.

Tuesday, July 31, 2007

அரவானிகளும் கல்லூரிகளில் படிக்கலாம்: உயர் கல்வித்துறை செயலாளர்

தமிழகத்தில் இனி அரவானிகளும் கல்லூரி படிப்பைத் தொடர முடியும். இதற்கான, அரசாணை ஆகஸ்ட்டில் வெளியிடப்படும் என்று உயர் கல்வித்துறை செயலாளர் கே. கணேசன் தெரிவித்தார்.

சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் அவர் கலந்து கொண்டார். அப்போது, அவர் பேசியது: அரவானிகளுக்கு கல்லூரிக் கல்வி மறுக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு பல காலமாக உள்ளது. அவர்களும் உயர்கல்வி பெறுவதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கான அரசாணை தயாராக உள்ளது. இது அடுத்த மாதம் வெளியாகும். எனவே இந்த கல்வியாண்டிலேயே விருப்பமுள்ளவர்கள் கல்லூரியில் பயில முடியும்.

பெயர் பிரச்னை: அரவானிகளை ஆங்கிலத்தில் Transgenders என அழைக்கின்றனர். தமிழ் மொழியில் அவர்களை 'திருநங்கைகள்' என அழைக்கலாம் என தமிழக முதல்வர் கூறியுள்ளார். ஆனால், உயர் கல்வித் துறையில் அரவானிகளை, பால் மாறியவர்கள் எனக் குறிப்பிடுகிறார்கள். பால் மாறியவர்கள் என்றால், சென்னை வட்டார வழக்கில் வேறு பொருள் வரும்.

எனவே, ஆங்கிலத்தில் உள்ள Transgenders என்கிற வார்த்தையை அப்படியே மொழிபெயர்க்க முடிவு செய்துள்ளோம். இதற்கு, தமிழறிஞர்கள் உதவிட வேண்டும்.

பெண்கள் கல்லூரியில் படிக்க முடியாது: கல்லூரி சேர்க்கை விண்ணப்பங்களில் ஆண், பெண் என்ற இரு பாலினம் மட்டுமே உள்ளது. அரசு உத்தரவு மூலம், கல்லூரி சேர்க்கை விண்ணப்பங்களில் கூடுதலாக அரவானிகள் என்கிற பாலினமும் சேர்க்கப்படும்.

ஆண், பெண் இரு பாலரும் படிக்கும் கல்லூரிகளில் அரவானிகளுக்கு இடம் உண்டு. பெண்கள் கல்லூரிகளில் அவர்களுக்கு இடம் இல்லை. சேர்க்கையில் அவர்களுக்கு என்று தனியாக இடஒதுக்கீடு ஏதும் இருக்காது. தற்போது, இருக்கும் சேர்க்கை விதிமுறை அப்படியே இருக்கும். ஆண்கள், பெண்களைப் போல அரவானிகளும் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம் என்றார் கணேசன்.

தினமணி

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...