.

Saturday, August 25, 2007

மத்திய அரசியல்: வலுவிழந்த புயல்

அமெரிக்காவுடன் மத்திய அரசு செய்த அணுசக்தி ஒப்பந்தத்தை இடதுசாரி கட்சித்தலைவர்கள் மிகக்கடுமையாக எதிர்த்தனர். "ஒப்பந்தத்தை அப்படியே கிடப்பில் போடாவிட்டால் நடப்பதே வேறு'' என்று மிரட்டினார்கள். இதனால் எந்த நேரத்திலும் மத்தியில் ஆட்சி கவிழ்ந்து விடுமோ என்ற பரபரப்பு ஏற்பட்டது.

ஆனால் கம்யூனிஸ்டுகளின் பூச்சாண்டி மிரட்டல்களுக்கு காங்கிரஸ் கொஞ்சமும் பயப்படவில்லை. நெருக்கடியை நினைத்து அலட்டிக்கொள்ளவும் இல்லை. இந்த விஷயத்தில் பிரதமர் மன்மோகன் சிங் ஒரு படி மேலே சென்று, "முடிந்தால் ஆதரவை வாபஸ் பெற்றுக்கொள்ளுங்கள்'' என்று சவால்விட்டார்.

இந்திய கம்யூனிஸ்டு, பார்வர்டு பிளாக், புரட்சிகர சோஷலிஸ்ட் ஆகிய 3 கட்சிகளும் மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெற்று விடலாம் என்று உறுதியாக தெரிவித்தன. ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் ஒருமித்த கருத்து இல்லை.

பிரகாஷ்கரத், சீதாராம் யெச்சூரி, ஜோதிபாசு போன்றவர்கள் ஆதரவை வாபஸ் பெறக்கூடாது சும்மா மிரட்டி காரியத்தை சாதித்தால் போதும் என்ற மனநிலையில் உள்ளனர். ஆனால் மத்திய குழு உறுப்பினர்களில் 90 சதவீதம் பேர் காங்கிரசை ஆதரிக்கக் கூடாது என்றனர். இந்த கருத்து வேறுபாடு காரணமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி எந்த முடிவும் எடுக்க முடியாமல் கடந்த 4 நாட்களாக திணறியது.

இதற்கிடையே இடது சாரிகளின் போக்கு மக்களிடம் வெறுப்பையும் அதிருப்தியையும் ஏற்படுத்தி இருப்பதாக பல்வேறு கருத்துக்கணிப்புகள் மூலம் தெரிய வந்தது. தற்போது தேர்தல் நடத்தப்பட்டால் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு எதிர்பார்க்கும் அளவுக்கு வெற்றி கிடைக்காது என்பதும் தெரிய வந்தது. இதனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சித்தலைவர்கள் வேறு வழி தெரியாமல் பணியத் தொடங்கி உள்ளனர்.

அணுசக்தி ஒப்பந்தம் இந்தியாவை அடிமைப்படுத்தி விடும் என்று ஆக்ரோஷமாக கத்திக் கொண்டிருந்த கம்யூனிஸ்டுகள் இப்போது மெல்ல தொனியை குறைத்து விட்டனர். அவர்களிடம் இருந்த கடுமை காணாமல் போய்விட்டது.

நேற்று முன்தினம் வரை கம்யூனிஸ்டுகள் பேச்சில் கம்பீரம் தெரிந்தது. எங்களுக்கு தெரியாமல் எதுவும் பேசக்கூடாது.

வியன்னா மாநாட்டில் இந்திய பிரதிநிதியை கண்காணிப்போம். மத்திய அரசை இஷ்டத்துக்கு செயல்பட அனுமதிக்க முடியாது. எங்கள் ஆதரவு இல்லாவிட்டால் என்ன ஆகும் தெரியுமா என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

இந்த சுருதி நேற்று திடீரென மாறியது. இடது சாரிகளை கழற்றி விட்டுவிட காங்கிரஸ் நேற்று தயாரானதும், கம்யூனிஸ்டுகள் கொஞ்சம் ஆடி போய்விட்டனர். தேர்தலை சந்திக்கலாமா வேண்டாமா என்று நேற்றிரவு சோனியா ஆலோசித்ததும் இடதுசாரிகள் "கப்-சிப்'' என ஒடுங்கி விட்டனர்.

நேற்றிரவு கம்யூனிஸ்டு தலைவர்களிடம் நிருபர்கள் பேசியபோது, "மத்திய அரசுக்கு நெருக்கடியா? அப்படி எதுவும் இல்லையே'' என்றனர். அவர்களது பதில், "அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா...'' என்று சொல்லும் ரீதியில் இருந்தது.

சப்த நாடிகளும் ஒடுங்கி விட்டவர்கள் போல மாறி விட்ட கம்ïனிஸ்டு தலைவர்களுடன் அடுத்த வாரம் சோனியா பேச்சு நடத்துவார் என்று தெரிகிறது. அப்போது அணுசக்தி ஒப்பந்தம் பற்றி ஆராய கமிட்டி நியமிக்க முடிவு செய்வார்கள். இதை ஏற்றுக் கொண்டு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டுகள் அமைதியாகி விடுவார்கள் என்று தெரிகிறது.

திடீர் பூதமாக கிளம்பிய அணுசக்தி சர்ச்சையால் மன்மோகன்சிங்தான் ஒரு வலுவான பிரதமர் என்பதை நிரூபித்துள்ளார். அதோடு அடிக்கடி பூச்சாண்டி காட்டி கொண்டிருந்த கம்யூனிஸ்டுகளுக்கு "செக்'' வைத்துள்ளார்.

அதே சமயத்தில் அணுசக்தி ஒப்பந்தத்தை கிளறி விட்டதால் பிரகாஷ்காரத் போன்ற மூத்த தலைவர்களுக்கு மத்திய குழுவில் கடும் எதிர்ப்பு உருவாகி இருக்கிறது. இதனால் பதவியை காப்பாற்றி கொள்ள மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மூத்த தலைவர்கள் தற்போது போராடி கொண்டிருக்கின்றனர்.

நன்றி: மாலைமலர்

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...