சுயநிதி கல்லூரிகளின் அதிக கட்டணத்தை முன்வைத்து இராமதாஸ் - பொன்முடி - கருணாநிதி என்று தொடரும் வாதப் பிரதிவாதங்களின் முக்கிய கட்டமாக இராமதாஸ் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
நாங்கள் திமுக அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கி வருகிறோம். 5 ஆண்டு காலத்துக்கு இது தொடரும் அதில் மாற்றம் இருக்காது.
நாங்கள் தமிழக அரசுக்கு எந்த வகையிலும் நெருக்கடி கொடுக்கமாட்டோம். எங்கள் செயல்பாடுகள் நெருக்கடி கொடுக்கும் வகையில் அமையாது. எங்கள் நிலைமைகளை, பிரச்சினைகளை கூட்டணி கட்சிகள் கூட்டம் நடந்தால் அதில் எடுத்து சொல்வோம். ஆனால் அதுமாதிரி கூட்டங்கள் நடத்தப்படுவது இல்லை. பின்னர் பிரச்சினைகள் பற்றி எப்படி ஆலோசிக்க முடியும்.
இப்போதைய கூட்டுறவு தேர்தலை எடுத்துக்கொள்ளுங்கள். எந்தவித ஆலோசனையும் எங்களுடன் நடத்தப்படவில்லை. பின்னர் எப்படி தேர்தலை சந்திப்பது?
சுயநிதி கல்லூரிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவது பற்றி எளியமக்களுக்கு தெரியும். இது பற்றி நேரடியாக விசாரித்து தெரிந்து கொள்ளலாம். இந்த பிரச்சினையை வெளியே கொண்டு வரவேண்டும். ஒருவர் மட்டும் குரல் கொடுத்தால் அது போதுமானதாக இருக்காது.
நாங்கள் தி.மு.க.வுடன் நட்புமுறையில் கூட்டணி அமைத்து உள்ளோம். இதற்காக அரசை புகழ்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்று அர்த்தமா?
நாங்கள் துணைநகரம் பிரச்சினை, விமானநிலையம் விரிவாக்கம் பிரச்சினை, காவிரி, பாலாறு பிரச்சினைகள் போன்றவற்றில் எங்கள் கட்சியின் கருத்துக்களை வெளிப்படுத்தினோம். அதாவது மக்கள் பிரச்சினைக்காக இந்த விஷயங்களில் குரல் கொடுத்தோம்.
திமுக அரசுக்கு மெஜாரிட்டி இல்லாததால் எங்களின் ஆதரவு அவசியம் தேவை. அவர்களுக்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவு வழங்குவோம்.
நன்றி: மாலைமலர்
No comments:
Post a Comment