.

Monday, April 30, 2007

ச: புலிகளும் அரசும் தமது தாக்குதல்களைப் "பதிலடி" என்கிறார்கள்

இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு அருகிலுள்ள எரிபொருட்கள் நிலைகள் மீது விடுதலைப் புலிகள் நடத்திய வான் தாக்குதலுக்கு பதிலடியாக தமது வான் படையினர் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகள் மீது தாக்குதலை நடத்தியுள்ளதாக இலங்கை அரசின் விமானப்படை கூறியுள்ளது.

ஆனால் இலங்கையின் வடக்கில் உள்ள தமது பிரதேசத்தில் விசுவமடு பகுதியில் இன்று அதிகாலை ஒரு மணியளவில் அரச விமானப்படையினர் நடத்திய விமானக்குண்டுத் தாக்குதலுக்குப் பதிலடியாகவே தமது வான்படையினர், கொழும்பில் வான்வழி தாக்குதல்களை நடத்தியதாக விடுதலைப் புலிகளின் இராணுவத்துறை பேச்சாளர் இளந்திரையன் கூறியுள்ளார்.

29 ஏப்ரல் அதிகாலை சுமார் 1.45 மணியளவில் விடுதலைப் புலிகளின் இரண்டு இலகுரக விமானங்கள் தலைநகர் கொழும்பிலுள்ள கொலன்னாவ மற்றும் புறநகர்பகுதியான முத்துராஜவெல போன்ற இடங்களிலுள்ள எண்ணெய் சேகரிப்பு நிலையங்கள் மீது தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச் சென்றிருக்கின்றன.

கொழும்பில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதியாட்டத்தை திறந்தவெளி திரைகளில் ரசிகர்கள் பார்த்துக் கொண்டிருந்த சமயத்தில் விடுதலைப் புலிகள் இந்த வான் தாக்குதலை நடத்தினர். விமான எதிர்ப்பு எறிகணைகள் சுடப்பட்டத்தின் வானத்தில் செந்நிற நெருப்பு கீற்றுகள் காணப்பட்டன.

இந்தத்தாக்குதலினால் எண்ணெய் சேகரிப்பு நிலையங்கள் எவற்றிற்கும் எவ்வித தாக்குதலும் இல்லை என்று பி.பி.சி தமிழோசையிடம் தெரிவித்த அரசாங்கப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான அனுர பிரியதர்ஷன யாப்பா புலிகளின் விமானங்களைத் தாக்கியழிப்பதே அரசின் நோக்கம் என்று தெரிவித்தார்.

புலிகளின் தாக்குதலை தொடர்ந்து கிளிநொச்சி மாவட்டத்தில் இரணைமடுவுக்கு கிழக்கே உள்ள விசுவமடு பகுதியில் அடையாளம் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் இலக்கு ஒன்றின் மீது அரச விமானப்படைக்குச் சொந்தமான விமானங்கள் குண்டு வீச்சுத் தாக்குதல்களை நடத்தியதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.

இரணைமடுவுக்கு அருகில் உள்ள விடுதலைப் புலிகளின் விமான ஓடுபாதைப் பகுதியில் இன்று காலை 5.35 மணியளவில் மீண்டும் ஒரு விமானக் குண்டுத் தாக்குதலை விமானப்படையினர் நடத்தியிருப்பதாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் அறிவித்திருக்கின்றது.

கடந்த மாதம் தான் விடுதலைப் புலிகள் முதல் முறையாக தமது இலகுரக விமானம் மூலம் இலங்கை அரசின் நிலைகள் மீது வான் தாக்குதலை நடத்தினர்.


இலங்கை செய்தி ஆய்வாளர் டி.பி.எஸ். ஜேயராஜ் செவ்வி

இதன் மூலம் புலிகள் சொல்ல வருவது ஓர் ஆணித்தரமான அரசியல் ராணுவ செய்தி. இலங்கை அரசாங்கம் சொல்லிவருவது போல நாங்கள் ஓரங்கட்டப்படவில்லை, ஓரங்கட்டப்படவும் மாட்டோம் என்பது தான் அந்தச் செய்தி என்கிறார் இலங்கை செய்தி ஆய்வாளர் டி.பி.எஸ். ஜேயராஜ்.

செவ்வி:

அரசாங்கம் கிழக்கில் படையினர் கண்ட வெற்றிகளை வைத்துக் கொண்டு தென்னிலங்கை மக்கள் மத்தியில் தாங்கள் புலிகளை ஓரங்கட்டி விட்டோமென்றும், புலிகள் வசம் ஓரிரு சிறு விமானங்கள் தான் உள்ளன, அவற்றை நாங்கள் விரைவில் இரண்டிலொன்று பார்த்து விடுவோம் என்றும் சொல்லி வரும் வேளையில் அதற்கான புலிகளின் பதில் தான் இது என்று படுகிறது.

