.

Tuesday, September 4, 2007

"மிக மோசமான அமெரிக்க அதிபர் புஷ்" - ஆஸ்திரேலியர்கள் கருத்து

அமெரிக்க வரலாற்றில் மிக மோசமான அதிபர் ஜார்ஜ் புஷ் தான் என்று ஆஸ்திரேலியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தங்கள் நாட்டுக்கு செவ்வாய்க்கிழமை வந்த புஷ்ஷுக்கு அவர் கடும் எதிர்ப்பையும் தெரிவித்தனர்.

21 நாடுகள் பங்கேற்கும் ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு வரும் சனிக்கிழமை ஆஸ்திரேலிய தலைநகர் சிட்னியில் தொடங்கவுள்ளது. இதையொட்டி அமெரிக்க அதிபர் புஷ், ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

அமெரிக்காவின் வரலாற்றில் மோசமான அதிபராக உள்ளவர் தங்கள் நாட்டுக்கு வர அனுமதிக்கமாட்டோம் என்று அந்நாட்டு மக்கள் குரலெழுப்பி வருகின்றனர்.

போருக்கு எதிரான அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் புஷ்ஷுக்கு எதிராக 52 சதவீத வாக்குகளும், 32 சதவீதம் பேர் நடுநிலையாகவும் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இராக் மீது வலுக்காட்டாயமாக போர் தொடுத்ததே புஷ் மீதான வெறுப்புக்கு முக்கிய காரணம் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். நாங்கள் அமெரிக்கர்களின் நண்பர்கள். அமெரிக்கர்கள் நல்லவர்கள். ஆனால், புஷ் நல்லவரல்ல. நாங்கள் புஷ்ஷை எதிர்ப்பவர்கள். அவரது கொள்கையில் எங்களுக்கு உடன்பாடில்லை. மனித உரிமை மீறல்களுடன் மற்ற நாடுகள் மீது படையெடுப்பது கண்டனத்துக்குரியது.

புஷ்ஷின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சிட்னி நகரின் முக்கிய ரயில் நிலையங்கள் முன் பேரணி, மாநாடு நடக்கும் சிட்னி ஓபரா மாளிகை முன் ஆர்ப்பாட்டம் நடத்தவும் போர் எதிர்ப்பு அமைப்பினர் முடிவு செய்துள்ளனர். ஆனால், பேரணி நடத்துபவர்கள் மீது நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படுமென போலீஸôர் எச்சரித்துள்ளனர்.

மாநாடு நடக்கவுள்ள ஓபரா மாளிகையைச் சுற்றி 5 கி.மீ. அளவுக்கு பாதுகாப்பு வேலி அமைத்துள்ளனர். பல்வேறு நாட்டு தலைவர்கள் தங்கும் ஹோட்டல்களைச் சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளன.

புஷ் அதிபராக இருக்கும் வரை அமெரிக்காவுடன் எந்த கூட்டணியும் வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆனால், புஷ்ஷின் நண்பராக செயல்பட்டு வருகிறார் ஆஸ்திரேலிய பிரதமர் ஜான் ஹோவர்ட். புஷ் எடுத்துவரும் அனைத்து கொள்கை முடிவுகளுக்கும் இவர் தலையசைத்து வருவதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

முன்னதாக, திங்கள்கிழமை ஆஸ்திரேலியா வந்த சீன அதிபர் ஹூ ஜின்டாவோவுக்கும் பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...