.

Saturday, August 18, 2007

என் ஆசான் ஆர்.எம்.டி. - ஏ.கே.கான்

என் ஆசான் ஆர்.எம்.டி.

ஆகஸ்ட் 18, 2007

-ஏ.கே.கான்

சில நாட்களுக்கு முன் மறைந்து போனார் என் ஆசானும், தினமணியின் முன்னாள் ஆசிரியருமான இராம.திரு.சம்பந்தம்.

திருஞான சம்பந்தம் என்ற தனது பெயரை அவர் சுருக்கியதற்கு அவரது பெரியார் பற்றும் ஒரு காரணம். மிகத் தீவிரமான தமிழ்ப் பற்றாளர்.

ஆர்.எம்.டி என்று சுருக்கமாய் அழைக்கப்பட்ட அந்த மனிதர், தினமணியில் பல அற்புத மாற்றங்களைக் கொண்டு வந்தவர். கோபத்துக்கு பேர் போனவர். அதே நேரத்தில் மிகச் சிறந்த மனிதாபிமானி. குழந்தைகள் இல்லாத நிலையில், எத்தனையோ பேரை தத்தெடுத்து படிக்க வைத்திருக்கிறார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையின் நிருபராக தனது இதழியல் வாழ்வைத் தொடங்கியவர். படிப்படியாய் உயர்ந்து தினமணியின் ஆசிரியரானாவர்.

எடிட்டர் என்ற பெயரில் ஏ.சி. அறையில் கதவைப் பூட்டிக் கொண்டு தங்கக் கோபுர ஜர்னலிஸம் செய்யாமல் நிருபர்களோடும், புகைப்பட கலைஞர்களோடும், உதவி ஆசிரியர்களோடும் கலந்து உறவாடும் ஆசிரியர் அவர்.

பிற பத்திரிக்கைகளை வரி விடாமல் படித்து அதில் தினமணி செய்தியாளர்கள் தவற விட்ட செய்திகளோடு தான் அலுவலகத்துக்கே வருவார். வந்த கையோடு தவறு செய்தவர்களை பிடி பிடித்துவிட்டுத் தான் அடுத்த வேலைக்கே போவார்.

அவரது வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் இளம் பத்திரிக்கையாளர்கள் கூட தவிப்பதுண்டு. வயதை மீறிய வேகம் காட்டியவர்.

நிருபர்கள் என்றால் ஜுப்பாவும் கசங்கிய உடைகளுமாய் இருந்தாக வேண்டும் என்று (யார் கொண்டு வந்த ரூலோ, இன்னும் அதை சினிமாவில் தான் பிடித்துக் கொண்டு அழுகிறார்கள்) நியதியை தூக்கி எறிந்து மிடுக்காக இருக்க வேண்டும் என்று சட்டமே கொண்டு வந்தவர்.

தினமணியில் நான் சேர்ந்த புதிதில் செருப்புடன் அவர் அறைக்குள் நுழைய, என்னப்பா டாய்லெட்ல இருந்து நேரா இங்க வந்துட்டியா என்று கேட்டு அதிர்ச்சி தந்தார்.

அவரது தாயார் மறைந்த நேரத்தில் நான் பெங்களூர் தினமணி பதிப்பில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அவரிடம் தொலைபேசியில் தாயார் மறைவு குறித்து விசாரித்தபோது, ஆமாம்பா.. இன்னிக்கு அங்க என்ன முக்கியமான நியூஸ், என்ன நியூஸ் பைல் பண்ண போறே என்றார் பதிலுக்கு.

வேலையில் அவ்வளவு தீவிரம் அந்த மனிதருக்கு. ஓய்வு பெறும் வரையில் வேலை.. வேலை என்றே வாழ்ந்தவர். வார விடுமுறை என்றெல்லாம் அவர் ஏதும் எடுத்ததில்லை. ஞாயிற்றுக்கிழமையும் வழக்கம்போல் பணியில் இருப்பார்.

பெங்களூரில் இலங்கை அகதிகளின் குழந்தைகளுக்காக நடத்தப்பட்ட ஒரு விடுதியுடன் கூடிய பள்ளிக்கு அரசின் உதவி நின்றுவிட அங்கு படித்த நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் பசி, பட்டினியால் தவிப்பது குறித்து அவரிடம் தெரிவித்தபோது உடனே அதை மிகப் பெரிய அளவில் செய்தியாக்கச் சொன்னார்.

அவர் சொன்ன கோணத்தில் நாங்கள் வெளியிட்ட அந்த செய்திக்கு மிகப் பெரிய பலன் கிடைத்தது. கிட்டத்தட்ட ரூ. 1 கோடி வரை நன்கொடை வந்து குவிந்தது. அதை தமிழக அரசிடம் தந்து அந்தப் பள்ளிக் குழந்தைகளை கவனித்துக் கொள்ள வேண்டுகோள் விடுத்தார்.

கடவுள், மத நம்பிக்கை இல்லாதவர் ஆர்.எம்.டி. ஆனாலும் அந்த அகதிக் குழந்தைகளுக்கு உணவளித்து உதவ பங்காரு அடிகளார் முன் வந்தபோது, அடிகளாரின் மனிதாபிமானத்தைப் பாராட்டி, நன்றி சொல்லி கடிதம் எழுதிய பண்பாளர்.

நான் வெளியூர் பதிப்பில் பணியாற்றிய நிலையில் அவரை சந்திக்கச் சென்றபோது காலை 10.45 மணிக்கு வந்தார். ஸாரிப்பா வழக்கமா 10.30க்கு வந்துருவேன். இன்னிக்கு லேட் ஆயிருச்சு என்றார்.

இதே நேரம் தவறாமையையும் ஒழுக்கத்தையும் வேலையில் அதி தீவிரத்தையும் அனைவரிடமும் எதிர்பார்த்த ஆர்.எம்.டிக்கு அபிமானிகளை விட எதிர்ப்பாளர்களே அதிகம்.

யார் என்ன நினைச்சாலும் சரி, எனக்கு வேலை தான் முக்கியம் என்பார். கோபத்தில் வார்த்தைகளை கொட்டுவார். தேள் கடித்தது போல் இருந்தாலும், யோசித்துப் பார்த்தால் நம் பக்கமே தவறு இருப்பது புரியும். அவருக்கு யார் மீதாவது கோபம் வந்தால் நீண்ட நாளைக்கு விலகாது.

நான் தினமணியை விட்டு விலகியபோது அவருக்கு வந்தது அதே போன்ற கோபம்.

என்னிடம் பேசவே மறுத்தார். அவரிடம் பேச எனக்கும் பயம்.

ஆனாலும் என்னை உருவாக்கிய ஆசானிடம் திட்டு வாங்கினாலும் பரவாயில்லை.. அவரை ஒரு முறை மீண்டும் சந்தித்துவிட வேண்டும் என்று அவ்வப்போது நினைத்துக் கொள்வேன்.

ஆனால், அவரது கோபம் என்னை தடுத்தது. அவர் மறையும் வரை.

ஏ.கே.கான்
ஆசிரியர்,
தட்ஸ்தமிழ்

http://thatstamil.oneindia.in/news/2007/08/18/rmt.html

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...