.

Monday, August 6, 2007

32,000 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட இல்லை

இந்தியாவில் 32,000 பள்ளிகள், மாணவர் ஒருவர் கூட இல்லாமல் செயல்பட்டு வருவதாக அரசு ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. இவற்றில் 48 சதவீதம் கிராமப்புறங்களில் உள்ள ஆரம்ப பள்ளிகள் ஆகும். இந்தியாவில் ஆரம்பக்கல்வி 2005-2006 என்னும் தலைப்பில் தேசிய கல்வித்திட்டம் மற்றும் நிர்வாக பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் உள்ள 28 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்களில் உள்ள 11,24,033 பள்ளிகளில் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் 2.92 சதவீதம் பள்ளிகளில் இதுவரை ஒரு மாணவர் கூட சேரவில்லை என அறியப்பட்டுள்ளது.

மாநிலங்களை பொறுத்தவரையில், கர்நாடகத்தில் 7,945 பள்ளிகளில் இந்த நிலைமை காணப்படுகிறது. இவற்றில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளோடு, 15,791 பள்ளிகள் ஆரம்பப் பள்ளிகள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோல, 69,353 பள்ளிகள் (6.17 சதவீதம்) 25-க்கும் குறைவான மாணவர்களோடு செயல்பட்டு கொண்டு இருக்கின்றன. 1,70,888 பள்ளிகளில் 26 முதல் 50 வரையிலான மாணவர்கள் படித்து வருகின்றனர்.

குறைவான மாணவர்களுடன் செயல்படும் பள்ளிகளின் எண்ணிக்கை பிகார், தில்லி, கேரளம் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் குறைவாகவே காணப்பட்டது. அனைத்து பள்ளிகளையும் பார்க்கும் பொழுது சராசரியாக 150 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பள்ளிகளில் ஒரு ஆசிரியர் கூட இல்லாததே இதற்கு முக்கிய காரணம் என ஆய்வில் ஈடுபட்ட பேராசிரியர் ஷைலேந்திர சர்மா தெரிவித்துள்ளார். 23,000 பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமிக்கப்படவேண்டும் எனவும், 1.3 லட்சம் பள்ளிகள் ஒரேயொரு ஆசிரியருடன் செயல்பட்டு கொண்டு இருப்பதும் தெரியவந்துள்ளது.

பருவநிலை மாற்றங்களினால் மக்கள் இடம் பெயர்தல் மற்றும் வேறு சில சூழ்நிலைகள் குறைந்த அளவு மாணவர் சேர்க்கைக்கு காரணமாகும். உதாரணமாக, ஹிமாச்சலப்பிரதேசத்தில் உள்ள லாஹல் மற்றும் ஸ்பிட்டி ஆகிய பகுதிகளில் குளிர்காலங்களில் நிலவும் சீதோஷ்ண நிலையின் காரணமாக மக்கள் இடம்பெயர்ந்து செல்கின்றனர்.

இது போன்ற பள்ளிகளின் எண்ணிக்கை அதிக அளவில் இருப்பது தற்போது அறியப்பட்டுள்ளதால், இதற்கான முழுமையான காரணங்கள் என்ன என்பதை கண்டறியவேண்டும். அதோடு, பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளும் ஒரு காரணியாக இருப்பதால், அதையும் மேம்படுத்துவதில் உரிய கவனம் செலுத்தவேண்டும்.

1,02,227 பள்ளிகளில் ஒரேயொரு வகுப்பறை மட்டுமே இருப்பதே இதற்கு உதாரணமாகும். அடிப்படை வசதிகளுடன் கூடிய பள்ளிகளை அமைக்கவேண்டும் எனவும், போதிய ஆசிரியர்களை நியமிக்கவேண்டும் எனவும் மாநில கல்வித்துறை இயக்குநர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளோம்.

தினமணி

NDTV.com: No student in 32,000 schools: Report
Deccan Herald - 32,000 schools sans a single student

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...