர்ப்பினை மீறி நீங்கள் பெரும் வெற்றியைப் பெற்றிருந்த போதிலும், பிரதான எதிர்க்கட்சித் தலைவர் இது உண்மையான வெற்றியல்ல என்றும், வாக்காளர்கள் நிர்ப்பந்தப்படுத்தப்பட்டார்கள் என்று அறிக்கையிலே சொல்லியிருக்கிறாரே?

பதில்:- (செய்தியாளர்களிடம் காட்டி) இது ஜெயலலிதா அறிக்கை. அதில் உண்மை எப்படி வெளி வந்திருக்கிறது என்பதைப் பாருங்கள். "மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் வந்துள்ள முடிவு எதிர்பார்த்தது தான்'' - ஆக இவர்கள் இந்த முடிவினை எதிர்பார்த்துத் தான் இருந்திருக்கிறார்கள். மேலும் அறிக்கையிலே சொல்கிறார், "இப்போது வந்துள்ளது மக்கள் தீர்ப்பு அல்ல, இது. தி.மு.க.வினரின் திட்டமிட்ட சதி. நியாயமாகத் தேர்தலை நடத்தி இருந்து அதில் அ.தி.மு.க. இயல்பாக வெற்றி பெற்றிருந்தால் தான் ஆச்சரியப்பட வேண்டும்.'' இந்த அறிக்கையில் அவரே கையெழுத்திட்டுள்ளார்.

அழகிரிக்கு பதவி?

கேள்வி:- இந்த இடைத் தேர்தல் வெற்றிக்கு முழு முதல் காரணம் அழகிரி என்று அனைவருமே கூறுகிறார்கள். எனவே அவருக்கு கட்சியிலே பதவிப் பொறுப்பு ஏதாவது கொடுக்கப்படுமா?

பதில்:- அவருக்கு என்ன வேண்டுமென்று கேளுங்கள்.

கேள்வி:- வெற்றி பெற்றவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். மகத்தான வெற்றி. அவரது வெற்றிக்கு நீங்கள் ஆதரவு தெரிவித்தீர்கள். ஆனால் எல்லா எதிர்க்கட்சிகளும், ஏன் தேர்தல் ஆணையம் கூட உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும் குறி வைத்துத் தாக்குகிறார்களே?

பதில்:- அதில் நான் பெருமையடைகிறேன். நானும் என்னுடைய குடும்பத்தினரும் அதற்காக பெருமையடைகிறோம்.

உணர்ந்து செயல்படுவோம்

கேள்வி:- இந்த வெற்றியின் மூலமாக ஆட்சிக்கு கூடுதலாகப் பொறுப்பு தரப்பட்டிருப்பதாக நினைக்கிறீர்களா?

பதில்:- மக்கள் பொதுத் தேர்தல் நேரத்தில் நாங்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருவதை கண்கூடாகப் பார்க்கிறார்கள். அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தான் எங்கள் அணிக்கு வெற்றியைத் தந்துள்ளார்கள். தொடர்ந்து இதனைக் கட்டிக் காக்கும் பொறுப்பு எங்கள் அணிக்கு இருப்பதை உணர்ந்து செயல்படுவோம்.

விஜயகாந்த் கட்சிக்கு கூடுதல்

கேள்வி:- விஜயகாந்த் கட்சிக்கு கடந்த தேர்தலில் கிடைத்ததை விட இந்தத் தேர்தலில் அதிக வாக்குகள் கிடைத்திருப்பதாகச் சொல்கிறார்களே?

பதில்:- எனக்குத் தெரியாது. நான் அந்தக் கணக்கைப் பார்க்கவில்லை.

கேள்வி:- இன்று காலையில் வெளிவந்த "ஆனந்த விகடன்'' பத்திரிகையில் தலையங்கத்தில் வெற்றி மட்டுமல்ல, அதை அடைகின்ற வழியும் முக்கியம், காங்கிரஸ் வெற்றி பெற்றால் கூட, அது பெருமையடையத் தக்க வெற்றி அல்ல என்று எழுதியிருக்கிறார்களே?

பதில்:- இதற்கு இன்று திராவிடக் கழகத் தலைவர் வீரமணி விடுதலையில் விளக்கமாக பதில் எழுதியிருக்கிறார்.

காங்கிரசுக்கு கூடுதல் இடம்

கேள்வி:- சட்டப் பேரவையில் காங்கிரஸ் கட்சிக்கு கூடுதலாக ஒரு இடம் கிடைக்கச் செய்திருக்கிறீர்கள். இதற்கு மேலிடத்திலிருந்து நன்றி தெரிவித்திருக்கிறார்களா?

