.

Monday, July 2, 2007

குடியரசுத் தலைவர் தேர்தலில் மூன்றாவது அணி வாக்களிக்காது - ஜெயலலிதா

குடியரசுத் தலைவர் தேர்தலில், அதிமுக, மதிமுக, தெலுங்கு தேசம், சமாஜவாதி, அசாம் கண பரிஷத் உள்ளிட்ட மாநிலக் கட்சிகள் அடங்கிய ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி யாருக்குமே வாக்களிக்காது என்கிறார் ஜெயலலிதா.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, "டைம்ஸ்-நௌ'' என்ற தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இதைத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் பிரதிபா பாட்டீல் குடியரசுத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார். அவரை மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, இடதுசாரிகள், தேசிய ஜனநாயக கூட்டணியிலேயே இடம் பெற்றுள்ள சிவசேனை ஆகியவை ஆதரிக்கின்றன. இதனால் அவருடைய வெற்றி உறுதியாகிவிட்டது.

சுயேச்சையாகப் போட்டியிட்டாலும், பாரதீய ஜனதாவின் ஆதரவு பெற்றவர்தான் பைரோன் சிங். எனவே அவருக்கு வாக்களித்தால், சிறுபான்மைமைச் சமூகத்தவரின் ஆதரவு கிடைக்காதோ என்ற சந்தேகம் மூன்றாவது அணிக்கு இருக்கிறது. அத்துடன், எதிர்காலத்தில் இடதுசாரிகளுடன் இணைந்துச் செயல்பட விரும்பினால், பாரதீய ஜனதா ஆதரிக்கும் வேட்பாளரை ஆதரிப்பது அதற்குத் தடையாக இருந்துவிடும் என்று அஞ்சுகிறது. எனவே யாருக்கும் வாக்களிக்காமல் இருந்துவிடுவது என்ற முடிவை மூன்றாவது அணி எடுத்திருக்கிறது.

சோனியா மீது காட்டம் ஏன்? காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை ஏன் ஒவ்வொரு அறிக்கையிலும் கடுமையாகச் சாடுகின்றீர்கள் என்று நிருபர் கேட்டார்.

"அன்னியர் ஆதிக்கத்திலிருந்து நாடு விடுதலை பெற வேண்டும் என்று லட்சோப லட்சம் மக்கள் தங்களுடைய உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்ப்பணித்துள்ளனர். அப்படி இருக்க, ராஜீவ் காந்தியைத் திருமணம் செய்துகொண்டார் என்பதற்காக இத்தாலியில் பிறந்த சோனியாவைத் தலைவராக ஏற்க வேண்டிய அவசியம் இல்லை; நூறு கோடிக்கும் மேற்பட்ட மக்களைக் கொண்ட நாட்டில், கட்சிக்கும் ஆட்சிக்கும் தலைமை தாங்க ஒருவர் கூடவா கிடக்காமல் போய்விட்டார்கள் என்று வினவினார் ஜெயலலிதா.

இதனாலேயே அந்தக் கட்சியையும் அதன் தலைவரையும் தீண்டத்தகாதவர்களாகிவிட்டார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். தானும் தனது கட்சியும் இந்தியரைத்தான் பிரதமர் பதவியில் அமர்த்தப்போவதாக அவர் சூளுரைத்தார். இடதுசாரிகள் கொள்கை ஒன்றாகவும் செயல் வேறொன்றாகவும் இருக்கின்றனர் என்றார். இந்திய-அமெரிக்க அணுசக்தி உடன்பாடு இந்திய நலனுக்கு எதிரானது என்று கண்டித்தார்.

தேசிய அரசியலில் ஈடுபடுவீர்களா என்று கேட்டபோது, இந்தியாவை வல்லரசாக்க தன்னால் இயன்ற அனைத்தையும் செய்யப் போவதாக பதில் அளித்தார்.

தினமணி

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...