.

Sunday, August 19, 2007

தமிழறிஞர்களுக்கான தொல்காப்பியர் விருது-ரூ.ஐந்து இலட்சம்

மத்திய செம்மொழி தமிழ் ஆய்வு மையத்தின் தொடக்க விழா சென்னையில் நடந்தது. மத்திய அமைச்சர் அர்ஜூன் சிங் இதைத் தொடங்கி வைத்தார். முதல்வர் கருணாநிதி தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில், அமைச்சர் அர்ஜூன் சிங் பேசுகையில்,

செம்மொழித் தமிழில் உள்ள பழம்பெரும் காப்பியங்கள், இதிகாசங்களை தொகுத்து அச்சிடும் பணி கோவையில் நடந்து வருகிறது. அப்பணி இறுதி வடிவத்தில் உள்ளது. அச்சிடும் பணி இந்த ஆண்டு இறுதிக்குள் முடிந்து விடும்.

இதுதவிர செம்மொழித் தமிழில் உள்ள படைப்புகளை தொலைக்காட்சித் தொடர்களாக உருவாக்கும் திட்டமும் உள்ளது. இவற்றை அடுத்த ஆண்டு ஜனவரி 14ம் தேதி முதல்வர் கருணாநிதி தலைமையில் வெளியிடுவோம்.


செம்மொழித் தமிழில் சிறந்து விளங்கும் தமிழறிஞர்களுக்கு தேசிய விருதுகள் வழங்கப்படவுள்ளது. இந்த விருதுக்கு தொல்காப்பியர் விருது என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த விருதுக்குரிய பரிசுத் தொகையாக ரூ. 1 லட்சம் அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இத்தொகை முதல்வர் கருணாநிதியின் கோரிக்கையின் பேரில் ரூ. 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதுதவிர குறள் பீடம் விருதும் வழங்கப்படும். இந்த விருதுக்கான பரிசுத் தொகையும் ரூ. 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும், ஐந்து இளம் தமிழறிஞர்களுக்கு ரூ. 1 லட்சம் பரிசுத் தொகையுடன் கூடிய விருதும் வழங்கப்படும்.

செம்மொழி தமிழ் ஆய்வு மையத்தை சென்னையில் நிறுவும் தமிழக மக்களின் கனவு தற்போது நனவாகியுள்ளது. இந்த மையத்தை அமைக்க 29 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த மையத்தில் தமிழ் ஆய்வுகள் தவிர செம்மொழி தமிழ் போதனைகளும் நடத்தப்படும். மேலும் பட்டப் படிப்புகளையும் தமிழக அரசு இந்த மையம் மூலம் நடத்த நான் யோசனை தெரிவித்துள்ளேன்.

கடந்த 2 நூற்றாண்டுளாக சமஸ்கிருதம் குறித்து விரிவாக ஆய்வுகள் நடந்துள்ளன. அதே அளவு சிறப்புடைய, 20 திராவிட மொழிகள் தோன்றக் காரணமான தாய் மொழியான தமிழுக்கும் அந்த அளவுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.

மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து உருவாக்கியுள்ள இந்த மையம் அதனை நிறைவு செய்யும்
என்றார்.

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...