பதில்:- வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள்.

4 இடங்களில் போட்டி

கேள்வி:- சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 2001-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நான்கு இடங்களில் போட்டியிட்டது பற்றி நடைபெறும் வழக்கில், நடவடிக்கை எடுக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்ட பிறகும், தேர்தல் ஆணையம் நேரடியாக நடவடிக்கை எடுக்காமல், அந்தத் தீர்ப்புக்கு விளக்கம் கேட்டு உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்து, அதை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருப்பதைப் பற்றி?

பதில்:- நீதி மன்றத்தில் இது போன்ற ஒரு விளக்கத்தைக் கேட்க ஒரு வழக்கறிஞர் முற்பட்டதற்கு அடிப்படை காரணம் என்ன என்பது அறியப்பட வேண்டிய ஒன்று. இந்தக் குற்றச்சாட்டுகளை வைத்து நடவடிக்கை எடுக்க வேண்டிய தேர்தல் ஆணையத்தின் சார்பில் இது போன்ற விளக்கங்களைக் கேட்பது - அதே நீதி மன்றத்தில் வழக்கறிஞர் சண்முகசுந்தரம், எம்.பி., எழுப்பிய கேள்வியில் காணப்படும் ஐயப்பாட்டை உறுதிப்படுத்துகிறது.

தி.மு.க.வுக்கு எதிராக

கேள்வி:- தேர்தல் ஆணையம் தொடர்ந்து தி.மு.கழகத்திற்கு எதிராகவும், ஜெயலலிதாவைக் காப்பாற்றுகின்ற முயற்சியிலும் ஈடுபடுவதற்கான காரணம் என்ன?

பதில்:- அது இன்று நேற்றல்ல. பொதுத் தேர்தலுக்கு முன்பே பொன்னேரி தொகுதியில் 20 ஆயிரம் போலி வாக்குகள் சேர்க்கப்பட்டு, அது வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யப்பட்டு - அந்த உண்மையைக் கண்டறிந்த பிறகு, அந்தப் பகுதியின் ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாஸ்கர் சுந்தரம், அந்த விவரங்களை என்னிடத்திலே ஆதாரத்துடன் கொண்டு வந்து காட்டி விளக்கினார். நான் உடனடியாக அவரையும், தி.மு.கழக தலைமைக் கழகத்தில் உள்ளவர்களையும் தமிழகத் தேர்தல் ஆணையர் நரேஷ் குப்தாவிடம் அனுப்பி வைத்து விவரங்களைக் கூறுமாறு சொன்னேன். அவர் அந்தப் புகாரை ஏற்றுக் கொண்டு, உடனடியாக நடவடிக்கை எடுப்பேன் என்று சொன்னார். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்படி பல புகார்கள் தி.மு.க. கூட்டணியினரால் தரப்பட்டவை கேட்பாரற்றுப் போய் விட்டன. அந்த வரிசையில் தான் நான்கு இடங்களில் வேட்புமனு தாக்கல் செய்த விவகாரம் இடம் பெறுமோ என்று சந்தேகப்படுகிறேன்.

தி.மு.க.வாக இருப்பது தான்

கேள்வி:- தேர்தல் ஆணையத்திற்கும், தி.மு.கழகத்திற்கும் இடையே இப்படிப்பட்ட உரசல் நடப்பதற்கு என்ன காரணம்?

பதில்:- நாங்கள் தி.மு.கழகமாக இருப்பது தான்!

ராமதாஸ் போராட்டம்

கேள்வி:- டாக்டர் ராமதாஸ் கோட்டைக்குள்ளே வந்து உங்கள் அனுமதியோடு சுயநிதி கல்லூரிகள் அதிகமாக கட்டணம் வசூலிப்பதை எதிர்த்து போராடப் போவதாக அறிவித்திருக்கிறாரே, அதற்கு இன்று அமைச்சர் பொன்முடி கூட அது மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குட்பட்டது, எனவே டெல்லியில் போராடலாம் என்று கருத்து தெரிவித்திருக்கிறாரே?

பதில்:- "கோட்டைக்குள்ளேயே என் கால் படாது'' என்று ஒரு முறை சத்தியமே செய்திருக்கிறார், டாக்டர் ராமதாஸ். இப்போது பட்டால், அது வரவேற்கப்பட வேண்டியது தானே. ஆனால் எதற்காக என்பது பிரச்சினை. அதற்கு தான் அமைச்சர் பொன்முடி விளக்கம் அளித்திருக்கிறார்.

