.

Friday, August 24, 2007

ரஷியாவில் 10 நாகை இளைஞர்கள் கைது;

ரஷியாவில் 10 நாகை இளைஞர்கள் கைது;
17 பேர் கதி என்ன? - குடும்பத்தினர் பரிதவிப்பு!

ஆகஸ்ட் 24, 2007

திருச்சி: ரஷியா வழியாக ஜெர்மனிக்கு சட்டவிரோதமாக செல்ல முயன்றதாக கூறி தமிழகத்தைச் சேர்ந்த 10 பேரை ரஷிய அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இதனால் 10 பேரும் கடந்த 17ம் தேதி முதல் ரஷியாவில் சிக்கித் தவித்து வருகின்றனர்.

இதுகுறித்து திருச்சியில் உள்ள பிராந்திய பாஸ்போர்ட் அலுவலக அதிகாரிகள் கூறுகையில், தமிழகத்தின் நாகப்பட்டணம் மாவட்டத்தைச் சேர்ந்த 27 பேர் உள்ளூர் வேலைவாய்ப்பு நிறுவனத்தை அணுகியுள்ளனர். வெளிநாட்டில் வேலை கோரி அவர்களை இவர்கள் அணுகியுள்ளனர்.

அந்த ஏஜென்சி, 27 பேரிடமும் பெரும் பணத்தை வாங்கிக் கொண்டு முகம்மது ஷியாம் என்கிற இலங்கை நபர் மூலம் ரஷியாவுக்கு அனுப்பியுள்ளது. முகம்மது ஷியாம் ரஷிய பாஸ்போர்ட் வைத்துள்ளார்.

டூரிஸ்ட் விசா மூலம் 27 பேரும் ரஷியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அங்கு போன பின்னர் அவர்களை இரு பிரிவாக பிரித்துள்ளனர். அங்குதான் பிரச்சினை ஆரம்பித்தது.

ரஷியா வரை கூடவே வந்த ஷியாம், அங்கு போன பின்னர் தலைமறைவாகி விட்டார். காரணம், இவர்களை ரஷிய காவல்துறையினர் கண்காணிக்க ஆரம்பித்தது தெரிய வந்ததால். தான் கூட்டி வந்த அனைவரையும் ரஷியாவில் பரிதவிக்க விட்டு விட்டு அவர் தப்பி விட்டார்.

இந்த நிலையில் இரு பிரிவாக பிரித்து அனுப்பப்பட்டவர்களில் 17 பேரின் நிலை என்ன ஆனது என்று தெரியவில்லை. மற்ற 10 பேரும் தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்து செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள இந்தியத் தூதரகத்தை அணுகினர். அங்கு துணைத் தூதர் ஜோர்டானா பாவேலை சந்தித்து தங்களது நிலையைக் கூறியுள்ளனர்.

அவர் உடனடியாக 10 பேரையும் ஒரு ஹோட்டலில் தங்க வைக்க ஏற்பாடு செய்தார். பின்னர் திருச்சி பிராந்திய பாஸ்போர்ட் அதிகாரி எஸ்.பாலச்சந்திரனை தொடர்பு கொண்டு விவரத்தைக் கூறியுள்ளார்.

இதையடுத்து பாலச்சந்திரன், சம்பந்தப்பட்டவர்களின் பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்துள்ளார்.

இந்த சிக்கல் குறித்து பாலச்சந்திரன் கூறுகையில், விதிமுறைப்படி, இதுபோல பிடிபடுவோர், ஊர் திரும்புவதற்கான விமான டிக்கெட்டுக்கான கட்டணத்தை வைத்திருக்க வேண்டும். ஆனால் சில சமயங்களில் விசேஷ சந்தர்ப்பங்களில் இந்திய அரசே அந்த செலவுகளை ஏற்றுக் கொள்ளும்.

தற்போது ரஷியாவில் பரிதவிக்கும் நாகை இளைஞர்கள் விஷயத்தைப் பொருத்தவரை, டெல்லி திரும்புதவற்குத் தேவையான ரூ. 30,000 பணத்தை தயார் செய்யுமாறு இந்தியத் துணைத் தூதர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர்களின் பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும் தெரிவித்துள்ளோம்.

இதையடுத்து நேற்று அவர்களின் பெற்றோர்கள் ரூ. 3 லட்சம் பணத்தை இங்கு வந்து செலுத்தியுள்ளனர். நாங்கள் இதை உடனடியாக ரஷியாவில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்திற்குத் தெரிவித்து விட்டோம்.

இதையடுத்து 10 பேரும் ஊர் திரும்புவதற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அனைவரும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர். தாஷ்கண்ட் வழியாக அவர்கள் இன்று டெல்லி வருவதாக இருந்தது.

ஆனால் அவர்களை நாடு திரும்ப ரஷிய போலீஸார் அனுமதிக்கவில்லை. குறிப்பிட்ட காலத்தைத் தாண்டி அவர்கள் ரஷியாவில் தங்கியுள்ளதாக கூறி கைது செய்து விட்டனர். விடுதலையான பின்னர்தான் 10 பேரும் நாடு திரும்ப முடியும் என்றும் ரஷிய போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இந்திய தூதரகம் தொடர்ந்து விடுத்த கோரிக்கைகளை ரஷிய காவல்துறை ஏற்கவில்லை. தற்போது கைது செய்யப்பட்டுள்ள அனைவரும் ஹோட்டல்களில் போலீஸ் பாதுகாப்பில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றார் பாலச்சந்திரன்.

இந்த விவகாரத்தில் உடனடியாக மத்திய அரசு தலையிட்டு, மாஸ்கோவில் உள்ள இந்தியத் தூதரகம் மூலம் கைது செய்யப்பட்டுள்ள நாகை இளைஞர்ள் ஊர் திரும்ப வழி செய்ய வேண்டும் என்று அவர்களின் உறவினர்ளும், குடும்பத்தினரும் கோரியுள்ளனர்.

இதற்கிடையே, ரஷியாவில் சிக்கித் தவிக்கும் இளைஞர் ஒருவரின் உறவினர்கள் மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் மணி சங்கர் அய்யரிடம் உதவி கோரி அணுகியுள்ளனர்.

ரஷியாவில் சிக்கியுள்ள அனைவரும் நாகை மாவட்டம் சீர்காழி மற்றும் அதன் சுற்றுப்புற ஊர்களைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

www.thatstamil.com

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...