.

Thursday, June 28, 2007

மகாத்மா காந்தியின் கடிதம்: ஏலத்தை தடுக்க இந்தியா நடவடிக்கை

மகாத்மா காந்தி எழுதிய கடிதம் ஏலம் போகாமல் இருக்க பிரதமர் மன்மோகன் சிங் நடவடிக்கை எடுத்துள்ளார்.

மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்படுவதற்கு 19 நாட்களுக்கு முன்பு, 1948-ம் ஆண்டு ஜனவரி 11-ந்தேதி முஸ்லிம்கள் மீது பரிவு காட்டவேண்டும் என்று அவர் நாட்டு மக்களுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

மகாத்மாவின் இந்தக் கடிதத்தை லண்டனில் உள்ள கிறிஸ்டி கலைப் பொருள் விற்பனைக் கூடம் ஏலத்திற்கு கொண்டு வந்துள்ளது. வருகிற ஜுலை மாதம் 3-ந்தேதி கடிதம் ஏலம் விடப்பட இருக்கிறது. மகாத்மா காந்தி எழுதிய இந்தக் கடிதம் 10 லட்ச ரூபாய்க்கு ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட காந்தியவாதிகள் பசந்த் குமார் பிர்லா, சத்யா பால் ஆகிய இருவரும் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதி அதை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

அவர்கள் எழுதிய கடிதத்தில், "மகாத்மா காந்தியின் கடிதத்தை இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரி மூலம் பேச்சு வார்த்தை நடத்தி பெறவேண்டும். அல்லது ஏலத்தின்போது கடிதத்தை மத்திய அரசே எடுக்கவேண்டும்'' என்று யோசனை தெரிவித்திருந்தார்கள்.

இதனைத் தொடர்ந்து மகாத்மா காந்தியின் கடிதம் ஏலம் போகாமல் இருக்க நடவடிக்கை எடுக்கும்படி கலாசாரத்துறை அமைச்சகத்திற்கு பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவிட்டார். உடனடியாக கலாசாரத்துறை அமைச்சகம் கடிதத்தை திரும்பப் பெறும் முயற்சியில் இறங்கியது. மேலும் இந்த விஷயத்தில் வெளி விவகாரத்துறையின் உதவியையும் கேட்டு கடிதம் எழுதியுள்ளது.

இது பற்றி கலாசாரத்துறை அமைச்சகத்தினர் கூறுகையில், "நாங்கள் மகாத்மா காந்தியின் கடிதத்தை எவ்வாறு பெறுவது என்பது தொடர்பாக ஆலோசனை கேட்டிருக்கிறோம். மகாத்மாவின் கடிதத்தை திரும்பப் பெறுவதில் இந்தியா உறுதியாக இருக்கிறது'' என்றனர்.

மகாத்மா காந்தியின் கடிதத்தைப் பெறுவதில் பண பிரச்சினையும் சேர்ந்து இருப்பதால் அது பற்றி கலாசாரத்துறை அமைச்சகத்திற்கு, மத்திய வெளிவிவகாரத்துறை ஆலோசனை தெரிவித்துள்ளது. எனவே மகாத்மா காந்தியின் கடிதம் ஏலம் போகாமல் தடுக்கப்படுவது உறுதி என்று தெரிகிறது.

இந்து - முஸ்லிம் ஒற்றுமை குறித்து மகாத்மா காந்தி எழுதிய 18 கடிதங்கள் 1998-ம் ஆண்டு இதே போல் ஏலத்தில் விடப்பட்டன. அப்போது இங்கிலாந்தில் வசிக்கும் தாய்நாட்டுப் பற்றுகொண்ட சில இந்தியர்கள் அந்தக் கடிதங்களை ஏலத்தில் எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...