கேள்வி:- சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அதிகமாக கட்டணம் வாங்கப்படுவதாக டாக்டர் ராமதாஸ் சொல்கிறார். அதற்கு ஆதாரம் கிடைக்கவில்லை. யாரும் அப்படிப்பட்ட புகார் கூறுவதில்லை என்று பொன்முடி சொல்கிறார். இதைப்பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்:- அப்படி அதிகக் கட்டணம் கொடுப்பவர்கள், புகார் கொடுத்தால், ஆதாரங்களோடு புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

அமெரிக்க கப்பல்

கேள்வி:- அணுசக்தி கப்பல் ஒன்று அமெரிக்காவிலிருந்து சென்னை வருவதைப் பற்றி பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அரசு என்ன செய்யப்போகிறது?

பதில்:- மத்திய அரசின் அதிகாரத்திற்கு உட்பட்ட பிரச்சினை இது. செய்திகள் வந்து கொண்டிருக்கின்றது. அது குறித்து போராட்ட அறிவிப்புகளும் வருகின்றன. நாங்கள் இன்னும் அதுபற்றி எங்கள் உயர் நிலைக் குழுவில் சிந்திக்கவில்லை.

கேள்வி:- குடியரசு தலைவர் தேர்தல் உங்கள் கூட்டணி சார்பாக போட்டியிடும் பிரதீபா பட்டீல் அவர்கள் மீது ஊழல் புகார்களைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்களே?

பதில்:- பிரதமரே அதை மறுத்திருக்கிறார்.

கேபிள் டி.வி. அரசுடமை?

கேள்வி:- டாக்டர் ராமதாஸ் அரசு சார்பில் கேபிள் நெட் ஒர்க் ஆரம்பிக்க வேண்டுமென்று சொல்லியிருக்கிறாரே?

பதில்:- இதற்கான அதிகாரம் மத்திய அரசுக்கு இருக்கிறதா? மாநில அரசுக்கு இருக்கிறதா? என்பதே கேள்விக் குறியாக உள்ளது. மத்திய மந்திரி ராஜா, அது மத்திய அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது என்கிறார். எனவே இதை ஆராய்ந்து - அது மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டு வந்தால், அதைத் தேசியமயமாக்குவதற்கான முயற்சிகளில் நாங்கள் ஈடுபடுவோம்.

தீவிரவாத பயிற்சி

கேள்வி:- தேனியில் 600 மாணவர்களுக்கு தீவிரவாத பயிற்சி கொடுக்கப்பட்டதாக செய்தி வந்திருக்கிறதே?

பதில்:- அதுகுறித்து தீவிரமாக விசாரிக்கப்படுகிறது. நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கேள்வி:- அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் காஞ்சீபுரம், கும்மிடிப்பூண்டி இடைத் தேர்தல்கள் நடைபெற்றன. அப்போது ஆதாரப்பூர்வமாக தேர்தல் விதிமுறை மீறல்கள் எல்லாம் சொல்லப்பட்டன. ஆனால் மதுரை மேற்குத் தொகுதி இடைத்தேர்தலில் அந்த அளவிற்கு விதிமுறை மீறல்கள் இல்லையே என்று தேர்தல் ஆணையரிடம் நாங்கள் கேட்ட போது, இது குழந்தைத் தனமான வாதம் என்றும், இரண்டையும் ஒப்பிட்டுக் கேட்கக் கூடாது என்றும் கூறியதைப் பற்றி?

பதில்:- அவர் சொன்னது குழந்தைத் தனமா? நீங்கள் சொன்னது குழந்தைத் தனமா என்பதை உங்கள் தீர்ப்புக்கே விட்டு விடுகிறேன்.

துணை ஜனாதிபதி

கேள்வி:- குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் இடதுசாரிகள் போட்டியிடப் போவதில்லை என்று சொல்லியிருக்கிறார்கள். தி.மு.க. போட்டியிடுமா?

பதில்:- தி.மு.க. இதுவரையில் அந்தக் கோரிக்கை வைக்கவில்லை.

இவ்வாறு கருணாநிதி கூறினார்.

"தினத்தந்தி"

1 comment:

Boston Bala said...

கொஞ்சம் நீளம். ஆறி ஆற அமரத்தான் படிக்கணும் :)

-o❢o-

b r e a k i n g   n e w s...