.

Sunday, June 17, 2007

தைலாபுரம் நிகழ்ச்சிகளின்: குறுந்தகடு கருணாநிதி வெளியிட்டார்

பொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் சிலப்பதிகாரம், குற்றால குறவஞ்சி இசை குறுந்தகடு வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடந்தது.

முதல்-அமைச்சர் கருணாநிதி சிலப்பதிகார இசைகுறுந்தகடை வெளியிட இசைஅமைப்பாளர் எம்.எஸ்.விசுவநாதன் பெற்றுக்கொண்டார். குற்றால குறவஞ்சி குறுந்தகடை பேராசிரியர் திருமுருகன் பெற்றுக்கொண்டார்.

விழாவில் முதல்-அமைச்சர் கருணாநிதி பேசியதாவது:-

தைலாபுரம் நிகழ்ச்சிகளை குறுந்தகடாக்கி வெளியிட்டு இருக்கிறார்கள். அதையும் நாமும் கண்டு மகிழ்ந்தோம். குற்றால குறவஞ்சி, சிலப்பதிகாரம், பாஞ்சாலி சபதம் ஆகியவற்றை இசைபடையாக பொழிந்ததை கண்டோம்.

பொங்கல் தினத்தில் தைலாபுரம் தோட்டதில் நடந்த நிகழ்ச்சிகளை கண்ட போது எனக்கும் கொஞ்சம் பொறாமையாக இருந்தது. ஏனென்றால் எனக்கு அப்படி ஒரு தோட்டம் இல்லையே என்று. தைலாபுரம் என்ற பெயரை தமிழார்வபுரம் என்று மாற்றுங்கள். இந்த கோரிக்கையை நீங்கள் நிறைவேற்றினால் உங்கள் கோரிக்கை நிறை வேற்றப்படும்.

தமிழ்மீதும், தமிழர் கலை யின் மீதும், தமிழ் இசை மீதும் உங்களுக்குள்ள ஆர்வத்தை நான் பாராட்டுகிறேன். போற்றுகிறேன் கொங்கு தமிழ்வளர்ச்சி அறக்கட் டளை முதல் பல்வேறு நிகழ்ச்சிகளை நான் தொடங்கி வைத்து இருக் கிறேன். எதையும் முடக்கி வைத்து பழக்கம் இல்லை. அது தொடர்கிறது.

தமிழனுக்கு இசை உண்டு அது மறைந்து போகும் நிலை வந்த போது ராஜாஅண்ணாமலை செட்டி யார் போர்க்கோலம் பூண்டு தமிழ் இசையை பரப்பும் முயற்சியில் ஈடுபட்டார்.ராஜாஜி கல்கி போன்றோரும் அதற்காக பாடுபட்டனர்.

இந்த உலகத்தில் தமிழ் நாட்டில்தான் தாய் மொழியை தமிழாக கொண்டு வேறு மொழியில் பாடுகிறார்கள் என்று ஆர்.கே. சண்முகம் செட்டியார் கூறி இருக்கிறார். ஆனால் தமிழ்நாட்டில் வாழ்ந்த தியாகராயர் அவரது தாய் மொழியான தெலுங்கில் பாடல் பாடியுள்ளார். எனவே தாய் மொழியை மதிக்க வேண்டும் என்று ராஜாஜி கூறி உள்ளார்.

தமிழர்களுக்கு என்று ஒரு இசை இல்லை என்ற நிலை இருக்ககூடாது. டாக்டர் ராமதாஸ் சுட்டி காட்டியபடி சீர்காழி மூவ ருக்கு மணி மண்டபம் உட னடியாக கட்டப்படும். மற்ற கோரிக்கைகளையும் நானே எழுப்பியதாக கருதி நிறை வேற்ற முயற்சி செய்வேன் அதற்கு தாங்களும் உறு துணையாக இருக்க வேண்டும்.

இவ்வாறு கருணாநிதி பேசினார்.

பொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளை நிறுவனர்டாக்டர் ராமதாஸ் சிறப்புரை யாற்றினார். அவர் கூறியதாவது:-

பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பாக இசைத்தமிழை வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். இளைஞர் சமுதாயமும் இதில் ஆர்வம் காட்ட வேண்டும் என்பதுதான் நோக்கம்.

கடந்த 4 ஆண்டுகளாக தைலாபுரம் தோட்டத்தில் பொங்கல் தினத்தை யொட்டி 3 நாட்கள் பழந்தமிழ் கலைகளை ஆட்டம், பாட்டம் கொண்டாட்டமாக நடத்தி வருகிறோம். அதில் மகள், மருமகள், பேரன், பேத்திகள் பங்கேற்று வருகிறார்கள். அந்த நிகழ்ச்சியை நீங்களும் இங்கு காட்சியாக ரசித்தீர்கள்.

