கடந்த 17 ஆண்டுகளாக தமிழகத்துக்கும், கர்நாடகத்திற்கும் இடையே நடுவர் மன்றத்திலும் உச்சநீதிமன்றத்திலும் நடந்து வருகிற காவிரி நதிநீர்ப் பிரச்சனை வழக்கு செலவு விபரம் பற்றி இப்பதிவு.
இதுவரை காவிரி வழக்கு விசாரணைக்காக தமிழக அரசு செலவிட்ட தொகை குறித்த விவரத்தை தகவல் அறியும் சட்டத்தின் மூலம் கேட்டு டி.டி. நாயுடு என்பவர் வெளியிட்டுள்ளார்.
1990ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரை காவிரி நதிநீர் வழக்குக்காக,
விடுதிகளில் தங்கி ஆலோசனை நடத்த செலவிடப்பட்ட தொகை ரூ. 2.39 கோடியாகவும் வழக்கறிஞர்களுக்கு இதுவரை ரூ. 22.69 கோடியும், ஆக 25.08 கோடி செலவிடப்பட்டுள்ளது. .
இதுவரை காவிரி வழக்கு தொடர்பாக செலவிடப்பட்ட தொகை குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கேட்டுள்ள
நாயுடு மேலும் கூறுகையில்,
வக்கீல்களுக்காக தமிழக அரசு செலவிட்டுள்ள தொகையும், அவர்களின் விடுதி செலவுகளையும் பார்த்தால் பொதுப்பணித்துறையின் பட்ஜெட்டுக்கு இணையாக உள்ளது.
மொத்தமாக கூட்டிப் பார்த்தால் ரூ. 25 கோடிக்கும் மேல் தமிழக அரசு இதுவரை செலவிட்டுள்ளது. இது மிகவும் அநியாயமானதாகும். ஒவ்வொரு முறை வழக்கு விசாரணைக்கு வரும்போதும் பொதுப்பணித்துறையிலிருந்து 10 பேர் டெல்லி செல்கிறார்கள்.
இவர்களுக்கான செலவுத் தொகை இந்த கணக்கில் வரவில்லை. உயர்நீதிமன்றங்களிலும், உச்சநீதிமன்றங்களிலும் தமிழக அரசுக்காக வாதாடும் வக்கீல்களுக்கு தினசரி ரூ. 1,000 மட்டுமே வழங்கப்படும்போது காவிரி வழக்குக்கான வக்கீல்களுக்கு மட்டும் இவ்வளவு பெரிய தொகை செலவிடப்பட்டது ஏன் என்பதை அரசு விளக்க வேண்டும்.
காவிரிப் பாசனப் பகுதி விவசாயிகள் வறட்சியில் செத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அரசு வக்கீல்களுக்காக மட்டும் இவ்வளவு பெரிய தொகைய செலவிட்டிருப்பது வருத்தமாக உள்ளது.
காவிரி வழக்கில் வாதாடிய வக்கீல்களிலேயே அதிக சம்பளம் பெற்றவர் சி.எஸ்.வைத்தியநாதன்தான். இவருக்கு மட்டும் ரூ. 6.07 கோடி தரப்பட்டுள்ளது.
ஏ.கே.கங்குலிக்கு ரூ. 4.08 கோடி, சி.பரமசிவத்திற்கு ரூ. 2.64 கோடி, ஜி.உமாபதிக்கு ரூ. 2.54 கோடி, கிருஷ்ணமூர்த்திக்கு ரூ. 1.39 கோடி, முத்துக்குமாரசாமிக்கு ரூ. 1.03 கோடி, பராசரனுக்கு ரூ. 91.69 லட்சம் சம்பளமாக தரப்பட்டுள்ளது
இவ்வளவு பணத்தை தண்ணீராக செலவழித்தும் காவிரிப் பிரச்சினை இன்னும் தீரவில்லை. கர்நாடகத்திலிருந்து ஒரு சொட்டுத் தண்ணீரைப் பெற முடியாமல் தமிழகம் தவிக்கும் அவல நிலை தொடருகிறது.
இந்த அநியாய நிலை குறித்து விரைவில் சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளேன்
No comments:
Post a Comment