இங்கிலாந்து அணியுடனான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா படு மோசமாக ஆடி தோல்வியைத் தழுவியது.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் ஏற்கனவே வென்றுள்ளது. இந்த நிலையில் நேற்று 7 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் தொடங்கியது. செளதாம்டனில் முதலாவது போட்டி நடந்தது. இதில் இந்திய அணி டாஸ் வென்றது. ஆனால் பேட்டிங்கைத் தேர்வு செய்யாத கேப்டன் டிராவிட், இங்கிலாந்து அணியை பேட் செய்ய வருமாறு பணித்தார். இங்கிலாந்து அணியின் தொடக்கமே அபாரமாக இருந்தது. தொடக்க ஆட்டக்காரரான அலிஸ்டைர் குக் படு சிறப்பாக ஆடினார். அவர் சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த நிலையில் மறு முனையில் பிரியர் 19 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து இயான் பெல், குக்குடன் இணைந்தார். இருவரும் சேர்ந்து ஆடத் தொடங்கியபோது ஆட்டத்தில் பொறி பறந்தது. இருவரும் அதிரடியாக ஆடி ரன்களைக் குவித்தனர். இவர்களைப் பிரிக்க இந்தியப் பந்து வீச்சாளர்கள் கடுமையாக திணறினர். அதிரடியாக ஆடிய குக் 102 ரன்கள் எடுத்த நிலையில் ஆர்.பி.சிங் பந்தில் ஆட்டமிழந்தார்.
ஆனாலும் இயான் பெல்லின் ஆட்டத்தில் சற்றும் தொய்வில்லை. தொடர்ந்து சிறப்பாக ஆடிய அவர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 126 ரன்களைச் சேர்த்தார். கெவின் பீட்டர்சன் ஆட்டமிழக்காமல் 33 ரன்களைக் குவித்தார். இறுதியில், 50 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 288 ரன்களை சேர்த்தது இங்கிலாந்து அணி. கடினமான வெற்றி இலக்குடன் ஆடத் தொடங்கிய இந்தியாவுக்கு எடுத்தவுடனேயே சோதனை காத்திருந்தது. இளம் வீரர்களான திணேஷ் கார்த்திக்கையும், கவுதம் காம்பீரையும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்திருந்தனர். ஆனால் வழக்கம் போல சச்சின் டெண்டுல்கரும், கங்குலியும் தொடக்க வீரர்களாக இறக்கப்பட்டனர். ஆனால் இருவரும் மோசமாக ஆடி துரிதமாக ஆட்டமிழந்தனர். கங்குலி 2 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார்.
டெண்டுல்கர் 17 ரன்களையே சேர்த்தார். பின்னால் வந்த கம்பீர் 3 ரன்களே போதும் என நினைத்து வெளியேறினார். இப்படி அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்ததால் இந்திய அணி தடுமாறத் தொடங்கியது. கேப்டன் டிராவிட் மட்டும் சற்று சமாளித்து ஆடினார். அவரும் கூட 46 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அவருக்குப் பின்னர் திணேஷ் கார்த்திக் மட்டும் சிறப்பாக ஆடி 44 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில் 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 184 ரன்கள் மட்டுமே எடுத்தது இந்தியா. இதன் மூலம் 104 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து முதல் வெற்றியை சுவைத்தது. பிரமாதமாக விளையாடி அணியின் வெற்றியை உறுதி செய்த இயான் பெல் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
Wednesday, August 22, 2007
கிரிக்கெட்:இங்கிலாந்துடன் இந்தியா படுதோல்வி.
Labels:
இந்தியா,
கிரிக்கெட்
Posted by Adirai Media at 10:26 AM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
No comments:
Post a Comment