மற்றவர்களுக்கும் இது போன்ற ஆர்வம் வரவேண்டும் என்பதற்காக அதை உங்களுக்கு காட்டினோம்.

தற்போது தமிழ்நாட்டில் சரியான தமிழை பேசினால் முகம் சுளிக்கிறார்கள். ஆங்கிலம் கலந்து பேசும் போதுதான் மகிழ்கிறார்கள். சங்கர் என்ற பெயரை ஷங்கர் ஆக்கி விட்டார்கள். பல தமிழ் பெயர்கள் மாறி வருவதால் ஆங்கில கலப்பு இல்லாமல் பேசினால் தமிழ் வெறியன் என்கிறார்கள். புதுச்சொல்லை அறிமுகப்படுத்தும் போது கிண்டலும், கேலியும் வருகிறது. தமிழ்நாட்டில் தான் இந்த நிலை இருக்கிறது.

முதல்வரை அழைத்து தமிழ் பண்ணிசையை தொடங்கினோம். அதை மீட்டு எடுக்க வேண்டும் நாங்கள் எதை செய்தாலும் தமிழை, முத்தமிழை அழைக்காமல் செய்வதில்லை. இது வெறும் புகழ்ச்சி வார்த்தை அல்ல தமிழில் 11 ஆயிரத்து 991 பண்கள் இருந்ததாக சொல்கிறார்கள். தற்போது 43 ஆக குறைந்து விட்டது. சீர்காழி மூவருக்கு மண்டபம் அமைப்பதற்காக 11 கிரவுண்ட் நிலம் ஒதுக்கி கலைஞர் அடிக்கல் நாட்டினார். ஆட்சி மாற்றம் வந்ததால் இன்று வரை அது நிறைவேற வில்லை. இனி அதை நிறைவேற்றுங்கள் வில்லை. தமிழ்நாட்டில் 17 இசைப்பள்ளிகள் உள்ளன. அவற்றுக்கு புத்துயிர் அளிக்க வேண்டும். 4 இசைக்கல்லூரிகளில் பாடங்கள் முறையாக அமைக்கப்பட வேண்டும். சென்னையில் இசை நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக யாழ்வடிவில் ஒரு அரங்கம் அமைக்க வேண்டும். அது அடையாள சின்னமாக இருக்க வேண்டும்.

தமிழ் மொழியில் முனைவர் பட்டம் பெறும் சிலருக்கு தமிழை உச்சரிக்க கூட தெரியவில்லை எனவே தமிழில் முனைவர் பட்டம் பெறுபவர்களுக்கு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போல சிறப்பான தேர்வு நடத்தி தஞ்சை தமிழ் பல்கலைகழகம் மூலம் தான் பட்டம் அளிக்கவேண்டும்.

இந்திய அரசியல் உங்கள் கைகளில் தான் இருக்கிறது. 2,3 நாட்கள் டெல்லியில் தங்கி இருந்து சாதித்துவிட்டு வந்து இருக்கிறார்கள். தமிழ் உள்பட நாட்டினில் உள்ள 18 மொழிகளும் ஆட்சி மொழியாக வேண்டும். அதையும் சாதிக்கும் ஆற்றல் உங்களுக்குத்தான் உண்டு. அது நிறைவேறினால் தமிழ் அரியணை ஏறும்.

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பேசினார்.

நிகழ்ச்சியில் மத்திய மந் திரிகள் ராசா, அன்புமணி, வேலு, அமைச்சர் ஆற்காடு வீராசாமி, தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி, பா.ம.க.தலைவர் ஜி.கே.மணி, கனிமொழி, தயாளு அம்மாள் கவிஞர்கள் வைரமுத்து, அப்துல்ரகுமான், சு.ப.அறவாணன், மற்றும் பாலசுப்பிரமணியம், நடராச பிள்ளை, ஏவிஎம் சரவணன் உள்படபலர் கலந்து கொண் டார்கள்.

முன்னதாக சவுமியா அன்புமணி வரவேற்றார். முதல்-அமைச்சர் கருணா நிதிக்கு கண்ணகிசிலை நினைவு பரிசாக வழங்கப்பட்டது. பல்வேறு கலைஞர்களுக்கு கருணாநிதி நினைவு பரிசு வழங்கினார். டாக்டர் ராமதாசின் பேத்தி சங்கமித்ரா நன்றி கூறினார்.

பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் சிலப்பதிகாரம்: இசை குறுந்தகடு கருணாநிதி வெளியிட்டார்: மாலைமலர்

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...