.

Wednesday, July 4, 2007

'வாழும் தேவதை' புனிதத்தன்மை இழந்தார்

நேபாளத்தின் 'வாழும் தேவதையாக' வணங்கப்படும் 10 வயது சிறுமி, அமெரிக்கா சென்றதால், அவரது புனிதத்தன்மை கெட்டு விட்டதாக மதத் தலைவர்கள் அறிவித்துள்ளனர். இதனால், அந்தச்சிறுமி 'தேவதை' அந்தஸ்தை இழந்துள்ளார்.

தலைநகர் காத்மாண்டு அருகே பகாத்பூரில் உள்ள கோயிலில், சாஜனி ஷாக்யா என்ற சிறுமி இரண்டு வயதில் 'குமாரி' ஆக (வாழும் தேவதை) தேர்ந்தெடுக்கப்பட்டார். வாழும் பெண் தெய்வமாக வணங்கப்பட்ட இந்தச்சிறுமியை அப்பகுதியைச் சேர்ந்த இந்து மற்றும் பௌத்தர்கள் பயபக்தியுடன் வழிபட்டு வந்தனர்.

இந்நிலையில், நேபாளத்தின் பாரம்பரியம் மற்றும் அரசியல் குறித்து இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு நிறுவனம் தயாரிக்கும் நிகழ்ச்சிக்காக, 'குமாரி' சாஜனி ஷாக்யா, சமீபத்தில் அமெரிக்கா சென்றிருந்தார்.

இது தவறானது, நேபாள பாரம்பரியத்துக்கு எதிரானது என்று பகத்பூர் 'குமாரி' வழிபாட்டு மதத்தலைவர் ஜெய் பிரசாத் ரெக்மி செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.

அனுமதியின்றி அமெரிக்கா சென்றதால், 'குமாரி' சாஜனி ஷாக்யா புனிதத்தன்மை இழந்து விட்டதாகவும், அவருக்குப் பதிலாக புதிய 'குமாரியைத்' தேர்ந்தெடுக்க உள்ளதாகவும் ராய்டர் செய்தி நிறுவனத்திடம் அவர் தெரிவித்தார்.

சாஜனி ஷாக்யா போன்று நேபாளம் முழுவதும் ஏராளமான 'குமாரிகள்' உள்ளனர். தலைநகர் காத்மாண்டின் தர்பார் சதுக்கத்தில் உள்ள 15-ம் நூற்றாண்டு கோயிலைச் சேர்ந்த 'குமாரி', இவர்களில் பிரதானமானவர்.

புத்த மதத்தைச் சேர்ந்த பொற்கொல்லர் சமுதாயத்திலிருந்து கடுமையான ஆய்வுகளுக்குப் பின்னர் தேர்ந்தெடுக்கப்படும் பெண் குழந்தைகள், கோயில்களில் 'குமாரிகளாக' வீற்றிருந்து மக்களுக்கு ஆசி வழங்குகின்றனர்.

அவர்கள் பெரிய பெண்களாகும் வரை 'குமாரி' அந்தஸ்தில் நீடிப்பார்கள். அதன் பின்னர் குடும்பத்தில் இணைந்து சாதாரண வாழ்க்கையைத் தொடங்கலாம்.

முன்னாள் குமாரிகளுக்கு ஓய்வூதியமும் வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு நேபாள அரசுக்கு நோட்டீஸ் அனுப்பிய உச்ச நீதிமன்றம், 'குமாரிகள் வழிபாடு, குழந்தைகள் உரிமையை மீறும் செயலா?' என்பது குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்குமாறு உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...