குடியரசுத்தலைவர் பதவிக்கான வேட்பாளர் பிரதீபா பட்டீல்,தமிழக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆகியோரை சந்தித்து ஆதரவு திரட்டுவதற்காக, சென்னை தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் தலைவர் என்ற முறையில் முதல்- அமைச்சர் கருணாநிதி நேற்று இரவு விருந்து ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்
இந்த நிகழ்ச்சியில் பிரதீபா பட்டீல் பேசியதாவது:-
ஐக்கிய முற்போக்கு கூட்டணி மற்றும் இடதுசாரிகள் சார்பில் குடியரசுத்தலைவர் தேர்தலில் என்னை வேட்பாளராக நிறுத்தி இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த தேர்தலில் வெற்றி பெற்றால், இந்தியாவின் முதல் பெண் குடியரசுத்தலைவர் என்ற மிகப்பெரிய பெருமை என்னை வந்து சேரும். இந்தியா சுதந்திரம் அடைந்த 60 ஆண்டு சரித்திரத்தில், குடியரசுத்தலைவர்மாளிகையை முதன் முதலாக ஒரு பெண் அலங்கரிப்பாள்.
இது எனக்கான தேர்தல் என்று நான் நினைக்கவில்லை. இதில் நான் பெறும் வெற்றி, இந்தியாவின் லட்சோப லட்சம் மக்கள் பெறும் வெற்றியாக கருதுகிறேன். இந்த நேரத்தில், இந்திய சுதந்திரத்துக்காக பாடுபட்ட மகாத்மா காந்தி மற்றும் எண்ணற்ற ஆண், பெண்களை நினைத்துப்பார்க்கிறேன்.
குடியரசு என்ற வார்த்தை, நமது நாட்டின் ஜனநாயகத்தின் மிகப்பெரிய மதிப்பை வெளிக்காட்டுகிறது. ஜனநாயகம் என்ற அந்த மிகப்பெரிய சக்தியை மக்கள் அரசியல் அமைப்பின் அடிப்படையில் காலகாலமாக அனுபவித்து வருகிறார்கள்.
நாமெல்லாம் இளைய இந்தியாவில் வாழும் பழைய கலாசாரத்தைக் கொண்டவர்கள். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவை நவீனப்படுத்துவதற்கும், சமூக-பொருளாதார மேம்பாட்டைக் கொண்டு வருவதற்கும் அரசியல் அமைப்பு சட்டங்களே அடிப்படையாக உள்ளன. மதச்சார்பின்மை, சமத்துவம், மத ஒற்றுமை போன்றவைதான் நமது நாட்டுக்கு தேவையான அஸ்திவாரமாகும்.
பொருளாதார வளர்ச்சியை அனைத்து தரப்பினரும் பெற வேண்டும். ஏழைகள், தலித்துகள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டவர்கள், இளைஞர்கள், பெண்கள் அனைவருமே மேம்பாடு அடைய வேண்டும்.
கடந்த சில நாட்களாக என்னை பற்றிய குற்றச்சாட்டுகள் பேசப்பட்டும் எழுதப்பட்டும் வருகின்றன. எனக்கு எதிராக தீய நோக்கத்தோடு கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு நான் அளிக்கும் ஒரே பதில் இதுதான். அவை அனைத்தும் பொய்யும், அடிப்படை ஆதாரம் அற்றவை.
எனது நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கும் முயற்சிகளை எல்லாம் நிராகரித்து விட்டு, எனது நாட்டு மக்களுக்கு சேவையாற்றுவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு நான் என்னை அர்ப்பணித்து செயல்பட்டு வருகிறேன். நான் நமது தேசத்துக்கு பணிவுடனும், ஆழ்ந்த கடமை உணர்ச்சியுடனும் தொடர்ந்து பணியாற்றுவேன்.
என்னை வேட்பாளராக தேர்வு செய்து, ஆதரவு நல்கும் முதல்-அமைச்சர் கருணாநிதி மற்றும் அனைத்து கட்சி தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். எனக்கு ஆதரவு நல்கும் உங்கள் ஒவ்வொருவருக்கும் நான் நன்றி கூறுகிறேன். குடியரசுத்தலைவர் தேர்தலில் நீங்கள் எனக்கு உங்கள் வாக்கை அளிப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். குடியரசுத்தலைவர் ஆக்குவதற்காக என் மீது நீங்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கும் எனது நன்றி.
No comments:
Post a Comment