.

Wednesday, April 11, 2007

புதுக் கட்டடங்களில் ஊனமுற்றோருக்காக சாய்தளம் அமைப்பது கட்டாயமாக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் தகவல்

சென்னை, ஏப். 11: அரசுக் கட்டடங்கள், அரசு சார்ந்த கட்டடங்கள், தனியார் நிறுவனக் கட்டடங்கள் மற்றும் பொதுக் கட்டடங்களை ஊனமுற்றோர் பயன்படுத்தும் வகையில் சாய்வுதளம் (RAMP) அமைப்பது கட்டாயமாக்கப்படும் என்று சமூக நலத்துறை அமைச்சர் பூங்கோதை தெரிவித்தார்.

பார்வையற்றோரைத் திருமணம் புரியும் நல் உடற்கூறு உள்ள நபர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகையைப் பெற ஆண்டு வருமான உச்ச வரம்பு ஏதும் இல்லை. ஆனால் மற்ற வகை ஊனமுற்றோரை மணம்புரியும் நபர்களுக்கு ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ.24 ஆயிரமாக உள்ளது. இந்த வருமான உச்ச வரம்பு இவ்வாண்டு முதல் நீக்கப்படுகிறது. இதன் மூலம் மற்ற தகுதிகள் உள்ள அனைவரும் இத் திட்டங்களில் கீழ் பயனடைவார்கள்.

ஊனமுற்றோருக்கு நவீன செயற்கை உறுப்பு வாங்க அரசு மானியமாக ரூ.25 லட்சம் ஒதுக்கப்படும்.

ஆதரவற்ற சிறுவர் சிறுமியருக்கான சிறப்பு இல்லங்கள் மற்றும் குழந்தைகள் இல்லங்களைப் பராமரிக்கும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு அளிக்கும் மானியம் ஒரு நபருக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.225 என்ற நிலையிலிருந்து ரூ.450 ஆக இவ்வாண்டு முதல் உயர்த்தப்படும்.

தூத்துக்குடி மற்றும் நீலகிரி மாவட்டங்களில் உள்ள குழந்தைகள் காப்பகங்களுக்கு ரூ.1 கோடியே 40 லட்சம் மதிப்பீட்டில் சொந்தக் கட்டடங்கள் கட்டித் தரப்படும்.

அரசினர் கூர்நோக்கு இல்லங்கள், குழந்தைகள் இல்லங்கள் சிறப்பு இல்லங்கள், பிற்காப்பு நிறுவனங்களில் மற்றும் மகளிர் காப்பகங்களில் உள்ள இல்லவாசிகளுக்கு இவ்வாண்டு ரூ.7 லட்சத்து 42 ஆயிரம் செலவில் வாரம் ஒரு முறை கோழி இறைச்சி வழங்கப்படும்.

Dinamani

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...