.

Friday, April 6, 2007

விருத்தாசலம் எஸ்.ஐ.யிடம் ரூ.1 லட்சம் வசூலிக்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு

சிதம்பரம், ஏப்.6: விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு இறந்து போன அண்ணாதுரை குடும்பத்துக்கு எஸ்.ஐ. பாபுவிடம் ரூ.1 லட்சம் நஷ்டஈட்டுத் தொகையாக வசூலித்து வழங்க வேண்டும் என தனது தீர்ப்பில் மாநில மனித உரிமை ஆணையத் தலைவர் நீதிபதி ஏ.எஸ்.வெங்கடாசலமூர்த்தி அரசுக்கு பரிந்துரை செய்து உத்தரவிட்டுள்ளார்.

விருத்தாசலம் அருகே உள்ள கோமங்களம் கிராமத்தைச் சேர்ந்த அண்ணாதுரை மற்றும் பழனிவேல் ஆகியோரை 7-11.2004ல் குற்றப்பிரிவு எஸ்.ஐ. பாபு மற்றும் 3 காவலர்கள் விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு இரவு முழுவதும் எஸ்.ஐ. மற்றும் காவலர்களால் இருவரும் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

8-ம் தேதி காலை இருவரையும் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். அங்கு அண்ணாதுரை இறந்தார்.

பின்னர் ஊர்மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டபோது அப்போதிருந்த கோட்டாட்சியர் மற்றும் போலீஸ் உயரதிகாரிகள் வழக்குப் பதிந்து முறையான நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தும் இதுவரை வழக்குப் பதிவு செய்யப்படவில்லை என அண்ணாதுரை மனைவி செல்வி சென்னை மாநில மனித உரிமை ஆணையத்தில் மனு தாக்கல் செய்தார்.

தீர்ப்பில் தமிழக அரசு எஸ்.ஐ. பாபுவிடமிருந்து ரூ.1 லட்சம் தொகையை வசூலித்து அதனுடன் அரசு சார்பில் ரூ.50 ஆயிரம் தொகை சேர்த்து மொத்தம் ரூ.1.50 லட்சத்தை செல்வியிடம் ஒரு மாதத்துக்குள் வழங்க வேண்டும் என அரசுக்கு பரிந்துரை செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தினமணி

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...