.

Friday, July 6, 2007

இந்துக்களிடம் ஆந்திர அரசு பாரபட்சம்: பாஜக

ஆந்திரத்தில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான அரசு இந்துக்களிடம் பாரபட்சமாக நடந்து கொள்கிறது என்று பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் பிரகாஷ், நிருபர்களிடம் கூறியதாவது:

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் இந்து மதத்தைச் சேர்ந்த மேலும் 36 ஜாதிகளைச் சேர்க்கலாம் என்று பிற்படுத்தப்பட்டோருக்கான ஆந்திர மாநில கமிஷன் பரிந்துரை செய்திருந்தது. ஆனால் அதனை ஆந்திர அரசு புறக்கணித்து விட்டது. இது ஆந்திர அரசு இந்துக்களுக்கு எதிராக இழைந்துள்ள மிகப்பெரிய அநீதியாகும்.

சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பின்தங்கிய நிலையில் உள்ள முஸ்லிம்களுக்கு மாநில அரசின் கல்வி, வேலைவாய்ப்பில் 4% இட ஒதுக்கீடு அளிக்க அவசரச் சட்டம் இயற்றுவது என ஆந்திர அரசு தீர்மானித்துள்ளது.

மத ரீதியில் அல்லாமல் சமூக, பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு அளிப்பதால் இதை உயர் நீதிமன்றமோ, வேறு நீதிமன்றங்களோ நிராகரிக்கும் வாய்ப்பும் இருக்காது என ஆந்திர அரசு கருதுகிறது. வாக்கு வங்கி அரசியலுக்காக ஆந்திர அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

முஸ்லிம்களுக்கு ஏற்கெனவே 5 சதவீத இடங்களை ஒதுக்கி ஆந்திர அரசு அவசரச் சட்டம் இயற்றியது. ஆனால் அதனை ஆந்திர உயர்நீதிமன்றம் நிராகரித்து விட்டது. இந்திய அரசியல் சட்டப்படி, மத அடிப்படையில் இட ஒதுக்கீடு அளிக்க வழிவகை இல்லாததை அப்போது உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியிருந்தது. இதனை கருத்தில் கொண்டு ஆந்திர அரசு தற்போது தந்திரமாகச் செயல்பட்டுள்ளது.

முஸ்லிம் சமூகத்துக்குள்ளேயே பிரிவினையை ஏற்படுத்த முயலும் ஆந்திர அரசின் போக்கை முஸ்லிம்கள் உணர்ந்து செயல்பட வேண்டும் என்றார்.

இதனிடையே, ஆந்திரத்தில் முஸ்லிம்களில் 15 பிரிவினர் சமூக, பொருளாதார, கல்வி ரீதியில் மிகவும் பின்தங்கியிருப்பதாகவும் அவர்கள் இடஒதுக்கீடு பெற தகுதியானவர்கள் என்றும் ஆந்திர அரசு கண்டறிந்துள்ளது என்று ஒரு தகவல் தெரிவிக்கிறது.

முந்தைய சற்றுமுன்...: ஆந்திராவில் பின் தங்கிய முஸ்லிம்களுக்கு 4% இட ஒதுக்கீடு

தினமணி

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...