.

Wednesday, August 1, 2007

கருணாநிதி மீது சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு - ஜெயலலிதா அறிக்கை

என்னைப் பற்றி அவதூறாக செய்தி வெளியிட்டுள்ள முதல்வர் கருணாநிதி மீது சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகள் தொடரப்படும் என அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

சாத்தான்குளம் பகுதியில் டைட்டானியம் தொழிற்சாலை அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நான் அறிக்கை வெளியிட்டேன். இந்தத் தொழிற்சாலையை அனைத்துக் கட்சியினரும் எதிர்க்கும் நிலையில் எனது கருத்துகளுக்கு எதிராக முதல்வர் கருணாநிதி ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், "கார்னட் என்ற விலை மதிப்புடைய கனிமத்தைத் திருட்டுத்தனமாக எடுத்து, தேச நலனுக்குப் பாதகமாக விற்பனை செய்து கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகிறார் தனிப்பட்ட தாதா ஒருவர். அவருடன் ஜெயலலிதா செய்து கொண்ட எழுதப்படாத ஒப்பந்தமே டைட்டானியம் ஆலைத் திட்டத்தை அவர் எதிர்க்கக் காரணம். ஜெயலலிதா டிவியில் அந்த தாதா ஒரு பங்குதாரர்' என்று கூறியிருக்கிறார் கருணாநிதி.

அறிக்கை என்ற பெயரில் இல்லாத - பொல்லாத கற்பனைகள், அபாண்டமானக் குற்றச்சாட்டுகளை முதல்வர் கருணாநிதி கூறியிருக்கிறார்.

டைட்டானியம் ஆலை அமைக்கும் திட்டத்துக்கு தமிழகத்தின் அனைத்துக் கட்சியினரும், ஏன் அவருடைய சொந்த கட்சிக்காரர்களே அந்தப் பகுதியில் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

இந்த கனிமவளம் "மேஜர் மினரல்ஸ்' என்று சொல்லப்படும் இனத்தைச் சார்ந்தது ஆகும். அதற்குரிய சட்ட திட்டங்கள், வழிமுறைகள் மத்திய அரசின் சுரங்கத் துறையால் கையாளப்பட்டு வருகின்றன. இதில் எந்த விதத்தில் தவறு நடந்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்க சட்டத்தில் வழி உள்ளது.

அப்படி இருக்கையில் சட்டவிரோதமாக யாரோ ஒருவர் அந்த கனிமத்தைத் திருடுகிறார். அதற்கு நான் உடந்தையாக இருந்து அவரைக் காப்பாற்றுவதற்காக இந்தப் போராட்டத்தை அறிவித்துள்ளேன் என்று சொல்வது கருணாநிதிக்கு சட்டமும் தெரியவில்லை; மக்கள் மன நிலையும் புரியவில்லை என்பதைக் காட்டுகிறது.

அப்படிப்பட்டவருக்கு, மக்களுக்காக போராட்டம் அறிவிக்கின்ற என்னைப் போன்றவர்களைக் கண்டால் எரிச்சலாகத்தான் இருக்கும். அந்த எரிச்சலைக் கொட்டித் தீர்க்கும் விதமாகத்தான் அவரது அறிக்கை அமைந்துள்ளது.

எனது கைத்தடி என்றும் எழுதப்படாத ஒப்பந்தத்தை ஒருவரிடம் நான் போட்டிருக்கிறேன் என்றும் என்னைப் பற்றி அவதூறு எழுதி இருக்கிறார். என்னைப் பற்றி அவதூறு செய்தி வெளியிட்டதற்கு நிச்சயமாக சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளை கருணாநிதி மீது நான் தொடர உள்ளேன்.

தினமணியிலிருந்து நேரடி பதிப்பு செய்யப்பட்டுள்ளது

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...