.

Saturday, April 28, 2007

ச: நுழைவுத் தேர்வு தேவை இல்லை. ஐகோர்ட் தீர்ப்பு

நுழைவுத்தேர்வு இல்லை! * தமிழக அரசின் சட்டம் செல்லும் என ஐகோர்ட் தீர்ப்பு * பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களின் கவலை தீர்ந்தது

சென்னை: "தொழில் கல்விக்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்து தமிழக அரசு கொண்டு வந்த புதிய சட்டம் செல்லும்' என்று சென்னை ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. நுழைவுத் தேர்வு இல்லை என்று முடிவானதால் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களின் கவலை தீர்ந்தது. மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழில் கல்விக்கான நுழைவுத் தேர்வு 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்தது. இதை ரத்து செய்ய வேண்டும் என அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்தன. "நுழைவுத் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்; நகர்ப்புற மாணவர்களே பலனடைகின்றனர்' என்று கருத்து தெரிவிக்கப்பட்டது. கடந்த அ.தி.மு.க., ஆட்சியின் போது நுழைவுத் தேர்வை ரத்து செய்து இரண்டு முறை தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதனை சென்னை ஐகோர்ட் ரத்து செய்தது.

தி.மு.க., அரசு பதவியேற்ற உடன், நுழைவுத் தேர்வை ரத்து செய்வது குறித்து பரிந்துரைக்க முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இக்குழு அனைத்து தரப்பிலும் கருத்துக்களை கோரியது. வெவ்வேறு போர்டு தேர்வுகளை எழுதும் மாணவர்களின் மதிப்பெண்களை எப்படி சமன்படுத்துவது என்பது குறித்து ஆராய்ந்தது. கடைசியில் அரசுக்கு தனது அறிக்கையை அளித்தது. அதன் அடிப்படையில், நுழைவுத் தேர்வை ரத்து செய்து தமிழக அரசு சட்டம் கொண்டு வந்தது. இச்சட்டத்துக்கு ஜனாதிபதியின் ஒப்புதலும் பெறப்பட்டது. சட்டத்தை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மாணவர் அஸ்வின்குமார் உள்ளிட்ட நால்வரும், ஆதரித்து பா.ம.க., மாணவர் அணி, திராவிட கழகம் ஆகியவையும் மனுக்கள் தாக்கல் செய்தன. இந்த மனுக்களை முதலில் தலைமை நீதிபதி ஏ.பி.ஷா அடங்கிய "முதல் பெஞ்ச்' விசாரித்தது. பின்னர் இவ்வழக்கு நீதிபதிகள் பி.கே.மிஸ்ரா, சம்பத்குமார் அடங்கிய "டிவிஷன் பெஞ்ச்' விசாரணைக்கு மாற்றப்பட்டது. தமிழக அரசு சார்பில் அட்வகேட்ஜெனரல் விடுதலை, கூடுதல் அட்வகேட்ஜெனரல் கண்ணதாசன், சிறப்பு அரசு பிளீடர் சேகர், மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் வி.டி.கோபாலன், உதவி சொலிசிட்டர் ஜெனரல் பி.வில்சன், ஏ.ஐ.சி.டி.இ., சார்பில் வக்கீல் முரளிகுமரன், இந்திய மருத்துவ கவுன்சில் சார்பில் வக்கீல் சிங்காரவேலன், பா.ம.க., சார்பில் சீனியர் வக்கீல் ரவிவர்மகுமார், வக்கீல் ஜோதிமணி, தி.க., சார்பில் வக்கீல்கள் தியாகராஜன், வீரசேகரன், ஆகியோர் ஆஜராயினர். இவ்வழக்கில் கடந்த 11ம் தேதி தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டது.

நேற்று நீதிபதிகள் பி.கே.மிஸ்ரா, சம்பத்குமார் அடங்கிய "டிவிஷன் பெஞ்ச்' இவ்வழக்கில் உத்தரவு பிறப்பித்தது. பொதுவான உத்தரவை முதலில் நீதிபதி மிஸ்ரா வாசித்தார். பின்னர் நீதிபதி சம்பத்குமார் கூடுதலாக தனது உத்தரவை வாசித்தார். "நுழைவுத் தேர்வை ரத்து செய்து தமிழக அரசு கொண்டு வந்த சட்டம் செல்லும்' என்றும் இதை எதிர்த்த மனுக்களை தள்ளுபடி செய்தும் தீர்ப்பளித்தனர். கட்டடக்கலை படிப்பில் சேரும் மாணவர்களைப் பொறுத்தவரை அவர்கள் திறன் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்து தான் இச்சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என்றும், திறன் தேர்வு ரத்து பற்றி குறிப்பிடப்படவில்லை என்றும், எனவே அதை நடத்த வேண்டும் என்றும், நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர். "நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது கோடிக்கணக்கான மக்களின் விருப்பம். அவர்களின் விருப்பத்தை மறுக்க முடியாது. அதை நிறைவேற்ற வேண்டும்.சமூக நீதியை பாதுகாக்க இச்சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது' என்று நீதிபதி சம்பத்குமார் கூறினார்.

தினமலர்

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...