.

Saturday, July 21, 2007

கேரளம் புதிய அணை கட்ட திமுக மறைமுக உதவி: நெடுமாறன் புகார்

பெரியாறு அணையின் நீர்த்தேக்கும் அளவை உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி உயர்த்த தமிழக அரசு ஆர்வம் காட்டவில்லை. அதே நேரத்தில், கேரள அரசு புதிய அணைக் கட்டும் முயற்சிக்கு ஆளும் கட்சியான திமுக மறைமுக உதவிகளைச் செய்து வருகிறது என தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் குற்றஞ்சாட்டினார்.

மதுரையில் வெள்ளிக்கிழமை அவர் கூறியதாவது:

பெரியாறு அணையில் நீர்த்தேக்கும் அளவை 142 அடியாக உயர்த்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும், அதை அமல்படுத்துவதற்கான நடிவடிக்கைகளில் தமிழக அரசு ஆர்வம் காட்டவில்லை. ஆனால், கேரள அரசு பெரியாறு அணை அருகே புதிய அணைக் கட்டும் முயற்சிக்கு தமிழக ஆளும் கட்சியினர் ஆதரவு அளித்து வருகின்றனர்.

புதிய அணைக் கட்டுவதற்குத் தேவையான மணல் தேனி மாவட்டத்தில் வைகை ஆற்றிலிருந்து எடுக்கப்படுகிறது. தினமும் 200 லாரி மணல் பெரியாறு அணைப்பகுதிக்கு கேரள அரசால் கொண்டு செல்லப்பட்டு அங்கு குவிக்கப்படுகிறது.

வைகை ஆற்றில் மணல் எடுக்க உயர் நீதிமன்றம் தடை விதித்தபோதிலும், மணல் எடுத்து கேரளத்துக்கு கொண்டு செல்வது நிறுத்தப்படவில்லை. மணல் கொள்ளையைத் தடுக்கக் கோரி, ஆக. 2-ம் தேதி பல்வேறு கட்சியினர் பங்கேற்கும் மாநாடு நடத்தப்படவுள்ளது.

தற்போது அணையின் நீர்மட்டம் 135 அடியாக உள்ளது. 136 அடியை விரைவில் எட்டவுள்ளது. இந் நிலையில், 27.2.2006-ம் தேதி உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் தமிழக அரசு நீர்த்தேக்கும் அளவை 142 அடியாக உயர்த்த வேண்டும். அதற்கு ஏற்றவகையில் மதகுகளை இறக்க வேண்டும்.

இலங்கைத் தமிழர்களுக்காக சேகரிக்கப்பட்ட ரூ. 1 கோடி மதிப்பிலான அத்தியாவசியப் பொருள்கள், மருந்துகள் செஞ்சிலுவைச் சங்கத்தினர் மூலம் அங்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், மத்திய அரசு அதற்கு இதுவரை அனுமதி அளிக்கவில்லை. எனவே, ஆக. 4-ம் தேதி விழுப்புரத்தில் நடைபெறும் மாநாட்டில் மத்திய அரசைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றார்.

தினமணி

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...