.

Friday, May 11, 2007

கருணாநிதி பொன்விழா

சென்னை, மே 11: முதல்வர் கருணாநிதியின் சட்டப் பேரவை பொன் விழா இன்று தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது. பிரதமர் மன்மோகன்சிங், சோனியாகாந்தி, மக்களவை தலைவர் சோம்நாத் சட்டர்ஜி உட்பட பல தலைவர்கள் பங்கேற்று கருணாநிதியை பாராட்டுகிறார்கள்.

தமிழக முதல்வர் கருணாநிதி, சட்டப் பேரவை உறுப்பினராக கடந்த 50 ஆண்டுகளாக தொடர்ந்து பணியாற்றி வருகிறார். இதை பாராட்டி, "சட்டப் பேரவையில் கருணாநிதி பொன் விழா" சென்னையில் 2 நாட்கள் நடத்தப்படுகிறது. விழாவை முன்னிட்டு சென்னை நகரம் விழாக் கோலம் பூண்டுள்ளது.

முதல் நிகழ்ச்சியாக, சட்டப் பேரவையில் இன்று காலை 10 மணிக்கு விழா தொடங்குகிறது. கருணாநிதியை ஆளுநர் பர்னாலா மற்றும் சட்டமன்றக் கட்சி தலைவர்கள் பாராட்டி பேசுகிறார்கள். மாலை 6 மணிக்கு தீவுத்திடலில் பொன் விழா கூட்டம் நடக்கிறது.

இதற்காக மாநகரில் 13 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர் என போலீஸ் கமிஷனர் லத்திகா தெரிவித்துள்ளார். மேலும், நகரின் பல இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். விழாவுக்கு 10 ஆயிரம் மாநகர போலீசாரும், 3 ஆயிரம் தமிழ்நாடு சிறப்பு காவல்படை போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

முக்கிய விருந்தினர்களின் வாகன அணிவகுப்பு செல்லும் நேரத்தில், ஒரு சில சாலைகளில் போக்குவரத்து மாற்றியமைக்கப்படும்.

அமைச்சர் க.அன்பழகன் தலைமை தாங்குகிறார். பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர்கள் வி.பி.சிங், ஐ.கே.குஜ்ரால், மத்திய அமைச்சர்கள் லாலு பிரசாத் யாதவ், சரத்பவார், ராம்விலாஸ் பாஸ்வான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொது செயலாளர் பிரகாஷ் காரத், இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன் மற்றும் தமிழகத்தில் உள்ள கூட்டணி கட்சித் தலைவர்கள் வாழ்த்திப் பேசுகிறார்கள். முதல்வர் கருணாநிதி ஏற்புரையாற்றுகிறார். பொன்விழா மலர், விழாவில் வெளியிடப்படுகிறது.

விழாவின் 2ம் நாள் நிகழ்ச்சியாக, நாளை காலை 11 மணிக்கு பேரவையில், மக்களவை தலைவர் சோம்நாத் சட்டர்ஜி கலந்து கொண்டு, முதல்வரை வாழ்த்தி பேசுகிறார்.

Dinakaran

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...