.

Friday, April 6, 2007

ச: ஷோரூம்களில் விற்கப்படும் இலவச கலர் டி.வி.: கடும் நடவடிக்கை எடுக்க எல்காட் இயக்குநர் உத்தரவு

திருநெல்வேலி, ஏப். 5: பாளையங்கோட்டை பகுதியில் அரசு வழங்கி வரும் இலவச கலர் டி.வி., ஷோரூம்களில் விற்பனை செய்யப்பட்டு வருவது குறித்து விசாரணை நடத்தி, கடும் நடவடிக்கை எடுக்க எல்காட் இயக்குநர் உமாசங்கர் உத்தரவிட்டுள்ளார்.

திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, பல கட்டங்களாக மாநிலம் முழுவதும் இலவச கலர் டி.வி.களை வழங்கி வருகிறது. இந்நிலையில், பாளையங்கோட்டை மகாராஜநகரைச் சேர்ந்த இளங்கோ (40), கடந்த 19-ம் தேதி பாளையங்கோட்டையில் உள்ள தனியார் டி.வி. ஷோரூமில் வீடியோகான் 14 அங்குல கலர் டி.வி. ஒன்றை ரூ.2,740-க்கு வாங்கினார். அந்த கலர் டி.வி.யின் மேல் ஒட்டப்பட்டிருந்த டி.வி. தயாரிப்பு நிறுவனத்தின் சின்னத்தோடு கூடிய ஸ்டிக்கர் சில நாள்களுக்கு முன்பு தானாகக் கீழே விழுந்தது. அதில் தமிழக அரசின் சின்னம் வெளியே தெரிந்தது.

அந்த டி.வி., தமிழக அரசு வழங்கி வரும் இலவச கலர் டி.வி. என்பதை அறிந்து இளங்கோ அதிர்ச்சியடைந்தார். அதுபோல, அவரது நண்பர் வாங்கிய டி.வி.யிலும் ஸ்டிக்கர் தானாக கீழே விழுந்து, தமிழக அரசின் சின்னம் தெரிந்தது. இதைத் தொடர்ந்து அவர்கள், டி.வியை அந்த ஷோரூமிற்கு கொண்டு சென்று காட்டி விளக்கம் கேட்டனர். அதற்கு அவர்கள், சரியான பதில் கூறவில்லையாம்.

வீடியோகானின் 14 அங்குல கலர் டி.வி.யின் தற்போதைய விலை ரூ.4 ஆயிரம். அதே கடையில் ரூ.4 ஆயிரத்துக்கும், வேறு மாடல் டி.வி.கள் விற்கப்படுகின்றன. ஆனால், இலவச கலர் டி.வி. ரகத்தில் உள்ள டி.வி.களின் விலை மட்டும் ரூ.2,740-க்கு விற்பனை செய்யப்படுகிறது என்கிறார் அந்தப் பகுதியைச் சேர்ந்த, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட கம்யூட்டர் மொத்த விற்பனையாளர் சங்கத் தலைவர் சங்கர்.

இதுகுறித்து எல்காட் இயக்குநர் உமாசங்கரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்ட போது, அவர் கூறியதாவது:

அரசின் இலவச கலர் டி.வி.யை கடையில் விற்பது கடுமையான குற்றமாகும். இந்தச் செயலில் ஈடுபட்டவர்கள் அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இச் சம்பவம் குறித்து விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக முதல்வருக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது என்றார்.

மேலும் வீடியோகான் நிறுவனத்தைச் சேர்ந்த இலவச கலர் டி.வி. திட்ட அதிகாரி கே.எஸ்.ஹரிகுமார் தெரிவித்ததாவது;
தமிழக அரசின் இலவச கலர் டி.வி. திட்டத்துக்கு தயாரிக்கப்பட்ட அரசின் சின்னம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தனியார் விற்பனைக்கு தயாரிக்கப்பட்ட டி.வி.களில் வந்துவிட்டது என்றார்.

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...