.

Tuesday, April 10, 2007

இறந்தோர் குடும்பத்தை அரசே தத்தெடுக்கும்: முதல்வர்

சென்னை, ஏப். 10: திண்டிவனத்தை அடுத்த செண்டூர் கிராமத்தில் வெடித்துச் சிதறிய ஜீப்பில் ஆர்.டி.எக்ஸ். வெடிபொருள் ஏதும் எடுத்துச் செல்லப்படவில்லை. பாறைகளைத் தகர்க்கப் பயன்படுத்தும் ஜெலட்டின் குச்சிகள் தான் இருந்தன என்று சட்டப் பேரவையில் முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்:

இந்த விபத்தில் 5 கான்கிரீட் வீடுகள், 8 ஓட்டு வீடுகள், 17 குடிசை வீடுகள் மற்றும் அரசுக்குச் சொந்தமான 4 கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ. 28 லட்சம் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியரால் மதிப்பிடப்பட்டுள்ளது.

சேதமடைந்த அனைத்து வீடுகளையும் கட்டித் தர அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்.

அரசு வேலை: இறந்தவர்களில் பெரும்பாலோர் விவசாயக் கூலித் தொழிலாளிகள். இவர்களை நம்பித்தான் அவர்களது குடும்பம் உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு குடும்பத்தில் அனைவருக்கும் அரசு வேலை வழங்கப்படும். அத்துடன் குடும்பத்தலைவனை இழந்து வாடும் குடும்பத்தை அரசே தத்தெடுத்து எதிர்காலத்துக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும்.

தனிக்குழு: மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் அனைத்துக் கட்சி நண்பர்கள் பரிந்துரையை ஏற்று அனைத்துக் குடும்பங்களையும் காப்பாற்ற வேண்டிய நடவடிக்கைகளை அரசு எடுக்கும்.

வெடி மருந்துக் கிடங்கு: புதுச்சேரி மணலிபட்டு என்ற இடத்தைச் சேர்ந்த சேகர் (48) என்பவர், மயிலம் பாதிரிபுலியூரில் வெடிமருந்துக் கிடங்கை நடத்தி வருகிறார். அங்கிருந்து கல் குவாரிகளுக்கு வெடிப் பொருள்களை சப்ளை செய்து வருகிறார். "சிவசக்தி எக்ஸ்புளோஸிவ்' என்ற நிறுவனம் அவருக்கு வெடிமருந்துகளை வழங்கி வருகிறது. சனிக்கிழமை வெடித்துச் சிதறிய அந்த ஜீப்பில் 200 கிலோ ஜெலட்டின் குச்சிகள், 320 மீட்டர் சேப்ட்டி வயர், 150 எலெக்ட்ரிக் டெட்டனேட்டர்கள் ஆகியன எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்தும் பணிக்காக, பாறைகளைத் தகர்க்க அவற்றை எடுத்துச் சென்றுள்ளனர். அப்போது ஜீப்பிலிருந்து திடீரென புகை வந்ததால், அதை சாலையோரம் நிறுத்தி புகையை அணைக்க முயன்றுள்ளனர். ஆனால் வெடித்து பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்துக்குக் காரணம் என்ன? ஜெலட்டின் குச்சிகளையும், டெட்டனேட்டர்களையும் தனித்தனியே எடுத்துச் செல்ல வேண்டும். ஆனால் இவை இரண்டையும் ஒன்றாக எடுத்துச் சென்றதால், அவை ஒன்றோடு ஒன்று உரசி பெரும் விபத்து ஏற்படக் காரணமாக அமைந்துவிட்டது.

Dinamani

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...