.

Thursday, August 16, 2007

தென்காசி கொலைச் சம்பவம் மத மோதல் அல்ல!

தென்காசியில் நடந்த கொலைகள் மத ரீதியிலான மோதலால் ஏற்பட்டவை அல்ல என தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழக மாநிலச் செயலர் ஜே.எஸ்.ரிஃபாயீ தெரிவித்தார்.

திருநெல்வேலியில் புதன்கிழமை அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
தென்காசியில் நடந்த கொலைகள் மத ரீதியிலான சம்பவம் அல்ல. நீண்ட நாள்களாகப் பகையோடு இருந்துவரும் இரு கோஷ்டிகளுக்கு இடையிலான மோதல்தான்.

கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் நடந்த இந்து முன்னணி நிர்வாகி குமார்பாண்டியன் கொலைச் சம்பவம், அதைத் தொடர்ந்து தமுமுக நிர்வாகி ஷேட்கான் தாக்கப்பட்டது ஆகிய சம்பவங்களில் தொடர்புடையவர்கள் பிணையத்தில் இருந்தபோது அவர்கள் இரு தரப்பையும் ஒரே இடமான தென்காசி மகளிர் காவல் நிலையத்தில் கையொப்பமிடச் செய்து நீதித்துறை உத்தரவிட்டது வருத்தம் அளிக்கிறது.

காவல்துறையும், உளவுத் துறையும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருந்தால் இந்த மோதலை தடுத்திருக்க முடியும். உளவுத்துறை முற்றிலும் செயலிழந்து விட்டதையே இந்த சம்பவம் காட்டுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட காவல்துறை டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த சம்பவத்தை இரு மதங்களுக்கு இடையிலான மோதலாக சித்தரித்து ஆதாயம் தேட நினைப்பவர்களை தமுமுக கடுமையாக கண்டிக்கிறது.
இந்த மோதலில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சம் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது ஆறுதல் அளிக்கிறது. இதுமட்டுமின்றி அவர்களின் குடும்பங்களில் ஒருவருக்கு அரசு வேலையும் அளிக்க வேண்டும்.
கைது நடவடிக்கை என்ற பெயரில் அப்பாவிகள் மீது பொய்வழக்கு போடக் கூடாது என்றார் ரிஃபாயீ.

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...