.

Tuesday, July 31, 2007

மத்திய அமைச்சரவையில் பகுஜன் சமாஜ்?

மத்திய அமைச்சரவையில் சேருவது குறித்து பகுஜன் சமாஜ் கட்சி தீவிரமாக பரிசீலனை செய்து வருகிறது என்று அக்கட்சி உயர்நிலைத் தலைவர்கள் திங்கள்கிழமை தெரிவித்தனர். கட்சித் தலைமை இது தொடர்பாக விரைவில் முடிவு எடுக்கும் என்றும் அவர்கள் கூறினர்.

பகுஜன் சமாஜ் பொதுச் செயலர் ராம் நரேஷ், தேசிய செயலர் ராம் ரக்ஷா பால் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:

மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு பகுஜன் சமாஜ் கட்சி வெளியிலிருந்து ஆதரவு அளித்து வருகிறது. அமைச்சரவையில் சேருமாறு ஆளும் கூட்டணி தரப்பில் பலமுறை வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த முடிவை கட்சித் தலைமை விரைவில் அறிவிக்கும்.

ஜாம்ஷெட்பூர் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல் ஆகஸ்ட் 29-ம் தேதி நடைபெறுகிறது. பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளராக பழங்குடி தலைவர் சல்கான் மர்மு இருப்பார் என்று அவர்கள் தெரிவித்தனர்.

உத்தரப் பிரதேச தேர்தலில் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தது. காங்கிரஸ் நாலாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. குடியரசுத் தலைவர் தேர்தலில் தனது வெற்றியை உறுதி செய்து கொள்ள மாயாவதிக்கு வலை விரித்தது மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி. மாயாவதிக்கும் அதன் தயவு தேவை இருந்தது.

விளைவு உ.பி. மாநிலத் திட்டங்களுக்கு ரூ. 70,000 கோடி தருவதாக மத்திய அரசு அறிவித்தது; மாயாவதி மீதான ரூ. 175 கோடி தாஜ் வணிக வளாக ஊழல் வழக்கைச் சரியான ஆதாரம் இல்லாத காரணத்தால் வாபஸ் பெறுவதாக உ.பி. மாநில கவர்னர் டி .வி. ரஜேஸ்வர் அறிவித்தார். குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளரை ஆதரித்தார் மாயாவதி. இந்த நெருக்கம் தற்போது மேலும் அதிகரித்து வருகிறது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் பகுஜன் சமாஜை எப்படியாவது இடம் பெற செய்து விட்டால் கூட்டணி மேலும் வலுப்பெறும், ஆட்சியை ஐந்தாண்டு காலம் பிரச்னை இன்றி கடத்திவிடலாம் என்று காங்கிரஸ் கருதுகிறது. கூட்டணிக்கு வெளியில் இருந்து ஆதரவு தரும் இடதுசாரிக் கட்சிகள் மிரட்டல், கூட்டணி அரசில் இடம் பெற்று பல்வேறு நெருக்குதல் தரும் கட்சிகளை சமாளிக்க காங்கிரஸ் மேலிடம் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியே பகுஜன் சமாஜ் கட்சியை அரசில் சேர்க்கும் முயற்சி என்று தில்லி அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி

1 comment:

Boston Bala said...

காங்கிரஸ் கூட்டணியில் சேரும் எண்ணமில்லை: மாயாவதி

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் சேரும் எண்ணம் இல்லை என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரும் உத்தரப் பிரதேச முதல்வருமான மாயாவதி செவ்வாய்க்கிழமை கூறினார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இணையும் திட்டம் எதுவும் பகுஜன் சமாஜ் கட்சிக்கு இல்லை. எதிர்காலத்திலும் இது போன்ற எந்த முயற்சியும் எடுக்கப்படாது. இதனால் தற்போது மத்திய அரசில் இணையும் கேள்விக்கே இடமில்லை என்றார்.

-o❢o-

b r e a k i n g   n e w s...