.

Wednesday, May 2, 2007

ச: டிவைன் தியான மையத்தில் 6 வருடங்களில் ஆயிரம் பேர் சாவு

6 வருடங்களில் ஆயிரம் பேர் சாவு
டிவைன் தியான மைய நிர்வாகிகள் 10 பேர் மீது வழக்கு
கேரளாவில் பரபரப்பு

திருவனந்தபுரம், மே 2-
கேரளாவில் கிறிஸ்தவ அமைப்பு நடத்திய தியான மையத்தில் கடந்த 6 வருடங்களில் ஆயிரம் பேர் இறந்தது தொடர்பாக தியான மையத்தை நடத்தி வந்த பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள் டாக்டர் உள்பட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் சாலக்குடியில் ‘டிவைன் தியான மையத்தை‘ கிறிஸ்தவ அமைப்பு ஒன்று நடத்தி வந்தது. இதில் தியானம், யோகா ஆகியவை கற்றுக் கொடுக்கப்பட்டன. பின்னர் இவ்விடத்தில் எய்ட்ஸ், கேன்சர் உள்ளிட்ட அனைத்து நோய்களுக்கும் சிகிச்சையும் அளிக்கப்பட்டது. இங்கு தமிழ்நாட்டிலிருந்தும் ஏராளமானோர் சென்று வந்தனர்.
இந்நிலையில் ‘டிவைன் தியான மையத்தில்‘ கடந்த சில வருடங்களில் ஏராளமானோர் மர்மமான முறையில் இறந்து வருவதாகவும் எனவே அதுபற்றி விசாரிக்க வேண்டும் என்றும் கேரள ஐகோர்ட்டுக்கு கடந்த வருடம் கடிதம் வந்தது. எனவே கடிதத்தில் குறிப்பிடப்பட்ட விஷயங்கள் எந்த அளவுக்கு உண்மை என்பதை விசாரிக்குமாறு கேரள அரசுக்கு ஐகோர்ட் நீதிபதி பத்மனாபன் உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து கடந்த அக்டோபர் மாதம் ஐ.ஜி., வில்சன், எஸ்.பி., முஜார் அடங்கிய தனிப்படை போலீசார் தியான மையத்தில் அதிரடியாக புகுந்து திடீர் சோதனை நடத்தினர். ‘ஏழைகளுக்காக கிறிஸ்தவ அமைப்பினரால் நடத்தப்பட்டு வரும் தியான மையத்தில் போலீசார் எப்படி அத்துமீறி புகுந்து சோதனை நடத்தலாம் என காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்நிலையில் தியான மையத்தை நடத்தி வரும் இயக்குநர் பாதிரியார்கள் ஜார்ஜ், மேத்யூ, கன்னியாஸ்திரி தெரேசா ஜோஸ், தியான மையத்தின் ஹோமியோபதி டாக்டர் தங்கம்மா, ஊழியர்கள் கோபிகிருஷ்ணன், செலின், சுனோய், பினோய், பிந்து மற்றும் அம்பி ஆகிய 10 பேர் மீதும் சாலக்குடி அருகே உள்ள கொரட்டி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். போலீசார் பதிவு செய்துள்ள எப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, ‘டிவைன் தியான மையம்‘ அரசின் அனுமதியில்லாமல் இயங்கி வந்துள்ளது. இம்மையத்தில் கடந்த 6 வருடங்களில் 974 பேர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளனர். இவர்கள் எப்படி இறந்தனர் என்று தியான மைய குறிப்பேட்டில் குறிக்கப்படவில்லை. இறந்தவர்களின் உடல்கள் எங்கும் பிரேத பரிசோதனை நடத்தப்படவில்லை. அவர்களின் உடல் தியான மைய வளாகத்திலேயே அடக்கம் செய்யப்பட்டுள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தியான மையத்தில் டாக்டர் தகுதி இல்லாதவர்களும், இங்கு வேலை பார்க்கும் ஊழியர்களும் நோயாளிகளுக்கு அனுமதியில்லாமல் மயக்கமருந்து கொடுத்துள்ளனர். மறுப்பு தெரிவிக்கும் நோயாளிகளுக்கு வலுக்கட்டாயமாக மயக்கமருந்து வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தியான மையத்தில் பிடிபட்ட 10 பேர் மீதும் குற்றங்களை மறைத்தல், ஆதாரங்களை அழித்தல், கிரிமினல் திட்டம் தீட்டியது ஆகிய குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன. ஏற்கனவே ‘டிவைன் தியான மையத்தில்‘ கடந்த சில வருடங்களுக்கு முன் கொடைக்கானலில் தனது காதலனை கண்டதுண்டமாக வெட்டி படுகொலை செய்த கேரள பெண் டாக்டர் ஓமனா தங்கியதாகவும், அவர் அமெரிக்கா தப்பி செல்ல தியான மைய நிர்வாகிகள் உதவியதாக குற்றச்சாட்டு எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவங்கள் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

=தமிழ்முரசு

4 comments:

சிறில் அலெக்ஸ் said...

பரலோகத்தில் சேர்ப்பதற்கு இப்படி ஒரு அர்த்தம் இருக்குதா?

துளசி கோபால் said...

அடக் கடவுளே!
இந்தச் சாலக்குடி, கொரட்டி யெல்லாம் நாங்க 'வாழ்ந்த' இடங்களாச்சே!

அப்ப இந்த டிவைன் மையம் எல்லாம் இல்லை. நாங்க அங்கிருந்து கிளம்பினபிறகு,
ஆரம்பிச்சதாம்.

ஆயிரம் பேருக்கு நேரா சொர்க்கமா? பாவம்.

✪சிந்தாநதி said...

இங்கே நோய்கள் குணமாக்கப் படுவதாக செய்தி பரவியதால் மரணப் படுக்கையில் இருக்கும் ஏராளமானவர்கள் இங்கே கொண்டு வந்து சேர்க்கப் பட்டனர். ஆயிரக்கணக்கான மனநோயாளிகளும் இங்கே கொண்டு வந்து தங்க வைக்கப் பட்டனர்.

தெய்வீகம் என்று நினைத்து வந்தவர்களுக்கு அரைகுறை டாக்டர்களின் சிகிட்சை தான் கிடைத்தது. அதில் தான் மேற்படி மரணங்கள்.

ஜோ/Joe said...

அதிர்ச்சியான செய்தி .நானறிந்த பலர் தியானத்திற்காக இங்கு சென்று வந்துள்ளனர் .ஆனால் இப்படி நான் கேள்விப்பட்டதில்லை.

-o❢o-

b r e a k i n g   n e w s...