புலிகளின் விமானத் தாக்குதல்களால் ஏற்பட்ட பாதிப்புகள், இழப்புகள் சிறிதா பெரிதா என்பதை விட, புலிகளின் வான்தாக்குதல்கள் தொடருகின்றன என்ற செய்தி தான் முக்கியமாக தென்னிலங்கை மக்கள் மத்தியில் சென்று சேரப் போகிறது.

அரசும் புலிகளும் ஒரே மொழி
வான் தாக்குதல்கள் தொடர்பாக அரசாங்கம் பேசும் அதே மொழியை அதே நியாயத்தைத் தான் புலிகளும் பேசுகிறார்கள். ஏனென்றாhல் சில குண்டுகள் மக்கள் குடியிருப்புப் பகுதியில் வீழ்ந்த போதிலும் அது ராணுவ ரீதியிலான தமது பதில் தாக்குதல் என்று அரசாங்கம் கூறிவருகிறது. அதை எவரும் பெரிதாக கண்டிக்க முன்வரவில்லை. புலிகளும் தங்களுடைய இந்த மூன்றாவது தாக்குதல் ராணுவ ரீதியிலானது என்கிறார்கள். எனவே புலிகளின் இந்த வான் தாக்குதல்களை கண்டிக்கக் கூடிய தார்மீக நிலையில் எவரும் இல்லை என்று தான் கூற வேண்டும்.

அரசின் போக்கில் மாற்றம் வராது
சர்வதேச நாடுகள் கேட்பது போல இலங்கை அரசு யுத்த நிறுத்த ஒப்பந்தத்தைப் பலப்படுத்தி, ஒரு உண்மையான யுத்த நிறுத்தத்தைக் கொண்டு வந்து, மீண்டும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கும் வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. இந்த தாக்குதல் நடந்து சில மணி நேரத்தில் புலிகளின் விசுவமடுப் பகுதியில் அரசு வான் தாக்குதல் நடத்தியதை வைத்துப் பார்த்தால் அடிக்கு அடி, பல்லுக்கு பல்லு என்று தான் அரசு நிற்கிறது என்று படுகிறது. இருப்பினும் -

ஊடகங்களிலும் அரசாங்கப் பேச்சாளர் மூலமாகவும் பல கருத்துக்கள் வந்து கொண்டிருந்தாலும் அவற்றை உற்று நோக்கும் போது தெரிவது என்னவென்றால் புலிகளிடம் எத்தனை விமானங்கள் உள்ளன என்றோ, எத்தகைய விமானங்கள் உள்ளன என்றோ, அல்லது அவை எங்கே வைக்கப்பட்டிருக்கினறன என்றோ அரசாங்கத்துக்கோ எவருக்குமோ எதுவுமே தெரியாது என்பது தான் உண்மை. ஆனால் -

அரசு அல்லாத ஓர் அமைப்பிடம் இத்தகைய வான் படை வலு இருப்பதை எந்த நாடும் விரும்பாது, குறிப்பாக மேற்குலக நாடுகளும், இந்தியாவும் இத்தகைய நிலையை விரும்ப மாட்டா.

செய்தி: பிபிசி - தமிழ்

2 comments:

Anonymous said...

விடுதலைப்புலிகளின் தாக்குதலுக்கு முன்பும் பின்புமாக அரசவான்படையினரின் தாக்குதல்கள் நடந்துள்ளதாகவே தெரிகிறது.

புலிகளின் தாக்குதலுக்கு முன்பு நடத்தப்பட்ட தாக்குதல்தான் விசுவமடுப்பகுதியில் நடந்துள்ளதாகவும், புலிகளின் தாக்குதலுக்குப் பின் நடத்தப்பட்ட தாக்குதல் இரணைமடுப் பகுதியில் நடந்துள்ளதாகவும் தெரியவருகிறது.
அரசவான்படையின் விசுவமடு மீதான தாக்குதல் அதிகாலை ஒரு மணிக்கும், புலிகளின் தாக்குதல் அதிகாலை இரண்டு மணியளவிலும், அதன்பின் நடந்த இரணைமடு மீதான தாக்குதல் அதிகாலை ஐந்து மணியளவிலும் இடம்பெற்றுள்ளன.

Boston Bala said...

விரிவான தகவல்களுக்கு நன்றி!

-o❢o-

b r e a k i n g   n e w s...