.

Saturday, April 28, 2007

கள்ளச் சாராயத்தை ஒழிக்க முடியாது: கருணாநிதி

சென்னை, ஏப். 27: காங்கிரஸ் கட்சியின் கடைசி தொண்டர் நினைத்தாலும், கள்ளச்சாராயத்தை ஒழிக்க முடியாது என முதல்வர் கருணாநிதி தெரிவித்தார். பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அவர் பேசியது:

இங்கு நடைபெற்ற விவாதத்தில் பேசிய சில உறுப்பினர்கள் கள்ளச் சாராய சாவுகளைக் கூறி அதனை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்றார்கள். காமராஜர் ஆட்சி வர வேண்டும் என்று பேசிவரும் காங்கிரஸ் உறுப்பினர்கள் காமராஜர் ஆட்சிக் காலத்திலேயே கள்ளச்சாராயத்தை ஒழிக்க முடியவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். குஜராத் மாநிலம் போர்பந்தரில் மகாத்மா காந்தியடிகள் வாழ்ந்த வீடு அருகே கிணறு தோண்டி அதில் வைத்திருந்து கள்ளச்சாராயம் விற்கப்பட்ட தகவலை நாடாளுமன்றத்தில் கூறி அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி வேதனைப்பட்டார்.

இந்திரா காந்தி அல்ல, காங்கிரஸ் கட்சியின் கடைசித் தொண்டர் நினைத்தாலும் கள்ளச்சாராயத்தை ஒழிக்க முடியாது. இதற்கு மதுவிலக்கு திட்டத்தில் திருத்தங்கள் செய்ய வேண்டும், தனியார் நிறுவனங்களுடன் போட்டியிடும் அளவுக்கு நல்ல சரக்குகளை உற்பத்தி செய்தால்தான் கள்ளச் சாராயத்தை ஒழிக்க முடியும்.

மதுவிலக்குப் பற்றி பேசிய சில உறுப்பினர்கள் டாஸ்மாக் பணியாளர்கள் குறித்தும் பேசினார்கள். அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பதாக இருந்தால் டாஸ்மாக் மதுக் கடைகளையும் மூட அரசு தயாராக உள்ளது.

டாஸ்மாக் மூலம் கிடைக்கும் வருவாய் ரூ. 7 ஆயிரம் கோடி இழப்பையும் ஏற்க அரசு தயாராக உள்ளது. அதில் பணிபுரியும் ஊழியர்கள் என்ன ஆவார்கள் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.

4 comments:

Adirai Media said...

ஏனென்றால் பல ஊர்களில் அரசியல்வாதிகளும் ரவுடிகளும் கைகோர்த்துதான் இந்த வியாபாரத்தை நடத்துகிறார்கள்.
சட்டத்தை கையில் வைத்திருக்கும் அரசு இதுபோன்ற ஒரு அறிக்கைவிடுவது வெட்க்கிதலை குனியவேண்டிய விஷயம் உரியவர்கள் சிந்தித்தல் வேண்டும்.

உண்மைத்தமிழன் said...

//இங்கு நடைபெற்ற விவாதத்தில் பேசிய சில உறுப்பினர்கள் கள்ளச் சாராய சாவுகளைக் கூறி அதனை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்றார்கள். காமராஜர் ஆட்சி வர வேண்டும் என்று பேசிவரும் காங்கிரஸ் உறுப்பினர்கள் காமராஜர் ஆட்சிக் காலத்திலேயே கள்ளச்சாராயத்தை ஒழிக்க முடியவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.//

ஏன் விபச்சாரத்தைக் கூடத்தான் ஒழிக்க முடியவில்லை. ஊர், ஊருக்கு விபச்சார விடுதிகள் தொடங்க அனுமதி கொடுக்கலாமே.. திருட்டி விசிடியை ஒழிக்க முடியவில்லை. நல்ல விசிடியைப் பாருங்கள் என்று அரசே உருவாக்கித் தரலாமே? கஞ்சா, ஹெராயின், பிரவுன்சுகர் இவற்றையும்தான் ஒழிக்க முடியவில்லை. அரசே இதையும் விற்கலாமே.. அதிலேயும் ஒரு 21000 கோடி வரியாக கிடைக்கும்.

எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அப்போதைய ஆளும்கட்சிக்காரர்களுக்கு மட்டும் விடுதி அமைக்க அனுமதி கொடுக்கலாம். அப்படி வரியாகக் கிடைக்கின்ற பணத்தில் கமிஷன் கிடைக்கும்படியாக காண்ட்ராக்டுகளை அள்ளி வீசி இன்னும் ஒரு பத்து தலைமுறைக்கு சொத்துச் சேர்க்கலாம்..

தமிழகத்தில் முதன் முதலாக கள் மற்றும் சாராயக் கடைகளைத் திறந்து விட்டு தமிழகத்து மக்களுக்கு சாராய ருசியை ஊட்டிவிட்டப் புண்ணியவான் யாராம்? காமராஜரா? ராஜாஜியா? பக்தவச்சலமா? அண்ணாவா? இவர்தானே.. செய்ததையும் செய்துவிட்டு காமராஜரை ஏன் இப்போது இதில் இழுக்க வேண்டும்?

ஊர் முழுக்கத் திருட்டு நடப்பதால் திருடர்களை நாமே அழைத்து "கஷ்டப்பட்டு திருடாதே.. இந்தா வைச்சுக்க.." என்று வீட்டில் உள்ளதை எடுத்துக் கொடுப்பதைப் போலத்தான் இருக்கிறது இந்த சட்டமன்ற உளறல்.

//டாஸ்மாக் மூலம் கிடைக்கும் வருவாய் ரூ. 7 ஆயிரம் கோடி இழப்பையும் ஏற்க அரசு தயாராக உள்ளது. அதில் பணிபுரியும் ஊழியர்கள் என்ன ஆவார்கள் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.//

ஒரு தலைமுறைக்கு அவரவர்களுக்கேற்றவாறு வேலை வாய்ப்பை உருவாக்கத் தெரியாத அரசுகள் இருந்தென்ன? போயென்ன?

//தனியார் நிறுவனங்களுடன் போட்டியிடும் அளவுக்கு நல்ல சரக்குகளை உற்பத்தி செய்தால்தான் கள்ளச் சாராயத்தை ஒழிக்க முடியும்.//

அரசு சாராயம் காய்ச்சலாம். ஆனால் மக்கள் காய்ச்சக் கூடாது. அப்படித்தானே.. சூப்பர் ஜனநாயகம்..

தமிழகத்தின் தலைவிதி.. வேறென்ன?

Anonymous said...

கள்ளச்சாராயம் ஒழிக்க முடியாமல் போனதற்கு விடுதலைப்புலிகள் தான் காரணம் என முகர்ஜி சொல்ல கலைஞரும் தலையாட்டுவது போல ஒரு கனவு கண்டேன்.

புள்ளிராஜா

Boston Bala said...

There is absolutely no inevitability, so long as there is a willingness to contemplate what is happening.
- Marshall McLuhan

-o❢o-

b r e a k i n g   n e w s...